பெற்றோர் சிந்தனைக்கு: ஐபேசி ஜுரம்
அது என்ன ஐபேசி என்கிறீர்களா? மேலே படியுங்கள், புரியும். ஆகஸ்ட் மாதம் வந்தால் போதும், குழந்தைகள் பள்ளிக்குப் போக ஆர்வமாக இருக்கிறார்கள். புது வகுப்பு. புது நண்பர்களைப் பார்க்கும் ஆர்வம். சில வாரங்கள் கழித்து குழந்தைகளின் முனகல் ஆரம்பம்! எனக்கு ஐபேசி வேண்டும் என்று மகள் கேட்க, மகன் வாடிய முகத்துடன் என்னைப் பார்த்தான். எனக்கு அதிர்ச்சி!

ஐபேசியின் விலை என்னவென்று உங்களுக்கே தெரியும். பள்ளிக் கதைகளைக் குழந்தைகள் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். கைபேசி இல்லாமல் செல்லும் குழந்தைகள் சிலரே. அதில் என் குழந்தைகளும் அடங்குவர். கைபேசி வைத்துக் கொள்வதற்கு நிறையக் காரணங்கள் சொல்கிறார்கள். நானும் கேட்டேன், ஆனால் இணங்கவில்லை. என் இரண்டு குழந்தைகளையும் நானே தினமும் காலையில் பள்ளிக்கு அழைத்துப்போய் விட்டு, பள்ளி முடிந்தவுடன் நானே அழைத்து வருவேன்.

பத்தாண்டுகளுக்கு முன்னெல்லாம் குழந்தைகள் கைபேசி இல்லாமல் வெளியே விளையாடினர். இப்பொழுது குழந்தைகள் தங்களுக்குள் கைபேசியில் இருக்கும் விளையாட்டுகள் பற்றித்தான் அரட்டை அடிக்கிறார்கள். பள்ளிக்குச் செல்லும் போது அருகில் வரும் வாகனங்களை குழந்தைகள் கவனிப்பதில்லை. தலையைக் குனிந்துகொண்டு கைபேசியில் நண்பர்களுடன் அரட்டை மற்றும் விளையாட்டு, இதில் வேகமாக வரும் வண்டிகளைப் பார்ப்பதில்லை. தினமும் பள்ளிக்குப் போகும்போது தவறாமல் பார்க்கும் காட்சி இது.

இத்தனை விலைகூடிய கைபேசிகள் இந்த வயதுக் குழந்தைகளுக்குத் தேவையா? தெரியவில்லை! இந்தக் கைபேசியைக் கொடுக்கவில்லை என்றால் குழந்தைகள் வருத்தப்படுவார்களா? ஏமாற்றம் அடைவார்களா? எல்லாம் கொஞ்ச நேரம் அல்லது கொஞ்ச நாட்கள்தான். பெற்றோர் இதை யோசிப்பதே இல்லை.

ஏன் பெற்றோர் இப்படிப்பட்ட கைபேசி கேட்கும் குழந்தைகளின் ஆசைகளை அவசரமாக நிறைவேற்றுகிறார்கள்? அவசர உதவிக்கு இதில் பேசலாம், நிறைய நல்ல படங்கள் எடுக்கலாம். ஆனால், குழந்தைகள் கைபேசிக்கு அடிமையாகி விடுகிறார்களே. அருகில் இருப்பவரைக்கூட அறியாமல் கைபேசியில் மூழ்கிவிடுகிறார்கள். சினிமா தியேட்டரில் கூட சினிமா பார்க்காமல் கைபேசியில் மூழ்கிவிடுகிறார்கள் என்று பள்ளிக் கூடத்தில் பேச்சு உண்டு. இந்தக் குழந்தைகளை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

'கூல்' (cool) என்ற வகையான குழந்தைகளை மட்டும் நண்பர்களாக ஏற்கும் பழக்கம் பள்ளியில் இருப்பதாகத் தெரிகிறது. பண்டிகைக் காலத்தில் மின்னணுக் கருவிகளைப் பரிசாகப் பெறும் நண்பர்களின் அழுத்தமும் சேர்ந்துவிடுகிறது. அந்த அழுத்தம் பெற்றோருக்கும் வந்துவிட வாய்ப்பு உள்ளது.

பொறுமையாக நாம்தான் இந்த ஆடம்பர, நாகரிகப் பொருட்கள் குழந்தைகளுக்குத் தற்சமயம் தேவையில்லை என்பதை உணர வைக்க வேண்டும். இவற்றை வாங்க ஒரு நேரம் வரும் என்று பெற்றோர்கள் விளக்கிக் கூறலாம். “நீங்கள் உபயோகிக்கும் பொருட்களால் 'கூல்' ஆவதில்லை, மனிதநேயம், நல்ல பண்புகள்தாம் உங்களைக் 'கூல்' ஆக்கும் என்று சொல்லித்தர வேண்டும். விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கவில்லை என்றால் மற்ற குழந்தைகள் ஒதுக்கிவிடுகிறார்கள்! நாம் அவர்களுடன் உட்கார்ந்து பேசி, சரியான நேரத்தில் குழந்தைகளுக்குப் புரிய வைக்கவில்லை என்றால், நண்பர்களின் அழுத்தத்தில் தடம் மாறிச் சென்றுவிடுவார்கள். நாம் தினமும் பேசினால் அவர்கள் மனதில் நாளடைவில் வலுவாகப் பதியும்.

இப்போதெல்லாம் என் வீட்டின் அருகில் உள்ள பூங்கா வெறிச்சோடிக் கிடக்கிறது. சில மாதங்களுக்கு முன், 'குழந்தைகள் கண்டிப்பாக மாலையில் வெளியே சென்று விளையாட வேண்டும்; எந்த மின்னணுக் கருவியிலும் விளையாடக் கூடாது' என்று பள்ளியிலிருந்து ஒரு செய்தி வந்தது.

மருத்துவர்கள் கைபேசி உபயோகிப்பதால் சிறுவயதில் வரும் பிரச்சனைகளைப் பற்றி நிறையக் கூறியிருக்கிறார்கள்.

கைபேசியையே உற்றுப் பார்ப்பதால் கழுத்துப் பிரச்சனை, தண்டுவடப் பிரச்சனைகள் இளவயதிலேயே வரும் ஆபத்து இருப்பதாகக் இவர்கள் கூறுகின்றனர். இந்த நண்பர்களின் அழுத்தத்திற்கு இரையாகாமல் இருக்கும் நல்லொழுக்கத்தை நாம் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

இன்றைக்குக் கைபேசி கேட்கிறார்கள். நாமும் வாங்கிக் கொடுக்கிறோம். அவர்கள் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றதும் BMW கார் வேண்டும் என்று கேட்பார்கள். நீங்கள் கொடுக்கத் தயாரா?

ஸ்ரீலதா,
ஃபோஸ்டர் சிட்டி

© TamilOnline.com