முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிகுந்த ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி ஸ்டான்போர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.
இக்கதையில் இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்ட்டம் ஒளிக் கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென ஒரு பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். மேரி குவான்ட்டம் கணினி எப்படி வேலை செய்கிறது, அதன் இடையூறுகள் என்னென்ன, அவற்றை தங்களுடைய தனிச்சிறப்பு நுட்பங்களால் எப்படி நிவர்த்தித்தனர் என்று விவரித்தாள். ஆனால் நுட்பங்களை நன்கு அறிந்த உள்நபர் உதவியால் நுட்ப கடும்பொருட்கள் திருடப்பட்டன என்றாள். மேலாண்மைக் குழுவினரை விசாரித்து வரும் சூர்யா, குவான்ட்டம் கணினியின் குழப்பத்தை எப்படி நிவர்த்திக்கிறார் என்பதைப் பார்ப்போம் வாருங்கள்!
★★★★★
குவான்ட்டம் கலையலால் (decoherence) உயர்வு போய் சில சமயம் குறைவாகிவிட வாய்ப்புள்ளதாக மேரி கூறிவிட்டு, தங்களது நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று மிகத் தனித்துவமுள்ள அபூர்வ பூமிக் கலவையால் க்யூபிட்கள் உருவாக்குவதால் கலையல் குறைப்பு என்றும் கணினிக்குள்ளேயே வயலட் நிற லேஸர் கதிரை மிகக் குறைந்த சக்தியில் மிக அதிக வேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் கூறிய மேரி, கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தனிச்சிறப்பு நுட்பங்கள் ஏன் சரியாகப் பலனளிக்கவில்லை என்று நிறுவன நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது, முந்தைய தினம் திடீரென திருட்டு நடந்து விட்டதால் ஷாலினிக்கு அவசரச் செய்தி அனுப்பியதாகவும் விளக்கினாள்.
சூர்யா, மேரியின் மேலாண்மைக் குழுவினரை ஒவ்வொருவராகச் சந்தித்து விசாரித்து விட்டு, பிரச்சனைக்கு நிவாரணம் நெருங்கிவிட்டதாகவும் அதற்காக மேலாண்மைக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று கூறவே, சூர்யா, கிரண், ஷாலினி மூவருடன் மேரி மற்றும் அவளது மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் போர்டு அறையில் அமர்ந்திருந்தனர்.
குழுவில் பலரும் அல்லது அனைவருமே சேர்ந்து கூடத் திருட்டில் பங்கேற்றிருக்கக் கூடும் என்று முதலில் கூறிவிட்டு, அது சாத்தியமில்லை என்றும் விளக்கிவிட்டு ஒரே ஒருவர்தான் அதற்குக் காரணம் என்று கூறினார்.
அதைக் கேட்டு பரபரத்த மேரி, "யார்? யார் அது? உடனே கூறுங்கள்" என்று உரத்த குரலில் கூவினாள்.
பதிலுக்கு சூர்யா ஓர் அதிர் வேட்டு வீசினார். "மேலாண்மைக் குழுவில் குவான்ட்டம் கணினி அடிப்படை நுட்பங்களுக்குச் சம்பந்தம் இல்லாதவர் யார்? பாதுகாப்புச் சாதனங்களைப் பற்றி நுணுக்கமாக உணர்ந்து குறிப்பேடுகளில் ஒன்றும் இல்லாதபடி செய்து அதையே காரணமாகக் காட்டி மற்றவர்கள் பேரில் சந்தேகம் எழும்படிச் செய்தவர் யார்? மற்றவர்களைக் கண்காணித்து அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கணித்தவர் யார்? அவை அனைத்துமே பொருந்தக்கூடியவர் லூயிஸ் ஹெர்ரேராதான். அவர்தான் குற்றவாளி!" என்றார்.
லூயிஸ் கொதித்தெழுந்தார். "என்ன சொல்றீங்க?! நான் செய்தேனா? மேரி, ஒரு துளிகூட ஆதாரமில்லாம இப்படி ஒருவர் என்மேல பழி போடறத்துக்கு நீங்க காரணம். நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்." சூர்யா குரலை உயர்த்திக் கொண்டு தொடர்ந்தார். "அடிப்படை நிரூபணம் கிடைக்கும் லூயிஸ். வெளியிலிருந்து யாரோ வரக்கூடும் என்று கோடி காட்டுவதற்காக அபாய மணி ஒலிக்காமல் செய்ததற்கான குறிப்பு அந்தச் சாதனத்தின் பதிவேடுகளில் இருக்கும். நீங்கள் முதலில் கூறியபடி அதை எல்லோரும் செய்திருக்க முடியாது. அதற்குத் தனியாக முதலில் வேறு ஒரு ரகசிய எண்ணை அழுத்தி விட்டுத்தான் செய்ய முடியும். அது வேறு யாருக்கும் தெரியாது. பாதுகாப்புச் சாதனத்தை வாங்கிப் பொருத்திய நிபுணரான உங்களிடமும், விற்ற நிறுவனத்திடமும் மட்டுமே இருக்கும். மேலும், திருடப்பட்ட சாதனங்கள் இன்னும் வெளியே கொண்டு செல்லப்பட நேரம் போதாது. அதனால், உங்களால் மட்டுமே பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பு அறையிலேயே பதிக்கப் பட்டிருக்க வேண்டும். போலீஸைக் கொண்டு சோதித்தால் கிடைத்து விடும். உங்க பேங்க் குறிப்பேடுகளும் நீங்க முன்பணம் வாங்கிய ஒரு பெரிய தொகை சேர்த்திருப்பதைக் காட்டிடும்."
