இலக்கண விரோதம்!
ஒருநாள் எனக்குப் பொழுதே போகவில்லை. அதற்காக, சினிமா போகலாமா, கவி கட்டலாமா, எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாமா அல்லது ஹாஸ்யக் கட்டுரை எழுதலாமா, என்ன செய்யலாமென்று யோசனை பண்ணிப் பார்த்தேன். இது விஷயத்தில் சுலபமாக ஒரு முடிவுக்கு வரக்கூடவில்லை. ஆகவே, மேலும் தீவிரமாக யோசனை செய்து திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்த்து ஹாஸ்யக் கட்டுரை எழுதுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆனால் ஹாஸ்யமாக எழுதுவது எப்படி? அதைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காகச் சில புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தேன். அவற்றுள் ஒன்றில், "ஹாஸ்யத்தை மனிதன் சிருஷ்டித்துவிட முடியாது; அது தானாகவே வரவேண்டும். சொல்லப்போனால் ஹாஸ்யமாக எழுதும் திறமை உதித்திருக்க வேண்டும். கவிஞன் மாதிரி ஹாஸ்ய எழுத்தாளனும் பிறக்கிறான். ஒருவன் எவ்வளவு முயன்றாலும் ஹாஸ்யமாக எழுதிவிட முடியாது" என்று போட்டிருந்தது.

"ஹாஸ்ய எழுத்தாளனும் பிறக்கிறான்" என்ற அந்த மூன்று வார்த்தைகளும் என் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதிந்தன. அதிலும். 'பிறக்கிறான்' என்ற வார்த்தை ஒரு கடப்பாரையைப்போல் பதிந்துவிட்டது.

உடனே நான் வீட்டிலிருந்த பெட்டிகளை யெல்லாம் குடைந்து, என் குடும்ப ஜாதகப் புத்தகத்தைத் தேடி எடுத்து வந்தேன். அதைப் பக்கம் பக்கமாகப் புரட்டிப் பார்த்துக் கொண்டே போனபோது, மனது திக்திக் என்று அடித்துக்கொண்டது. என் ஜாதகம் இருக்கிறதோ இல்லையோ என்ற பயம். நல்ல வேளையாக ஒரு பக்கத்தில் என் ஜாதகமும் எழுதப்பட்டிருந்தது. நான் பிறந்த வருஷம், மாதம், தேதி, கிழமை, திதி, நட்சத்திரம், லக்கினம் எல்லாம் ஒன்று பாக்கியில்லாமல் குறிப்பிட்டிருந்தார்கள். நான் பிறந்தேன் என்பதில் கொஞ்சங்கூடச் சந்தேகமே இல்லை.

ஆம்; நான் பிறந்தவன்தான்!

"ஹாஸ்ய எழுத்தாளன் பிறக்கிறான்." நானும் பிறந்திருக்கிறேன். ஆகவே நான் ஹாஸ்யமாக எழுத முடியும் என்ற நம்பிக்கை எனக்குப் பிறந்துவிட்டது!

அடுத்த நிமிடமே நான் ஹாஸ்யக் கட்டுரை எழுதத் தொடங்கினேன் என்று சொல்ல வேண்டியதில்லை.

இவ்வாறு தொடங்கி நான் எழுதிவரும் கட்டுரைகளைப் பற்றிப் பலர் பலவிதமாக அபிப்பிராயப் படுகிறார்கள்.

வால்மீகி ராமாயணத்தைப் படித்துவிட்டு 'ஸ்ரீ ராமர் மீசை', 'சீதா தேவி என்ன புடவை கட்டிக்கொண்டாள்' என்ற 'ஆராய்ச்சிக் கட்டுரைகள்' எழுதியிருந்தேன். அவற்றைப் படித்த ஒரு பெண்மணி, "இது மாதிரி இன்னும் எழுதுவதா யிருந்தால் நான் இனிமேல் எதிர்வாதம் செய்வதையே விட்டு விடுகிறேன்" என்று கூறினாள். என் மனைவி அவற்றைப் படித்து இப்படிச் சந்தோஷப்படுவாளென்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

