சிவசாமி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவர் மனைவி சில வருடங்களுக்கு முன்பே காலமாகி விட்டதால் தன் மூத்த மகனுடன் இருந்தார். அவர் வீடு ஒரு சிறிய பங்களா போன்றது. வீட்டைச் சுற்றி அழகிய தோட்டம் போட்டிருந்தார். நாற்பது வருடங்களுக்கு முன்பே அந்த இடத்திலேயும், வீட்டிலும் முன்யோசனையுடன் முதலீடு செய்திருந்தார். முதல் மாடியில் கழிப்பறையுடன் உள்ள ஒரு படுக்கையறையில் எல்லா வசதிகளுடன் அவர் வாழ்ந்து வந்தார். கீழ்த்தளத்தில் அவர் மகன், மருமகள், பேரக்குழந்தைகள் இருந்தனர்.
சிவசாமி தினமும் கீழே டைனிங் ஹாலில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவர். பழைய மாருதி காரில் அவ்வப்பொழுது அண்ணா நகரில் உள்ள வங்கி, கடைகள் மற்றும் குடும்ப வேலைகளுக்காக வலம் வருவார். மொத்தத்தில், நிம்மதியான ஓய்வுகால வாழ்க்கை.
குமார் தனியார் வங்கி அலுவலராக இருந்து ஓய்வு பெற்றார். அவரும் மனைவியும் ஒரு அபார்ட்மெண்ட்டில் வசித்தனர். அவரது ஒரே மகன் திருமணமாகி துபாயில் இருந்தார். பிறகு மாற்றலாகி சிங்கப்பூர் சென்று விட்டார். மூன்று வருடத்திற்கு ஒருமுறை இந்தியா வந்து இவர்களுடன் விடுமுறையைக் கழிப்பார். குமார் செய்தித்தாட்களை முழுதாகப் படிப்பதும், பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி விற்றுக் கொண்டும் பொழுதைக் கழித்து வந்தார். தினமும் அருகில் இருந்த பிள்ளையார் கோயிலுக்கு அவரும், மனைவியும் செல்வார்கள். அவ்வப்பொழுது சங்கீத கச்சேரிகளுக்குச் செல்வார்கள்.
அவருடைய உறவினர் வட்டம் பெரியது. அதனால் திருமணங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக மற்ற தென்னிந்திய நகரங்களுக்குப் போவது அவரை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருந்தது. குமாரும் சிவசாமியின் நட்புமேல் மிகுந்த விருப்பத்துடன் இருந்தார். அவருடன் சிற்றுண்டி வகைகள், ஃபில்டர் காபி போன்றவை குறித்து உரையாடுவது குமாருக்கு கற்கண்டு போல இனித்தது.
விடியற்காலையில் சிவசாமியும், குமாரும் தத்தம் வீட்டில் தாங்களே காபி போட்டு, பருகிவிட்டுதான் கிளம்புவர். அதிகாலை நான்கு மணிக்கே பூங்காவுக்கு வந்துவிடுவர். அந்தப் பூங்கா சற்று பெரியது. ஒரு சுற்று அரை கிலோமீட்டர் தூரம் வரும். சமூக விரோதிகள் பூங்காவின் உள்ளே வந்து விஷமச் செயல்கள் செய்யக் கூடாது என்பதற்காகக் கதவுகளை காலை ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள், இரவு 9 மணிக்கு அடைப்பார்கள்.
சில தெருநாய்கள் பூங்காவில் சுற்றும். ஆனால் பூங்காவிற்கு வருபவர்களிடம் நட்புடன் வாலாட்டும், குரைக்காது, துரத்தாது. அவற்றில் ஒரு கருப்பு நாய் ஒளிர்விடும் கண்களோடு இருக்கும். சிவசாமி அதன்மீது சற்றுப் பரிவு காட்டுவார். சில பிஸ்கட்டுகளை அந்த நாய்க்குப் போடுவார். அது சாப்பிட்டுவிட்டு நன்றியுடன் வாலாட்டும். பூங்காவின் கதவுகள் 5 மணிக்குத் திறக்கும் வரை சிவசாமியும் குமாரும் பூங்காவின் வேலிக்கு வெளியில் உள்ள நடைபாதையைச் சுற்றி நடப்பார்கள். நாய்களும் தூக்கத்திலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு, தொந்தரவு செய்யாமல் விட்டுவிடும்.
