உயர உயர வளர்ந்த ஓர் ஆங்கிலேய தம்பதிகள், தரைத்தளர உடையணிந்த ஒரு வட இந்தியர், இவர்களைத் தவிர முதல் வகுப்பிலிருந்து யாருமே இறங்கக் காணோம்.
பிளாட்பாரத்தில் கூடியிருந்த கும்பலில் சிலர் விழித்தார்கள். பலர் கிராப் தலை கலையாதவாறு சொறிந்து கொண்டார்கள். இன்னும் சிலர் தவித்தார்கள். "வரவில்லையா?"
"அதுதானே! வரவில்லை போலிருக்கிறதே!" என்றவாறு கையிலிருந்த ரோஜா மாலையைப் பிய்த்து வாயில் போடப்போன கண்ணனின் கை வெடுக்கென்று பறிக்கப் பட்டது. திரும்பிப் பார்த்தால்...
வதவதவென்ற உருவம்... செவ செவ என்ற நிறம்... குறுகுறுவென்ற கண்கள் (கண்ணாடி போட்டது).. தொள தொளவென்ற கன்னம்... "நீங்கள் தமிழ்நாடு கன்சர்ன்ஸ் லிமிடெட் காரங்கதானே?" என்ற கேள்வி.
"ஆமாம்..." என்று கோரஸ் கிளம்பவே வெடுக்கென்று மாலையைப் பிடுங்கித் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டதல்லாமல் கைதட்டலையும் ஆரம்பித்து வைத்தார் அவர். "நான்தான் மிருத்யூ பூதம். உங்கள் புது மானேஜர்.''
படபடவென்று கைதட்டல் கிளம்பியது.
"நாங்கள் உங்களை முதல் வகுப்பில் தேடிக் கொண்டிருந்தோம் ஸார்."
"மூன்றாம் வகுப்பில் வந்தேன்."
"அதென்ன அது?" - கண்ணன் கேட்டான் படபடப்புடன்: "முதல் வகுப்பு ரிசர்வ் செய்திருக்கிறதாகத் தந்திகூட வந்ததே."
"அதுவா?" அவர் சொன்னார் அலட்சியமாக, "மூன்றாம் வகுப்பு டிக்கட் வாங்கி முதல் வகுப்பில் பிரயாணம் செய்தால் அனுமதிக்க மாட்டார்களில்லையா? அவர்களைப் பழிவாங்கவே முதல் வகுப்பு வாங்கி மூன்றாம் வகுப்பில் வந்தேன். எப்படியும் மாறித்தான் வந்தேன். இப்போதென்ன பண்ணுவார்களாம்?" என்று மற்றவர்களை அயரவைத்தவர் சிணுங்கினார்.
"நல்ல மாலை வாங்கிவரக் கூடாதா? அரளிப்பூ வைத்துக் கட்டி இருக்கான்கள்" என்று முணுமுணுத்தவாறு நடக்கலானார்,
குளிர்சாதன அறையில் குளிர்பானத்தை உறிஞ்சிக் குடித்த மிருத்யூ பூதம் ஸ்ட்ராவை ஒடித்துப் போட்டார்.
"ஆபீசைச் சுற்றிப் பார்க்கலாம் வா" என்று உதவி மானேஜருடன் ஒவ்வொரு டிபார்ட்மெண்டாகச் சுற்றிச் சுற்றி வந்தார். அவரது சிணுங்கிய முகம் சிணுங்கியே இருந்தது. "அந்த டேபிளை இங்கே மாற்று; அந்த நாற்காலியை எடுத்து அப்படிப் போடு. பீரோவை நகர்த்து, குப்பைக் கூடையைத் தூக்கி மாற்று" என்றெல்லாம். மாற்றியும் திருப்தியில்லாமல் போகவே, கடைசியில், ஆபிஸையே மாற்று; புதுக்கட்டிடம் பாரு" என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.
