முத்ரா சார்
டென்வர் கனெக்‌ஷன் பிளைட் நான்கு மணி நேரம் தாமதம் என்று தகவல்பலகை அறிவிப்பைப் பார்த்ததும் மனம் ச‌ற்றுக் கடுப்பாகிப் போனது. அந்த வாரத்தில் தீபாவளிப் பண்டிகை விடுமுறையும் அதுவுமாக வீடு சென்று சேரத் தாமதம். வாரம் முழுதும் வேலைக்களைப்பு. வெள்ளிக்கிழமை என்றும் இல்லாத அதிசயமாக விமான நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. பெரும் சலிப்புடன், வெட்கம் ஏதும் பார்க்காமல், பையைத் தலைக்கு வைத்து, கைக்கடிகாரத்தில் டைமர் செட் செய்துவிட்டு, கண்மூடித் தூங்கப் பார்த்தேன். உற‌க்கம் பிடிபடவில்லை. உறக்கம் வரும் எனவும் தோன்றவில்லை. மொபைலில் மெல்ல விகடனைப் பிரித்தேன்.

எப்பொழுதும் முதலில் படிக்கும் பகுதிகளான வலைபாயுதே, சொல்வனம் தாண்டியதும் சிறுகதையைத் திருப்பிப் பார்த்தேன். கதைகள் பகுதியை ஞாயிற்றுக்கிழமை மதியம் தூக்கத்திற்கு முன்பு என மிச்சம் வைத்துப் படிப்பவன் நான். டிலேலா டீச்சர் என்று பார்த்ததும், ஓர் ஈர்ப்பில் வாசிக்க ஆரம்பித்தேன். வாசித்து முடித்ததும் எனக்கு எங்கள் முத்ரா சார் ஞாபகம் வந்துவிட்டது. சலிப்பும் அசதியும் மறைந்து போய், கண்மூடிப் பழைய‌ நினைவுகளில் தோய்ந்து போனேன்.

முத்ரா சாரை முதன்முதலில் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆறாம் வகுப்பில் சேர்வதற்கு அப்ளிகேஷனைப் பூர்த்தி செய்து, சேர்மன் வீதி பிள்ளையார் கோவிலில் வைத்துக் கும்பிட்டு விட்டு, நல்ல நேரத்தில் அட்மிஷன் செய்துவிட வேண்டும் என்ற படபடப்பில் அப்பாவும், புது ஸ்கூல் எப்படி இருக்கும் என்று பயத்துடன் நானும், ஹெட் மாஸ்டர் ரூமுக்குள் இருந்தோம். ஹெட் மாஸ்டர் ஒப்புக்கு அப்ளிகேஷனைப் பார்த்துவிட்டு "பக்கத்து ஆபீஸ் ரூமில் முத்ரா சார் இருப்பார். சஞ்சாயிகா அக்கவுண்ட் பையன் பேர்ல ஓபன் பண்ணிட்டு, இருபத்தஞ்சு ரூபா கட்டிட்டு, கிளாஸ் செக்‌ஷன் போட்டு வாங்கிக்கோங்க" என்று அனுப்பி வைத்தார்.

அப்பாவுக்கு பக்கென்றது. வரும்போது பணம் எடுத்து வரவில்லை. முப்பத்தேழு வருஷத்துக்கு முன்னாடி, சாதரணமா இருபத்தஞ்சு ரூபாயை பாக்கெட்ல வச்சுட்டு .இருக்கற வசதியோடவும் நாங்க இல்ல. அப்பா தயக்கத்துடனே முத்ரா சார் கிட்ட போனார். அப்பத்தான் முத்ரா சாரை முதல்ல பார்த்தேன்.

நடிகர் நானி, ஷாம் சிங்க ராய் கெட்டப்ல எப்படி இருந்தாரோ.. அப்படியே. ஆனா, கொஞ்சம் கருப்பா, சுருள் முடியை மேல தூக்கி சீவி, சின்ன முறுக்கு மீசையோட, நெத்தில சின்னதா சந்தனம் இழுத்து, சட்டைய முழங்கை வரைக்கும் மடிச்சு விட்டுட்டு, இன் செஞ்சு அவ்வளவு அம்சமா இருப்பாரு.

