சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ரோம் தன் எழுநூற்று ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடிய காலத்தில், டைக்ரிஸ் நதியின் கரையில் உள்ள செடெசிபோன் நகரில், பாரசீகத்தின் மாகி என்றழைக்கப்படும் அரண்மனை ஜோதிட வல்லுனர்கள் வானில் தோன்றிய அற்புத நட்சத்திரம் ஒன்றைப் பின்தொடர ஆயத்தமானார்கள்.
முதியவரான மெல்கியோர், அஹூர மஸ்தா நெருப்புக் கோயிலின் தலைமைக் குரு. பொறுமையும், நிதானமும், ஞானமும் ஒருங்கே பெற்ற அவர் கண்களில் உறக்கம் நீங்கியிருந்தது; ஏதோ ஒரு மகத்துவமானதும், உன்னதமுமான நிகழ்விற்காக அவர் நெஞ்சம் படபடப்புடன் காத்துத் துடித்துக் கிடந்தது.
இரண்டாமவர் காஸ்பர், கூரிய பார்வையும் எரியும் ஆர்வமும் கூடிய இளைஞர், அரசரின் ஆஸ்தான ஜோதிட நிபுணர். ஏனைய நட்சத்திரங்கள் போல் அல்லாது, நகராமல் ஒரே இடத்தில் அசைவற்று ஒளி வீசும் ஒரு விண்மீனின் அதிசயத்தில் மூழ்கிக் கிடப்பவர்.
மூன்றாமவர் பல்தசார், ரோமுடனான போரில் காயம்பட்ட அசகாய வீரர். வாளின் கூர்முனை தவிர எதிலும் நம்பிக்கை இல்லாதிருந்தவர். ஓர் இரவு சொரோஸ்ட்ரிய நெருப்புக் கோயிலில் புனித நெருப்பு தானாக வெண்மையாய் எரிந்ததும், நட்சத்திரம் மேற்கில் நின்றதும், அவரது இதயம் உருகி, வாளுக்கு அப்பால் விளங்கும் பேராற்றலை வணங்கத் தொடங்கியிருந்தது.
மூவரும் நூற்றாண்டுகளுக்கு முன் பிணையக் கைதிகளாய் யூதர்கள் கொண்டுவந்த பழைய சுருளைப் படித்திருந்தார்கள். அதில் இருந்தது:
"ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்." (எண்ணாகமம் 24:17)
மெல்கியோர் "நண்பர்களே, நேரம் நெருங்கிவிட்டது. நம் ஏடுகளும் யூத இறைவாக்கும் இசைவாய்ப் பாடுவதை பாருங்கள். இனியும் தாமதிக்காமல் பயணிப்போம்" என்றார்.
காஸ்பர் மெல்லச் சிரித்தபடி ஆமோதித்தார், "நேரம் நெருங்கித்தான் விட்டது."
பல்தசார் குதிரையின் சேணத்தை இறுக்கியபடி, "வாருங்கள், இதற்காகத்தான் நான் காத்திருந்தேன்" என்றார்.
அந்த அமாவாசை இருட்டில் மூவரும் எழுத்தர்கள், ஒட்டக ஓட்டிகள், கவச வீரர்கள் என நாற்பது பணியாளர்களுடன் வெள்ளிப்பூண் போட்ட மூன்று சிறிய கேதுரு மரப் பெட்டிகளில் தங்கம், குங்கிலியம், வெள்ளைப் போளத்தைக் கிழக்கின் அன்பளிப்புகளாய் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.
பல வாரங்களும், மாதங்களும் காடுகள், மலைகள், பாலைகள் தாண்டி விண்மீன் வழி காட்ட ஏதோ ஓர் ஆற்றலுக்கு அடி பணிந்தவர்களாய் அமைதியாக மேற்கு நோக்கிச் சென்றார்கள்.
இப்படியாக ஒரு நடுக்கும் கடும் குளிர்கால மாதத்தில் எருசலேம் நகரை வந்தடைந்தார்கள். நகரமோ குளிரால் மட்டுமல்ல ஏரோது அரசனின் கொடுங்கோல் ஆட்சியின் பயத்திலும் நடுங்கிக் கிடந்தது.
மாலை நேரத்தில் நகரின் ஆட்டு வாயில் வழியாக மூவரும் தூசி படிந்த மேலங்கிகளுடன் பார்த்தியா நாட்டின் வெள்ளைச் சிறகு காளை முத்திரை மின்ன நுழைந்தார்கள்.
