சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-2)
சுவாமிகளின் தவ வாழ்க்கை
கடுங்குளிர் நிறைந்த ரிஷிகேசத்தில் சுவாமி சிவானந்த சரஸ்வதி கடுந்தவம் மேற்கொண்டார். அதிகாலை வேளையில், குளிர்மிக்க ரிஷிகேசத்தின் கங்கை நதியில் இடுப்பளவு நீரில் நின்று ஜபம் செய்வார். சில சமயங்களில் நள்ளிரவில் சென்றும் குளிர்ந்த நீரில் ஜபத்தைத் தொடர்வார். சூரியன் உதிக்கும்வரை ஜபம் தொடரும். பின்னரே வெளியில் வருவார். ரிஷிகேசத்தில் அவர் ஒரு சிறிய குடிலில் தங்கியிருந்தார். பெரும்பாலும் யாரிடமும் பேசாமல், மௌன விரதம் இருப்பார். யாத்ரிகர்கள் மற்றும் பிற பக்தர்களிடமிருந்து தனித்திருந்து தவம் செய்தார். கடும் விரதத்தை மேற்கொண்டார். எப்போதாவது பசிக்கும்போது ஏற்கனவே சேமித்து வைத்திருந்த காய்ந்த ரொட்டிகளையும், கங்கை நீரையும் அருந்திப் பசியைப் போக்கிக் கொள்வார்.

சேவைப் பணிகள்
தன்னுள் இறைவனை உணர்வதே அவரது தவத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதே சமயம் அவர் தனது மருத்துவக் கடமைகளையும் விடவில்லை. பிற சாதுக்களின் குடில்களுக்குச் சென்று அவர்களுக்குத் தேவைப்படும் மருத்துவ உதவிகளைச் செய்வார். அவர்களுக்குக் கை, கால் சுத்தம் செய்வது, கை, கால் அமுக்கி விடுவது போன்ற சேவைப் பணிகளைச் செய்வார். அவர்களுக்காக உணவு யாசித்து, அவர்கள் நோய்வாய்ப் பட்டபோது தன் கைகளால் உணவளிப்பார். அங்குள்ள பிற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பார். காலரா மற்றும் பெரியம்மை நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தார். அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்.

1927ல் லக்ஷ்மண் ஜூலாவில், 'சத்திய சேவாச்ரம மருந்தகம்' என்ற பெயரில் ஒரு மருந்தகத்தைத் தொடங்கினார். அங்கு வரும் யாத்ரிகர்களுக்குத் மருத்துவ சேவைகளைத் தொடர்ந்தார்.

தரிசனம்
இத்தகைய பணிகளினூடே அவரது தவமும் தொடர்ந்தது. பல்லாண்டு காலத் தவத்தின் பலனாக அவரது நோக்கம் நிறைவேறியது. தன்னுள் தானாக இருந்த அவர், ஒளிக்கெல்லாம் ஒளியான இறைவனைத் தன்னுள் கண்டார். நிர்விகல்ப சமாதி கைவரப்பெற்றார்.

புனித யாத்திரை
சுவாமிகள் சிறிது காலம் கழித்து தல யாத்திரையைத் தொடங்கினார். ராமேஸ்வரம் உட்படத் தெற்கிலுள்ள முக்கியப் புனிதத் தலங்களுக்குச் சென்றார். நாம சங்கீர்த்தனங்கள் நடத்தினார். சொற்பொழிவுகள் ஆற்றினார். அரவிந்தர் ஆசிரம் சென்று தரிசித்தார். திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியின் தரிசனம் பெற்றார். தென்னாட்டிலும் வடநாட்டிலும் தனது யாத்திரையைத் தொடர்ந்தார். கைலாச-மானசரோவர் மற்றும் பத்ரிக்கு யாத்திரையாகச் சென்றார்.

சுவர்க்காசிரமம்
சுவாமி சிவானந்த சரஸ்வதியின் தவப் பெருமையையும், அவரது சேவைப் பணிகளையும் கண்ட அருகில் இருந்த 'சுவர்க்காசிரமம்' என்பதன் தலைவர், சுவாமிகளைத் தங்களது ஆசிரமத்துக்கு வந்து தங்குமாறு கேட்டுக் கொண்டார். சுவாமிகளும் அதனை ஏற்றுக் கொண்டார். அங்கிருந்த பலர் சுவாமிகளுக்குச் அடியவர்களாகினர். சுவாமிகளிடம் ஆன்மிக விளக்க உரைகளையும் தியானப் பயிற்சிகளையும் பெற்றனர்.



