பரத நாட்டியத்தில் ஒரு குறை - வ.ரா.
எனக்கு ரொம்ப நாள் ஆசை. எதிலே? பரதநாட்டியம் பார்ப்பதிலே. சுமார் இருபது வருஷங்களுக்கு முன், அதை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. பின்னாலே அதற்குக் கால தேச வர்த்தமானங்கள் இடம் கொடுக்கவில்லை. அதைப் பற்றி நான் கவலைப் பட்டதுமில்லை. காரணம் என்ன? நமது நாடு இப்பொழுது இருக்கிற நிலைமையிலும், நமது நாட்டாரின் தற்போதைய மனோநிலையைக் கருதியும், பரதநாட்டியம் பார்க்காததைப் பற்றி நான் வருந்த வேண்டியதில்லை என்று அப்பொழுது நான் தீர்மானங் கொண்டேன். அந்த அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளக் காலமும் காரணமும் வந்துவிட்டனவா என்று ஆராய்ந்து பார்க்கும் பொருட்டு, சென்ற ஞாயிறன்று, சென்னை தம்புச் செட்டி வீதியில் அமைக்கப் பெற்றிருக்கும் 'கான மந்திர'த்துக்கு பாலசரஸ்வதியின் நாட்டியத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன்.

'கான மந்திர'த்தில் காலியிடமே இல்லை. இரண்டு பங்கு ஆண்பிள்ளைகளும் ஒரு பங்கு பெண்பிள்ளைகளும் வந்திருப்பார்கள். இருபத்துநான்கு வயதுள்ள இங்கிலீஷ் இளைஞன் ஒருவன் தமிழனைப் போல் வேஷ்டி கட்டிக்கொண்டு, நாட்டியம் பார்க்க வந்திருந்தான். கனம் சீனிவாச சாஸ்திரியார் வந்திருந்தார். கனம் நீதிபதி வெங்கடசுப்பாராவ் தமது தர்மபத்தினியுடன் விஜயம் செய்திருந்தார். வெள்ளைக்கார தம்பதிகள் இருவர் வந்திருந்தனர்.

கனம் சீனிவாச சாஸ்திரியாரோடு தமிழ்ப் பெண்ணைப் போல உடை தரித்துக்கொண்டு, வெள்ளைக்கார ஸ்திரீ ஒருவர் வந்திருந்தார். எத்தனையோ உத்தியோகஸ்தர்களும் வக்கீல்மார்களும் டாக்டர்களும் வந்திருந்தார்கள். ஒன்று விடாமல் புரண்டி எறிய பத்திரிகை நிருபர்களும் ஆசிரியர்களும் வந்திருந்தார்கள். கான மந்திரத்துக்கும் பால சரஸ்வதிக்கும் (வீணை தனத்தின் பேத்தி) உள்ள கிராக்கியையும் பெருமையையும் அதிகமாய் வர்ணிக்க வேண்டுமா?

அங்கு கூடியிருந்தவர்களுள் நூற்றுக்குத் தொண்ணூற்றேழு பேர்கள், என்னைப் போல, நாட்டிய சாஸ்திரம் அறியாதவர்கள். கானத்தையும் நிருத்திய அபிநயத்தையும் அனுபவிப்பதற்கு, எங்கள் கண்களும் காதுகளும்தான் கருவிகள். என்னைப் பற்றிச் சொல்லிவிட்டால், அது அவர்களையும் பற்றிச் சொன்னதாகத்தான் ஆகும். சில்லறை வித்தியாசங்கள் சில இருக்கலாம். எதிலும் பூரண ஒற்றுமை இருக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியாதா? நான் கண்ட காட்சியையும் எனது அனுபவத்தையும் சிறிது சொல்லுகிறேன். பொறுமையுடன் கேளுங்கள்...

முதலிலே எனக்கு நேர்ந்த ஆபத்து என்னவெனில், சர்வகலாசாலை லைப்ரரியன் ஸ்ரீமான் எஸ்.ஆர். ரங்கநாதன் எனக்கு அந்த ஆங்கில இளைஞனை அறிமுகப்படுத்தி வைத்து, அன்றைய நிகழ்ச்சி சம்பந்தமாக எல்லா விஷயங்களையும் அவருக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லும்படியாக என்னை வேண்டிக்கொண்டு, தமது ஆசனத்துக்குப் போய்விட்டார். நான் நாட்டியத்தைக் கவனிப்பதா அல்லது அந்த இளைஞனுக்கு வியாக்கியானம் செய்துகொண்டிருப்பதா? மேலும் அந்தப் பேர்வழியோ தானாகச் சந்தேகம் கேட்கிற ஆளாகத் தோன்றவில்லை. அவனை வம்புக்கிழுத்து வியாக்கியானம் செய்வதிலும் எனக்கு இஷ்டமில்லை. தெலுங்குப் பாட்டுகளிலே எனக்கு சிரத்தையும் கிடையாது. ஏன், பாட்டில் பாஷை புரிவதில்லை.