எருசலேம் நகர மக்கள் கிழக்கத்திய அந்நியர் இவர்கள் யாரோ? என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறார்களோ? ஒருவேளை போரோ, என்னவோ என பயந்து திகைத்து விலகினர்.
தகவல் அறிந்த ஏரோது அவர்களை அரண்மனைக்கு அழைத்தான்.
ஏரோது குடியால் சிவந்த கண்களோடு, தடித்த விரல்களைப் பிசைந்தபடி யோசனையோடு சிங்காதனத்தில் அமர்ந்திருந்தான்.
"அரசனைத் தேடுவதாய்க் கேள்வியுற்றேன்? யார் வேண்டும்?"
"கிழக்கில் நட்சத்திரம் உதிக்கக் கண்டோம். வேதங்கள் சொல்லும் யூத அரசரைக் கண்டு வணங்க வந்தோம்" என்றார் மெல்கியோர்.
ஏரோது கதிகலங்கி அதை மறைத்தபடி மெல்லிய புன்னகையுடன்:
"நட்சத்திரமா உதித்ததா? ம்ம்… எங்ஙனம் இந்தப் புதிய யூத அரசனை கண்டடைவீர்கள்?" என்று வினவினான்.
காஸ்பர் தீர்க்கமாய், "இதுவரை நடத்திய விண்மீன் இன்னும் வழி காட்டும்." என்றான்.
ஏரோது தன் தலைமை ஆசாரியர்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.

அவர்கள் அவனிடம், "யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில்,
'யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்'
என இறைவாக்கு சொல்கிறது என்று மீகா வேதக் குறிப்பை வாசித்து, அம்மூவரின் கூற்றை ஆமோதித்தார்கள்.
கொடுங்கோலன் ஏரோது உதட்டில் தேன் தடவிய வஞ்சகப் புன்னகையுடன் "அந்த அரசக் குழந்தையைக் கண்டால் எனக்கு உடனே செய்தி அனுப்புங்கள், நானும் சென்று அவரை வணங்கித் தொழுது மகிழ்வேன்" என்றான்.
அன்றிரவு நட்சத்திரம் நகர்ந்து தெற்கே ஆறு மைல் தொலைவில் உள்ள பெத்லகேம் கிராமத்துக்கு மேலே நின்றது.
நட்சத்திர ஒளியால் பால்வெள்ளையாய் அந்த இடம் மின்னியது. பெத்லகேம் பனியில் அமைதியாய் உறங்கிக் கிடந்தது.
ஊரோரத்தில் ஒரு சிறிய கொட்டகை – ஆமாம். வீடோ, மாடமோ, அரண்மனையோ அல்ல.
ஒரு சிறு விளக்கோளியில் தாவீதின் வம்சவழி வந்த தச்சர் யோசேப்பு நின்று கொண்டிருந்தார். உள்ளே மரியாள் தன் பெற்றேடுத்த அழகிய சிசு ஒன்றை பழந்துணிகளில் சுற்றி அணைத்திருந்தாள்.
மெல்கியோர் முதலில் இறங்கினார். கண்ணீர் கன்னங்களில் தாரை தாரையாக வடிய, நடுங்கியபடி தரையில் மண்டியிட்டு நெற்றி தொட்டார். அது கோயிலில் ஏற்றப்படும் புதிய நெருப்புக்கு முன் மாகிகள் செய்யும் வணக்கம். காஸ்பரும் பல்தசாரும் அவரைப் பின்தொடர்ந்து மண்டியிட்டுத் தொழுதார்கள்.
அந்த தேவகுழந்தை அசையாமல் தன் அகன்ற கரிய கண்களால் பார்த்துச் சிரித்தது.
மெல்கியோர் நடுங்கும் கைகளால் தங்கத்தைக் கொட்டினார், நாணயங்கள் மணிகள்போல ஒலித்து விழுந்தன.
காஸ்பர் குங்கிலியத்தை வைத்தார். அந்த அடர்பனி இரவு நறுமணத்தால் நிறைந்து வழிந்தது.
பல்தசார் பணிவாக வெள்ளைப்போளத்தைக் கொடுத்தார்.
"யூதா கோத்திரத்தின் அரசே," மெல்கியோர் மெதுவாக அழைத்தார்.
