ஒரு நிமிஷத்தில் ஒரு நிச்சயதார்த்தம்
புதிதாக வாங்கிய டாடா நெக்ஸான் மின்சாரக் காரில் நீண்ட தூரம் சென்று வரலாம் என்று வண்டியை ஸ்டார்ட் செய்தான் சித்தார்த். பக்கத்தில் உள்ள இருக்கையை ஏக்கத்துடன் தடவினான். தனக்கும் ஒருநாள் திருமணமாகும், மனைவியை அருகில் அமர்த்திக் கொண்டு ஊரெல்லாம் சுற்றவேண்டும் என்பது அவனுடைய நீண்டநாள் ஆசை.

சித்தார்த் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அடையாறு கஸ்தூரிபாய் நகரில் பெரிய சொந்த வீடு. வசதியான குடும்பம். சென்னையில் B.Tech. அமெரிக்காவில் MS முடித்துவிட்டு இந்தியாவிற்கே திரும்பி வந்துவிட்டான். OMRல் ஒரு பெரிய ஐடி கம்பெனியில் நல்ல வேலை. வருடத்துக்கு ஐம்பது லட்ச ரூபாய் சம்பளம். வயது 35. இருபத்தாறாவது வயதில் சித்தார்த் ஒரு பைக் வாங்கினான். அடுத்த இரண்டு வருடத்திற்குள் திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் பீச், பார்க், சினிமா, அவுட்டிங் என சுற்றும் கனவுகளுடன் இருந்தான். அவனுடைய மனதின் ஏக்கங்களையும் தாபங்களையும் சுமந்து கொண்டு அந்த பைக் இன்னும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறது.

சித்தார்த்துக்கு இருபத்தேழு வயது ஆனவுடன் அவனது பெற்றோர் பெண் பார்க்கத் துவங்கினார்கள். மேட்ரிமோனியல் சைட்டின் மூலம் பெண்களின் பெற்றோர்களைப் தொடர்பு கொண்டதில் பலர் சரியாக பதில் சொல்லவில்லை. சிலர் ஒரு வாரம் கழித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு மறந்தே போய்விடுவார்கள். இவர்களுக்கு ஜாதகம் பொருத்தினால் அவர்களுக்குப் பொருந்தாது. அப்படியே பொருந்திய சில இடங்களில் பெண்ணும் அவளின் பெற்றோரும் போடும் கண்டிஷன்களைக் கேட்டு சித்தார்த் இப்படி ஒரு கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவிடுவான். இப்படியே அவனுக்கும் வயது முப்பத்தைந்து ஆகிவிட்டது. திருமணம்தான் ஆகவில்லை.

அவனுடைய அம்மாவும் "ஏம்ப்பா உன்கூட வேலை பாக்குற பெண்களில் யாரையாவது காதலிக்கக் கூடாதா? அவளையே உனக்குக் கட்டி வைக்கிறோம்" என்று கூற, கடகடவெனச் சிரித்தான் சித்தார்த். "அய்யோ அம்மா! உலகமே தெரியவில்லையே உங்களுக்கு. காதல் எல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே ஆரம்பிக்கணும். அதுதான் ட்ரெண்ட்" என்றான். "அடக் கலிகாலமே" என அம்மா அதிசயித்தார்.

அன்று புதிதாக வாங்கிய காரில் அம்மா அப்பாவுடன் குரோம்பேட்டை குமரன் குன்றம் கோவிலுக்குச் சென்றான் சித்தார்த். அம்மா குழுவினருடன் திருப்புகழ் பாடிக் கொண்டிருக்க, அப்பா கந்தசஷ்டி கவசம் சொல்லிக் கொண்டிருந்தார்.

சித்தார்த் முருகனைத் தொழுதுவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றி வந்துகொண்டிருந்தான். அங்கே ஓர் இளம்பெண் மஞ்சள் நிறப் புடவையில் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்து பக்திப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தாள். அவளைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தவன், அருகில் சென்று "வினயா?" என்று அழைத்தான். நிமிர்ந்து பார்த்தவள் "ஆமாம், வினயாதான், நீங்கள்?" என்று கேட்டாள். "என்னைத் தெரியலையா? திருவல்லிக்கேணி ஆறுமுக ஆச்சாரி தெருவில் ரெட்டியார் வீட்டு மாடியில் அடுத்தடுத்த போர்ஷனில் குடியிருந்தோமே, நான்தான் சித்தார்த்" என்று அவன் கூற, "ஓ சித்து! அடையாளமே தெரியல, சாரி" என்றாள் வினயா.