பரத சாஸ்திரத்திலே மூன்று அம்சங்கள். இது நானாகப் பிரித்தது, சாஸ்திரம் எப்படி முறையிடுகிறதோ அது எனக்குத் தெரியாது. தாளத்தை ஒட்டி நாட்டியம். இதற்குக் கருத்தழகு தழுவிய பாட்டுத் தேவையில்லை. இதற்கு சுரமும் தாளமும் தேவை. நல்ல கைவரிசை, கால்வரிசைப் பழக்கம் அதிகம் இருக்கவேண்டும். சதிர், தாளத்துக்கும் சுரத்துக்கும் தப்பிப்போனால், பார்க்கிறவர்களின் மண்டையில் அடி விழுந்தது மாதிரி இருக்கும். பாட்டிலே குறிப்பிடப்படும் கருத்துக்கேற்ற அபிநயம், அடுத்தபடியாகக் கவனிக்க வேண்டிய சங்கதி. பாட்டிலே குழந்தையைத் தழுவி முத்தமிடுவதாகக் கூறப்பட்டால், அதை அபிநயச் செயலில், அபிநய ஜாடையில், அபிநயக் குறிப்பில் காட்டவேண்டும். அபிநயத்துக்குப் பின்னேயிருப்பது பாவம். முத்தமிடுகிற உயிர் பாவத்தை முகத்தில், தேகம் முழுவதிலும் காண்பிக்க வேண்டும். நாட்டியத்தையும் அபிநயத்தையும் சாஸ்திர முறை பிசகாமல் செய்துவிடலாம். பாவம் என்பது அவரவர் மனோதர்மத்தையும் யுக்தி சாமர்த்தியத்தையும் பொறுத்ததாகும். வித்வானுடைய தனி மேதையை, கடைசியில் சொன்னதைக் கொண்டுதான் கணக்கிட முடியும்.

சிறு பையனும் எண்சுவடி வாய்பாட்டைத் தலைகீழாய்ச் சொல்லிவிடுவான். கணக்கிலே வாய்பாட்டை உபயோகப்படுத்துவது அவனுக்குச் சிரமம். ஆடுகிறதும், அபிநயம் பிடிப்பதும் பழக்கத்தால் எளிதிலே கைகூடக் கூடியவை. பாவம்தான் கஷ்டம். அதற்குச் சிறிதளவேனும் கவிதா ஆவேசமும், கற்பனா சக்தியும், மெழுகைப்போல உருகி ஒட்டிக் கொள்ளும் உள்ளமும் வேண்டும். இதைத்தான் இங்கிலீஷிலே (Artist) 'ஆர்டிஸ்ட்' கவிச்சித்திரகாரன் என்கிறார்கள். தமிழில் நேரே எனக்கு வார்த்தை அகப்படவில்லை.

'கான மந்திர'த்தில் அன்று ஆடிய பாலசரஸ்வதி நல்ல கவிச்சித்திரகாரி என்பதில் சந்தேகமில்லை. மன்மத பாணம் காதலியின் உடலில் பிரவேசம் செய்ததை, அவள் அபிநய பாவத்துடன் காண்பிக்கையில், சபையார் கலகலவென்று கைகளைக் கொட்டி உடல் பூரிப்பு அடைந்தார்கள். கனம் சீனிவாச சாஸ்திரியாரின் முகம் மலர்ந்தபடியே இருந்தது. பக்கத்திலிருந்த பாலக்காட்டு இளைஞன் ஒருவன், என் தொடையை, அவன் அறியாமலே ஒரு திருகு திருகிக் கிள்ளினான், அவன் கையோடு துண்டுச் சதை வந்து விடுமோ என்று சந்தேகப்பட்டேன். கூடவந்த நண்பர் ஒருவர், கால எல்லையையும், சபை நிகழ்ச்சியையும், சபையாரையும் சிறிதும் லட்சியம் செய்யாமல், என் முதுகின் பேரில் தாளம் போட்டுக் கொண்டேயிருந்தார். பார்த்த கண் பூத்துப் போகும் படியாக, சபையார் அனைவரும், பாலசரஸ்வதியை நோக்கிய வண்ணமா யிருந்தார்கள். "ரொம்ப கெட்டிக்காரி!" என்றான் இங்கிலீஷ் இளைஞன்.

