வாழும் தமிழ் இலக்கிய விருது
உலக இலக்கியத்திலும், இந்திய இலக்கியத்திலும் முதன்மையான படைப்பாளிகளை அடையாளம் காட்டும் வகையிலும், அவர்களைச் சிறப்பிக்கும் வகையிலும், 'வாழும் தமிழ் இலக்கிய அமைப்பு', விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு 'வாழும் தமிழ் இலக்கிய விருது' என்பதை இந்த ஆண்டு முதல் வழங்க உள்ளது. மார்ச் 25 அன்று புதுதில்லியில் இவ்விருது குறித்த தகவல்கள் அறிவிக்கப்பட்டன. ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இவ்விருது இந்திய இலக்கிய விருதுகளில் பெரியது. உலக அளவிலும் பெரிய ஒன்றாகக் கருதப்படுகிறது.

உலக அளவிலான சிறந்த இலக்கியப் படைப்புகளை அங்கீகரிக்கவும், அதை வாசகர்கள் முன் வைக்கவும் இந்த விருது நிறுவப்பட்டுள்ளது. தமிழ் நவீன இலக்கியத்தின் பார்வையில் உலக இலக்கியத்தின் சாதனைகளை அடையாளம் காண்பது, அவற்றை இந்திய இலக்கியச் சூழலில் முன்வைப்பது ஆகியவை இவ்விருதின் நோக்கம். புது தில்லி மற்றும் நியூயார்க் நகரங்களில் ஆண்டுதோறும் ஒரே நேரத்தில் இவ்விருது குறித்த தகவல்கள் வெளியிடப்படும்.

தமிழ் பேசப்படும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ஆகிய ஏழு நிலங்களில் இருந்தும் பிரதிநிதிகளை இவ்விருதமைப்பு கொண்டிருக்கும். விருதுக்குரிய படைப்புகள் மற்றும் ஆளுமைகள் உலகளாவிய பரிந்துரை வழியாகத் தேர்வு செய்யப்படுவர். இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் நடுவர்கள் அமர்த்தப்படுவர். தமிழ் நவீன இலக்கியத்தின் பிரதிநிதியும், வாழும் தமிழ் உலக இலக்கிய விருது அமைப்பின் பிரதிநிதியும் நடுவர்களில் இடம்பெறுவர். Living Tamil Award என அழைக்கப்படும் இவ்விருது, ஒவ்வோராண்டும் டிசம்பரில் அறிவிக்கப்படும். ஜனவரி மாதம் 15-16-ம் தேதிகளில், திருவள்ளுவர் தினம் அன்று புதுடெல்லியில் விருது வழங்கும் விழா நடைபெறும்.

இவ்விருதோடு கூடவே, ஒவ்வோர் ஆண்டும் இந்திய மொழிகளில் எழுதிக்கொண்டிருக்கும் ஓர் இளம்படைப்பாளிக்கு, பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள எஸ். வையாபுரிப்பிள்ளை நினைவு விருது வழங்கப்பட உள்ளது.

© TamilOnline.com