ஆனந்த குடீரம்
சீடர்களில் நால்வர் சுவாமிகளின் அணுக்கத் தொண்டர்களாக ஆகினர். பாழடைந்தும், பயன்பாட்டில் இல்லாமலும், கைவிடப்பட்ட மாட்டுக்கொட்டகை போலத் தோற்றமளித்த ஒரு பழைய குடிலை அவர்கள் கண்டனர். அவர்கள் அக்குடிலைச் சுத்தம் செய்து அங்கு குடியேறினர். அதற்கு 'ஆனந்த குடீரம்' என்று பெயரிட்டனர். மார்ச் 1934ல் அவர்களது தெய்வீக வாழ்க்கை அங்கு தொடங்கியது. 'தெய்வீக வாழ்க்கைச் சங்க'த்தின் ஆரம்பகால வாழ்க்கையாக அது அமைந்தது. 'சிவானந்த ஆசிரமம்' என்று அது அழைக்கப்பட்டது. யோகாசனங்கள், பிராணாயாமம், கிரியைகள் போன்றவற்றைச் செய்வதன் மூலம் எவ்வாறு வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது என்று சிவானந்த சரஸ்வதி தன்னை நாடி வந்த சீடர்களுக்கு அங்கு கற்பித்தார் .

தெய்வீக வாழ்க்கைச் சங்கம்
காலப்போக்கில் சீடர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் விரிவாக்கம் அவசியமானது. 1936ல், 'தெய்வீக வாழ்க்கை சங்கம்' எனத் தன் அமைப்பிற்குப் பெயரிட்டு அதனை ஓர் அறக்கட்டளையாகப் பதிவு செய்தார். பக்தர்கள் தரும் நன்கொடைகளைக் கொண்டு சாதுக்களுக்கு உணவளித்தல், ஆன்மிக நூல்களை இலவசமாக அச்சிட்டு வெளியிடுதல், மருத்துவப் பணிகள் போன்றவற்றைத் தொடர்ந்தார். அது மேலும் பல சீடர்களின் வருகைக்குக் காரணமானது. இடம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

ரிஷிகேஷ்
சுவாமி சிவானந்த சரஸ்வதி ரிஷிகேசத்தைத் தனது ஆன்மிக வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். அது ஏன் என்பது குறித்து அவர் தன் வாழ்க்கை வரலாற்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "இமயமலைப் பகுதியில் உத்தரப்பிரதேசத்தில் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் ரிஷிகேசம். அது பல மகாத்மாக்கள் வாழும் புனிதத்தலம். சாதுக்கள், யோகிகள் மற்றும் சாதகர்களுக்கு அன்னதானம் செய்ய அங்கு தர்மசாலைகள் உள்ளன. அவர்கள் ஏதேனும் ஒரு தர்மசாலை அல்லது குடிலில் தங்கலாம். அல்லது தாங்களே ஒரு குடிசை அமைத்துக் கொண்டு தங்கலாம். ரிஷிகேசத்துக்கு அருகில் பிரம்மபுரி காடுகள், நீலகண்ட வசிஷ்ட குகைகள், தபோவனம் ஆகியவை உள்ளன. இவை காண்பவரை ஈர்க்கும் தன்மை கொண்டவை. இங்கு வாழ்பவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை உலர்ந்த உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு தமது உணவைத் தாமே தயார் செய்து கொள்ளுகின்றனர்.

இமயமலை அழகிய காட்சிகளைக் கொண்டது. ஆன்மிக முன்னேற்றத்துக்கு உகந்தது. புனித கங்கை ஒரு வரப்பிரசாதம். கங்கை அருகில் ஒரு பாறைமீது அல்லது கரையோர மணற்பரப்பில் அமர்ந்து எவரும் மணிக்கணக்கில் தியானம் செய்யலாம். அங்கு நூல் நிலையங்கள் உள்ளன. யோகம் மற்றும் தத்துவம் சம்பந்தமான நூல்கள் சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அங்கு உள்ளன. கற்றறிந்த மகாத்மாக்கள் தினசரி மாலை நேரங்களில் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்தி ஆன்மிக விஷயங்களைக் கற்றுக் கொடுப்பர். இந்த இடத்தின் சீதோஷ்ண நிலை அருமையாக உள்ளது. நவம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர்காலத்தில் லேசான குளிரும், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடைக் காலத்தில் மிதமான வெப்பமும் இருக்கும். நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஆங்கில, ஆயுர்வேத மருத்துவமனைகளும் உள்ளன. பரம்பொருளை அறிந்து அனுபவிக்கத் துடிக்கும் சாதகர்கள் தீவிரமாக, தொல்லைகளின்றி ஆன்மிகப் பயிற்சிகளில் ஈடுபட இதுதான் தகுதியான இடம் என நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்''.



