ஸ்ரீமத் பாகவதம்: 12 ஆண்டுகாலத் தொடர் போதனை
அக்டோபர் 2014-ல் தொடங்கி, ஆகஸ்ட் 2026-ல் நிறைவடைந்த, குறிப்பிடத்தக்க பன்னிரண்டு ஆண்டுகால ஆன்மீகப் பயணம் - ஃப்ளோரிடாவின் டாம்பாவில் உள்ள ஹிந்து டெம்பிள் ஆஃப் ஃப்ளோரிடாவின் ஸ்ரீ சத்ய நாராயண சுவாமி ஆலயத்தில், டாக்டர் ரங்கராஜன் அவர்கள் வழங்கிய 'ஸ்ரீமத் பாகவதம்' குறித்த போதனைகளுடன் கூடிய போற்றுதலுக்குரிய பயணத்தின் நிறைவு குறித்த ஒரு பார்வை.

அக்டோபர் 5, 2014 அன்று, சிறிய எண்ணிக்கையிலான பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒன்று கூடினர். அதுவே ஸ்ரீமத் பாகவதத்தை மையமாகக் கொண்ட ஒரு தொடர் சத்சங்கத்தை நடத்துவதாகும். இந்தத் தெய்விகப் பயணத்திற்கான பயில்முறை, மூலநூல், ஆசிரியர்கள், கால அளவு ஆகியவை குறித்த கலந்துரையாடல் இதில் இடம்பெற்றது.



தொடக்க கால நிறுவனர் மற்றும் வழிகாட்டி டாக்டர் கோரபதினா.

சத்ராவின் நிறுவனர். தொடர்ந்து கற்பித்த ஆசிரியர் டாக்டர் ரங்கராஜன்.

அக்டோபர் 26, 2014 அன்று சத்சங்கம் தொடங்கியது. ஒவ்வொரு ஞாயிறும் பக்தர்கள் தவறாமல் ஒன்றுகூடி, ஸ்ரீமத் பாகவதம் என்னும் பெருங்கடலில் தங்களை ஆழ்த்திக்கொண்டனர்.



ஏறக்குறைய ஆறு ஆண்டுகள், கோயிலில் உள்ள வகுப்பறையில் பக்தர்கள் கூடினர். அங்கே ஆசிரியரின் நேரடி உரையைப் புனிதமான சூழலில் செவி மடுத்தனர். கீர்த்தனைகளின் எதிரொலி, பக்கங்களைப் புரட்டும் சத்தம், ஸ்ரீகிருஷ்ணர் மீதான அன்பால் பிணைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் அரவணைப்பு ஆகியவை அங்கு நிறைந்திருந்தன.

'சத்சங்கம்' தொடங்கப்பட்ட ஓராண்டிற்குள்ளேயே, இந்த முயற்சியின் நிறுவனரும் வழிகாட்டியுமான டாக்டர் கோரபதினா பரமபதத்தை அடைந்தார். அவர் இவ்வுலகை விட்டுச் சென்றபோதிலும், அவரது பக்தி உணர்வு ஒவ்வோர் அமர்வையும் அதன் நிறைவுவரை தொடர்ந்து வழிநடத்தியது.

மார்ச் 15, 2020 அன்று, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சத்சங்கக் கூட்டம் நிறுத்தப்பட்டது. ஒரு குறுகிய இடைவெளிக்குப் பிறகு, சத்சங்கம் Zoom வழியே மீண்டும் தொடங்கப்பட்டது. இது தொலைதூரத்திலிருந்த பக்தர்களை ஒன்றிணைத்தது. இதன்மூலம், 'கிருஷ்ண கதா' இடம் மற்றும் காலத்தின் எல்லைகளைக் கடந்தது என்பது நிரூபிக்கப்பட்டது.



இந்தப் பன்னிரண்டு ஆண்டுப் பயணத்தில், அன்புக்குரிய பல பக்தர்கள் தங்கள் பூவுலகப் பயணத்தை நிறைவு செய்து, ஸ்ரீகிருஷ்ணரின் திருவடிகளை அடைந்தனர். அவர்களின் நினைவு இச்சமூகத்தை இன்றும் புனிதப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

மூன்று கட்டங்களில் நிறைவேற்றப்பட்ட பன்னிரண்டு ஆண்டுகால ஸ்ரீமத் பாகவத உபன்யாசப் புனிதப் பயணம் பின்வரும் மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தியாகத் திகழ்கிறது: 1) இதயங்களைத் தூய்மைப்படுத்துதல், 2) ஸ்லோகங்களை வாசித்தல், பாராயணம் செய்தல் ஆகியவற்றின் மூலம் கிருஷ்ணர் மீதான பக்தியை ஆழப்படுத்துதல், 3) ஸ்ரீகிருஷ்ணர் கதையின் வாயிலாக ஒரு நம்பிக்கையுள்ள சமூகத்தை உருவாக்குதல். ஒவ்வொரு ஞாயிறு அமர்வும் ஒரு சரணாகதியாக மாறியது; ஒவ்வொரு சுலோகமும் இறைநிலையை நோக்கிய ஒரு படியாக அமைந்தது.



சமாபன உற்சவம் — புனிதமான நிறைவு விழா
பன்னிரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்த 'சத்ரம்' (ஆன்மீக யாகம்), 'பலஸ்ருதி' பாராயணத்துடன் கூடிய பன்னிரண்டு 'ஸ்கந்தங்களின்' நிறைவைக் குறிக்கும் மகத்தான 'சமாபன உற்சவத்துடன்' முழுமை பெற்றது. இவ்விழா 'ருக்மிணி கல்யாண' வைபவத்துடன் சிறப்பிக்கப்பட்டது. பன்னிரண்டு ஆண்டுகால ஸ்ரீமத் பாகவத யக்ஞப் பயணத்திற்கு இது முத்தாய்ப்பாக அமைந்தது.

சங்கீதா ரவிச்சந்திரன்,
டாம்பா, புளோரிடா மகாணம்

© TamilOnline.com