அப்பா தயங்கிக்கிட்டே "இன்னிக்கி பணம் எடுத்துட்டு வரல்லீங்க சார். நல்ல நாள் இன்னிக்கி" என்று சொல்லி முடிக்குமுன் முத்ரா சார், "ஐயா, இதுக்கு எதுக்கு இவ்வளவு தயங்கறீங்க. நான் கட்டிர்றேன். அப்புறமா பையன்கிட்ட குடுத்து விடுங்க" என்றார். ஆறாம் வகுப்பு E செக்‌ஷன் அனந்தலட்சுமி டீச்சர் வகுப்பு என்று போட்டுக் கொடுத்தார். "தங்கமான மனுஷம்ப்பா" அப்பா சொன்னதைக் கேட்டு, எனக்கும் கொஞ்சம் உசரமாத்தான் முத்ரா சார் தெரிஞ்சாரு.

அப்ப அவருகிட்ட சொன்னதுதான். அந்த ஸ்கூல்ல இருந்த வரைக்கும் முத்ரா சார் என் பேரை மறக்கவே இல்ல. நான் மாத்திரம்னு இல்ல, அவருகிட்ட கொஞ்சம் பழகுனா போதும், அவ்வளவு பசங்க பேரையும் அவ்வளவு .ஞாபகமா கூப்பிடுவாரு. நான் ஏழு வருசம் எங்க ஸ்கூல்ல படிச்சேன். நான் பத்தாவது முடிக்கிற வரைக்கும் முத்ரா சார் எங்ககூட இருந்தாரு. அவரோட செவப்பு ராஜ்தூத் புல்லட்ல‌ சும்மா ஹீரோ மாதிரி வந்து இறங்குவாரு. ஸ்கூல்ல எதுண்ணாலும் முத்ரா சார்தான் முன்னாடி நிப்பாரு.

சுதந்திர தினம்னு நினைக்கிறேன். சப்-கலெக்டர் வந்து கொடி ஏத்தறதா இருந்துச்சு. நாங்க எல்லாம் பிரேயருக்கு நேரம் முன்னமே வந்து நின்னுட்டோம். சப்-கலெக்டர் வர்றதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தோம். அப்பதான் யாரோ, தேசியக்கொடி தலைகீழா இருக்கறத கவனிச்சு முத்ரா சார்கிட்ட சொன்னாங்க. கொடியை இழுத்து இழுத்துப் பார்த்தா கொடிமேல கொண்டியில சிக்கிடுச்சு. ஹெட் மாஸ்டர் பதட்டம் ஆயிட்டாரு. கொடிக்கம்பம் ஒரு பதினைந்து அடி இருக்கும்னு நெனக்கிறேன். முத்ரா சார் கொஞ்சம் கூட யோசிக்காம சடசடன்னு கம்பத்துல தவ்வி ஏறி, கடகடன்னு மேல போய், கொடியைத் திருப்பிக் கட்டிட்டு இறங்குனாரு பாருங்க.. முத்ரா சாருக்கு அவ்வளவு கிளாப்ஸ். தோப்புல தென்னை ஏர்ற அனுபவமுன்னு சிரிச்சிட்டே முத்ரா சார் நகர்ந்து போனார்.

ஸ்கூல் டீச்சர்ஸ் பேட்மின்டன் டோர்னமெண்ட் எங்க ஸ்கூல்லதான் நடக்கும். எங்க P.T. சாரும், முத்ரா சாரும் டபுள்ஸ் ஆடுவாங்க பாருங்க... சும்மா பட்டையக் கெளப்புவாங்க. அவங்க ஃபைனல்ஸ் வந்தப்ப எல்லாம் எங்க ஸ்கூல் முழுசும் என்னம்மா அவங்களை cheer பண்ணி இருக்கோம் தெரியுமா? ரெண்டு மூணு வருஷம் தொடர்ந்து சாம்பியன்ஸ் ட்ராஃபி எடுத்தாங்க.