ஆற்றங்கரையோரமாக ஒரு புதுக் கட்டிடத்துக்கு மாற்றுவது என்று ஏற்பாடாயிற்று. "வாடகை கொஞ்சம் அதிகமானாலும் கூடப்
பரவாயில்லே. அழகாயிருக்கிறதே" என்று அனுமதித்து அட்வான்ஸ் கொடுத்துப் பாதிக்குமேல் மேஜை நாற்காலிகளும் கூடக் கொண்டு போயாயிற்று.
தனது குளிர்சாதன அறையில் அமர்த்து ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த மிருத்யூ பூதம் எதனையோ நினைத்துக் கொண்டு எழுந்து வெளியே வந்து பார்த்தார். எல்லார் முகங்களிலும் குதூகலம் தெரிந்தது. ஒன்றிரண்டு பேரைத் தவிர மீதிப் பேரெல்லாம் வாலிபர்கள். வளர்ந்து, உடையுடுத்தி, ட்ரிம்மாக இருக்கும் அவர்களைக் கண்டதும் அவருக்குச் சந்தேகம் வந்து விட்டது.
கணக்கன் கண்ணனைக் கூப்பிட்டு, "நம் ஆபிஸில் மொத்தம் எத்தனை கட்டைகள்?" என்று விசாரித்தவர், அவன் விழிப்பதைக் கண்டதும் பயந்து விட்டார். "கொஞ்சம் விழிக்காமல் இருக்கிறாயா ஐயா? கேள்வி புரியாவிட்டால் மீண்டும் சொல்கிறேன். நம் ஆபீஸில் மொத்தம் எத்தனை பிரம்மச்சாரிக் கட்டைகள் என்றேன்."
"அதுவா ஸார்!" முகத்தைத் துடைத்துக் கொண்டான் கண்ணன். "என்னோடு சேர்த்து முப்பத்தி ஆறு".
"என்ன முப்பத்தி ஆறு?" என்றவர் சட்டென்று சொன்னார், "புதுக் கட்டிடம் கிடையாது".
"ஸார்!" கண்ணன் அலறிவிட்டான். "பாதிக்குமேல் கொண்டு போயாயிற்று!"
"அதனாலென்ன? திரும்பக் கொண்டு வந்துவிடு, அங்கே பக்கத்துக் காம்பவுண்டில் பெண்கள் கல்லூரி இருக்கிறது. இந்தப் பிரம்மச்சாரிகளைக் கொண்டு போனால் வேலையா பார்ப்பார்கள்? வேடிக்கைதான் பார்ப்பார்கள். ஆகவே புதுக் கட்டிடம் கிடையாது" என்று கையை விரித்துவிட்டார் பூதம்.
ஆபீஸில் கொந்தளிப்பு. முனகல் குரல்கள்.
"இதென்ன சுத்த 'துக்ளக்' ராஜ்யமான்னா போச்சு?" என்று சீறி எழுந்தாள் 'ஜானு மாமி!' என்று அழைக்கப்பெறும் மிஸ் ஜானகி.
வயதுதான் இருபதே தவிரப் பேச்செல்லாம் அசல் அம்மாமி ஸ்டைல்தான், "சித்தப் பொறுங்கோ. நான் போய்ப் பேசிட்டு வரேன்" என்று உள்ளே போனவள், பத்து நிமிஷத்துக்கெல்லாம். திரும்பி வந்தாள் சிரிப்புடன். "மிஸ்டர் கண்ணன். போங்கோ கூப்பிடறார்" என்று கூறிவிட்டுத் தனது இடத்தில் போய் அமர்த்தாள்.
திரும்பி வந்த கண்ணன் பரப்பிய சேதி எல்லோரையும் ஜானகியின் ஆசனத்துக்கு முன்னால் வந்து சுற்றி நிற்கவைத்து விட்டது.
"என்ன பண்ணினாய்?" "வேண்டவே வேண்டாம்னாரே! எப்படிச் சம்மதிக்க வைத்தாயாம்?" என்பது போன்ற கேள்விகள்.