பூங்கா வேலியைச் சுற்றி ஒருபுறம் பெரிய மகிழம்பூ புதர்கள் இருந்தன. அவற்றிலிருந்து நறுமணம் வீசும். ஐந்து மணிக்கு, பூங்கா கதவுகளை காவலாளி திறந்தவுடன் இருவரும் பேசிக்கொண்டே உள்ளே சென்று இன்னும் கால் அல்லது அரை மணி நேரம் நடப்பர். சில நாட்கள் அங்கு உள்ள பெஞ்ச் ஒன்றில் உட்கார்ந்து பேச்சைத் தொடர்வர். ஆறு மணி அளவில் கிளம்பி தத்தம் வீடுகளை நோக்கி நடந்து போவர். இந்த நடை மழையாக இருந்தாலும் சரி வெயிலாக இருந்தாலும் சரி வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நடக்கும்.
★★★★★
சிவசாமியின் இரண்டாவது மகன் அமெரிக்காவில் நியூ யார்க் நகரில் இருந்தார். அவர் சிவசாமியை அமெரிக்காவிற்கு அழைத்துக் கொண்டேயிருந்தார். அங்கு போக நினைத்த சிவசாமி, தனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறதாலும், அமெரிக்காவிற்கு பயணக் கட்டணம் வருடா வருடம் ஏறிக்கொண்டே போவதாலும், பயணத்தைத் தள்ளிப் போடவேண்டாம் என்று முடிவெடுத்தார். அவரது உடல்நலத்தில் சற்று குறைவாக இருந்ததால், இதய மருத்துவரிடம் உடல் பரிசோதனை செய்தார். டாக்டரும் இவர் உடல்நலத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும். காலை நடைப்பயிற்சி, லேசான உடற்பயிற்சி தினமும் செய்யவேண்டும் என்று அறிவுரை கொடுத்தார். அமெரிக்கா சென்று வரலாம், சிலமருந்துகளை தினமும் சாப்பிடவேண்டும் என்று எழுதிக் கொடுத்தார்.

இதைக் குமாரிடம் கூறிய சிவசாமி, அடுத்த வருடத்திற்குப் பயணத்தை ஒத்தி வைத்தால் மேலும் சிரமமாகிவிடும், அதனால் பயணச்சீட்டு வாங்கி விட்டதாகக் கூறினார். ஆனால் இருவரின் காலை நடைப்பயிற்சியை மிகவும் நேசிப்பதாகவும் அப்போது தங்களுக்குள் நடக்கும் உற்சாகமான பேச்சுக்களையும் பற்றி சிலாகித்தார். சிவசாமி தாம் இவற்றை நினைத்து அமெரிக்காவில் மிகவும் ஏங்கப் போவதாக உணர்ச்சிவசப்பட்டார்.
சிவசாமி அமெரிக்கா புறப்படும் நாள் நெருங்க நெருங்க அவருடைய புலம்பல் அதிகரித்தது. "குமார், நம்முடைய காலை நடையையும், நமது சம்பாஷணைகளையும் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்" என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நியூ யார்க்கில் அழகான பெரிய பூங்காக்கள் உள்ளன, அங்கு சிவசாமி யாராவது ஒருவருடன் நட்புக் கொண்டு அவரோடு நடக்கலாம் என்று குமார் உற்சாகப்படுத்தினார்.
அமெரிக்கா கிளம்பும் நாள் வந்தது. அன்று காலை இருவரும் நன்கு பேசிக்கொண்டே அதிக நேரம் நடந்து சென்றனர். குமார் பயணம் இனிதாக அமையட்டுமென சிவசாமியை வாழ்த்தினார். சிவசாமி தைரியமாக இருப்பது போலப் புன்முறுவல் செய்தார். விசாவின் ஆறுமாதக் கெடு முடிவதற்குப் பத்துநாள் முன்னரே திரும்பி வந்து விடுவதாக குமாரிடம் சொன்னார். "நான் திரும்பும் நாள் அன்றே விடியற்காலை நடைப்பயிற்சிக்கு நீங்கள் தவறாமல் பூங்காவுக்கு வந்துவிடவேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்து, பயண விவரங்களையும் கொடுத்தார். அன்று சிவசாமி புறப்படும் நாளாதலால் குமார் அவருடைய இல்லம்வரை சென்று அவரை விட்டுவிட்டு வந்தார்.