நாங்க எட்டாவது படிக்கும் போதுதான் எழில்மேரி டீச்சர் எங்க ஸ்கூலுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி, அஸிஸ்டண்ட் ஹெட் மாஸ்டரா வந்தாங்க. எழில்மேரி டீச்சர் அழகுன்னா அவ்வளவு அழகு. சுருள் சுருளா நீளமான தலைமுடி, நல்ல மாநிறம், எப்பவுமே தலையில் செண்பகப் பூ, சிம்பிளான காட்டன் சேரி, கழுத்துல மேரி மாதா டாலர் செயின், இடது கையில சின்ன கோல்ட் ரிஸ்ட் வாட்ச், வலது கையில மெல்லிசா வளையல், கால்ல கொலுசு, வெள்ளிக்கிமை மாத்திரம் நெத்தில சின்னதா பொட்டு. அவங்களோட பச்சைக் கலர் பத்மினி காரில்தான் வந்து இறங்குவாங்க. கார் பார்க்கிங் செய்யற பெரிய‌ புங்க மரத்துலேர்ந்து ஸ்கூல் கேட் கொஞ்ச தூரம்தான் இருக்கும். அந்த தூரத்துக்கே குடை புடிச்சுட்டுதான் வருவாங்க பாருங்க‌. அவ்வளவு அழகா இருப்பாங்க‌.

எழில்மேரி டீச்சர் வந்ததுலேர்ந்து முத்ரா சாருக்கும், அவங்களுக்கும் முட்டல் மோதல்தான். இதுக்கு நடுவுல எங்க ஹெட் மாஸ்டர் லாங் லீவுல போனதால எழில்மேரி டீச்சர் ஆக்டிங் ஹெட் மாஸ்டர் ஆனாங்க.

முத்ரா சார்தான் ஸ்கூல் பிரேயர் இன்சார்ஜ். எங்க பிரேயர்ல வள்ளலார் அருட்பா பாடறது வழக்கம். எழில்மேரி டீச்சர், "இனிமேல் அருட்பா பாட வேண்டிய அவசியம் இல்ல" அப்படீன்னு சொன்னது ஒரு பெரிய பிரச்சினை ஆகிப்போச்சு. இவங்க வேற மதத்துக்காரங்க அதனாலதான் இப்படி சொல்றாங்கன்னும் விஷயம் .மாறிப்போச்சு. முத்ரா சார் கட்டாயம் அருட்பா பாடணும்னு ஒத்தக்கால்ல நிக்குறாரு. எழில்மேரி டீச்சரோ, "இது கவர்ன்மென்ட் ஸ்கூல்.. தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் இதுதான் வழக்கம்" அப்படின்னு பிடிவாதமா நிக்கறாங்க. இந்த விஷயம் தீவிரமாகி DEO வரைக்கும் போயிடுச்சு. ஆனா, முத்ரா சார் ரொம்ப உறுதியா "ஸ்கூலுக்கு இடம் கொடுத்த குடும்பத்துகாரங்க‌ வள்ளலார்மேல அவ்வளவு பக்தியானவங்க. இவ்வளவு பெரிய இடத்தைச் சும்மா குடுத்துட்டு அவங்க கேட்டுகிட்டது இது ஒண்ணுதான். அதனால தவறாம நிச்சயம் பாடணும்" அப்படின்னு DEO கிட்ட விவாதம் பண்ணி, மறுபடியும் பிரேயர்ல வள்ளலார் அருட்பா பாட வெச்சாரு.

முத்ரா சார், எழில்மேரி டீச்சர் ரெண்டு பேருக்கும் ஏறத்தாழ ஒரு வயசு. ரெண்டு பேருக்கும் இடையில் செம ஈகோ இருந்துச்சு.

ஸ்கூல் ஸ்டூடன்ட் லீடர் எலக்‌ஷன் வந்துச்சு. காமர்ஸ் குரூப்ல இருந்து S. செல்வப்பாண்டியன் அண்ணன், ஹிஸ்டரி குரூப்ல இருந்து K. செல்வப்பாண்டியன் அண்ணன். சொல்லவே வேண்டாம். செம டஃப் ஃபைட். இதுக்கும் அவங்க ரெண்டு பேரும் செம குளோஸ் பிரண்ட்ஸ். எங்க ஸ்கூல் எலக்‌ஷன் எப்படின்னா, எட்டுலர்ந்து பத்து வகுப்பு வரைக்கும் கிளாஸ் டீச்சர்ஸ், கிளாஸ்ல, எலக்‌ஷன்ல நிக்கற ஒவ்வொருத்தர் பேர் சொல்லி கையைத் தூக்கச் சொல்வாங்க. அத கவுண்ட் பண்ணி, ஒரு பேலட் பேப்பர்ல நோட் பண்ணி, கிளாஸ் டீச்சர்ஸ் கையெழுத்துப் போட்டு, சீல் பண்ணி, கிளாஸ் லீடர்ஸ் கிட்ட குடுத்துடுவாங்க. ஒவ்வொரு கிளாஸ் லீடர், அசிஸ்டன்ட் லீடர் அப்புறம் பதினொன்னு, பன்னெண்டாம் வகுப்பு ஸ்டூடன்ட்ஸ் நேரடியா எலக்‌ஷன்ல ஓட்டுப் போடுவாங்க.

