தூங்கா நகரம் நியூயார்க். அறுபதுக்கும் மேற்பட்ட மேஜைகளுடன் விரிந்த பில்லியர்ட்ஸ் பகுதி, ஆர்கேட் விளையாட்டுகள், மேலும் அனைத்து வகையான உணவுகளையும் வழங்கும் பார் & கிரில் கொண்ட அந்தப் பெரிய உணவகத்தில், சினேகா காத்திருந்தாள். தனிமை அவளைச் சற்று வாட்டியது. அருகிலிருந்த காதல் ஜோடிகளின் சிரிப்பும், கும்மாளப் பேச்சும், அங்கு ஒலித்துக் கொண்டிருந்த பாடல்களையே மங்கச் செய்தது.
"ஹலோ சினேகா…" என்ற குரல் கேட்டது. அவள் பின்புறம் திரும்பிப் பார்த்தாள்.
போட்டோவில் மட்டுமே பார்த்திருந்த விவேக். கிட்டத்தட்ட ஐந்து அடி எட்டு அங்குல உயரம். தசைகளை வெளிப்படுத்தும் வகையில் இறுக்கமான சட்டை. மாநிறம், பார்க்க நன்றாக இருந்தான்.
"எப்படி இருக்கீங்க?" என்று கேட்டுக்கொண்டே, சினேகா அவனை லேசாக அணைத்து வரவேற்றாள்.
"சாரி! ரொம்ப நேரமா காத்திருக்க வேண்டியதாச்சு. கடுமையான போக்குவரத்து நெரிசல்" என்று விவேக் சற்றே சிரித்தபடி சமாளித்தான்.
இருவருக்கும் முப்பதுகளின் பிற்பகுதி வயது. வாழ்க்கைத் துணையைத் தேடி, சற்றுச் சலித்துவிட்ட கட்டம். அவர்களின் பொதுவான நண்பர் ஒருவர் இந்த அறிமுகச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது.
அந்த மௌனத்தை உடைக்க சினேகா, "நீங்க இந்தப் பாட்டு கேட்டிருக்கீங்களா? நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம், தனிமை அடர்ந்தது, பனியும் படர்ந்தது… ஆனா நியூ யார்க் நகரம் எப்பவும் தூங்குற மாதிரி தெரியல. எப்பவும் துடிப்பாகவே இருக்கும் ஒரு நகரம்."
விவேக் உடனே, "அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏ.ஆர். ரகுமான் பாடியது," என்று உற்சாகமாகச் சொன்னான்.
மனத்திற்குள் ஏதோ ஒன்று பொதுவாக இருப்பதை உணர்ந்து சினேகா சற்று மகிழ்ந்தாள். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, உணவு வந்தது. சாப்பிட்டதும், பானங்களை எடுத்துக்கொண்டு பில்லியர்ட்ஸ் மேஜையை நோக்கி நகர்ந்தனர்.
"நான் பில்லியர்ட்ஸ் இதுக்கு முன்னாடி ஆடினதே இல்லை," என்று சினேகா சிரித்தபடிச் சொன்னாள்.
"ஜஸ்ட் டைம் பாஸ்."
தொங்கும் விளக்குகளின் வெளிச்சத்தில் பில்லியர்ட்ஸ் பந்துகள் மின்னின. பச்சைத் துணி போர்த்தப்பட்ட மேஜையின் மீது குனிந்து, கோணங்களை கவனமாக உற்று நோக்கும் விவேக்கைப் பார்த்து சினேகா, "நீங்க ப்ரோ போல இருக்கு!" என்றாள்.
"நோ வே!" என்று சிரித்தபடி சொல்லிக்கொண்டே இலகுவாக இரண்டு பந்துகளைக் குழிக்குள் தள்ளினான்.
சற்றுப் பதற்றத்துடன் சினேகா "நீங்க பிசினஸ் பண்ணறீங்கன்னு கேள்விப்பட்டேன்…" என்றாள்.