"இதென்ன பிரமாதமாம்?" மிஸ் ஜானகியின் கையிலிருந்த காப்பியிங் பென்ஸில் அவளது உதட்டில் நீலநிறப் புள்ளி ஒன்றை வைத்தது. "கொடுத்த அட்வான்ஸ் மொத்தம் பதினைந்தாயிரமாச்சே! அது திரும்பக் கிடைக்காதே! அதை எந்தக் கணக்கிலே வைக்கப் போறேள்'னு கேட்டேன். 'ஙே'ன்னு விழிச்சார். 'ஹெட் ஆபீஸிலிருந்து எக்ஸ்பிளனேஷன் கேட்பாங்களே என்ன சொல்லப் போறேள்'ன்னு கேட்டேன். அவ்வளவுதான். உடனே பாய்ந்தாரே ஒரு பாய்ச்சல் 'மாற்றச் சொல்லு, மாற்றச் சொல்லுன்னு'"
அத்தனை பேர்களும் சொன்ன நன்றி நவிலலைப் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டாள் ஜானகி, ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த பூதத்தின் முகம் ஆயிரம் கோணலாயிற்று.
ஒரு தரம்...
"ரிசப்ஷனிஸ்ட்' என்றால் வழியில்தான் உட்கார வேணுமா?" என்று ஒரு மூலையைத் தேர்ந்தெடுத்து உட்கார்த்தி விட்டார்.
காற்று இல்லாத மூலையில் வதங்கிய அந்த விசாரணை குமாஸ்தா மிஸ் ரூபி, ஜானகியிடம் ஒரு குறை அழுதாள். "நீ இரு, நான் போய்ச் சொல்கிறேன்" என்று உள்ளே போய்ப் பேசிவிட்டு வந்தாள். அவள் பின்னாலேயே வந்த ஆட்கள், விசாரணை' மேஜையைத் தூக்கி வாசலிலேயே போட்டு விட்டார்கள்.
வியப்புடன் விசாரித்தவர்களைப் பார்த்து அலட்சியமாகச் சிரித்தாள் ஜானகி. "என்ன சொன்னேன்? ஒண்ணும் பிரமாதமாயில்லே! வருகிறவாளெல்லாம் 'விசாரணை எங்கே?'ன்னு என்னையே விசாரிக்கிறா. அவர்களை விசாரணைக்கு அனுப்பி வைக்கிற வேலையையும் சேர்த்து நான் செய்யறேன். ஆக எனக்குச் சம்பள உயர்வு தரணும்னேன். உடனே இடத்தை மாற்றுன்னு அலற ஆரம்பிச்சுட்டாரே அந்த துக்ளக்!"
ஒட்டுக் கேட்டு நகர்ந்த பூதம் பல்லைக் கடித்தார். நாளுக்கு நாள் தம்மால் அந்த ஜானகிக்கு மதிப்பு ஏறுவதை அவரால் தாங்க முடியவில்லை. எப்படியாவது அவளுக்கு ஏதாவது கெடுதல் செய்யாவிட்டால் அவருக்குத் தாங்காது போலிருந்தது. "சமயம் வரட்டும்" என்று கறுவிக் கொண்டார்.
சமயம் வந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு பம்பாயிலிருந்து அனுப்பப்பட்ட சில ஆடிட்டர்கள் வந்திருந்த சமயம் அது.
மத்தியான டிபனுக்குக் கொண்டு வந்திருந்த வெங்காய அடையைத் தின்று தீர்த்துவிட்டு, கையிலுள்ள எண்ணைப் பசையைத் துடைப்பதற்காக ரஃப் பேப்பரிலிருந்து ஒரு பேப்பரைப் பரட்டென்று கிழித்த ஜானகி விருட்டென்று எழுந்து விட்டாள்.
அலறியடித்துக் கொண்டு ஓடிவந்த மிருத்யூ பூதத்தைக் கண்டு வெலவெலத்துப் போய் நின்றாள். "என்ன ஸார்?" என்று நடுங்கினாள்.
"ஜானகி!" மூச்சு இரைத்தது அவருக்கு. "பாவிப் பயல்கள், அந்த ஜாலி ஜிம்கானா எஸ்டிமேட்டைக் கேட்கிறார்கள்."