லூயிஸின் முகம் வெளிறியது! ஆனாலும் படபடத்தார். "சாதனங்களால் மட்டும் பயனில்லையே? இந்த மற்ற நிபுணர்களும் சேர்ந்தால்தானே பயன்படும்? அதுக்கு என்ன சொல்றீங்க?" சூர்யா முறுவலித்தார். "நான் அதைப்பற்றி முன்னமே மேலோட்டமாகக் குறிப்பிட்டேன். அவர்களின் பணத் தேவையை நீங்கள் கண்காணித்து உணர்ந்தீர்கள். போட்டி நிறுவனத்திடம் சென்று சாதனங்களைத் தருவதாகவும், மற்ற நிபுணர்களின் பணத்தேவையைப் பூர்த்தி செய்து அவர்களை கிரகிப்பது அவர்களின் பொறுப்பு என்று திட்டம் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்! அவர்களை கிரகிக்க ஏற்கனவே இன்று அவர்களுக்கு ரெக்ருட்டர்களின் அழைப்பு வந்திருக்க வேண்டுமே!"
மற்ற மேலாண்மைக் குழுவினர் வியப்புடன் தலையாட்டி வலக்கை கட்டை விரலை உயர்த்தி ஆமோதித்தனர்.
சூர்யா தொடர்ந்து விளக்கினார். "மேரி, இந்தத் திருட்டின் முக்கிய நோக்கம், தொழில்நுட்பத்தை நேரடியாக அடைவது அல்ல. அது பேட்டண்ட்டுகளால் பாதுகாக்கப் பட்டுள்ளன. மாறாக, இதன் நோக்கம், உங்கள் நிறுவனத்துக்கு மூலதனம் கிடைப்பதை தள்ளிப் போடுவது அல்லது நிறுத்தியே விடுவது. அதனால் விளையும் நிலை தடுமாறலால் உங்கள் நிபுணர்களை ஈர்த்து அவர்களின் திறனைக் கொண்டு பேட்டண்டுகளைத் தவிர்க்கக் கூடிய, ஆனால் இணையான நுட்பங்களை உருவாக்குவது திட்டம்! இந்த நிபுணர்கள் இல்லாவிடில் உங்கள் நிறுவனம் படுத்துவிடும், போட்டியிட இயலாது என்று கணித்திருக்க வேண்டும். அப்படித்தானே லூயிஸ்?"
லூயிஸின் முகம் விகாரமானது, சூர்யாவின் கணிப்பு அத்தனையும் சரிதான் என்று காட்டிக் கொடுத்துவிட்டது! மேரி புயல் போன்ற சீற்றத்துடன் லூயிஸை நிந்தித்தாள்!
"சே, உன் பேரில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன்! அத்தனையையும் பொய்யாக்கிட்டயே! நியாயமாக உன்னைப் போலீஸிடம்தான் ஒப்படைக்கணும். ஆனா அப்படி செஞ்சா உன் திட்டப்படியே எங்க மூலதனத்துக்கு பங்கம் வந்தாலும் வரும்.
உடனே இங்கிருந்து ஓடிப்போயிடு. எங்க நிறுவனத்துல உனக்கு இருக்கற மேலாண்மைப் பங்குகளை எல்லாத்தையும் ரத்து செஞ்சுடுவோம். இங்க செஞ்ச வேலை நேரத்துக்கு நல்ல பரிந்துரையும் கிடைக்காது. அடுத்த வேலை கிடைக்காமல் அவஸ்தைப் படுவே. அதுவே உனக்கு சரியான தண்டனை! உடனே கண்காணாம போயிடு!"
லூயிஸ் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு வெளியேறினார்.
கிரண் ஷாலினியிடன் கிசுகிசுத்தான், "ஷாலு, நம்ம அம்மா சொல்லுவாளே, வேலியே பயிரை மேஞ்ச கதை மாதிரின்னு, அப்படியே இருக்கு இது!" ஷாலினி அவனை கையை அழுத்தி மௌனமாக இருக்குமாறு அடக்கினாள்.
மேரி ஷாலினியின் கையைப் பிடித்துக்கொண்டு தழுதழுத்த குரலில் நன்றி கூறினாள். "நல்ல வேளை ஷாலினி, நீ சூர்யாவைப் பற்றிச் சொன்னது எனக்கு சரியான சமயத்துக்கு ஞாபகம் வந்தது. சூர்யா, இந்த நிறுவனத்தையும் காப்பாத்திட்டீங்க. இனி மூலதனம் கிடைச்சு நாங்க குவான்ட்டம் கணினி நுட்பத்தை வெகுவாக முன்னேற்றுவோம்னு நம்பறேன்! உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது, கிரண் உனக்கும்தான்!"
பிறகு மேரியும் அவளது மேலாண்மைக் குழுவினரும் நம் துப்பறியும் மூவரை நன்றியுடன் வழியனுப்பினர்!
(முற்றியது)
கதிரவன் எழில்மன்னன் |