அலைபேசியும் அழுக்கு வேஷ்டி தாத்தாவும்
வெகு நாட்களாக பனஷங்கரி கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று திட்டம் போட்டுப் போட்டு, அது தள்ளிக்கொண்டே போக, ரகு அன்று கட்டாயம் கோவிலுக்குச் செல்ல முடிவு செய்தான்.

அன்று குட் ஃப்ரைடே, ரகுவிற்கு விடுமுறை. ரகு பெங்களூரில் கேயார்புரம் அருகில் ஒரு டெக் பார்க்கில் மென்துறைப் பொறியாளராக வேலை பார்த்தான். சொந்த ஊர் மீனாட்சி அம்மன் வாசம் புரியும் மதுரை.

ரகுவின் தந்தை எலக்ட்ரிசிடி போர்டில் வேலை பார்த்து ஓய்வு பெறும் வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. தாயார் தமிழ் ஆசிரியர். ரகுவின் ஒரே தங்கை வேலூரில் பொறியியல் கல்லூரி மாணவி.

ரகு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கம்ப்யூட்டர் எஞ்ஜினியரிங் முடித்து விட்டு, சிக்மா சாப்ட்வேர் லிமிடெட் என்ற கம்பெனியில் வேலை பார்த்து வந்தான்.

கப்பன் பார்க் மெட்ரோவிற்குள் நுழைந்த ரகு மெட்ரோ கார்டைத் தேய்த்ததும் நுழைவுக்கதவுகள் திறந்தன. பிளாட்பார்மில் ரகு நுழைந்த போது மணி ஒன்பது ஆகி விட்டிருந்தது. ஏப்ரல் மாதத்திலேயே பெங்களூரில் வெய்யில் சுட்டெரித்தது.

மைசூர் ரோடு நிலையத்தில் இறங்கி ரகு வெளியே வந்தான். அவனது அதிர்ஷ்டம் இரண்டு நிமிடத்திற்குள் பேருந்து வந்துவிட்டது. அன்று கல்லூரி விடுமுறை என்பதால் பேருந்து காலியாகவே இருந்தது. ஆனால் ஹோசக்ரேஹள்ளி வந்ததும் திமுதிமுவென்று கூட்டம் ஏற, ரகுவின் பக்கத்துச் சீட்டில் ஒரு முதியவர் வந்து அமர்ந்தார்.

ஏண்டா இவர் இங்கே வந்து உட்கார்ந்தார் என்று ரகுவிற்கு எரிச்சல் மண்டியது. முதியவரின் வேஷ்டி அழுக்காக இருந்தது. மேலே அவர் அணிந்திருந்த ஜிப்பா துவைத்து நாள் ஆகிவிட்டது போல இருந்தது. நரைத்த தலைமுடி, தாடி. ரகுவுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. போயும் போயும் காலை வேளையில் இவர்தான் வந்து உட்கார வேண்டுமா? இவர் குளித்தே நிறைய நாள் ஆகி இருக்கும் போலிருக்கே என்று நினைத்துக்கொண்டான்.

கோவிலுக்கு அம்மனைத் தரிசனம் பண்ணப் போகையில் இந்த மாதிரி ஒரு அனுபவமா! பேருந்து விரைவாக நகர்ந்து கொண்டிருக்க ரகு டிக்கெட்டிற்காக க்யூ ஆர் கோடை ஸ்கேன் பண்ணி கட்டணத்தைச் செலுத்தினான். முதியவர் சுருக்குப் பையில் இருந்து காசுகளையும் நோட்டுகளையும் நோண்டிக்கொண்டு இருந்தார். டுக்டுக் சத்தம் ஒலிக்க ரகு பாக்கெட்டிற்குள் இருந்து அலைபேசியை எடுத்தான்.

அலுவலுக நண்பர்கள் குரூப்பில் ஏதோ ஒரு காணொளியை அனுப்பி இருந்தார்கள். பேருந்தில் கூட்டம் அலைமோத ரகு அலைபேசியை பாண்ட் பாக்கெட்டிற்குள் வைத்துவிட்டான். பனஷங்கரி பேருந்து நிலையத்திற்குள் பேருந்து நுழைய மக்கள் இறங்கத் தொடங்கினார்கள். இந்தக் கிழவர் பக்கத்தில் உட்காருவதற்கு பதில் பேசாமல் இறங்கி விடுவோம் என்று ரகு முண்டியடித்துக்கொண்டு இறங்கிவிட்டான்.

அன்று வெள்ளிக்கிழமை ஆனதால் கோவிலில் கூட்டம் சற்று அதிகமாவே இருந்தது. பள்ளி, கல்லூரி விடுமுறை வேறு. ரகு விரைவாக நடக்க முயற்சிக்கையில் "தம்பி, தம்பி" என்று குரல் கேட்டது. சட்டென்று ரகு திரும்பினான். அந்த முதியவர் பின்னால் வருவது தெரிந்தது.

இவர் எதற்கு நம்மை அழைக்கிறார்? பணம் போதவில்லை என்று நச்சரிப்பாரோ? ரகு இன்னும் வேகமாக நடக்க முயல, அதற்குள் அந்த முதியவர் மூச்சுவாங்க அவன் முன்னே வந்து நின்றுவிட்டார்.

"தம்பி நீங்க உங்க போனை சீட்டிலேயே வைத்துவிட்டீங்க. இந்தாங்க. அதைக் கொடுக்கத்தான் ஓடி வரேன்" என்று நிறுத்தினார்.

அப்பொழுதுதான் ரகுவிற்கு போன் தன் பாக்கெட்டில் இல்லை என்பது புரிந்தது. போனை வாங்கிக்கொண்டே "ரொம்ப நன்றி தாத்தா" என்று கூறியபோது அவன் முகத்தில் அசடு வழிந்தது. ஆனால் உள்ளத்தில் குற்ற உணர்ச்சியே மேலோங்கி இருந்தது.

முதியவர் மெல்ல நடந்து பக்கத்துத் தெருவுக்குள் நுழைந்துவிட்டார். கோவில் வாசலில் தேங்காயும் சூடனும் மண் விளக்கும் எண்ணைய் பாட்டிலும் மலர் மாலைகளும் பரபரப்பாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தன. ரகுவின் மனம் மட்டும் கூனிக்குறுகிப் போய்விட்டிருந்தது.

முனைவர் க. வெங்கடேஷ்,
பெங்களூரு

© TamilOnline.com