| நனைந்து நகர்கிறேன் சுரந்த வியர்வையின்
 சாயம் கரைந்தது.
 மூச்சுப் பட்டு பற்றிக் கொண்டது
 பச்சை நிறம்.
 உள்ளே எரிந்து
 உள்ளே எரிந்து
 வெளியே உதிர்ந்த
 சாம்பலில்
 புரண்டு அழுதன
 பச்சைக்கிளிகள்
 
 வேர்கள் கருகுவதை
 உணரத் தெரியாமல்
 கனவுகளைக் கர்ப்பித்து
 உணர்வுகளைப் பிரசவிக்கின்றன
 பச்சைக் கிளைகள்
 
 நிதானித்து நின்ற
 காற்றொலி சுடுகிறது
 காதுகளை.
 காதுகள் வழியாக
 மனதின் ஆழத்தை.
 
 நீர்த்துப் போன
 நினைவுகளின் நீட்சியாய்
 அக் கிளைகளினின்று
 எட்டிப் பார்க்கும்
 பச்சை இலைகளைத்
 துணைக்கு வைத்துக் கொண்டு
 
 இன்னும்
 சூரியன் உதிக்கிறது
 ஏனோ பச்சையாய்.
 
 ஜெயராணி
 |