முனைவர் மலையமான்
நா. இராசகோபாலன் என்னும் இயற்பெயரை உடையவர் முனைவர் மலையமான். சிறார் இலக்கியத்திற்கு மிக நீண்ட காலமாக குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கி வரும் இவர், தமிழ் இலக்கியம் சார்ந்தும், திருக்குறள் குறித்தும் பல ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறார். இதழாளர். கவிதை நூல்களின் ஆசிரியரும்கூட. இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் தனது படைப்புகளில் சரிபாதியைச் சிறார்களுக்காக எழுதியிருக்கும் மலையமான் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்வோமா?

பிறப்பு, கல்வி
மலையமான், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில், ஜூலை 15, 1932 அன்று, இரா. நாராயணன் - பாலகுசாம்பாள் இணையருக்குப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர்: நா. இராசகோபாலன். தந்தை பள்ளி ஆசிரியர். மலையமான், போளூரில் தொடக்கக் கல்வி கற்றார். திருப்பதியிலுள்ள திருவேங்கடன் கீழ்த்திசைக் கல்லூரியிலும், பின்னர் கரந்தை தமிழ்க் கல்லூரியிலும் பயின்று புலவர் பட்டம் பெற்றார். தமிழில் இளங்கலை, பி.லிட். மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். 'தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயின்று நூலக அறிவியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். பிரெஞ்சு மொழியில் பட்டயம் பெற்றார்.



பணிகள்
மலையமான் தொடக்க காலத்தில் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் அப்பணியில் இருந்து விலகி, சென்னை குருசாமி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியில் மதிப்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார். நூலக அறிவியலில் பட்டம் பெற்றபின் சென்னைப் பல்கலைக் கழக நூலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணிபுரிந்தார். தொடர்ந்து கன்னிமாரா நூலகத்திலும், நெடுஞ்சாலைத் துறை நூலகத்திலும் நூலகராகப் பணிபுரிந்தார். இறுதியில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

திருமண வாழ்க்கை
மலையமான் சென்னைப் பல்கலையில் நூலகராகப் பணியாற்றியபோது, ராணி மேரி கல்லூரியில் பணியாற்றிய சரளாவுடன் நவம்பர் 19, 1969 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தை சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவர் ந.சஞ்சீவியும், சிறுவை மோகனசுந்தரனாரும் தலைமையேற்று நடத்தினர். நிகழ்வில் மயிலை. சீனி வேங்கடசாமி போன்ற பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர். சரளா, திருமணத்திற்குப் பின் சரளா இராசகோபாலன் என அழைக்கப்பட்டார். இவர் தமிழ்ப் பேராசிரியர். பல்துறை எழுத்தாளர். பல ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியவர். இந்த இணையருக்கு தமிழொளி என்ற மகளும் அன்பொளி என்ற மகனும் உள்ளனர்.

மலையமான் படைப்புகள்
சிறார் நூல்கள்: பனித்துளிக் கதைகள், தேன்துளிக் கதைகள், மழலைக் கதைகள், துளிர்க் கதைகள், அரும்புக் கதைகள், மின்மினிக் கதைகள், ஒளிக் கதைகள், முத்துக் கதைகள், குட்டிக் கதைகள், சின்னஞ்சிறு கதைகள், உருவகக் கதைகள், மின்னல் கதைகள், பண்புநெறிக் கதைகள், உருக வைக்கும் உருவகக் கதைகள், இன்பநெறிக் கதைகள், திருக்குறள் கதைகள், அறிவொளிக் கதைகள், நன்னெறிக் கதைகள், இந்திய நாட்டின் விந்தைக் கதைகள், அறிவியல் சிறுகதைகள், விண்வெளிக் கதைகள், கி.பி. 2087ல் நன்னெறிக்கதைகள், அறிவியல் கதை மஞ்சரி, அறிவியல் புனை கதைகள், பிற நாட்டுச் சிறுகதைகள், அயலகத்து அருங்கதைகள், மூன்று அரும்புகள், கடலுக்குள்ளே ஒரு சிறைச்சாலை, அன்னை இந்திரா, அறிவியல் பெருமணிகள், இந்திய விஞ்ஞானிகள், உலக அறிவியல் விஞ்ஞானிகள், அறிவியல் நறுமலர்கள், அறிவியல் வெளிச்சங்கள், பறவைகள் பலவிதம் (2 தொகுதிகள்), விலங்குகள் பலவிதம், அறிவியல் புதுமைகள் (2 தொகுதிகள்), இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள்