"வாரத்தில் ஒரு நாள்தான் இங்கு இருப்பேன். மத்த நாளெல்லாம் வெளியூர்தான். நீங்க சிட்டில வேலை பாக்குறீங்கன்னு கேள்விப்பட்டேன். உங்க அலுவலகம் பிலடெல்பியாவிலும் இருக்கு இல்ல? இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள முடியுமா?" என்று விவேக் கேட்டவுடன், சினேகாவுக்குச் சற்று தூக்கிவாரிப் போட்டது.
விவேக் அவளைப் பார்த்து, "இது உங்கள் முறை," என்று சிரித்தபடி சொன்னான்.
அவள் மனநிலையைப் போலவே, அவள் அடித்த ஷாட்டும் குறிதவறிப் போனது. சினேகா ஒரு பெரிய சட்ட நிறுவனத்தில் பணியாற்றுகிறாள். பதவி உயர்வுக்காகக் கடுமையாக உழைத்து வரும் அவளுக்கு, நியூயார்க் நகரத்தை விட்டு வெளியே போவது சரியாக இருக்காது என்று தோன்றியது. பேச்சைத் திசை திருப்பினாள்.
பேசப்பேச அவர்களுக்குள் இருந்த வேற்றுமைகள் மெதுவாக வெளிப்பட்டன. அந்தக் கலக்கத்திலேயே, சினேகா அடித்த பந்து தவறான பந்தைக் குழியில் தள்ளியது.
ஆட்டம் முடிந்தது. சந்திப்பும் முடிந்தது.
★★★★★
ஆஸ்டின் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. செழியனின் அலைபேசியில் நுழைவாயில் மூன்றிற்கு வருமாறு குறுஞ்செய்தி வந்தது. சிறிது நேரத்தில் வெளியே வந்த அவன், குறுஞ்செய்தியில் வந்த அடையாளங்களைப் பார்த்து, அங்கு நின்றிருந்த டெஸ்லாவில் ஏறினான்.
ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி ராகவி, "வெல்கம் டு ஆஸ்டின்!" என்று புன்னகையுடன் வரவேற்றாள். "நானே ஊபர் பிடிச்சு..." என்று செழியன் சொல்லத் தொடங்கியவுடன், "தட்ஸ் ஃபைன்…" என்று சொல்லிவிட்டு, பின்புறம் மடங்கியிருந்த ஃபால்கன்-விங் கதவுகளுடன், முன்னே விரிந்த சாலையை நோக்கித் தன்னம்பிக்கையுடன் வண்டியை ஓட்டத் தொடங்கினாள். இருவரும் ஒரு டேட்டிங் இணையதளம் மூலம் அறிமுகமானவர்கள். இன்றுதான் நேரில் சந்திப்பு.
பயணத்தின்போது, குடும்ப வணிகம் பற்றிப் பேசினாள். வழியில் இருந்த ஒரு ஓட்டலைக் காட்டி, அதுவும் அவர்களது குழுமத்தில் வருவதாகச் சொன்னாள். அவள் மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட இளம்பெண் என்று செழியன் நினைத்தான். அதை அவன் ஏற்றுக் கொண்டாலும், அவளது மேலான செல்வநிலை சற்றே அவனை உறுத்தியது.
ஓர் ஓட்டலின்முன் வண்டியை நிறுத்தி, அன்று மாலை ஓர் உணவகத்தில் சந்திப்பதாகக் கூறி ராகவி விடைபெற்றாள்.
அன்று மாலை. அழகாக அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர உணவகத்தில் இருவரும் அமர்ந்திருந்தனர். மென்மையான பொன்னிற விளக்குகள் அவர்களைச் சுற்றி ஒரு இனிய சூழலை உருவாக்கின. பின்னால் நீரூற்று மெதுவாக உயர்ந்து விழும் ஒலி அந்த அமைதியை இன்னும் ரம்மியமாக மாற்றியது.