சிவசாமியின் நீண்ட விமானப் பயணம் நன்றாக இருந்தது. அவரும் குமாரும் மின்னஞ்சல் மூலமாக அடிக்கடி க்ஷேமலாபம் விசாரித்துக் கொண்டனர். மகன் வீட்டிற்கு அருகிலேயே பெரிய பூங்காக்கள் இருந்தன. சிவசாமி அந்தப் பூங்காக்களில் தினமும் நடந்தார். நண்பர் குமாருடன் நடப்பதுபோல அமையவில்லை, நண்பர் தன்னுடன் இல்லை, அவருடன் தான் செய்யும் சம்பாஷணைகள் இல்லை என்றெல்லாம் ஏங்கினார். இதனாலேயே அவரது நியூ யார்க் நடைப்பயிற்சிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று அவருடைய மின்னஞ்சல்கள் கூறின. தான் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாகவும், சென்னை திரும்பும் நாளை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் சிவசாமி அடிக்கடி கூறிக் கொண்டேயிருந்தார்.
மகனுடன் நயாகரா நீர்வீழ்ச்சி, விடுதலைதேவி சிலை, மத்தியப் பூங்கா, ப்ரூக்லின், மேன்ஹாட்டன், வால் ஸ்ட்ரீட் போன்ற சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றாலும் அவரால் மிகவும் களிப்படைய முடியவில்லை. ஆனாலும் முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, பேரக்குழந்தைகளிடம் தான் மிகவும் சந்தோஷமாக உள்ளதாகக் காட்டிக்கொண்டார். அங்கு இந்தியாவிலிருந்து வந்த சிவசாமியின் வயதொத்த சிலர் இருந்தனர். ஆனால் அவர் அந்த நபர்களைத் தன்னுடன் நடக்கக் கூப்பிடவில்லை. நியூயார்க்கில் காலைக்குளிர் சற்று அதிகமாக இருந்தது. காலை ஏழு மணியளவில்தான் படுக்கையை விட்டு எழுவார். நடைப்பயிற்சியை ஏழரை முதல் எட்டரை மணிவரை செய்வார்.
நியூ யார்க்கில் இளவெயிலும் சற்றே குளிர்ச்சியான காற்றும் ஒரேநேரத்தில் வீசுவதால் நடப்பது சுகமான அனுபவமாக இருந்தது. ஆனால் சிவசாமிக்கு அது போதவில்லை. சென்னையிலும் குமார் தன்னுடன் சிவசாமி இல்லை என்றாலும், நடைப்பயிற்சியை தனியாகச் செய்து வந்தார். சிவசாமி திரும்பி வரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கினார். குமாரின் மனைவி, "நீங்கள் சற்று சோர்வாக இருக்கிற மாதிரி உள்ளது. அதனால் வேறு ஒருவருடன் நடந்து செல்லுங்கள்" என்று கூறினார். ஆனால் அதைக் குமார் சற்றும் பொருட்படுத்தவில்லை.
ஆறு மாதங்கள் பறந்தோடின. சிவசாமி சென்னை புறப்பட வேண்டிய நாளுக்கு ஒரு வாரமே இருந்தது. அவர் குமாருக்கு போன் செய்து, குமாருடன் காலை நடைப்பயிற்சி செய்யப் போகும் நாளை ஆவலாக எதிர்நோக்கியிருப்பதாகச் சொல்லி சந்தோஷப்பட்டார். துபாய் வந்து அங்கிருந்து சென்னைக்கு விமானம் ஏறி இரவு 1 மணிக்கெல்லாம் சென்னை வந்து, வீட்டிற்கு விடியற்காலை மூன்றரை மணிக்கு வந்து விடுவேன் என்று தகவல் சொன்னார். "நான்கு மணிக்கெல்லாம் வழக்கம் போல் பூங்காவிற்கு நடை பழக வந்துவிடுவேன். நீங்களும் வந்துவிடுங்கள், நிறையப் பேச வேண்டியிருக்கிறது" என்றார். குமாரும் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்புமாக இருந்தார். சிவசாமி எப்படி ஜெட்லாக் சோர்வைச் சமாளிக்கப்போகிறார் என்றும் கவலைகொண்டார்.