அந்த எலக்‌ஷன் பிரச்சாரம் செம மாஸ். அந்த வருசம் முத்ரா சார்தான் எலக்‌ஷன் ஆபீசர். எலக்‌ஷன் ரிசல்ட்தான் செம சர்ப்ரைஸ். ஓட்டு எண்ணிக்கையில் ரெண்டு செல்வப்பாண்டியனுக்கும் ஒரே மாதிரி ஓட்டு. டென்ஷன் செமயா ஏறிப்போச்சு. பெயரைக் குலுக்கிப் போட்டு எடுக்கலாம்னு முத்ரா சார் சொன்னா, ரெண்டு செல்வப்பாண்டியன் அண்ணன்களும் ஒத்துக்கல.

மறுபடியும் எலக்‌ஷன் வைக்கிறது டைம் வேஸ்ட். இனி எலக்‌ஷன் வெக்கவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க எழில்மேரி டீச்சர். .இந்த டெட்லாக்ல முத்ரா சார் செஞ்சதுதான் அல்டிமேட். ரெண்டு செல்வப்பாண்டியன் அண்ணன்களையும் கூட்டிட்டுப் போய், தனியா பேசுனாரு. ஒரு பத்து நிமிசத்துல ரெண்டு பேரும் அவ்வளவு ஹேப்பியா வந்தாங்க. .முதல் அஞ்சு மாசம் ஒருத்தரு, அடுத்த அஞ்சு மாசம் இன்னொருத்தரு. பெயரைக் குலுக்கிப் போட்டு எடுத்தாங்க. ரெண்டு பேரும் பதவி ஏத்துகிட்டாங்க. SSP கேங்கும், எங்க KSP கேங்கும் பட்டாசு வெடிச்சு அன்னிக்கு செமயா ரவுசு பண்ணுனோம். ஸ்கூல் முழுசும் அந்த வருசம் செம ஒத்துமையா இருந்துச்சு. எழில்மேரி டீச்சரே முத்ரா சாரைப் பார்த்து அசந்துட்டாங்க.

ஒன்பதாவது படிக்கும்போது நாங்க திருமூர்த்தி மலைக்கும் அமராவதி டேமுக்கும் டூர் போனோம். டூருக்கு முத்ரா சார், எழில்மேரி டீச்சர், கைலியங்கிரி சார், சின்னத்தாய் டீச்சர், சகுந்தலா டீச்சர், முருகுவேல் சார் எல்லாம் வந்திருந்தாங்க. முதல்ல திருமூர்த்தி மலை. அன்னிக்கு நல்ல மழை வர்ற மாதிரி இருந்துச்சு. எங்களை எல்லாம் மேல, பஞ்சலிங்கம் அருவி வரைக்கும் கூட்டிட்டுப் போயிட்டு, "எப்ப வேணாலும் மழை வர்ற மாதிரி இருக்கு. மேல மலைல மழை பெய்ஞ்சிருந்தா சட்டுன்னு .வெள்ளம் வந்துரும். அதனால பாதுகாப்பு இல்ல" அப்படீன்னு முத்ரா சார் எங்களைக் குளிக்க விடல. அன்னிக்கு முத்ரா சார் மேல அவ்வளவு கோபம் எங்களுக்கு.

அப்பத்தான்.. தண்ணில ஓரமா விளையாடிட்டு இருக்கும் போதுதான்... "அம்மா..."ன்னு பெரிய அலறல் சத்தம். எழில்மேரி டீச்சர் தண்ணில வழுக்கி விழுந்து, அவங்க ஒரு கால் பாறை இடுக்குல சிக்கி, அவங்களால காலை வெளில எடுக்க முடியல. டீச்சர் வலில கதறிட்டாங்க. அவங்க முகமெல்லாம் செவந்து வேர்த்திருச்சு. எல்லாரும் பயந்துட்டோம். மெதுவா மழையும் விழ ஆரம்பிச்சுருச்சு.

