பொன்னித்துறைவன்
பொன்னித்துறைவனின் இயற்பெயர் வி. கணேசன். தன் வாழ்நாளின் பெரும் பகுதியை பம்பாயில் கழித்ததால் 'பம்பாய் வி. கணேசன்' என்றும் அழைக்கப்படுகிறார். எழுத்தாளர் மட்டுமல்ல. கர்நாடக இசைப் பாடகர், இசை பயிற்றுநர். பொன்னித்துறைவன் 1934-ல் தஞ்சாவூரை அடுத்துள்ள பாபநாசத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் கல்வி பயின்றார். தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தி, சம்ஸ்கிருதம் ஆகியவற்றிலும் புலமை பெற்றார். 21 வயதில் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார். இந்தியாவின் பல நகரங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றார். மும்பை பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர்.



பொன்னித்துறைவன் கல்கியின் எழுத்தால் ஈர்க்கப்பட்டார். அறுபதுகளில் எழுதத் தொடங்கினார். முதல் சிறுகதை கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. தொடர்ந்து பரிசுக் கதைகள், மலர்க் கதைகள் எனப் பல கதைகளை எழுதினார். பொன்னித்துறைவனின் கதைகள், தொடர்கள் பல இதழ்களில் வெளியாகின. மகரம் தொகுத்த 'காந்தி வழிக் கதைகள்' நூலில், பொன்னித்துறைவனின் 'கங்கை எரிகிறது' என்ற சிறுகதை இடம்பெற்றது. காந்திய நோக்கிலும், தத்துவப் பின்புலத்திலும் பல கதைகளை எழுதினார். இவருடைய பெரும்பாலான கதைகள் அக விசாரணையையும், தத்துவப் பார்வையையும் முன்வைப்பவை. கேள்விகளை எழுப்பி வாசிப்பவர்களை யோசிக்க வைப்பவை.

எழுத்துபற்றிப் பொன்னித்துறைவன், "நிறைவில்லாத ஒரு மனம்தான் எழுத்தாகப் பிறவி எடுக்கிறது. உய்வுப் பிணக்கின் உற்பாதங்களால் மூச்சுத் திணறி வெட்டவெளி நோக்கித் தலைதெறிக்க ஓடுவதுதான் எழுதுவது. நிறைவானவனுக்கு எழுதுவது, ஏன் பேசுவதுகூட அவசியமில்லை. எழுத்தாளன் எழுத்தை ஆள்பவனல்ல; எழுத்தால் ஆட்டி வைக்கப்படுபவன்." என்கிறார்.



பொன்னித்துறைவன் நன்கு இசை கற்றவர். மும்பையில் பல இசைக் கச்சேரிகளைச் செய்தார். பலருக்கு இசை பயிற்றுவித்தார். மும்பையின் பிரபல சபாக்களில் இவரது கச்சேரிகள் நடந்தன. கணேசனின் கச்சேரிகள் கச்சிதமான உச்சரிப்பு, தெளிவான குரல் மற்றும் பாரம்பரிய இசையுடன் சிறப்பான ஒத்திசைவைக் கொண்டிருந்தன. 80 வயதைக் கடந்தும் இனிய குரல் வளத்துடன் பல இசைக் கச்சேரிகளில் பாடிப் புகழ்பெற்றார் பொன்னித்துறைவன்.

தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களுள் ஒருவராக பொன்னித்துறைவன் என்கிற வி. கணேசன் அறியப்படுகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com