சிவசாமி வரும் நாளுக்கு முந்தைய இரவு குமார் படுக்கச் செல்லும்போது மூன்றரை மணிக்கு அலாரத்தை வைத்தார். அலாரம் சரியாக அடித்தது. எழுந்து வேகமாகப் பல் தேய்த்து, காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சூடான பில்டர் காபி ஒரு கோப்பை தயார் செய்து பருகினார். மனைவி அயர்ந்த நித்திரையில் இருப்பதைப் பார்த்து, சத்தம் செய்யாமல் வீட்டுக்கதவு, வாசல் கேட் இரண்டையும் மூடிவிட்டுப் பூங்காவை நோக்கிக் கிளம்பினார்.
மழை பெய்து கொண்டிருந்தது. குடையை விரித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். கடிகாரம் நான்கு மணி காண்பித்தது. நான்கு ஐந்து அடி வைத்தவுடன் தன் வீட்டில் தொலைபேசி மணி அடிப்பது கேட்டது. யார் அந்த விடியற்காலையில் போன் செய்கிறார்கள்? ஒருவேளை சிவசாமிதான் அழைக்கிறாரோ என்று நினைத்தபடி நடந்தார். பெய்யும் மழையும் வீசும் குளிர்காற்றும் சூழலையே ஒருமாதிரி ஆக்கி விட்டதாக உணர்ந்தபடி நடந்தார் குமார். இதுபோன்ற வானிலை இருந்தால் வெளியே வரமாட்டேன் ஆனால் இன்று சிவசாமி திரும்பி வரும் நாள் என்பதாலேயே இந்த அனுபவத்தை நழுவ விடக்கூடாது என்று புன்முறுவலுடன் நினைத்துக் கொண்டார்.
தெருமுனையில் ஒரு விளக்கு மட்டும் சற்று மங்கலாக மஞ்சள் நிற ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது. பூங்காவை அடைந்தார் குமார். அங்கு யாருமே இல்லை. அண்ணா நகர் ரவுண்டானாவிலிருந்து கடிகாரம் நான்குமுறை ஒலிக்கும் மணியோசை காற்றிலே தவழ்ந்து வந்தது. எப்போதும் போலப் பத்து நிமிடம் அந்தக் கடிகாரம் தாமதமாக ஓடுகிறது போலும்!
ஏன் சிவசாமி இன்னும் வரவில்லை? ஒருவேளை விமானம் தாமதமோ! பூங்கா வாசலில் படுத்துக் கொண்டிருந்த கறுப்பு நாய் எழுந்து வந்து குமாரைப் பார்த்து வாலாட்டியது. டார்ச் விளக்கை எடுத்து வந்திருக்கலாம் இவ்வளவு இருட்டாக இருக்கிறதே என்று நினைத்தார்.
சிவசாமி வருவதற்கு காத்து நிற்பதைவிட நடக்கலாம் என்று நடக்க ஆரம்பித்தார். அவருக்குப் பூங்காவைச் சுற்றியுள்ள நடைபாதை நன்றாகப் பழக்கம். அதனால் கீழே விழுந்துவிட மாட்டோம் என்று ஈரமான பாதையில் சற்று வேகமாக நடந்தார். மகிழம்பூ புதர்களைக் கடக்கும்போது அந்த தெய்வீக நறுமணத்தை நுகர்ந்து சற்றே மகிழ்ந்தார். இரண்டாவது சுற்றை முடிக்கும்போது தூரத்தில் ஒரு உருவம் நடந்து வருவதைப் பார்த்தார். அது சிவசாமியை விடச் சற்று உயரமாக இருப்பதாகத் தோன்றியது. மஞ்சள் ஒளிவீசும் தெரு விளக்கை அந்த உருவம் கடந்து வந்தபோதுதான் முகத்தைப் பார்த்தார். சிவசாமிதான்!
குமார் உற்சாகமாக அவரை நோக்கி நடந்தார். அப்போது சிவசாமியின் நடை சற்று வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தார். அது சிவசாமியின் வழக்கமான நடையில்லை. ஒரு சீரான திரவ நடையாக இருந்தது. சிவசாமி ஒரு புதிய ஷூ அணிந்து இருப்பதைப் பார்த்தார். அதுவும் பளீரென்று மஞ்சள் வண்ணமாக இருந்தது. ஓ, அந்த காலணியின் பிம்பத்தினால்தான் நடை வித்தியாசமாகத் தெரிகிறதோ!