முத்ரா சார்தான் கஷ்டப்பட்டு பாறாங்கல்ல மெல்ல நெகுத்தி, எழில்மேரி டீச்சர் காலை பக்குவமா வெளில எடுத்து விட்டாரு. டீச்சரால ஒரு எட்டுக்கூட எடுத்து வெக்க முடியல. கூட வந்த மத்த டீச்சர்ஸ் எல்லாம் கொஞ்சம் வயசானவங்க. டீச்சர் வலில முடியாம கதர்றாங்க. முத்ரா சார்தான் டக்குன்னு எழில்மேரி டீச்சரை அவரோட ரெண்டு கையில தூக்கிக்கிட்டு சடசடன்னு கீழ் அடிவாரத்துக்கு வந்தாரு. நாலஞ்சு பசங்க அவரு பின்னாடியே கீழ ஓடிவந்தோம். எழில்மேரி டீச்சர் அப்படியே மயங்கிட்டாங்க. நாங்க, முத்ரா சார் எல்லாம்தான் நாங்க வந்த பஸ்லேயே டீச்சரை பக்கத்துல இருக்குற குறிச்சிக்கோட்டை கவர்ன்மென்ட் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போனோம். பிறகுதான் டீச்சர் வலி கொறஞ்சு நார்மல் ஆனாங்க.

அன்னிக்கு அமராவதி டேம்ல என்ன ஆட்டம் தெரியுமா? டேப் ரெக்கார்டர்ல பாட்டு போட்டு நாங்க ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் குரூப், குரூப்பா எங்க டீச்சர்ஸ்கூட ஆடுனது இன்னும் நெனவிருக்கு. எழில்மேரி டீச்சர் அந்த வலிலயும், அவ்வளவு ஹேப்பியா டான்ஸ் பண்ணாங்க. வரும்போதும் பஸ்ல ஒரே பாட்டுத்தான். கைலியங்கிரி சார் "உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி"ன்னு என்ன அருமையா பாடுனாரு தெரியுமா? பின்னிட்டாரு. அவரு அவ்வளவு நல்லாப் பாடுவாருன்னு அப்பதான் எங்களுக்கே தெரியும். செம்ம ஹேப்பியான, மறக்கவே முடியாத ஸ்கூல் டூர் அது.

பத்தாவதுல கிளாஸ் டீச்சர் கைலியங்கிரி சார். ஆனா மெடிக்கல் லீவுல போயிட்டாரு. அதனால அந்த வருசமும் எங்களுக்கு முத்ரா சார்தான் கிளாஸ் டீச்சர். மேத்ஸ், சயன்ஸ் எடுத்தாரு. எழில்மேரி டீச்சர் இங்கிலீஷ். நானெல்லாம் முந்நூறு முந்நூத்தம்பது மார்க் வாங்கி பாஸ் பண்ணா போதும்னு இருந்த ஆளு. என்னை மாதிரி இருந்த மந்தாணிகளை எல்லாம் போட்டு உலுக்கு உலுக்குனு உலுக்கி இந்த ஒசரத்துக்கு கொண்டு வந்ததெல்லாம் முத்ரா சாரும், எழில்மேரி டீச்சரும்தான். வாரா வாரம் சனிக்கிழமை எங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ். காலைல ஏழு மணிலேர்ந்து ஒருமணி வரைக்கும். பிரேக்ல சங்கிலி அண்ணன் கடைல எல்லாருக்கும் ஒன் பை டூ டீ. ரிவிஷன் டெஸ்ட், மாடல் எக்ஸாம், அது இதுன்னு அவங்க எங்களை பெண்டு நிமித்தினாலும் படிக்கறத அவ்வளவு என்ஜாய் பண்ணி அந்த வருஷம் படிச்சோம்.