கவிதை, கட்டுரை, இலக்கிய ஆய்வு நூல்கள்: தமிழ் ஆட்சி மொழி, மொழியும் இனமும், மொழி இனச் சிந்தனைகள், தமிழும் தமிழரும், தமிழா! தமிழா!, சிந்தனைக் களஞ்சியம் (மரபுத் தொடர் அகராதி), செவ்வியல் மொழி – தமிழ், செவ்வியலும் செந்தமிழும், தமிழ் வாழ வேண்டும், செந்தமிழ்ச் சிந்தனைகள், திருக்குறள் துளிகள், குறளில் ஒளிஉவமைகள், குறளின் ஒளியில், குறளின் அலைகள், மலையமான் கவிதைகள், இதயவரிகள், நோபில் பரிசு பெற்ற கவிஞர்கள், காட்டு மலர்கள், நோயே டாக்டரானால், நீர் மாங்கனி (கவிதை நாடகம்), இருதலைப் பறவை, உயிர்க் கொடை, கடல் வயிறு.


எழுத்துப் பணி
நா. இராசகோபாலன், பள்ளியில் படிக்கும்போது அழ. வள்ளியப்பாவின் நூல்களை வாசித்து இலக்கிய ஆர்வம் தூண்டப் பெற்றார். தனது இயற்பெயரிலும், மலையமான் என்னும் புனைபெயரிலும் பல்வேறு படைப்புகளை எழுதினார். முதல் படைப்பு, 1952-ல் கரந்தை தமிழ்ச் சங்கம் நடத்திய 'தமிழ்ப்பொழில்' இதழில் வெளியானது. தொடர்ந்து பல இலக்கிய இதழ்களில் கட்டுரைகளை எழுதினார். 'ஹோம்லாண்ட்', 'கேரவான்', 'பொயட் இண்டர்நேஷனல்' போன்ற ஆங்கில இதழ்களிலும் சில கவிதைகளை எழுதினார். இவரது சிறார் இலக்கியப் படைப்புகள் தமிழம், அறிவுக்கூர்வாள், நன்னன் நாடு, இளம் விஞ்ஞானி, அழகர் சோலை, கோகுலம், முல்லைச்சரம், அறிவுச்சுடர், அறிவியல் பூங்கா, அறிக அறிவியல் போன்ற இதழ்களில் வெளியாகின.



சிறார் இலக்கியத்திற்கு மலையமான் செய்திருக்கும் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. சிறார் சிறுகதைகள், நாவல், கட்டுரை, நாடகம், வாழ்க்கை வரலாறு என சிறார்களுக்காகவே 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது 'தமிழ் ஆட்சிமொழி சிக்கல்களும் தீர்வுகளும்' என்னும் முனைவர் பட்ட ஆய்வேடு நூலாக வெளிவந்து கவனத்தை ஈர்த்தது. தமிழ் இலக்கியம், மொழி, ஆய்வு, திருக்குறள், கவிதை, கவிதை நாடகம் என பல்வேறு வகைமைகளில் மலையமான் சுமார் 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகளை ஆராய்ந்து பல மாணவர்கள் எம்.பில். மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவரது படைப்புகள் சில சென்னைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், கள்ளிக்கோட்டைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் போன்றவற்றின் பாடத்திட்டங்களில் இடம்பெற்றன. சில தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாட நூலாக இடம்பெற்றன.

பிற பணிகள், பொறுப்புகள்
மலையமான், 'இளம் விஞ்ஞானி', 'இயற்கை', 'ஐந்திணை', 'திருவள்ளுவர் அணி', 'மக்கள் செங்கோல்', 'அறிவியல் ஒளி' போன்ற சிறார் இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் மூன்று ஆண்டுகள் பொருளாளராகவும், இரண்டு ஆண்டுகள் ஆலோசகராகவும் பணிபுரிந்தார். கோயம்புத்தூரில் நடைபெற்ற குழந்தை இலக்கிய மாநில மாநாட்டிலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான அறிவியல் படைப்பு தேசியக் கருத்தரங்கிலும் பங்கு பெற்று உரையாற்றினார்.