"இதோ கிழக்கு உமக்காகக் கொணர்ந்திருக்கும் பரிசுகளைப் பெற்றுக் கொள்க" என்று சொல்லி வணங்கினார்.
மரியாள் தலை தாழ்த்தி நன்றி பகர்ந்தாள்.
அச்சிறு பாலகன் தன் பொற்கையை நீட்டி முதியவரின் விரலை இறுகப் பற்றியது, ஏற்றுக் கொண்டேன் என்பதுபோல.
வழிநடத்திய வான் நட்சத்திரம் இன்னும் ஒருமுறை கண்ணைப் பறிக்கும் ஒளி வெள்ளமாய் ஜொலித்து, மெதுவாக மறைந்தது.
மாகிகள் மூவரின் கனவிலும் "ஏரோதிடம் திரும்ப வேண்டாம்" என்று எச்சரிக்கை வர, உடனே அவர்கள் யோசேப்பிடம் வேகமான குதிரைகளையும் மீதித் தங்கத்தையும் வாங்கிக்கொண்டு, எகிப்துக்குப் போகும் வழியைக் கேட்டு, மறைவான பாதைகளில் யோர்தான் நதியைக் கடந்து யாரும் பின்தொடர முடியாதபடி தங்கள் நாடு சென்றடைந்தார்கள்.
கதை அத்துடன் முடியவில்லை.
முப்பது ஆண்டுகளுக்குப் பின் அதே கிழக்குப் பாதைகளில் வேறொரு பயணி வந்தார், தோமா என்னும் திருத்தூதர் அவர்கள் மூவரையும் கண்டடைந்தார். தோமாவின் மூலம் பாலைவனத்தில் அவர்கள் பின்தொடர்ந்தது சாதாரண நட்சத்திரம் அல்ல; எல்லா மக்களுக்கும் வாக்களிக்கப்பட்ட நித்திய வார்த்தையின் ஒளி, உலக ரட்சகர் என்றறிந்தார்கள். அந்த நொடியில் மூவரும் மண்டியிட்டுக் கிறிஸ்துவை ஏற்றார்கள். அவர்கள் தம் மீதி ஆயுளை அந்த அன்பின் செய்தியைச் சொல்லி மகிழ்ந்தார்கள்.
இன்று ஜெர்மனியின் கொலோன் பேராலயத்தில், பிரதான பலிபீடத்திற்குப் பின்னால் உள்ள தங்க மறைவில் மூவரும் ஒன்றாக ஓய்வெடுக்கிறார்கள். உலகெங்கிலும் வரும் புனித யாத்திரிகள், பயணிகள் இன்றும் அங்கே மண்டியிட்டு வணங்குகிறார்கள்.
தங்கம், குங்கிலியம், வெள்ளைப் போளம் ஆகியவற்றின் சிறு துண்டுகள் நூற்றாண்டுகள் கடந்தும் பேணப்பட்டு, கிரீஸின் ஆத்தோஸ் மலையில் உள்ள புனித பவுல் மடத்தில் இன்றும் இன்னும் நறுமணம் வீசுகின்றன.
ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும் உலகெங்கும் வண்ண விளக்குத் தோரணங்கள் மின்ன, பரிசுப் பொதிகள் மேசைகளையும், ஜோடிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தடிகளையும் நிரப்புகின்றன. அதன் பின்னால் இந்த மிகப் பழமையான பரிசளிப்பு நிகழ்வொன்று ஒளிந்திருப்பதை நாம் அறிவோமா?
இந்த ஆண்டும் மரத்தடியில் பரிசுகளை அடுக்கும் போது, இந்த மூன்று ஞானிகளையும், அவர்கள் மேற்கொண்ட பயணத்தையும் ஒரு கணம் நினைத்துக் கொள்ளுங்கள். முதன் முதலாகத் தொழுவத்தின் கொட்டகை முன் கிழக்கிலிருந்து பாலைவனங்களைக் கடந்து வந்த மெல்கியோர், காஸ்பர், பல்தசார் பெற வந்தவர்களல்ல; கொடுக்கவே வந்தார்கள். எல்லாப் பரிசுகளிலும் உன்னதப் பரிசு பெத்லகேமில் பிறந்த குழந்தை இயேசு கிறிஸ்து என்பதை முதலில் புரிந்து கொண்டவர்களும் அவர்களே.
அதுதான் நட்சத்திரம் சொன்ன கதை.
மனங்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்!
தேவி அருள் மொழி, சிகாகோ, இல்லினாய்
- |