சார்லட் முத்தமிழ்ச் சங்கம்: தீபாவளிக் கொண்டாட்டம்
சார்லட் முத்தமிழ்ச் சங்கத்தின் (CMTS) சார்பில் 'தீபாவளிக் கொண்டாட்டம் 2026' என்னும் கோலாகல நிகழ்வை, அக்டோபர் 18, 2026 அன்று, பிற்பகலில் வட கரோலைனா மாகாணத்திலுள்ள மேத்யூஸ் சமூக மையத்தின் ஃபுல்வுட் திரையரங்கில் (Matthews Community Center, Fullwood Theater) சிறப்பாக நடத்தியது. விழாவிற்கு வந்திருந்த பார்வையாளர்கள், குடும்பங்கள், தாயகத்திலிருந்து வருகை புரிந்திருக்கும் பெற்றோர்கள், விருந்தினர்கள் என அனைவரையும் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் இன்முகத்துடன் வரவேற்றனர்.

தமிழ்த்தாய் வாழ்த்து, அமெரிக்க நாட்டுப்பண் ஆகியவற்றோடு விழா தொடங்கியது. கலைச் செயலாளர் பிரபு சீனிவாசன் அவர்களது அறிமுக உரைக்குப் பிறகு, சார்லட் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் பிரகாசம் அண்ணாமலை வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் உரையாற்றினர். பின்னர், புதிய செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இவ்வமைப்பில், தலைவர் பிரகாசம் அண்ணாமலை, செயலாளர் கீதாஞ்சலி மாணிக்கவாசகம், பொருளாளர் மோகன்ராஜ் ஆறுமுகம், கலைச் செயலாளர் பிரபு சீனிவாசன், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் செல்வராஜ், கலைக்குழு உறுப்பினர்கள் ஜமுனா சீனிவாசன், ஆதிமூலம் ரங்கநாதன், ஊடக ஒருங்கிணைப்பாளர் வித்யா ஜெயராமன் ஆகியோர் பொறுப்புகளை வகித்துத் திறம்பட வழிநடத்தி வருகின்றனர்.



சிறார்களின் திறமைகளையும், தமிழர் பாரம்பரியக் கலைகளையும் பறைசாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மேடையேறின. 'தில்லை நடராஜர் பதம்', 'அய்யன் அருள்', 'காளிங்க நர்த்தனம்', 'பாரத வைபவம்', 'நிருத்த வைபவம்' , 'ஸ்ரீ ராஜராஜேஸ்வரி' போன்ற ஆன்மிகம், செவ்வியல் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் மெய்சிலிர்க்க வைத்தன. அத்துடன், 'சின்னக் குயில்கள்', 'நின்னுகோரி', 'திரை இசைத் தென்றல்', 'ஸ்லோக பாராயணம்', 'இசைச் சுட்டிகள்', 'சுருதி லயம்' இசைக்குழுவினரின் மெல்லிசை விருந்து முதலானவை நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தன.

கிராமிய, திரையிசைக் கலைகளும் இவ்விழாவிற்கு மேலும் வண்ணம் சேர்த்தன. 'சன்பேர்ட்ஸ்', 'நடன விண்மீன்கள்', 'மூர்ஸ்வில் பட்டாம்பூச்சி', 'அழகான ராட்சசி' போன்ற நாட்டுப்புற நடனங்களும்; 'மின்சாரக் கண்ணா', 'பூவிழிகள்', 'குட்டி நட்சத்திரங்கள்', 'அதிரடி சரவெடி', 'குட்டி பட்டாசு', 'ஆரா கேர்ள்ஸ்', 'பிளாஸ்ட் யூ மோட்' போன்ற திரையிசை இணைவு நடனங்களும் அரங்கத்தை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தின. 'எலைட் ஸ்டார்ஸ்' என்ற பாரம்பரிய ஆடை அலங்கார அணிவகுப்பு (Fashion Show) நிகழ்ச்சியும், பங்கேற்பாளர்களை மகிழ்விக்கும் நேரடி விளையாட்டுகளும் சிறப்பாக நடத்தப்பட்டன.



நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பழமைபேசி, மருத்துவர் தணிகையரசு தியாகராஜன் M.D. ஆகியோர் கலந்து கொண்டு, தமிழ்ச்சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்கம், கலைப்பணிகள், சமூகத்தொண்டு முதலானவற்றைப் பாராட்டியும் வாழ்த்தியும் சிறப்புரையாற்றினர். வருகை தந்த அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகள் கொண்ட உணவரங்குகளும், கைவினைப் பொருட்கள், உடைகள் அடங்கிய விற்பனை அங்காடிகளும் திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளித்தன.

மொத்தத்தில், சார்லட் முத்தமிழ்ச்சங்கம் தனது பெயருக்கேற்ப முத்தமிழின் பல்வேறு பரிமாணங்களையும், தமிழர் பண்பாட்டுக் கலைகளும் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்துச் சங்கமிக்க வைத்தது அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் இது ஒரு மறக்க முடியாத பண்பாட்டு விருந்தாக அமைந்தது.



கலைச் செயலாளரின் நன்றியுரையோடு 'தீபாவளிக் கொண்டாட்டம் 2026' இனிதே நிறைவுற்றது.

பழமைபேசி

© TamilOnline.com