ஒரு நண்பர் ஒருநாள் என்னிடம் கோபமாக வந்து, "ஐயா உம்மீது நஷ்ட ஈடுக்கு ஏன் தாவா செய்யக்கூடாது என்பதற்குத் தகுந்த காரணம் சொல்லும்" என்று கேட்டார். நான் பயந்துபோய், "அப்படி நான் என்ன பண்ணிவிட்டேன்?" என்று கேட்டேன். அவர், "இன்னும் என்ன ஐயா பண்ணணும்? உம்முடைய கட்டுரைகளைப் படித்துச் சிரித்ததினால் விலாவெலும்பெல்லாம் சுளுக்கிக் கொண்டு விட்டன. அதற்கு வைத்தியம் செய்து கொள்ளும் செலவை நீர்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று சொல்லிச் சிரித்தார். அந்த மனிதர் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு போகும்போது, பத்து ரூபாயா அல்லது நூறு ரூபாயா எத்தனை கடன் வாங்கிக் கொண்டு போனாரென்று எனக்கு இப்பொழுது ஞாபகமில்லை.

எனது பழைய வாத்தியார் ஒருவர். "அட ராமசாமி! நான் உன் மணிக்கட்டில் அடித்துச் சரியாக வியாசம் எழுதும் முறையைச் சொல்லிக் கொடுத்ததெல்லாம் வீணாய்ப் போயிற்று. நீ எழுதியதைப் படித்தபோது உனக்கு ஏதோ உடம்பு சரியாக இல்லை என்றே தோன்றுகிறது. நல்ல வைத்தியராகப் பார்த்துச் சிகிச்சை செய்துகொள்" என்று எழுதியிருந்தார்.

என்னைப்போலக் கட்டுரைகள் எழுதும் நண்பர் ஒருவர், "தங்கள் கட்டுரைகளைப் படித்துப் பார்த்தேன். இன்னும் இரண்டு மூன்றுதரம் படித்துப் பார்க்கிறேன். சிரிப்பு வந்ததும் தந்தி அடிக்கிறேன்" என்று எழுதியிருந்தார்!

ஒரு விமர்சகர் எழுதியதைக் கீழே தந்திருக்கிறேன்:-
"இந்தக் கட்டுரையின் முதல் வாக்கியத்தைப் படித்த மாத்திரத்திலேயே நாம் அதன் யோக்கியதையைப் பற்றி ஒருவாறு ஊகித்துக் கொண்டோம். உடனே படிப்பதை நிறுத்திவிட்டு நடுவில் ஒரு வரியைக் கவனித்த போது, நாம் ஊகித்தது சரியென்றே தோன்றிற்று. கடைசியில் ஒரு வார்த்தையை அகஸ்மாத்தாகப் பார்த்தபோது நமது சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று. பிரஸ்தாபக் கட்டுரையைப் படிப்பதனால் சிரிப்பு ஏற்படுகிறதா இல்லையா என்ற வாதத்தில் நாம் இப்பொழுது இறங்கப் போவதில்லை. சிரிப்பு ஏற்படுகிறதென்றே வைத்துக்கொண்டு பார்ப்போம். அப்படிப் பார்க்கும்போது, நாடு இருக்கும் நிலைமையில், மக்கள் இருக்கும் நிலைமையில், மாடுகள் இருக்கும் நிலைமையில், அமுக்கறாக்கிழங்கு விற்கும் நிலைமையில், நாம் சிரிக்கவேண்டியது அவசியமா என்று நமது பலங்கொண்டமட்டும் பக்கத்தில் நிற்கும் பையனை நாலு அறை அறைந்து கேட்கிறோம். நாம் இந்தக் கட்டுரையில் ஒரு வாக்கியமும், ஒரு வரியும், ஒரு வார்த்தையும் பார்த்துவிட்ட மகா பாபத்திற்குப் பிராயச்சித்தஞ் செய்து கொள்வதற்காக நூற்றெட்டுமுறை அரிச்சந்திர மயான காண்ட நாடகத்தைப் பார்ப்பதென்று பிரதிக்ஞை செய்து கொள்வதுடன் தற்கால சாந்தியாக பக்கத்திலிருக்கும் பையனை ஒரு கிள்ளுக் கிள்ளி அவன் அழுவதைக் கேட்டனுபவிக்கவும் தீர்மானித்திருக்கிறோம்."