அந்த வருச ஆரம்பத்துல எழில்மேரி டீச்சர், எங்களை, எங்களுக்குப் புடிச்ச யாருக்காவது இங்கிலீஷ்ல ஃப்ரெண்ட்ஷிப் லெட்டர் எழுதச் சொன்னாங்க. அப்பத்தான் மந்தராசலமூர்த்தி, எழில்மேரி டீச்சருக்கு அப்படி ஒரு லெட்டர்... அவ்வளவு டச்சிங்கா... சும்மா பட்டையக் கெளப்பி, எழுதி இருந்தான். அந்த லெட்டரைத்தான் எங்க கிளாஸ் முழுசுக்கும் எழில்மேரி டீச்சர் கிராமர் கரெக்‌ஷன் சொல்லிக்குடுக்க எடுத்துக்கிட்டாங்க. அவன் இந்த மாதிரிதான் எழுதி இருந்தான்: "டீச்சர், நீங்க எனக்கு எப்பவும் ஃபிரண்டா இருக்கணும். உங்ககூட ஒரு தடவையாவது பேசணும்ணு ஆசையா இருக்கும். ஆனா இது வரைக்கும் பேசுனது இல்லை. நீங்க வெச்சுட்டு வர்ற செண்பகப் பூ குடுத்தீங்கன்னா நான் உங்க ஞாபகமாக புக்ல வெச்சுப்பேன். என்கூட எழில்மேரி டீச்சர் பேசுவாங்களா? எனக்கு ஃபிரண்ட் ஆவாங்களா?" அப்படிங்கற மாதிரி. தப்புக்கள் இருந்தாலும், ந‌ல்லா முயற்சி பண்ணி எழுதி இருந்தான். எழில்மேரி டீச்சர் பொறுமையா, அந்த லெட்டரை முழுசும் திருத்தி, அதே அர்த்தத்துல அந்த லெட்டரை கம்ப்ளீட் பண்ணி, அவன வாசிக்கச் சொன்னாங்க.

அவன் வாசிச்சு முடிச்சதும், அவனைக் கட்டிக்கிட்டு, அவன் தலைல முத்தம் குடுத்து, "நான் உனக்கு எப்பவுமே ஃபிரண்ட்தா"ன்னு சொன்னதும் மந்தராசலமூர்த்தி அப்படியே அழுதுட்டான். இது நிஜம். எங்க கிளாஸ் முழுசும் அப்படியே அன்னிக்கு உருகிருச்சு.

இந்த டைம்ல முத்ரா சாருக்கும், எழில்மேரி டீச்சருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி இருக்குன்னு எங்க கிளாஸ்க்கே தெரியும். எங்க கிளாஸை ரெண்டு குழுவா பிரிச்சு, ரெண்டு குழுவுக்கும் அறிவியல் குவிஸ் போட்டி வெச்சுக்கலாம்னு, எங்களை குழுக்களுக்குப் பெயர் வக்கச் சொன்னாங்க. நாங்க வச்ச பேரு. "முத்ரா, எழில்மேரி" இதைக் கேட்டதும் முத்ரா சார் ஆகட்டும், எழில்மேரி டீச்சர் ஆகட்டும், ஒண்ணுமே சொல்லல. அப்படியே சிரிச்சிட்டே போய்ட்டாங்க.

எங்களுக்கு சனிக்கிழமை ஸ்பெஷல் கிளாஸ். அப்பல்லாம் முத்ரா சாரும், எழில்மேரி டீச்சரும் ரெண்டு பேரும் டிஃபன் பாக்ஸ் ஷேர் பண்ணி சாப்பிடுவாங்க. மணிவேலனும், முத்துவீரனும், வைகாசி பொறந்தாச்சு படத்துக்கு போயிருந்தப்ப, சாரும் டீச்சரும் ஒண்ணா படத்துக்கு வந்ததப் பாத்துட்டு வந்து சொன்னாங்க. அதுலயும் முத்து வீரன் விவரமான ஆளு. ரெண்டு பேரும் ஒரே ரோஸ் மில்க்கை ஒண்ணா குடிச்சாங்கன்னு சாமி சத்தியம் வேற பண்ணான்.

அந்த வருசம், ஆல் இண்டியா ரேடியோவும், கோவை வானொலி நிலையமும் சேர்ந்து அறிவியல் திறன்தேடும் போட்டின்னு ஒண்ணு நடத்துனாங்க. வாரா வாரம் ஞாயித்துக்கிழமை காலைல, அரை மணி நேரம் அறிவியல் தலைப்புல இருக்கும். எட்டு வாரமோ, பத்து வாரமோ அந்தப் புரோகிராம் இருந்தது. கடைசில அதுல கேட்ட கேள்விகளுக்கு நாம பதில் எழுதி அனுப்பணும். முத்ரா சார் சொல்லித்தான் நாங்க எல்லாம் அதுல சேர்ந்தோம். முத்ரா சார், வாராவாரம் அந்த புரோகிராம் எல்லாத்தையும் audio record பண்ணி, எங்களுக்கு ஹெல்ப் பண்ணி பதில் எழுத வெச்சாரு. எங்க கிளாஸ்ல நெறயப் பேருக்குப் பரிசு, DEO ஆபிஸுக்கு வந்து இருந்துச்சு. அதை எடுத்துட்டு வர்றதுக்குதான் முத்ரா சார் என்னையும், மந்தராசல மூர்த்தியையும் ஆட்டோவுல கூட்டிக்கிட்டு போனாரு.

