தென்றல் பேசுகிறது...
அடுக்கடுக்காக எத்தனை இயற்கைச் சீற்றங்கள்! சீன-நேபாள எல்லையில் பனிப்பாறை பிளவால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், இந்தோனேசியாவில் நிலநடுக்கம், பிலிப்பைன்ஸில் பெருவெள்ளம், கிராண்ட் கேன்யனில் பெருக்கெடுப்பு, ஐரோப்பாவில் காட்டுத்தீ, பிரிட்டனில் கடுமையான வறட்சி - இத்தகைய பேரிடர்களின் தாக்கமும், அடுத்தடுத்து வருவதும் ‘இவை இயற்கையின் சீற்றமா, இல்லை மனிதரின் பேராசையால் ஏற்படுகின்றனவா?’ என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

இரானிலும், காஜாவிலும், உக்ரைனிலும், உலகின் பிற இடங்களிலும் நடந்து வரும் போர்கள் நாடுகளுக்கு இடையேயான விரோதத்தாலா, அல்லது வேறொரு நாட்டின் இயற்கை வளங்களைக் கைப்பற்றும் பேராசையாலா என்பதும் சிந்தனைக்கு உரியதே. முற்காலத்திலும் இத்தகைய போர்கள் இருந்துள்ளன. ஆனால், ஊசிமுனை இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் ஆற்றல், குறிப்பாக, எதிரித் தலைவரை அறைக்குள் நுழைந்து தாக்கும் தளவாடங்கள், இருந்ததில்லை. அவ்வாறு தாக்குமளவு நாட்டின் அதிபர்கள் கொள்கைரீதியான ஒழுக்கமற்றவர்களாக இருந்ததும் இல்லை. இப்போதெல்லாம் பேரிடர் நிவாரண உதவியை மென்மையாகவோ, முகத்தில் அடித்தாற்போலவோ நாடுகள் ஏற்க மறுப்பதைப் பார்க்கிறோம். நீள்கின்ற உதவிக் கரங்களும் அதிகம் காணப்படவில்லை.

★★★★★


அமெரிக்க இடைத்தேர்தலுக்கு இரண்டு மாதங்களே உள்ளன. முடிவு எப்படி இருந்தாலும், பிரைமரிகளின் அறிகுறிகள் நம்பிக்கை தரவில்லை. இன்றைய அரசின் நிலையற்ற கொள்கைகள், தேசத்தின் கடன்சுமைப் பெருக்கம், நம்பற்கரிய பணவீக்கம், முன்னர் பார்த்திராத பெட்ரோல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், மாற்றுக் கட்டமைப்புக்கான திட்டம் இல்லாமை, திறன்மிகு பணியாளர் நாட்டை விட்டு அகலுதல் அல்லது அகற்றப்படுதல், நடந்து வரும் போர்களுக்கு மக்கள் கொடுக்கும் அநியாய விலை, புதிய வேலை வாய்ப்புகள் இன்மை, பேரிடர்க் கால நிவாரணத்தில் தடங்கல்கள், பிற நாட்டுப் பொருள்கள்மீது வரி விதிப்பு அல்லது அதற்கான மிரட்டல், கொடுமையான குடிவரவுக் கொள்கைகள், உடல்நல மருத்துவத் துறையில் நிலவும் சவால்கள்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும் தற்போது ஆளும் கட்சியை ஆதரிப்போர் இவற்றைப் பொருட்படுத்தவில்லை எனத் தெரிகிறது. அறிவார்ந்த வாக்களர்தாம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

★★★★★


புற்றுநோயைப் போராடி வென்ற எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரியின் நேர்காணல் நெஞ்சை நெகிழவைக்கும். வழக்கமான பிற அம்சங்களும் உண்டு.

வாசகர்களுக்கு விநாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி வாழ்த்துகள்.

தென்றல்
செப்டம்பர் 2026

© TamilOnline.com