இன்னொருவர் ஹாஸ்யக் கட்டுரைகளையும் கதைகளையும் விலைக்கு வாங்குபவர். அவர் எழுதிய கடிதத்தில், "ஐயா! தங்கள் கட்டுரைகளில் எந்த எந்த இடத்தில் எதற்காகச் சிரிக்கவேண்டும் என்பதற்குத் தகுந்த காரணங்களை எடுத்துக் கூறவும். அப்படிச் சிரிக்கும்போது எந்த எந்த இடத்தில் எவ்வளவு அங்குலம் வாயைப் பிளக்கவேண்டும் என்பதற்கு ஒரு "கிராப்' போட்டு அனுப்பவும்" என்று கோரியிருந்தார்.

இது மாதிரி பலதிறப்பட்ட அபிப்பிராயங்களைப் படித்துப் பெருமையடைவேன். ஏதோ என்னால் பலர் சந்தோஷமோ கோபமோ அடைகிறார்களே என்று எண்ணும்போதெல்லாம் ஆனந்தசாகரத்தில் ஆழ்ந்து விடுவேன். அதன் பயனாய் பலத்த ஜலதோஷம் ஏற்படுமே என்பதைக்கூட நான் லட்சியஞ் செய்வதில்லை.

ஆனால் சமீபத்தில் இதற்கு மாறான நிலைமை ஏற்பட்டது. ஒருநாள் நான் என் வீட்டில் பரம திருப்தியுடன் உட்கார்ந்திருந்த போது ஒருவர் அடிமேலடி வைத்து என் மேஜையண்டை வந்தார். அவர் உடம்பில் கோட்டும், தலையில் முண்டாசும், முகத்தில் கோபமும் துக்கமும் தரித்திருந்தார். அவர் கையில் ஒரு பெரிய தடியும், ஆறு விரல்களும் இருந்தன. அவர் தடியைப் பொத்தென்று மேஜைமீது வைத்துவிட்டு, என் முகத்தை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு சட்டைப் பையிலிருந்து ஒரு பத்திரிகையை எடுத்தார். அதைப் பிரித்து அதிலிருந்த ஒரு கட்டுரையைக் காட்டி, "இதை நீர்தானே எழுதியது? சொல்லிவிடும்" என்று கேட்டார்.

"ஆம்'' என்றேன்.

"தயவுசெய்து இதைக் கொஞ்சம் படித்துக் காட்டும்" என்றார். நான் படித்தேன். படிக்கப் படிக்க அவர் முகத்தில் கோபம் அதிகமாயிற்று. நான் படித்தது வருமாறு:

"கணபதியும் சோமுவும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள். அவர்களுக்குள் எப்பொழுதாவது சில்லறை மனஸ்தாபம் ஏற்பட்டால் அதை ஏதோ ஒரு சின்ன அரிவாள், அல்லது விறகுக் கட்டையை உபயோகித்துத் தீர்த்துக்கொண்டு விடலாம் என்றிருப்பவர்கள்.