தெய்வநெறிக் கழகம்
ஏப்ரல் 16, 1939ல், 'Divine Life Soceity' என்னும் 'தெய்வநெறிக்கழகம்' தோற்றுவிக்கப்பட்டது. சீடர்களுக்கு தியானம், யோகம், புலனடக்கம், கட்டுப்பாடு, மனதை ஒருமுகப்படுத்துதல், இறை வேட்கை ஆகியன குறித்துச் சுவாமிகள் இங்கு போதித்தார். பல்வேறு உபதேச உரைகளை நிகழ்த்தினார்.

சாதகர்கள் மற்றும் பக்தர்களின் மேம்பாட்டிற்காக, செப்டம்பர் 1938-ல், 'தெய்வீக வாழ்க்கை' என்ற மாத இதழ் தொடங்கப்பட்டது.

போதனை
சுவாமி சிவானந்தரின் நோக்கம் மானுடரின் அக விடுதலையை மையமாகக் கொண்டிருந்தது. அவரது வாழ்க்கை, தன்னலமற்ற சேவை எனும் கர்ம யோகத்தின் லட்சியத்திற்கு ஓர் ஒளிமயமான உதாரணமாகத் திகழ்ந்தது. அனைத்து மதங்களின் அடிப்படைக் கோட்பாடுகளையும், அனைத்து யோகப் பாதைகளையும் ஒன்றிணைத்து 'ஒருங்கிணைப்பு யோகம்' என்னும் ஒரு யோகத்தை அவர் உருவாக்கினார். "சேவை செய், அன்பு செய், கொடு, தூய்மைப்படுத்து, தியானி, உணர்" என்பதே அவரது போதனையாக அமைந்தது. அதனையே தனது தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தில் அமல்படுத்தினார்.

அகண்ட பஜனை
அது இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம். எங்கும் பதட்டமும், அமைதியின்மையும் நிலவிக் கொண்டிருந்தது. அந்நிலையை மாற்றவும், ஆன்மிகச் சூழ்நிலையை ஏற்படுத்தவும் சுவாமிகள் விரும்பினார்.

டிசம்பர் 03, 1943ல்,
"ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே;
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே"


என்ற அகண்ட மகா மந்திர பஜனையைத் தொடங்கினார். அது குருநாதராலும், பல்வேறு சீடர்களாலும் ஒருங்கிணைக்கப்பட்டு 24 மணி நேரமும் இடைவிடாமல் தொடர்ந்தது. 1943 டிசம்பர் 31ம் தேதி ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்தை நிறுவினார்.

ஆயுர்வேத மருந்தகம்
சுவாமி சிவானந்தர் அலோபதி மருத்துவராக இருந்தாலும், ஆயுர்வேதம் பற்றி நன்கு அறிந்திருந்தார். அதன்மூலம் பல நோய்களைக் குணமாக்க முடியும் என்பதால், 1945-ல் சிவானந்த ஆயுர்வேத மருந்தகத்தை நிறுவினார். அதன் மூலம் பிணியுற்ற பலருக்கு சுவாமிகளும், சீடர்களும் உதவினர்.

அகில உலக சாதுக்கள் கூட்டமைப்பு
சுவாமி சிவானந்தர், டிசம்பர் 28, 1945-ல், அகில உலக மதங்களின் கூட்டமைப்பை ஏற்பாடு செய்தார். பிப்ரவரி 19, 1947-ல், அகில உலக சாதுக்கள் கூட்டமைப்பை நிறுவினார். அந்த அமைப்பு பல்வேறு வகைகளில் விரிவாக்கம் பெற்றது.

யோக-வேதாந்த வன அகாடமி
சாதகர்களுக்கு முறையான ஆன்மிகப் பயிற்சி அளிக்கவும், ஆன்மீகத் தேடலுடன் வருவோருக்குப் பயனளிக்கும் வகையிலும், 1948ல் யோக-வேதாந்த வன அகாடமி நிறுவப்பட்டது. அதன் சார்பில் செப்டம்பர் 1951-ல், யோக-வேதாந்த வன அகாடமி அச்சகம் நிறுவப்பட்டது. அறிவைப் பரப்புரை செய்வதற்காகவே அது தோற்றுவிக்கப்பட்டது. அதன்மூலம் பல்வேறு நூல்கள், பிரசுரங்கள் அச்சிடப்பட்டு இலவசமாக அடியவர்களுக்கு வழங்கப்பட்டன.

சுவாமி சிவானந்த சரஸ்வதியின் தெய்வீகப் பணிகள், ரிஷிகேஷில் இவ்வமைப்புகளின் மூலம் தொடர்ந்து நடந்தன.

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com