"ப்பூ! அவ்வளவுதானா?" சாவகாசமாக மேஜைமேல் விழுந்துவிட்ட ரஃப் பேப்பரை எடுத்துக் கை எண்ணெயைத் துடைத்துக் கசக்கிப் போட்டாள். "கேட்பேள்ன்னு நேக்கு நன்னாத் தெரியும். அதனாலேதான் எடுத்து வைச்சிருக்கேன்" என்று சாவகாசமாக மேஜையைத் துழாவினாள்.
பிறகு பரபரப்புடன் தேடினான். மேஜைமேல், மேஜை டிராயர்கள், மேஜைக்குக் கீழே, குப்பைக் கூடையில். தேடு தேடென்று தேடிவிட்டு பூதத்தைப் பார்த்து விழித்தாள்.
"பத்திரமா எடுத்து வைச்சேனே" என்று கையைப் பிசைந்தாள்.
"அதுதான் எங்கே?"
"ஆங்! அதுதான் மறந்து போச்சு. எங்கேன்னு தெரியல்லே ஸார்."
"நான்ஸென்ஸ்" என்று ஆரம்பித்து மிருத்யூ பூதம் பத்து நிமிஷம் குறையாமல் திட்டித் தீர்த்துவிட்டு, பொழிந்து தள்ளி நிறுத்தினார். பிறகு வெடித்தார். "இன்னும் ஏன் என் கண் முன்னாலே நிற்கிறாய்? வயிற்றைப் பற்றி எரிகிறது. போய்த் தொலை!"
"அதெப்படி? அஞ்சரை மணிவரை ஆபீஸ் இருக்கே?"
"பேசாதே! பேசாதே என்றால் பேசாதே!" சீறினார் பூதம். "உன்னை ரெண்டு நாளைக்கு சஸ்பெண்ட் பண்ணியிருக்கேன். போய்ச் சேரு."
அவளை டிஸ்மிஸ் பண்ணச் சந்தர்ப்பம் வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்த அவருக்கு, குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் சஸ்பெண்டாவது பண்ண முடிந்ததே என்ற திருப்தி கிடைத்தது.
"மிஸ்டர் பூதம்" கைகளைக் கட்டி. நெஞ்சு நிமிர அவள் அப்படிக் கூப்பிட்டதை அவர் ரசிக்கவில்லை என்பது அவரது முகம் போன போக்கிலேயே தெரிந்தது. "உங்களை ஆபீஸிலே 'துக்ளக்'ன்னு பட்டம் கட்டியிருக்காளோல்லியோ? அது பொருத்தமாத் தானிருக்கு. இரண்டு நாளா? சஸ்பெண்டா? சரி, நான் வரேன்" என்று டம்பப் பையை எடுத்துக் கொண்டாள். போகிற போக்கில் "அந்த ஆடிட்டர்கள்கிட்டே மாட்டிண்டு நீங்க நாசமாத்தான் போகப் போறேள். அந்த 'ஹிஸ்டாரிக்கல் ஃபேம்' துக்ளக் கூட இப்படித்தான் முன்னே பின்னே யோசிக்காம தண்டிச்சிடுவானாம். என்னையா சஸ்பெண்ட் பண்றேள்? அவஸ்தைப்பட்டுச் சாகப் போறேள்" என்று சபித்தவாறு போயே போய்விட்டாள்.
கையைப் பிசைந்தவாறு கொஞ்ச நேரம் திருதிருவென்று விழித்த பூதம், ஆடிட்டர்களின் நினைவு வரவே, மூக்குக் கண்ணாடியைச் சரியாக நிமிர்த்தி விட்டவாறு குளிர்சாதன அறையினுள் நுழைந்து கொண்டார்.
இரவு மணி பத்து.