உலகக் கவிஞர் பூங்கா, தலைநகர் தமிழ்ச் சங்கம், தமிழ் எழுத்தாளர் சங்கம், இந்திய நூலாசிரியர் பெருமன்றம், இந்தியப் பண்பாட்டு அறிவியல் மன்றம், தமிழ்நாடு பண்பாட்டு அறிவியல் நூற்றொகைத் தொகுப்பு திட்டக் குழு, உலகத் திருக்குறள் பேரவை, தமிழ்க் கவிஞர் மன்றம், பதிப்பாளர் மையம் ஆகிய அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றினார்.

தென்றல்

விருதுகள்
* 'அறிவியல் சிறுகதைகள்' நூலுக்கு, 1985ம் ஆண்டின் சிறந்த நூலுக்கான தமிழக அரசின் முதல் பரிசு
* 1990ல், 'குழந்தை எழுத்தாளர் சங்கம்' நடத்திய போட்டியில் 'அறிவியல் வெளிச்சங்கள்' நூலுக்கு இரண்டாம் பரிசு
* 'கடலுக்குள்ளே ஒரு சிறைச்சாலை' நூலுக்கு, 1993ம் ஆண்டின் சிறந்த நூலுக்கான தமிழக அரசின் முதல் பரிசு
* 'நோயே டாக்டரானால்' நூலுக்கு எழுத்தாளர் சங்கப் பரிசு
* 'நோயே டாக்டரானால்' நூலுக்கு பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு
* 'நீர் மாங்கனி' நூலுக்கு தமிழக அரசின் முதல் பரிசு
* 'நீர் மாங்கனி' நூலுக்கு அனந்தாச்சாரி அறக்கட்டளைப் பரிசு
* 'இருதலைப் பறவை' நூலுக்கு பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு
* 'மின்மினிக் கதைகள்' நூலுக்கு பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு (2000)
* 'மின்மினிக் கதைகள்' நூலுக்கு, புதுச்சேரி சிறுவர் இலக்கியச் சிறகம் அமைப்பு வழங்கிய பரிசு (2000)
* முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2012)
* இந்திய அரசின் தேசிய அறிவியல் விருது (2013)
* அழ. வள்ளியப்பா இலக்கிய வட்டம் வழங்கிய அழ.வள்ளியப்பா இலக்கிய விருது
* வி.ஜி.பி. சந்தனம்மாள் விருது
* என்.கே. வேலன் அறக்கட்டளை வழங்கிய குழந்தை இலக்கியத்திற்கான சிறந்த சாதனையாளர் விருது
* தேனீ இலக்கியக் கழகம் வழங்கிய எழுத்துச்செம்மல் பட்டம்
* உரத்த சிந்தனை அமைப்பு வழங்கிய அறிவியல் மாமணி பட்டம்
* தமிழின் சீர் பரவுவார் பட்டம்
* திருக்குறள் பரப்புச் செம்மல் பட்டம்
* மொழிப்போர் மறவர் (தலைநகர் தமிழ்ச் சங்கம்)
* செம்மொழிச் செம்மல்

மலையமான் 'தினமணி' இதழில் சிந்திக்க வைக்கும் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார். 'முகம்' இதழில் தொடர்ந்து பல இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.


ஆய்வு முடிவுகள்
மலையமான் ஆய்வு செய்து கூறியிருக்கும் கீழ்க்காணும் பல கருத்துக்கள் சிந்திக்க வைப்பன:

* தொடக்க நிலையில் தமிழில் 51 எழுத்துக்கள் இருந்தன. பின்பு அது 31 எழுத்துகளைக் கொண்டதாகத் திட்டமிட்டு நிறுவப்பட்டது. குறில், நெடில், மெய் எழுத்தின் மூன்று இனங்கள் ஆகியவையும் திட்டமிட்டு அமைக்கப்பட்டன.
* மூன்று இன முக்கிய மெய் எழுத்துக்களுடன் (த், ம், ழ்) மூன்று முக்கிய உயிர் எழுத்துகளை (அ, இ, உ) இணைத்துத் "தமிழு' என்று மொழிக்குப் பெயர் சூட்டப்பட்டது. பின்பு இறுதி உகரம் மறைந்தது. தமிழ் என்று சொல் நிலைத்தது.
* உலக மொழிகளில் தமிழில்தான் ஓரெழுத்துச் சொற்கள் அதிகமாக உள்ளன (64 சொற்கள்).
* சொல் சுருக்கத்திற்காகத் தமிழின் சில சொற்களில் இரண்டு குறில் எழுத்துக்கள் அடுத்தடுத்து வரும்போது, முதல் குறில் நெடிலாகும். இரண்டாம் குறில் மறையும். (எடு: அகலமரம் - ஆலமரம், மலையமகன் - மலையமான்).
* மேலே சொன்ன விதிமுறைப்படி சில வினைச் சொற்களின் விகுதிகள் தோன்றின (அவன் - ஆன், அவள் - ஆள், அவர் - ஆர்).
* தமிழ் என்ற சொல்லுக்குப் பத்துப்பொருள்கள் உள்ளன. அவை, இனிமை, நீர்மை, அகப்பொருள், வீரம், இறைமை, சைவசமயம், படைவீரர், நாடு, வேந்தர், தமிழர் என்பன.
* வீரசோழியம் எழுதிய புத்தமித்திரர் 'ழ' என்ற தமிழின் சிறப்பெழுத்தை அழிக்க முயன்றார்.
* வள்ளலார் என்பதைப் போல், திருவள்ளுவர் என்பது காரணத்தால் அமைந்த சிறப்புப் பெயர்.
* திருவள்ளுவர் நூற்றுக்கும் மேற்பட்ட புதுச்சொற்களைப் படைத்துள்ளார்.
* திருக்குறளின் முதல் அதிகாரம் இறைமைச் சிறப்பு (அ) இறைமை வழிபாடு என்று திருவள்ளுவரால் பெயர் தரப்பட்டிருக்கலாம்.
* திருவள்ளுவர் தன் நூலுக்கு முப்பால் என்று பெயர் சூட்டியிருப்பார். திருக்குறள் என்பது பிற்காலத்தில் தரப்பட்ட சிறப்புப் பெயர்.
* திருவள்ளுவர் இந்தியா முழுவதும் பயணம் செய்திருக்கிறார்.
* திருவள்ளுவர் பொது உடைமைக் கருத்துடையவர்.
* திருவள்ளுவர் கணிதத்துறை வல்லுநர்.
* தொல்காப்பியரின் காலம் கி.மு. 1000க்கும் முற்பட்டது.
* தமிழ் சுருக்க நிலை கொண்ட மொழி.
* ஒலிச்சீர்மை, சொற்சுருக்கம், பொருள் மாறுபாடு, உலக வழக்கை ஏற்றல் ஆகிய 4 காரணங்கள் மொழிப் புணர்ச்சியின் வழிமுறைகளாகும்.
* தொல் பழங்காலத்தில் மணமக்களை வாழ்த்துவதற்குச் செந்நெல்லே பயன்படுத்தப்பட்டது. பின்பு நெல்லுக்குப் பதிலாக மஞ்சள் அரிசி தூவும் பழக்கம் வந்தது.
* தமிழ் மன்னர்கள் உழவர்களில் சிறந்தவருக்குக் காவிதி என்ற பட்டம் தந்தனர் (கா - சமுதாயத்தைக் காப்பாற்று); வீரரில் சிறந்தவருக்கு ஏனாதி என்ற பட்டம் தந்தனர். (ஏ - பகைவரைக் கொல்லும் அம்பு); வணிகரில் சிறந்தவருக்கு எட்டி என்ற பட்டம் தந்தனர். (எட்டி - எட்டம் - தொலை தூரம் சென்று வணிகம் புரிந்தவர்); எட்டி பின்பு செட்டியாகத் திரிந்தது. இது கன்னட மொழியில் ஷெட்டி என்றானது.
* தமிழ்ச்சொல்லான சிந்து என்பதிலிருந்து இந்தியா என்ற பெயர் வந்தது. (சிந்து - ஆறு).
* சிந்திமொழி, தமிழின் மகளான மற்றொரு திராவிட மொழி.
(நன்றி: தென்செய்தி இதழ்)

© TamilOnline.com