ஆன்மிகப் பயணங்கள் சுயம்பிரகாச சுவாமிகள் தன் மீதான தாக்குதல்களையும், இடர்ப்பாடுகளையும் பற்றி அக்கறை கொள்ளாமல் ஆன்மிகப் பயணத்தைத் தொடர்ந்தார். முதலில் நெரூருக்குச் சென்றார். அவதூத சத்குரு பரம்பரையில் முக்கியமானவரான சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் அதிஷ்டானத்திற்குச் சென்று வழிபட்டார். பின் தஞ்சாவூர், கும்பகோணம், விருத்தாசலம், சிதம்பரம் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார். பின் திருவண்ணாமலைக்குச் சென்றார்.
பகவான் ரமணருடன்... திருவண்ணாமலையில் தவம் செய்து கொண்டிருந்த பகவான் ரமண மகரிஷியைத் தரிசித்து அவரது ஆசி பெற்றார். ரமண மகரிஷி, சுவாமிகளை 'வைராக்ய புருஷர்' என்று குறிப்பிட்டார். அங்கு மலையில் தனியாக அமர்ந்து தவம் செய்தார் சுயம்பிரகாச சுவாமிகள். பகவான் ரமணருடன் இணைந்து பிரம்மத்தில் லயித்திருந்தார். திருவண்ணாமலைச் சூழல் அவரது மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கேயே தங்கியிருந்து ஆழ்ந்த தவத்தில் ஈடுபட விரும்பினார். ஆனால் சுயம்பிரகாச சுவாமிகள் திருவண்ணாமலையில் இருப்பதை அறிந்த அவரது உறவினர்கள் அடிக்கடி அங்கு வந்து அவரைக் காண ஆரம்பித்தனர். அதனால் சுவாமிகளின் தவ வாழ்விற்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் சுவாமிகள், மனிதர்கள் சாதாரணமாக வர அஞ்சும் சேலம் மாவட்டத்தில் உள்ள 'கொல்லிமலை'க்குச் சென்று தவ வாழ்வைத் தொடர விரும்பினார். பகவான் ரமணரிடம் விடைபெற்றுச் சேலத்திற்குப் பயணப்பட்டார்.
சிறை சுவாமிகள் வழக்கம்போல் அவதூதராய்த் திருவண்ணாமலையிலிருந்து பயணத்தைத் தொடர்ந்தார். சுயம்பிரகாச சுவாமிகளின் புனிதத் தன்மையையோ, அவதூதர்களின் தன்மையையோ புரியாத சில மக்கள், சுவாமிகளைப் பற்றிக் காவல்துறையில் புகார் கூறினார். அதனால் பொது வாழ்விற்கு இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி சுவாமிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். சுவாமிகளின் பக்தராக இருந்த வழக்குரைஞர் ஒருவர் சுவாமிகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி, அவரது புனிதத் தன்மையையும், துறவின் பெருமையையும், அவதூதர்களின் தன்மையையும் நீதிபதிக்கு எடுத்துரைத்து சுவாமிகள் விடுதலை பெற உதவினார். இதன் பின் சுவாமிகள் சேலத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார். பின் கொல்லிமலைக்குப் புறப்பட்டார்.

கொல்லிமலையில்... சுயம்பிரகாச சுவாமிகள், மலை அடிவாரத்தில் உள்ள 'சேந்தமங்கலம்' என்ற கிராமத்தை அடைந்தார். அங்கு தனித்திருந்து தவம் செய்ய விரும்பி ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துத் தவ வாழ்வைத் தொடங்கினார். ஆனால், சுவாமிகள் பற்றி அறிந்த கிராம மக்கள் பெருந்திரளாக நாடி வந்து அவரை தரிசிக்கத் தொடங்கினர். அது சுவாமிகளின் தனித்த தவ வாழ்விற்குப் பெரும் இடையூறாக இருந்தது. அதனால் அப்பகுதியை விட்டு நீங்கி, அடர்ந்த காட்டுக்குள் சென்று தவம் செய்தார். ஆனால் அதற்கும் பிரச்சனை வந்தது. மலையில் வசிக்கும் ஒரு பெண் எங்கோ மாயமானாள். அவள் கொலைசெய்யப்பட்டதாகச் செய்தி பரவியது. சுயம்பிரகாச சுவாமிகள் தான் அவளை எதுவோ செய்து விட்டார் என நம்பிய மூடர் கூட்டம் ஒன்று சுவாமிகளைச் சந்தித்துக் கேள்வி எழுப்பியது. பதிலேதும் பேசாது மௌன குருவாய் வீற்றிருந்த சுவாமிகளைத் தாக்கிக் காயப்படுத்தியது. அங்கு வந்த அதிகாரி ஒருவர் மூலம் சுவாமிகள் காப்பாற்றப்பட்டார்.