செழியன் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவன். இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறான். கல்விக் கடன் முழுவதுமாகத் தீரவில்லை. இணையவழி உரையாடல்களில் அவன் தனது பொருளாதார நிலை பற்றிப் பேசவேயில்லை. அதை ஒரு பெரிய தவறாக உணர்ந்தான், அவன் மனத்தில் ஒரு சிறிய வருத்தம் எழுந்தது.
அந்தக் கவலையில் மூழ்கியிருந்த அவனை, "என்ன செழியன், ரொம்ப அமைதியா இருக்கீங்க… எவ்ரிதிங் ஓகே?" என்று கேட்ட ராகவியின் சத்தமான குரல் தட்டி எழுப்பியது.
திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்தவன் போல, "ஒன்றுமில்லை… ஒன்றுமில்லை…" என்று சொல்லிச் சமாளித்தான்.
ஆர்டர் செய்த உணவு வந்தது. சாப்பிட்டபடியே பேசத் தொடங்கினர். இணையத்தில் குறைவாகவே பேசியதால், ஒருவருக்கொருவர் பிடித்த உணவு முதல் திரைப்படங்கள் வரை பல விஷயங்களைப் பகிர்ந்தனர்.
ஆனால் உரையாடலின் இறுதியில் ராகவி சொன்ன ஒரு விஷயம் செழியனின் மனதைச் சற்று சுருக்கியது. தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று அவள் தெளிவாகச் சொன்னாள்.
செழியனுக்கும், அவனது பெற்றோருக்கும் இறைநம்பிக்கை மிகப்பெரிய விஷயம். வார இறுதிகளில் கோயிலுக்காகத் தன்னார்வப் பணிகளில் ஈடுபடும் குடும்பம் அது. சில ஒற்றுமைகள் இருந்தாலும், சில முக்கியமான விஷயங்களில் வேற்றுமை இருப்பதை இருவரும் உணர்ந்தனர்.
சிறிது நேரத்தில் அவர்கள் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினர். "ஊருக்குப் போனதும் குறுஞ்செய்தி அனுப்புறேன்…" என்று செழியன் சொன்னான்.
ஆனால் ஒன்றும் வரப் போவதில்லை என்று இருவருக்கும் தெரியும்!
★★★★★
சில மாதங்கள் ஓடின.
மினியாபோலிஸ் செயின்ட் பால் விமான நிலையம். ஓடுதளத்தில் இருந்து விமானம் மெதுவாக வேகமெடுத்து, கலிஃபோர்னியா நோக்கி விண்ணில் பறந்தது. சிறிது நேரத்தில் விமானம் இயல்பு நிலையை அடைந்ததாகத் தலைமை விமானி ஒலிப்பெருக்கியில் அறிவித்தார்.
ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்திருந்த சினேகா, வெளியில் தெரிந்த அடர்ந்த மேகங்களைப் போலவே குழப்பமான மனநிலையில் இருந்தாள். அம்மாவிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை மீண்டும் திறந்து வாசித்தாள்.
"திருமணத்திற்கான வரன் என்பது இருவழிச் சாலை. கொஞ்சம் விட்டுக் கொடுத்தால்தான் பயணம் நன்றாகச் செல்லும். சமரசம் செய்யத் தயாராக இருந்தால், அதைவிட மதிப்புள்ளதை வாழ்க்கை திருப்பித் தரும்."
எவ்வளவு நிதர்சனமான உண்மை! அந்த வார்த்தைகள் அவளது மனதில் ஆழமாக ஒலித்தன. அந்த எண்ணங்களில் மூழ்கியிருந்தபோது, யாரோ ஒரு குரல் அவளை அழைத்தது.
அது வேறு யாருமல்ல, செழியன்தான்!
"தொந்தரவுக்கு மன்னிக்கவும்… அங்க ஒரு சின்னக் குழந்தையைக் கையில வச்சுக்கிட்டு ஒரு குடும்பம் கஷ்டப்படுது. அவர்களுக்குக் கூடுதல் இடம் தேவைப்படுது. இந்த இருக்கை காலியா இருக்கறதைப் பார்த்தேன்… இங்க வரலாமுன்னு நினைத்தேன், உங்களுக்கு ஓகேவா?" என்று கனிவாகக் கேட்டான்.