ஊரடங்கி, தெருவும் அடங்கி, அந்த ஆபீஸும் அடங்கி வெறிச்சோடிப் போய் நெடுநேரமாகிறது. பூதம் நெளிந்தார். கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த ஆடிட்டர்களின் பேச்சு ஒரு 'தினுசாக' மாறுவதைக் கண்டதும் அவரது கையும் காலும் இலேசாகத் தந்தியடிக்கலாயின. அந்த மூன்று பேரில் ஒருத்தர் அடிக்கடி, "பெட்டி கேஷ் எவ்வளவு இருக்கிறது" என்று கேட்டுக்
கொண்டேயிருந்தார்.
"என்ன ஐயா ஆபீஸ் இது? இன்னும்கூட மணி பத்து அடிக்கவில்லை. அதுக்குள்ளே வெறிச்சோன்னு போயிடுச்சு. ஒரு காக்கையைக் கூடக் காணோமே. கூர்க்காகூட மவுண்ட் ரோடு புகாரிக்குப் போயிட்டான், சாப்பாடு கொண்டு வர, இப்ப இந்த ஆபிஸ் இருக்கிற இருப்பிலே உன்னைக் கொலை செய்தாலும் கூடக் கேட்பாரில்லே போலிருக்கே?"
"கொலை" துள்ளி எழுந்து மேஜைமீது சாய்ந்த பூதத்தின் கைப்பட்டு அவருக்கே தெரியாமல் ‘இன்டர்காம் போன்' கருவியின் பித்தான் அழுத்திக்கொண்டது. "கொலையா? என்ன பேசறீங்க?" என்று பயங்கரமாக அலறினார்.
"ஷட் அப்!" என்ற கோரஸுடன் மூன்று நாற்காலிகள் பின்னுக்குத் தள்ளப்படும் ஓசை கேட்டது. "டக் டக்" என்ற பூட்ஸுகளின் ஒலியுடன் அவரது நெஞ்சின் ‘படக் படக்' ஓசையும்கூடக் கேட்டது. உற்றுப் பார்த்தவாறு பூதத்தை நெருங்கி வந்தவர்கள் சட்டென்று மூன்று கத்திகளை எடுத்து அவர் நெஞ்சுக் குழியில் பதித்ததும், உயிரே போய்விட்டாற் போல், "யாவ்! கத்திகள்" என்று அலறி விட்டார். "ஸ்ஸு! கூச்சல் போட்டே ஒரே சதக்!" என்று மீசைக்காரன் அதட்டினான். "நீ ஒரு மடையன்... முட்டாள்! எங்களைப் போய் ஆடிட்டர்கள் என்று நம்பினாயே! பம்பாயிலிருந்து வந்த ஆடிட்டர்களை வழியிலேயே மடக்கி மறைச்சு அவர்களின் அத்தாட்சிப் பத்திரங்களைப் பறிச்சிட்டு வந்து நின்னோம். எங்கள் முகமூடிக் கொள்ளைக் கூட்டத் தலைவி கீதா புத்திசாலி. அவள் யோசனை பலிச்சிட்டது. நீயும் ஏமாந்தாய். அது சரி, பெட்டி கேஷ் எவ்வளவிருக்கு? சொல்லிடுடா நயினா!" என்று கத்தியின் கூரான முனையை அவர் கழுத்தில் பட்டும் படாமலுமாக ஓடவிட்டான்.
கொஞ்ச நேரத்தில் நாற்காலியோடு கட்டிப் போடப்பட பூதம் விழிக்க, பெட்டியிலிருந்த மூவாயிரம் ரூபாவையும் கிளப்பிக் கொண்டு, 'பை பை' என்று சொல்லி வெளியே வந்து ஹாலையும் கடந்து ரோட்டுக்கு வந்த ஆடிட்டர்கள் திடுக்கிட்டு நின்று விட்டார்கள்.
உள்ளே....
