கே.பி. நீலமணி
கே.பி. நீலமணி தமிழக அரசின் பாரதிதாசன் விருதுபெற்ற எழுத்தாளர். சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருது பெற்றவர். 1925ல் மதுரையில் பிறந்தார். பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். புகுமுக வகுப்புப் படித்தார். இசையின்மீது நீலமணிக்கு இளவயது முதலே ஆர்வம் இருந்தது. அதனால் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை மற்றும் திருவாளப்புத்தூர் கிருஷ்ணமூர்த்தி இருவரிடமும் குருகுல வாசம் செய்து ஏழு ஆண்டுகள் இசை கற்றார். வயலின் கச்சேரிகள் சிலவற்றை நிகழ்த்தினார். பல்வேறு இதழ்களில் இசை குறித்த விமர்சனங்களை எழுதினார். ஜானகியுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்கள்.



நீலமணி, தொடர்ந்து இலக்கிய நூல்களை வாசிப்பவராக இருந்தார். தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம் ஆகியோரது நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அவர்கள்மூலம் எழுதும் ஆர்வம் பெற்றார். சிறுகதை, கட்டுரைகளை ஆனந்த விகடன், கல்கி, குமுதம், அமுதசுரபி, கலைமகள், தினமணி கதிர், தினமணி சுடர் போன்ற இதழ்களில் எழுதினார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். சிறார்க்கான நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதினார். வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதினார். நீலமணி எழுதிய 'புல்லின் இதழ்கள்' இசையைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். இது கலைமகளில் தொடர்கதையாக வெளியாகிச் சிறந்த வாசக வரவேற்பைப் பெற்றது. பின்னர் சென்னை வானொலியில் இருமுறை நாடகமாக்கம் செய்யப்பட்டு ஒலிபரப்பானது. கே.பி. நீலமணி என்னும் தனது இயற்பெயரிலும், 'காயத்ரி', 'ஜானகிநாதன்' போன்ற புனைபெயர்களிலும் பல படைப்புகளை எழுதினார். நீலமணியின், 'காப்டன் குமார்', 'தென்னை மரத்தீவினிலே', 'பிள்ளையார் சிரித்தார்', 'மயக்கம் தெளிந்தது' போன்ற நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை.



நீலமணி தினமணி இதழில் 35 ஆண்டுகளுக்கும் மேல் துணை, இணை ஆசிரியராகப் பணியாற்றினார். 'புதிய பார்வை' இதழின் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார். 'அம்பலம்' இணைய இதழில் இசை விமர்சனக் கட்டுரைகளை எழுதினார். நூல்களை வெளியிட 'காயத்ரி பப்ளிகேஷன்ஸ்' என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். அதன்மூலம் தனது நூல்களையும் பிறர் நூல்களையும் வெளியிட்டார். சென்னை மந்தைவெளியில் 'லியோ நூலகம்' என்ற பெயரில் வாடகை நூல் நிலையம் ஒன்றை நடத்தினார். 'லியோ பதிப்பகம்' என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை மனைவி ஜானகியுடன் இணைந்து நடத்தினார். அகில இந்திய வானொலியில், வாரந்தோறும், சிறார்களுக்கு 'பாப்பாவுக்கு ஒரு கதை' என்ற தலைப்பில் பல கதைகளைச் சொன்னார். வானொலியில் இவரது சிறார் படைப்புகள் பல ஒலிபரப்பாகின. கே.பி. நீலமணியின் 'மாஸ்டர் ராஜா' என்ற சிறார் நாவல், 13 வாரத் தொலைக்காட்சித் தொடராகச் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

கே.பி. நீலமணி நூல்கள்
அகதி, அண்ணாமலை என்னும் அற்புத மனிதர், கவிமணியின் கதை, அன்புப் பணிக்கு ஓர் அன்னை தெரேசா, காப்டன் குமார், சுப்பு கான்வெண்டுக்குப் போகிறான், ஜேம்ஸ்பாண்ட் சங்கர், மகாத்மா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை, மலருக்கு மது ஊட்டிய வண்டு, மயக்கம் தெளிந்தது, ஒரு மாணவன் மகாத்மாவாகிறான், பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள், பிள்ளையார் சிரித்தார், புல்லின் இதழ்கள், தந்தை பெரியார், தென்னைமரத் தீவினிலே, காற்று சொன்ன கதைகள், மங்களபுரி வீரன், நாடோடி இளவரசன், மாஸ்டர் ராஜா, சில தாகங்கள் தணிவதில்லை.


நீலமணி தனது படைப்புகளுக்காக இலக்கியச் சிந்தனை பரிசு (இருமுறை), சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் பரிசு, ஏவி.எம்.மின் தங்கப் பதக்கம், வெள்ளிப்பதக்கம் ஆகியன பெற்றார். நீலமணியின் இலக்கியப் பணியைப் பாராட்டித் தமிழக அரசு, 'பாவேந்தர் பாரதிதாசன் விருது' அளித்துச் சிறப்பித்தது.

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், இசைக்கலைஞர் எனப் பல திறக்குகளில் இயங்கிய கே.பி. நீலமணி, 1999ல், 75 வயதில் காலமானார். அவரது மறைவுக்குப் பின் அவரது நூல்களை 2010ல் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.

அரவிந்த்

© TamilOnline.com