"நாங்கள் அங்கேயிருந்து அடையாறுக்கு வீடு மாறியபோது நீ ஆறாங்கிளாஸ், உங்க அக்கா விஜயா எட்டு, நான் பத்தாங் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தோம். அப்புறம் கான்டாக்டே இல்லை. விஜயா கல்யாணத்திற்கு அம்மாவும் அப்பாவும் வந்திருந்தார்கள். நான் வெளிநாட்டில் இருந்ததால் வரமுடியவில்லை" என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, ஆறு வயதுள்ள சிறுவன் ஒருவன் வந்து "சித்தி" என்று வினயாவைக் கட்டிக் கொண்டான். டக்கென்று சித்தார்த் வினயாவின் கழுத்தைப் பார்த்தான். ஒரு மெல்லிய செயின் மட்டும் அணிந்திருந்தாள்.

சித்தார்த்தின் முகத்தில் தெரிந்த கேள்விகளைப் புரிந்துகொண்ட வினயா பேசத் தொடங்கினாள். "இவன் விக்னேஷ், என்னுடைய அக்கா விஜயாவின் மகன். விஜயாவும் அவள் கணவனும் கோவிட் சமயத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு மறைந்து விட்டார்கள். விஜயாவின் கணவனுக்கு கூடப்பிறந்த அக்கா ஒருவர்தான். ஆகையால் நாங்கள் விக்னேஷை அழைத்து வந்துவிட்டோம்" என்றாள்.

"அப்போ உன் திருமணம்?" என்று சித்தார்த் கேட்க, "அதைப்பற்றி நான் யோசிக்கவே இல்லை. அப்பா ரிடையர் ஆகிவிட்டார். பென்ஷன் குறைவுதான். நான் இப்போ நல்ல வேலையில் இருக்கிறேன். அம்மா, அப்பா, விக்னேஷ், நான் என்று திருப்தியாக இருக்கிறோம். ஆமாம், உங்கள் திருமணம்?" என்று சொல்லி நிறுத்தினாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே இருவரின் பெற்றோரும் அங்கு வந்தனர். "சித்து! இவர்கள் யாரென்று தெரிகிறதா?" என்று அவனுடைய அம்மா கேட்க "அம்மா, நான்தாம்மா வினயாவை முதலில் அடையாளம் கண்டுபிடிச்சேன்" என்று கூறிவிட்டு வினயாவின் பெற்றோரை வணங்கினான் சித்தார்த்.

சில நொடி மௌனத்துக்குப் பிறகு சித்தார்த் மெதுவாக ஆரம்பித்தான். "அம்மா, அப்பா! எனக்கு வினயாவைத் திருமணம் செய்து வைப்பீர்களா?" என்று கேட்டுவிட்டு, வினயாவின் பெற்றோரிடமும் தனது கோரிக்கையை வைத்தான். வினயாவைப் பார்த்து அவள் சம்மதத்தையும் கேட்டான்.

குன்றத்து முருகன் அருளால் சித்தார்த்தின் இந்தக் கோரிக்கை அனைவருக்கும் பிடித்துப் போக, ஒரு நிமிஷத்தில் ஒரு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. அடுத்த முகூர்த்தத்திலேயே சித்தார்த் வினயா திருமணம் இனிதே நடந்தேறியது. மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின்னர் வினயாவின் பெற்றோர் விக்னேஷுடன் சித்தார்த் வீட்டு மாடிக்கே குடி பெயர்ந்தனர். 'சித்தப்பா சித்தப்பா ' என்று விக்னேஷ் சித்தார்த்தின் மேல் உயிராக இருக்கிறான். அவனும் அப்படியே.

இதோ சித்தார்த் மனைவி வினயாவை அருகில் அமர்த்திக்கொண்டு லாங் டிரைவ் சென்று கொண்டிருக்கிறான்.

உமா ஹைமவதி ராமன்

© TamilOnline.com