போயி எடுத்துக்கிட்டு வர்ற வழில, பிரெட்டி ஹவுஸ் பேக்கரிக்கு முத்ரா சார் எங்களை கூட்டிட்டுப் போனாரு. அதுதான் நான் ஏஸிக்குள்ள முதல் தடவை போனது. எப்படி மறக்கும்? எங்களுக்கு தேங்காய் பன் ஆர்டர் செஞ்சுட்டு திரும்புனா, அங்க எழில் மேரி டீச்சர்! சாரும், டீச்சரும் ஃபேமிலி ரூமுக்குள்ள போயிட்டாங்க. வெளில வரும் போது டீச்சர் கண்ணுல அவ்வளவு தண்ணி.. அழுதுகிட்டே, "முத்ரா, மாப்ள வீட்ல வர்றாங்க. ஏதாவது பண்ணுங்க முத்ரா ப்ளீஸ்" டீச்சர் அழுதது இன்னும் கண்ணுக்குள்ள இருக்கு. அப்ப சட்டுன்னு ரெண்டு பேர், உள்ள வந்து முத்ரா சார் சட்டையப் புடிச்சுட்டாங்க. எழில்மேரி டீச்சரோட அப்பாவும் இன்னொருத்தரும்.. எங்க முன்னாடி சட்டையப் புடிச்சதுல முத்ரா சார் குறுகிப் போனார்.

அன்னிக்கு திரும்ப வரும்போது சார் எதுவுமே பேசல. அன்னிக்குத்தான் நாங்க எழில்மேரி டீச்சரைக் கடைசியா பார்த்தது. அதுக்கப்புறம் டீச்சர் ஸ்கூலுக்கு வரவே இல்லை. முத்ரா சார் ஒடுங்கிப் போயிட்டாரு. எங்களுக்கும் பத்தாம் வகுப்பு முழுப் பரீட்சை. கிளாஸ்ல நாங்க பதிமூணு பேர் நானூறுக்கு மேல மார்க் வாங்குனோம். இதை ஹேப்பியா செலிபிரேட் பண்ண எங்க முத்ரா சாரும் எங்ககூட இல்ல. எழில்மேரி டீச்சரும் இல்லை. முத்ரா சார், எங்கயோ.. டீச்சர்ஸ் டிரெயினிங் ஸ்கூலுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிப் போய்ட்டதா கேள்விப்பட்டோம்.

ரொம்ப நாளைக்கு அப்புறம்... ஒரு பத்து வருசம் முந்தி இருக்கும்னு நினக்கிறேன், ஒரு சம்மர் லீவுக்கு ஊருக்குப் போய் இருந்தோம். ஏதோ பேங்க்ல‌ வேலை. பேங்க்ல கூட்டம் இல்லாத நேரம். பேங்க் மேனேஜருக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

அப்பத்தான் அங்க முத்ரா சார் ஏதோ பேங்க் வேல சம்பந்தமா வந்திருந்தாங்க. ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் விசாரிச்சுட்டு, ஒருத்தர ஒருத்தர் யாருன்னு ஞாபகம் பண்ணிக்கிட்டு... என்னால பொறுக்க‌ முடியல. நான் மெதுவா எழில்மேரி டீச்சர் பத்திக் கேட்டேன். கொஞ்ச நேரம் என்ன பாத்துட்டு, சார் எதுவுமே பேசல. "எவ்வளவு அழகு... எவ்வளவு அறிவு... நம்ப எழில்மேரி, இல்லப்பா? அவ வச்சுட்டு இருக்கும் செண்பகப் பூ வாசம். இன்னும் இங்க, இப்ப‌கூட இருக்கற மாதிரியே எனக்கு இருக்கு."

அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அந்த சண்டாளப் பாவிக்கு வாழ்க்கப்பட்டா. சந்தேகத்துலயே அவன் அவங்களப் பாதி சாகடிச்சான். விதி.. எதுக்கு இன்னும் இவ்வளவு கஷ்டம் இவளுக்குன்னு, மீதியா இருந்த அவளை" மேலும் உடைந்து விசும்பத் தொடங்கி விட்டார். தண்ணீரைக் கொடுத்து அவரைக் கொஞ்சம் ஆறுதல் படுத்தினேன். அதற்குள் மேனேஜர் வந்துவிட்டார். பேசிக் கிளம்ப யத்தனித்த போது "இருங்க, இங்க வேலய முடிச்சுட்டு ஒரு காஃபி குடிக்கலாமா? உங்களுக்கு நேரம் இருக்கா?"ன்னாரு..

எங்க முத்ரா சாருக்கு இல்லாத நேரமா?

பக்கத்தில் இருக்கும் கெளரி கிருஷ்ணாவுக்குப் போனோம்.. அங்க.. சாரோட மனைவி. அவங்ககூட‌, வீல் சேரில் ஆட்டிசம் மாற்றுத்திறனுடன் ஒரு பெண் குழந்தை. மலர்ந்த மலராய் அவள் உலகில் யாருடனோ புன்னகைத்துக் கொண்டே இருந்தாள். என் மனதில் இன்னும் வலி கூடிப்போனது. முத்ரா சார், அவர் மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். என்னையும் அவருக்கு அறிமுகப்படுத்தினார். "மூணு சாம்பார் வடை. ரெண்டு காஃபி. டூ பை த்ரீ" என்னைக் கேட்காமலே ஆர்டர் செய்துவிட்டு, சட்டுன்னு ஞாபகம் வந்தவராய், "குட்டிம்மாக்கு இன்னொரு குலாப் ஜாமூன் வேணுமா?" என்று கேட்டு, அவள் இன்னும் மலர்ந்து சிரிக்க‌, அவரது மனைவியின் மறுப்பையும் காது கொடுத்துக் கேட்காமல், இரண்டு குலாப் ஜாமூன்களும் ஆர்டர் செய்தார்.

"இருங்க வந்துடர்றேன். நம்ம டிரைவர் எதுவும் சாப்பிடல. அவரையும் ஏதாவது சாப்பிடச் சொல்வோம்" என்று முத்ரா சார் இறங்கிப் போனார். நான் மனம் ஆறாமல், மெல்ல அம்மாவிடம் பேச்சுக் குடுத்தேன், "எவ்வளவு குழந்தைங்கம்மா? பாப்பாவுக்கு என்ன வயசு?" என்றேன்.

"எங்களுக்கு ரெண்டு பெண் குழந்தைங்க தம்பி. அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. இவ.. சாரோட வேல பாத்தவங்க... எழில்மேரி டீச்சர்னு ஒருத்தங்க. அவங்க பொண்ணுங்க. ஒரு பத்து வருசத்துக்கு முந்தி அவங்க தவறிட்டாங்க. அவங்களுக்குப் பிறகு இவளுக்கு யாரும் இல்ல. டீச்சரோட அப்பா வீட்ல பெரிய பணக்காரங்கதான். இவளை ஏதாவது ஆசிரமத்துல விடறதாதான் இருந்தாங்க. நாங்கதான் டீச்சரோட கடைசி காலத்துல பக்கத்துல இருந்து அவங்களைப் பாத்துக்கிட்டோம். இப்ப பத்து வருசமா எங்க கூடத்தான் இருக்கா. இவளுக்கு பத்தொன்பது வயசு. வர்ற வாரம் பிறந்தநாள். அதுக்கு கேக் ஆர்டர் பண்றதுக்குதான் இங்க வந்தோம். இல்லடி... குட்டிம்மா... சின்ன எழில்" அவள் மேவாயைப் பிடித்துக் கொஞ்சியதும், அவள் இன்னும் அவ்வளவு அழகாகச் சிரித்தாள். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

அன்று இரவு, எங்கள் பத்தாம் வகுப்பு குரூப் போட்டோவையும், நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கும் பத்தாம் வகுப்பு அறிவியல் ரெகார்ட் நோட்டையும் தேடித் துழாவி எடுத்துப் பார்த்தேன். முத்துராமன் செந்திருமங்கான் என்று கையெழுத்திட்டிருக்கும் எங்கள் முத்ரா சார். ஒன்றிரண்டு கண்ணீர்த் துளிகள் அந்தக் கையெழுத்தில் சிந்தப் பார்க்கையில் சட்டென மூடி வைத்துவிட்டேன்.

ரமேஷ் கோபாலகிருஷ்ணன்

© TamilOnline.com