சினேகா விமானத்தில் ஏறியதும், தன் பக்கத்து இருக்கையில் யாரும் இல்லாததைப் பார்த்து மகிழ்ந்திருந்தாள். ஆனால் அவன் கேட்ட விதத்தில், அவள் இருந்த மனநிலையில் சரி என்று சொல்லி விட்டாள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. செழியன் ஏதோ புதிய ஆல்பத்தின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தான். சினேகா கணினியில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் விமானம் சற்றுக் குலுங்கியது. தலைமை விமானி அனைவரையும் சீட் பெல்ட் அணியுமாறு அறிவித்தார். இருவரின் கவனமும் கலைந்தது.
செழியன் சினேகாவைப் பார்த்து, "ஐ டோன்ட் லைக் டர்புலென்ஸ்…" என்று சற்றே பதட்டமாகச் சொன்னான்.
சினேகா சிரித்தபடி, "விமானம் குலுங்குவதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நம்மைவிட அதிகச் சிரமப்பட்டு உழைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைவூட்டத்தான் அது குலுங்குகிறது… சமீபத்துல ஒரு மீம்ஸ்ல இதைப் படிச்சேன்," என்று சொன்னாள்.
"குட் ஜோக்," என்று செழியன் வழிந்தான். அதற்குப் பிறகு இருவரும் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டனர்.
"நீங்க மின்னசோட்டாவா?" செழியன் கேட்டான்.
"இல்லை, நியூ ஜெர்சியில வேலை செய்கிறேன். அலுவலகப் பணிக்காக மின்னசோட்டா வந்தேன். அடுத்ததாக கலிபோர்னியா செல்கிறேன். நீங்க?"
என்றாள்.
"நானும் நியூ ஜெர்சிதான்! என்ன ஆச்சரியம். நாம இருவரும் ஒரே ஊரு. என் நண்பரின் திருமணத்திற்காக கலிபோர்னியா செல்கிறேன். விமானத்தின் வழித்தடம் மாறியதால் மின்னசோட்டா வந்தேன்," என்ற அவன் குரலில் ஓர் உற்சாகம் தெரிந்தது.
அதற்குப் பிறகு இருவரும் இன்னும் அன்யோன்யமாகப் பேசத் தொடங்கினர். பள்ளிக்கூடம் முதல் கல்லூரி வரை நினைவுகளைப் பகிர்ந்தனர். இருவரும் பரஸ்பரப் போட்டியுள்ள கல்லூரிகளில் படித்ததாகச் சொன்னார்கள்.
செழியன் சினேகாவைப் பார்த்து, "இன்னைக்குகூட உங்க காலேஜ் பத்தி ஒரு ஜோக் வந்தது… சொல்லலாமா?" என்று கேட்டான்.
அவள் லேசாகத் தலை அசைத்தாள்.
"உங்க கல்லூரி மாணவன், எங்க கல்லூரி மாணவனைப் பார்த்து: 'செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், ஸ்டார்ட்அப்கள்… எதிர்காலம் எல்லாம் இங்கதான்.' என்றாராம்.
"அதுக்கு எங்க கல்லூரி மாணவன்: 'சரி, ஆனா உங்க எதிர்காலத்திற்கும், கல்விக் கடனுக்கும், வை-ஃபைக்கும் ஒரே பாஸ்வர்ட்தான்: ஓட்டாண்டி123' என்று சொன்னாராம்."
இதைச் சொல்லிவிட்டு, செழியன் சற்று கலக்கமாக அவளைப் பார்த்தான். சினேகா சிரித்தபடி, "நான் படிக்கிறப்ப இந்த ஜோக் சொல்லி இருந்திங்கன்னா, உங்களைக் காலி பண்ணியிருப்பேன். ஆனா இப்ப எல்லாம் தமாஷாதான் இருக்கு," என்று சொன்னாள்.