சிவசாமி குமாரை நெருங்கி வந்தார். குமாரும் அவரது முகத்தை நோக்கினார். முகம் சற்றுச் சோர்வாகவும் முகத்தில் சிறிது மாற்றம் இருப்பதாகவும் அவருக்குத் தோன்றிற்று. அவர் பளீரென்ற ஆரஞ்சு வண்ண New York – The Big Apple என்று எழுதிய டீ-ஷர்ட் அணிந்திருந்தார். சிவசாமி இவரைப் பார்த்துக் கையசைத்தார்.
"ஹலோ, சிவசாமி" என்று கூப்பிட்டுக்கொண்டே குமார் அவர் கை நீட்டினார். ஆனால் சிவசாமி கை நீட்டவில்லை. குமார் சற்று கையை நீட்டி சிவசாமியின் வலது கையைப் பிடித்தார். அந்தக் கை ஐஸ் கட்டிபோல் சிலீரென்று இருந்தது. "ஐயோ, சிவசாமி வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் பெய்யும் மழையில் குடையில்லாமல் நடந்து வந்ததால் நனைந்து போய் இப்படிக் கை குளிர்ந்து விட்டதோ?" என்று குமார் நினைத்தார்.
இருவரும் நடக்க ஆரம்பித்தனர். குமாரோ ஆறு மாதங்களுக்குப் பின் நண்பருடன் நடைப்பயிற்சி செல்வதால் மிக உற்சாகமாக அவருடன் பேச ஆரம்பித்தார். சிவசாமி ஒன்றும் பேசவில்லை. ஏதோ சற்று பதிலுக்கு முணுமுணுத்தார். ஆனால் குமாரைப் பார்த்து மகிழ்ச்சியாகப் புன்முறுவல் செய்துகொண்டே இருந்தார். இருட்டில் அவரது ஆப்பிள் டீஷர்ட் பளபளத்தது. ஒருவேளை ஜெட்லாகினால் சற்றுச் சோர்வாக இருப்பதால் பேசவில்லையோ?
மகிழம்பூச் செடிகளுக்கு அருகில் வரும்போது குமாருக்கு வழக்கமான மகிழம்பூ மணம் வரவில்லை. ஒரு வித்தியாசமான வாசமடித்தது. அந்த மணத்தைக் குமார் வேறு எங்கேயோ நுகர்ந்திருக்கிறார். அது நறுமணமல்ல, கெட்ட வாசமும் அல்ல. வேறொரு அமானுஷ்யமான வாசனை. அவர்கள் இருவரும் நடக்கும்போது முன்னெல்லாம் குமார் சற்று வேகமாகவும், சிவசாமி சற்று மெதுவாகவும் நடப்பார். குமாரின் வேகத்துக்கு சிவசாமி ஈடு கொடுக்க முடியாமல் திணறுவார், அதற்குத் தகுந்தாற்போல குமாரும் நடை வேகத்தைச் சற்றே குறைப்பார். ஆனால் இன்று சிவசாமி வேகமாக நடைபோட்டார். குமார் ஓட்டமும், நடையுமாக அவருக்கு ஈடு கொடுத்தார். குமாருக்கோ சிவசாமி தன் வேகத்தைக் குறைக்க முயன்றும் முடியாமல் போனதுபோல் தெரிந்தது. ஓஹோ, அமெரிக்காவில் தினமும் நிறைய நடந்ததால் சிவசாமியின் ஆற்றல் அதிகரித்திருக்குமோ என்று குமார் நினைத்தார்.
5 மணிக்குத் தூங்கி வழிந்து கொண்டு வந்து காவலாளி பூங்கா கதவுகளைத் திறந்தான். அப்போது குமாரைப் பார்த்துக் கைகளை அசைத்து வணக்கம் சொன்னான். ஆனால் சிவசாமி பக்கமே திரும்பவில்லை. எப்படி? சிவசாமிதான் காவலாளிக்கு கை நிறைய தீபாவளி, பொங்கல் இனம் கொடுப்பாரே. ஏன் இப்படி அவன் நடந்து கொள்கிறான் என்று குமார் நினைத்தார். காவலாளி திரும்பிப் போனவுடன் இருவரும் பூங்காவின் உள்ளே இருந்த சிமெண்ட் பாதையில் நடக்க ஆரம்பித்தனர். அந்த வயதான காவலாளியின் கண்பார்வை மந்தமாக இருந்ததால் சிவசாமியை அவன் பார்க்கவில்லை போலும் என்று சமாதானம் செய்துகொண்டார் குமார்.