திணறி, திமிறிக் கொண்டிருந்த பூதம், கதவு மெல்லத் திறக்க, இரட்டைப் பின்னலும் முகமூடியுமணிந்த ஓர் உருவம் உள்ளே வரவே. "யார் நீ" என்று அலறினார், "'நானா? கொள்ளைக் கூட்டத் தலைவி கீதா! ராஜஸ்தான் முகமூடி!" என்றவாறு நெருங்கி வந்து அவர் நெஞ்சில் கத்தியைப் பதிய வைத்ததும்... "யாவ்..வ்... போலீஸ்..." என்று அலறிய பூதத்தினால் நம்பவே முடியவில்லை.
திமுதிமுவென்று அறையில் நுழைந்தது போலீஸ் கூட்டம். கட்டுக்களை வெடுக் வெடுக்கென்று அந்த முகமூடி அறுத்து விடவே துள்ளி எழுந்த பூதம், முகமூடியை இழுத்துப் பார்த்து "அடிப்பாவி! நீயா? நீயா அந்த முகமூடித் தலைவி? போச்சே என் ஆபீஸ் பணம் மூவாயிரம் போச்சே! இன்ஸ்பெக்டர்! கைது செய்யுங்க இவளை!" என்று கத்தினார்.
"என்ன ஸார், இது?" இன்ஸ்பெக்டர் சொன்னார்: "இவர்கள்தானே போன் பண்ணி எங்களை வரவழைச்சு இத்தனை திருடர்களையும் பிடித்துக் கொடுத்தாங்க. அதற்கு நாங்க நன்றிதான் சொல்லணும். நீங்க இவங்களை அரெஸ்ட் பண்ணச் சொல்றீங்களே?"
"அப்படியா?"
"ஆமாம், சார்!" ஜானகி சொன்னாள்: "ஆபீஸுக்குள்ளே நான் நுழையவும். ‘இன்டர்காம்' போனிலே உங்க அலறல் கேட்டது. ஆரம்பத்திலேயிருந்தே எனக்கு அந்த முகமூடி ஆடிட்டர்கள் பேரிலே சந்தேகம். எல்லாம் கேட்டுப் புரிஞ்சுண்டேன். உடனே பக்கத்துப் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணினேன். அவர்களும் ரைட் டயத்துக்கு வந்து வாசலிலேயே மடக்கிப் பிடிச்சுண்டுட்டார்கள்."
பூரித்துப் போன பூதத்துக்குச் சந்தேகம் வந்துவிட்டது. "அது சரி, நீ எங்கே இங்கே வந்தாய்? அதுவும் இந்த நேரத்திலே... அதுவும் தவிர நான் சஸ்பெண்ட் வேறு பண்ணியிருக்கேனே?"
"ஆத்துக்குப் போனதும்தான் சந்தேகம் வந்தது. ரஃப் பேப்பரை எண்ணெய் துடைக்க எடுத்தேனோல்லியோ, நீங்க வந்த வேகத்தைப் பார்த்ததும் மறுபடியும் எடுத்தப்ப தவறுதலா, டேபிள் மேலேயே அதோடகூட எஸ்டிமேட்டையும் எடுத்து கசக்கிட்டேன் போலிருக்கேன்னு சந்தேகம். காலையிலே குப்பை வாரிப் போட்டுடுவான்களேன்னு இப்பவே பார்த்துண்டு போகலாம்னு வந்தேன். வந்ததும் நல்லதாத்தான் போச்சு!" என்றவள், "இந்தாங்கோ! உங்க வெள்ளியிலே செஞ்சு, தங்க முலாம் பூசி, வைரக்கல்லு பதிச்ச பெர்ரிய எஸ்டிமேட்" என்று கசங்கி, எண்ணெய் ஊறிப்போன எஸ்டிமேட்டை அவர் கையில் வைத்தாள் ஜானகி.
மிருத்யூ பூதத்துக்கு வாயெல்லாம் பொக்கையாயிற்று. "கொழந்தே ஜானகி! என்னை துக்ளக்னு சொன்னாயே, அது ரொம்பவும் சரி. உன் சஸ்பெண்டை வாபஸ் வாங்கிண்டேன். நாளைக்குக் காலையில் ஆபீஸுக்கு வந்துவிடு!" என்றார் பாசத்துடன்.
ராஜேந்திரகுமார் |