ஆனால் இந்த நண்பர்களின் மனைவிமார் இதற்கு நேர் விரோதமாய் இருந்தார்கள். திரிபுரசுந்தரமும் சண்பகமும் பிராண சிநேகிதிகள். இவர்கள் ஒற்றுமைக்கு ஒன்றிரண்டு உதாரணங்கள் சொல்லாமற் போனால் எனக்குத் தூக்கம் வராது. ஒருநாள் திரிபுரத்தின் பிள்ளை பழனி, சண்பகத்தின் எட்டாவது பிள்ளை கந்தனைப் பலமாக அடித்துவிட்டான். கந்தன் அழுது கொண்டேபோய்த் தன் தாயாரிடம் புகார் செய்தான். உடனே அவளுக்குப் பிரமாத கோபம் வந்து அத்தனையையும் தன் பிள்ளைமீது செலுத்தினாள். 'ஏண்டா! கந்தா! நம்ப பழனி, அடித்தால் அழலாமாடா! விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருடா!' என்று சொல்லிவிட்டுப் பழனியைப் பார்த்து 'பழனி, நீ அவனை இன்னும் நாலு அடி அடி. கையை வலிக்குமேயென்று பயப்படாதே, உங்கம்மாவையும், விட்டு அடிக்கச்சொல்லு. நானும் இரண்டு அடி அடிக்கிறேன். அவனும் தன்னை நாலு அடி அடித்துக்கொள்ளட்டும்' என்று உற்சாகமாகக் கூறினாள்,

தான் பிள்ளை பெற்றதன் பயனை, அன்றுதான் அனுபவித்ததாக அவள் இறுமாப்பு அடைந்தாள். சண்பகம்தான் இப்படியென்றால் திரிபுரம் இதைவிட ஒரு படி அதிகமாகப் போவாள். ஒரு சமயம் சண்பகம் தன் வயதைப்பற்றி விசாரித்தபோது, அவள் சற்றுக்கூட யோசனை பண்ணாமல், 'முப்பது வருஷம் ஆறு மாதம், நான்கு நாள், ஏழேகால் நிமிஷம் ஆகிறது; உன்னைவிட எனக்கு அதிக வயது மூன்று நிமிஷம்' என்றாள். இவர்களுடைய ஒற்றுமையைப் பார்த்து ஊரார் மூக்கில் விரலைவைத்து ஆச்சரியப்பட்டார்கள்; இன்னும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் பயனாய் அவர்கள் மூக்குகள் சப்பையாகக் கூடப் போய்விட்டன.

ஆனால் அந்த ஊரார் அதே சமயத்தில் திரிபுரத்துக்கும் சண்பகத்துக்கும் ஏற்பட்டிருந்த ஒற்றுமையைப் பார்த்துப் பொறாமையும் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் சண்டை ஏற்படாதா என்று ஆவலுடன் எதிர்பார்திருந்தார்கள். வெகு சீக்கிரத்தில் அவர்கள் எதிர்பார்த்தபடியே நடந்தது. ஒருநாள் திடீரென்று அவர்கள் சிநேகம் குலைந்தது. குலைந்தது. குலைந்தது. குலைந்தே போய்விட்டது.

இந்த மனஸ்தாபத்துக்கு உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை. இரண்டு சிநேகிதிகளும் ஒருவர் விஷயத்தில் ஒருவர் பிராணத்தியாகம் செய்துகொள்ளவும் தயாராய் இருப்பவர்களாயிற்றே. ஏன் சண்டை வந்தது? ஒருவேளை திரிபுரத்தின் தோட்டத்திலிருந்து ஒரு வாழை இலையைச் சண்பகம் அறுத்து எடுத்துக்கொண்டு வந்ததினாலிருக்குமோ என்று பலர் சந்தேகப்பட்டார்கள்.

திரிபுரத்தின் சீமந்த புத்திரன் சிவானந்தமும், சண்பகத்தின் சீமந்த புத்திரி பார்வதியும் தங்கள் தாய்மார்களுக்குள் ஏற்பட்ட சண்டையைப் பார்த்து மனங்கலங்கினார்கள். ஏனென்றால் அவர்களிருவரும் காதலர்கள். ஒரு நாளிரவு சந்திரன் நல்ல பசும்பால் போலக் காய்ந்து கொண்டிருந்தபோது அவர்களிருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிவானந்தம் என்ன செய்வதென்று தெரியாமல் 'ஓய்! கடவுளே!' என்றான்.