இரவு பெய்த கனமழையில் பூங்காவிற்கு உள்ளே அங்கங்கே தண்ணீர் தேங்கியிருந்தது. தவளைகளின் கொரக் கொரக் சத்தம் பலமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. தவளைச் சத்தம், அடர்ந்த புதர்கள், ஈரமான காற்று இவை மூன்றும் குமாரைச் சற்றே மயிர்க்கூர்ச்செரியச் செய்தன.
அப்போது பூங்காவின் உள்ளே நுழைந்த கருப்பு நாய் அவர்களை நோக்கி நடந்து வந்தது. ஐம்பதடி தூரத்தில் அது திடீரென உறைந்து போய் நின்றது. அந்த நாய்க்கு இருவரையும் நன்கு தெரியும். சிவசாமி அதற்கு அவ்வப்போது பிஸ்கட் போடுவார், அதற்கு அவரைப் பிடிக்கும். ஆனால் அது திடீரென சிவசாமியைப் பார்த்து உறும ஆரம்பித்தது. தன்னுடைய பற்களை ஆக்ரோஷமாகக் காட்டிக் கொண்டு நின்றது. ஆனால் அதன் வால் பின்னங்கால்களுக்கு நடுவில் உள்ளே வளைந்து போயிருந்தது. அப்படியானால் அது பீதியடைந்துள்ளது என்பது தெளிவாகத் தெரிந்தது.
சிவசாமியோ பயப்படாமல் முன்னே நடந்தார். உடனே அந்த நாய் சடாரென்று பின்வாங்கி, பயத்துடன் திரும்பி ஓடிவிட்டது. ஏன் என்று நினைத்தார் குமார். மழையும் சட்டென்று அதிகரித்தது. இனிமேல் குடையை பிடித்துக்கொண்டு நடையைத் தொடர முடியாது என்று புரிந்து கொண்ட குமார், சிவசாமியைப் பார்த்தார். அவரோ தொப்பலாக நனைந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மழையும் இரட்டிப்பானது. இருவரும் கவனமாக சேறும் சகதியும் நிறைந்த பகுதிகளைத் தாண்டிச் சென்றனர். தோட்ட வேலைக்காக அங்கே கொட்டப்பட்டிருந்த செம்மண் குவியலின் மேலே கால் வைக்காமல் செல்ல முடியவில்லை. அவர்களது காலணிகள் இதனால் அசுத்தமடைந்தன. இதற்குச் சற்றேனும் கவலைப்படாது நடந்து சென்றனர். பல சுற்றுகளுக்குப் பிறகு சிவசாமியிடம் விடை பெற்றார்.
சிவசாமி சிரித்துக்கொண்டே "அமெரிக்காவிலிருந்து உங்களுக்கு நான் ஒரு செண்ட் பாட்டிலும், கொஞ்சம் சாக்லெட்களும் கொணர்ந்திருக்கிறேன், அதைப் கைப்பெட்டியில் வச்சிருக்கேன். நீங்க அப்புறம் வீட்டுக்கு வந்து அஷோக்கிடம் வாங்கிக்கோங்க" என்றார்.
குமார் "சரி, நீங்க வீட்டுல இருக்கமாடீங்களா?" என்று கேட்டார். அதற்கு சிவசாமி "இல்லீங்க, நான் இருக்கேனோ இல்லையோ. அஷோக் எப்படியும் இருப்பான்" என்று சிரித்தபடியே சொல்லிக்கொண்டு விடைபெற்றார்.
இன்னும் இருள் பிரியவில்லை. சாலையின் முனையில் குமார் திரும்பி சிவசாமியைப் பார்த்தார். தூரத்தில் நடந்துபோகும் அவருடைய உருவம் சற்றே உயரமாகவும், அவருடைய சட்டையிலிருந்து நீராவி போல ஒரு ஆவி பொங்குவதும் புலப்பட்டது. அவருடைய மஞ்சள் பட்டை காலணி ஏதோ தரையை விட்டு மூன்று அங்குலம் உயரமாக, சாலை மட்டத்திற்கு மேலே உள்ளதாகத் தெரிந்தது. ஒருவேளை மழை பொழிவதால் தெளிவாகத் தெரியவில்லையோ, ஏன் இவ்வளவு நீராவி வெளியேறுகிறது என்று ஆச்சரியப்பட்டார் குமார். குமாரின் மனத்தில் லேசாக அமானுஷ்ய உணர்வு தோன்றியது.