அவள் தன் வேலை பற்றிச் சொன்னாள். செழியன் தான் ஒரு விலங்குக் காட்சி சாலையில் பராமரிப்பு மருத்துவராக வேலை செய்வதாகச் சொன்னான். அதைக் கேட்டவுடன், சினேகாவின் முகத்தில் ஆயிரம் வாட் பல்பு போட்டது போல ஒரு மகிழ்ச்சி ஒளிர்ந்தது.
"ஓ! அந்த விலங்குக் காட்சி சாலையிலா வேலை பார்க்கிறீங்க? அதுக்குப் பக்கத்திலதான் எங்க வீடு!"
என்று உற்சாகமாகச் சொன்னாள். அவள் வசிக்கும் இடம் பற்றி மேலும் விளக்கினாள்.
அதைக் கேட்ட செழியன், "நான் உங்க வீட்டைத் தாண்டிதான் தினமும் வேலைக்குப் போவேன்," என்று சிரித்தான். இருவரும் மிகவும் நெருங்கி விட்டதாக உணர்ந்தார்கள்.
அதற்குப் பிறகு அவர்கள் தங்களது வாழ்க்கை, பயணங்கள் பற்றி பேசத் தொடங்கினர். சில விஷயங்கள் ஒத்துப் போகவில்லை; சில விஷயங்களில் ஆழமாக ஒத்துப் போனார்கள். வாழ்க்கை என்றால் கொடுத்தும் பெற்றும் செல்லும் ஒரு சமநிலை. அந்தச் சமநிலையில்தான் உறவுகளின் உண்மையான அழகு இருக்கும் என்பதைச் சமீபத்தில் இருவரும் உணர்ந்திருந்தனர். டேட்டிங் காலத்தில் பலமுறை முறிந்த அனுபவங்களே இதை அவர்கள் மனத்தில் பதியச் செய்தது.
ஒலிபெருக்கியில் விமானம் இறங்கப் போவதாக அறிவித்தனர். சினேகா தான் ரெஸ்ட்ரூம் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு எழுந்தாள். செழியன் தனது இருக்கைக்கு திரும்பினான்.
அதற்குப் பிறகு அவர்கள் பேசுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. செல்பேசி எண்களைப் பரிமாறிக் கொள்ளாதது குறித்து இருவருக்கும் மனதில் ஒரு நெருடல்.
விமான நிலையத்தின் வெளியே ஊபர் பகுதி. செழியன் சினேகா நிற்பதைப் பார்த்தான். அவளை நோக்கி விரைவாக நடக்கத் தொடங்கியபோது, அவள் ஊபர் காரில் ஏறிக் கிளம்பி விட்டாள். அவன் மிகவும் ஏமாற்றமடைந்தான். தன்னைத்தானே சபித்துக் கொண்டான்.
சிறிது தூரம் சென்ற கார் திடீரென நின்றது. சினேகா வெளியே வந்தாள்.
அவளை நோக்கி ஓடிய செழியன் தைரியமாக, "ஓரிரு வாரங்களில் விலங்குக் காட்சி சாலையில் 'நண்பரை அழைத்து வருக' நிகழ்ச்சி இருக்கு. என்னுடன் அதில் கலந்துகொள்ள முடியுமா?" என்று கேட்டான்.
சினேகா புன்னகையுடன், "கட்டாயமாக," என்று சொல்லிவிட்டு, செல்பேசி எண்ணைப் பகிர்ந்தாள்.
அதே நகரத்தில் இருந்த இருவர், அங்கே சந்தித்துக் கொள்ளவே இல்லை. ஆனால் சம்பந்தமே இல்லாத ஓர் ஊரிலிருந்து கிளம்பிய விமானத்தில் சந்தித்து, இன்று ஒன்றாகப் போகும் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
திருமணங்கள் விமானத்திலும் நிச்சயிக்கப்படலாம்!
மருங்கர் |