ஜூலை18, 2026: ஃப்ளோரிடா மாகாணம், டாம்பாவில் (Tampa, Florida) ஐயப்பன் கோயிலில், இஸ்கான் (ISKCON) மற்றும் ஃப்ளோரிடாவின் ஒடிசா சமூகத்தினர் (Florida Odisha Community) இணைந்து பூரி ஜகன்னாதர் ரத யாத்திரையைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன.
ஒடிசா சமூகத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உலகப்புகழ் பெற்ற பூரி ஜகன்னாதர் தேரின் மாதிரி ஒன்றை உருவாக்கியிருந்தனர். இந்தத் தேர், ஐயப்பன் கோயிலின் கம்பீரமான யானையான ஹரிஹரன், பக்திப் பாடல்கள், துடிப்பான பாரம்பரிய மரியாதைகளுடன் சிறப்பாக ஊர்வலம் புறப்பட்டது. இதில் வீற்று பகவான் ஜகன்னாதர், பகவான் பலபத்ரா மற்றும் தேவி சுபத்ரா ஆகியோர் வலம் வந்தனர்.

பக்தர்கள் தாமே புனித ஜகன்னாதர் ரதத்தை இழுக்கும் பரவச அனுபவத்தைப் பெற்றனர். பக்தர் ஒருவரின் அனுபவம் இதோ: ஒடிசாவில் பிறந்து வளர்ந்த நான், பல ஆண்டுகளாக இந்த விழாவில் நேரில் பங்கேற்றதுண்டு. பல தசாப்தங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு வந்துவிட்டதால், இந்த மாபெரும் நிகழ்வைத் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் மட்டுமே பார்க்க முடிந்தது. இந்த ஆண்டு, ஒருமித்த கருத்துக் கொண்டவர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை அமெரிக்காவில் சாத்தியமாக்கியிருப்பது என் கனவு நனவான தருணம்.

புவனேஸ்வரில் உள்ள 'கலிங்கா இன்ஸ்டிடியூஷன்' தலைவர் டாக்டர் அச்சுதா சமந்த் மற்றும் பிறருக்கு நன்றி. டாம்பா நகரில் இந்த நிகழ்வை நடத்தத் தேவையான ஊக்கத்தை அவர்களே அளித்தனர்.
தகவல்: சங்கீதா ரவிச்சந்திரன் புகைப்படங்கள்: புவன் மோகன்குமார் செய்தி அறிக்கையில் உதவி: இப்சிதா சேதி |