குமார் வீட்டுக்குச் சென்றவுடன் தொலைபேசியைப் பார்த்தார். அதில் இருந்த காலர் ஐடியில் காலை 04.15 மணிக்கு, ஒரு சர்வதேச அழைப்பு வந்திருப்பதைக் கண்டார். அது துபாய் எண் என்பதை ஐ.எஸ்.டி. கோடு பார்த்தவுடன் தெரிந்து கொண்டார். துபாயிலிருந்து யார் அவ்வளவு விடியற்காலையில் அழைத்தது என்று நினைத்தார். பிறகு தன்னுடைய காலைப் பணிகளில் மூழ்கிவிட்டார். குளியல், பூஜை, செய்தித்தாள் போன்ற வேலைகளை முடித்து, காலைச் சிற்றுண்டி சாப்பிட்டு முடித்தார்.
பத்துமணியளவில் சிவசாமியின் மகன் அஷோக்கிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பதட்டத்துடன் "குமார் மாமா, ஒரு சோகமான செய்தி, அப்பா காலமாகி விட்டார்" என்றான். குமார் அதிர்ச்சியடைந்தார். அஷோக் தொடர்ந்து "அப்பாவுக்கு நேற்று ராத்திரி நியூ யார்க்கிலிருந்து துபாய் வந்து கொண்டிருக்கும்போது விமானத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த டாக்டர் ஒருவர் முதலுதவி அளித்தார். விமானம் துபாயில் இறங்கிய உடன் அப்பாவை அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று சிகிச்சையளித்தனர். அங்கு அவருக்கு இரண்டாவது முறை மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலை தவறிவிட்டார்" என்றான்.
குமார், "ஐயயோ! எத்தனை மணிக்குத் தவறினார்?" என்று வினவினார். "மாமா அப்பா உடலை அடுத்த விமானத்தில் அனுப்பினார்கள். இப்பொழுதுதான் வீட்டிற்குக் கொண்டு வந்தோம். அவர் உடலுடன் அனுப்பிய சர்ட்டிபிகேட்படி அவர் இறந்த நேரம் இன்று விடியற்காலை 02.45 மணி துபாய் நேரம்" என்றான். உடனே குமாருக்குச் சிலீரென்று இருந்தது. அதிகாலை 04.15 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும்போது டெலிபோன் மணி அடித்ததையும் அப்போது தம் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்ததையும் நினைவு கூர்ந்தார். அப்பொழுது துபாயில் 02.45 மணி. அப்படியானால் யார் துபாயிலிருந்து அழைத்தது? சிவசாமியைத் தவிர அங்கு யாருக்கும் அவர் எண் தெரியாது. ஒருவேளை சிவசாமிதான் அமரர் ஆன பிறகு தன்னுடைய பூர்த்தியாகாத நடைப்பயிற்சி ஆசையினால் குமாரை அழைத்தாரா?
இப்படி அமானுஷ்யமான உணர்வுகளால் உந்தப்பட்டதால் குமார் தன் முதுகுத்தண்டே சில்லென்று ஆகிவிட்டதை உணர்ந்தார். அதிகாலையில் அவர் சிவசாமியைப் பார்த்த காட்சிகள் நெஞ்சில் அலைமோதின. நரம்புகள் புடைத்தன. முதலில் சிவசாமியை இருட்டில் பார்த்தபோது அவர் சற்றே அசாதாரணமான உயரமாக உள்ளதாகத் தெரிந்ததே? அவருடைய நடை மிதந்து வருவதைப் போலத் தோன்றியதே? அவர் கைகுலுக்கும்போது ஐஸ் கட்டியைத் தொடுவது போல இருந்ததே? காவலாளியின் கண்ணுக்கு அவர் தென்படவில்லையே? நாய் ஏதோ ஒரு அமானுஷ்யத்தை உணர்ந்தது போல உறுமி, முதுகு காட்டி ஓடியதே? அந்த மகிழம்பூப் புதரிலிருந்து அடித்த மணமும் ஏதோ விசித்திரமாக சவ ஊர்வலங்களில் தூவப்படும் மலர்களின் வாசம்போல இருந்ததே? சிவசாமி மழையைச் சற்றும் பொருட்படுத்தவில்லையே? அவர் முதுகிலிருந்து நிறைய ஆவி போல வந்ததே? அவருடைய காலணிகள் தரையைவிடச் சற்று மேலே சில அங்குலங்கள் மிதந்ததைப் போல ஒரு மாயத் தோற்றம் தெரிந்ததே?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இப்போது விடை தெரிந்த மாதிரி குமாருக்குத் தோன்றியது.