கடவுள் வரவில்லை. ஆனால், அப்பொழுது மறைந்த மேகங்களிடையே யிருந்து சந்திரன் தோன்றினான். சிவானந்தத்தைப் பார்வதி என்னென்னமோ கேள்விகள் கேட்டாள். அவன் அவற்றிற்குப் பதில் சொல்லாமல் பயித்தியம் பிடித்தவனைப்போல் சந்திரனையே கவனித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்துக்கெல்லாம் அவன் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு திடீரென்று மறைந்து போனான்."

நான் மேலே படிக்க முயன்றபோது, "போதும், நிறுத்தும்!'' என்றார் வந்தவர்.

"நீர் பேசுவது, நடந்து கொள்வது ஒன்றுமே எனக்குப் புரியவில்லை" என்றேன்.

"புரியாது ஐயா, புரியாது. நீர் இலக்கணத்தைக் கொலைசெய்யச் சூழ்ச்சி செய்வதெல்லாம் எனக்குத் தெரியாதாக்கும்? உமது கட்டுரையில் முதல் பாராவைப் பாரும். 'மனஸ்தாபங்கள் அரிவாளால் தீர்த்துக் கொள்ளப்படும்' என்று ஒரு பெரிய சண்டையைப்பற்றி வார்த்தைகளை எத்தனை குறைத்து எழுதியிருக்கிறீர். அடுத்த பாராவில் இரண்டு ஸ்திரீகளுக்குமுள்ள ஒற்றுமையைப்பற்றி மிகைபடக் கூறியிருக்கிறீர். மூன்றாவது பாராவில் 'குலைந்தது, குலைந்தது........' என்று கூறியதையே திருப்பித் திருப்பி எழுதியிருக்கிறீர். நான்காவது பாராவில் ஒருவருக்காக ஒருவர் பிராணத் தியாகம் செய்துகொள்ளும் சுபாவமுள்ளவர்கள் வாழையிலைக்காகச் சண்டை போட்டுக் கொண்டார்களென்று மாறுகொளக் கூறியிருக்கிறீர். ஐந்தாவது பாராவில் 'ஓய் கடவுளே' என்று பொருந்தாத வார்த்தையை உபயோகித்திருக்கிறீர். 'அட' என்ற பதத்திற்குப் பதிலாக 'ஓய்' என்ற வழூஉச் சொல்லை ஏன் ஐயா, புகுத்தினீர்? ஆறாவது பாராவில் தன்னைத் 'தானே சுற்றிக் கொண்டது சந்திரனா அல்லது சிவானந்தமா என்று தெரியாமல் மயங்க வைத்திருக்கிறீர்" என்று பல்லைக் கடித்துக் கொண்டே சொன்னார்.

அவர் சொல்வதொன்றும் புரியாமல் நான் திகைத்துக் கொண்டிருந்தபோது, "நீர் ஓர் இலக்கண விரோதி" என்று ஒரு போடு போட்டார்.

"பெரியவரே, விஷயத்தைப் புரியும்படியாய்ச் சொல்லும்" என்று கேட்டுக்கொண்டேன்.

"இதைச் சொல்ல வேறு வேண்டுமாக்கும்! உமது கட்டுரையில் முதல் ஆறு பாராக்கள் எழுதுவதற்குள்ளேயே,

"குன்றக் கூறல் மிகைபடக் கூறல்

கூறியது கூறல் மாறுகொளக் கூறல்

வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல்"

என்ற ஆறு குற்றங்கள் இழைத்திருக்கிறீரே. கட்டுரை முடிவதற்குள் இன்னும் எத்தனை குற்றங்கள் இழைத்திருப்பீரோ?" என்று சொல்லிக்கொண்டே போய்விட்டார்.

அவர் சென்றபிறகு அவர் கூறிய இலக்கண விதிகள் பற்றிச் சிந்தித்துப் பார்த்தேன். ஹாஸ்யமாக எழுதுவதற்குக் கையாளவேண்டிய யுக்திகளைப்பற்றி நமது பெரியவர்கள் இப்படி விவரமாக இலக்கணம் ஏற்படுத்தி வைத்திருப்பது எனக்குப் புலனாயிற்று.

துமிலன்

© TamilOnline.com