இதுவரையிலும், நான் சொல்லி வந்ததில் ஒருவருக்கும் கோபமாவது வருத்தமாவது வராது. இனிமேல்தான் எனக்கு மனவேதனை; படிக்கிறவர்களுக்கும் கஷ்டம், அன்றைக்குப் பாடின பாட்டுகளிலே, மூன்று ரஸங்கள் இருந்தன. ஹாஸ்ய ரஸம், பக்தி ரஸம், சிருங்கார ரஸம். சோக ரஸம் இல்லை, வீர ரஸத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. அதை இந்த நாட்டிலே, கார்த்திகைப் பிறையைப் போல, காணுவது அருமை. மற்ற ரஸங்களைப் பற்றி எவரும் கவலைப்படுவதுமில்லை; அவைகள் எழுத்தில் மட்டும் இருக்கின்றன. அனுபவத்தில் கிடையாது.

மேலே முதலில் மூன்று ரஸங்களைச் சேர்த்துச் சொன்னேனே, அவைகள் பாட்டிலும், அபிநயத்திலும் சிருங்காரமாகவே உருவம் பெறுகின்றன. பக்தியை, நாயக-நாயகி பாவமாகப் பாவித்துப் பாடும்வரையில் அதற்குச் சிருங்கார ரஸ ஆபத்து உண்டு. தெய்வத்தன்மை பொருந்திய காதலை பாரதியார் வர்ணிக்கும் பொழுதே, ஆபாஸச் சிருங்கார ரஸத்தில் அவர் வீழ்ந்துவிட்டதாகத் காலஞ்சென்ற வீரர் வ.வெ.சு. அய்யர் சந்தேகித்து எழுதியிருக்கிறார்.

நம்மில் பெரும்பாலர் உடலும் உள்ளமும் வலிமை குறைந்து வாழ்ந்து வருகிறார்கள். இதைக்கூட ஆட்சேபிப்பவரும் இருப்பார்களா? சிருங்கார ரஸத்தின் மூலமாய் கலியுகமும், நிலைத்த கெட்ட பெயரையும் வாங்கிக்கொண்டுவிட்டது. ஒருமனப்பட்டு, சோர்வில்லாமல் உழைத்துக் காரியங்களைச் செய்யும் வல்லமை நம்மவர்களிடம் இல்லை. சதா களைப்பும், சோர்வும், ஏக்கமும் நம்மிடத்தில் குடிகொண்டிருக்கின்றன. சங்கீதக் கச்சேரிகளிலோ, வித்வான்கள் தமிழ்ப் பாட்டுகள் பாடுவதை கௌரவக் குறைவாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். தெலுங்கு, ஹிந்துஸ்தானி பாட்டுகள் நிறைந்த சங்கீத நாட்டியக் கச்சேரிகளில் தமிழர்களுக்கு என்ன வேலை? அவர்களுக்கு என்ன புரியும்? அவர்களால் என்ன ஆனந்தத்தை அனுபவிக்க முடியும்?

நாட்டியக் காலத்தில், என் முதுகையும் தொடையையும் பறிகொடுத்த பின்னரும், சபையார் மன்மத பாண அபிநயத்தைக் கண்டு ஆரவாரம் செய்த கோலாகலத்தைக் கண்குளிர நான் பார்த்த பின்னரும், சிருங்கார ரஸம் ஒன்றே நாட்டியத்தில் மிஞ்சிக் கிடப்பதை, நேரில் மீண்டும் ஒரு முறை, இருபது வருஷங்களுக்குப் பின்னர், சந்திக்க நேர்ந்ததன் பின்னரும், எதிலும் நிதான மிதவாத நிபுணரான, மகாபுத்திசாலிக் கிழவரான கனம் சீனிவாச சாஸ்திரியாரின் முகவிலாசம் பட்ட பாட்டை நான் பார்க்கக் கொடுத்துவைத்ததன் பின்னரும், மகாத்மாவின் இருபத்தோரு நாள் உபவாசத் தவமும் பாலசரஸ்வதியின் சிருங்கார ரஸ அபிநயத்தின் முன்னே பெயர் சொல்லாது என்று உறுதியான முடிவுக்கு நான் வருவது முடியாத காரியமா? அடியேன் பேச்சு அம்பலம், இப்பொழுது ஏறாமலிருக்கலாம். பரத சாஸ்திரம் ஒரு நாளும் அழிந்து போகாது. தற்போது சிருங்கார ரஸம் ததும்பும் பரதநாட்டிய அபிநயம் இப்பொழுது நாட்டுக்குத் தேவையில்லை. கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து. எனது பழைய அபிப்பிராயம் மாறவில்லை. காசு கொடுத்து டிக்கட் வாங்கினது தவறு. உங்களுக்கு என் மனதை வெளிவிட்டுச் சொன்னதுதான் லாபம்.

(நன்றி: வ.ரா. எழுதிய 'மழையும் புயலும்' நூல்)

அரவிந்த்

© TamilOnline.com