அதனால் மனம் வருந்திய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரம் செட்டியார் உள்ளிட்ட பக்தர்கள், சுவாமிகளை அங்கிருந்து கிராமத்துக்கு வந்து வாழும்படிக் கேட்டுக் கொண்டனர். முதலில் வர மறுத்த சுவாமிகள் பின் ஒப்புக்கொண்டார். சேந்தமங்கலம் அருகே உள்ள 'சந்யாசி கரடு' மலையில் உள்ள சிறு குகையில் சுவாமிகள் தங்க ஏற்பாடு செய்தனர். சுவாமிகளின் தவ வாழ்க்கை அங்கு தொடர்ந்தது. சுவாமிகள் குகைக்குள் இருப்பார். அதே சமயம் பக்தர்கள் சிலருக்குக் காட்டுக்குள்ளும் காட்சி அளித்திருக்கிறார். ஒரே சமயத்தில் இரு இடங்களில் காட்சி அளித்த நிகழ்வுகளும் நடந்தன.
தவம் நாளடைவில் உணவு, தண்ணீர் இல்லாமல் நீண்ட தவத்தைச் சுவாமிகள் மேற்கொண்டார். சுவாமிகளின் கட்டளைப்படி குகை வாயில் பூட்டப்பட்டது. பல வாரங்கள் சுவாமிகள் அப்படிப்பட்ட தவத்தை மேற்கொண்டார். அச்செய்தி கிராம மக்கள் மூலமாக அரசாங்க அதிகாரிகள் சிலருக்குத் தெரிய வந்தது. சேலம் கலெக்டர், குகையில் மனிதனைப் பூட்டி வைப்பது சட்ட விரோதமென்றும் உடனடியாகத் திறக்கும்படியும் உத்தரவிட்டார். ஆனால், சுவாமிகளின் சீடர்கள், சுவாமிகளின் உத்தரவு இல்லாமல் பூட்டிய கதவைத் திறக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். அதனால் அவர்கள் கதவைத் திறக்கவில்லை.
அதனை அறிந்த அதிகாரிகள், சீடர்களின் எதிர்ப்பை மீறி, குகைக் கதவின் பூட்டை உடைத்துத் திறந்தனர். சுவாமிகளின் உடல் குகையின் கீழே ஓரிடத்தில், கை காலை நீட்டிய வண்ணம் விறைத்த நிலையில் இருந்தது. அதனைக் கண்டு அவர்கள் சுவாமிகள் இறந்துவிட்டார் என்று நினைத்து வெளியே தூக்கி வந்தனர்.
வெளியில் கொண்டு வந்து உடலைக் கிடத்தினர். உடன் சுவாமிகள் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுவதுபோல் எழுந்து நின்றார். சுவாமிகளின் மகிமையை அறிந்த அதிகாரிகளும், காவல் துறையினரும் அவரது காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு வேண்டினர். சுவாமிகளும் அவரை மன்னித்தார்.

தல யாத்திரை சில காலத்திற்குப் பின் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய விரும்பிய சுயம்பிரகாச சுவாமிகள், சீடர்களிடம் கூறிவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தார். வட இந்தியாவில் பெரும் மகானாக மக்களால் கருதப்பட்டு வழிபடப்பட்டார். அதே சமயம் சிலரால் சில இடங்களில், அவர் நிர்வாணமாக இருந்ததால், தாக்குதலுக்கும் உள்ளானார். சுவாமிகள் இரண்டையும் ஒன்றாகவே கருதி வாழ்ந்தார். காசி, ஹரித்வார், பத்ரிநாத், பிரயாகை, அயோத்தி, இமயமலை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தவம் செய்தார்.
சித்துக்கள் ஏற்கனவே தவத்தால் பல்வேறு சித்திகளைப் பெற்றிருந்த சுவாமிகள், இமயமலையில் தவம் செய்தபோது பல்வேறு சித்திகளைப் பெற்றார். ஒரே நேரத்தில் பலருக்குக் காட்சி தருவது, ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருப்பது, தண்ணீரில் நடப்பது, வானத்தில் பறப்பது, திடீரென மறைவது, பின் தோன்றுவது போன்ற பல அற்புதங்களைச் சுவாமிகள் செய்தார். அதனால் சுவாமிகள், அடியவர்களால் மாபெரும் சித்தபுருஷராகக் கருதப்பட்டுப் போற்றி வணங்கப்பட்டார்.
சுயம்பிரகாச சுவாமிகள் பத்ரிநாத்தில் தவத்தில் இருந்தபோது, ஒருநாள் தத்தாத்ரேயர் கனவில் தோன்றினார். தென்னிந்தியாவில் தமக்கு ஒரு கோயில் கட்டும்படி கேட்டுக் கொண்டார். தென்னிந்தியாவில் தத்தாரேயருக்கு அதுவரை எவ்வித கோயிலும் இல்லை. சுயம்பிரகாச சுவாமிகளும் கனவில் வந்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். பதினேழு வருடத் தல யாத்திரைக்குப் பின் சுவாமிகள் மீண்டும் சேந்தமங்கலத்திற்குப் புறப்பட்டார்.
(தொடரும்)
பா.சு. ரமணன் |