மழை நின்றுவிட்டது. அவசரமாக மனைவியிடம் தகவல் சொல்லிவிட்டு, சிவசாமி வீட்டிற்குக் குமார் விரைந்தார். சிவசாமியின் உடல் வந்து விட்டது. நிறைய உற்றார், உறவினர், நண்பர்கள் குழுமியிருந்தனர். குமாரும் அங்கு வாசலில் கிடந்த பல ஜோடி காலணிகளின் அருகில் தன் செருப்பையும் விட்டார்.
அப்போதுதான் கவனித்தார். அந்த வீட்டு வாசல் கதவுக்கு ஓரத்தில் ஒரு ஒடுக்கமான மூலையில் சிவசாமி அன்று காலை அணிந்திருந்த பளபள என்று மிளிர்ந்த காலணிஜோடி விடப்பட்டிருந்தது. அருகே சென்று பார்த்தால் அந்த காலணிகள் ஈரமாகவும், செம்மண் கறையுடனும் இருந்தன. அண்ணா நகரில் பூங்காவில் கொட்டிக் கிடந்த செம்மண்ணைத் தவிர வேறு எங்கும் செம்மண் கிடையாது.
அதைப் பார்த்ததும் குமாரின் நரம்புகள் மீண்டும் புடைக்க ஆரம்பித்தன. கண்ணில் நீர் ததும்பியது. உள்ளே சென்று பார்த்தால் சிவசாமியின் உடல் ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அவர் Newyork – The Big Apple என்ற பிரகாசமான டி-ஷர்ட்தான் அணிந்திருந்தார். அதே உடையில்தான் அவரைக் காலையில் பார்த்திருந்தார் குமார்.
சிவசாமி காலமான உடனே துபாயிலிருந்து அப்படியே மிதந்து நேராகப் பூங்காவுக்கு வந்து தன்னைக் சந்தித்ததாகத் தோன்றியது. தன் நண்பரின் அன்பை நினைத்து உணர்ச்சி வசப்பட்ட நிலையிலிருந்தார் குமார்.
அமரர் சிவசாமியின் மகன் அஷோக் அவரிடம், "குமார் மாமா, அப்பா முந்தாநாள் நியூ யார்க்கிலிருந்து கிளம்பும்போது என்னிடம் பேசினார். அவரும் நீங்களும் இங்கு வந்தவுடன் அந்த நாள் விடியற் காலையிலேயே பூங்காவுக்குச் சென்று நடக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தார். உங்களுக்குக் கொடுப்பதற்காக சென்ட் பாட்டிலும், சாக்லெட்களும் தன் கைப்பெட்டியிலேயே வைத்திருப்பதாகவும் சொன்னார். நடைப் பயிற்சிக்காகவே டிஷர்ட் அணிந்து வந்திருக்கிறார் பாருங்கள்" என்றான்.
தன் நண்பர் சிவசாமி தன்மீது வைத்திருந்த அன்பை நினைத்து குமார் மனம் நெகிழ்ந்து போனார். பூங்காவிலிருந்து கிளம்பும்போது சிவசாமியின் கடைசி வார்த்தைகள் ஞாபகம் வந்தன. நெகிழ்ந்துபோன குமார் காலையில் செய்தி கிடைத்தபோது தோன்றிய பய உணர்வு முழுதாக விலக, துக்க உணர்வு மேலே வெடித்து எழும்ப, தேம்பித் தேம்பி உரத்த குரலெடுத்து உடைந்து போய் அழ ஆரம்பித்தார்.
வெங்கடேஷ், செடர் பார்க், டெக்சஸ் |