நந்தமிழ் நாட்டு கவிஞர் திலகமாகிய பாரதியாரை அறியாதார் யாரே? அவரது வாழ்க்கையின் நுட்பத்தை யறிந்தோர், அவருக்கும் போலீஸாருக்கும் உள்ள நெருங்கிய நட்பை அறியாமலிரார். அவர் போலீஸ்காரர்களின் நட்பைப் போற்றி தனது கற்பனா சக்தியின் கனிந்த பழங்களாகிய கவிதைகளில் ஓர் உன்னத ஸ்தானம் கொடுத்திருக்கிறார். என்றால், நம்மை, வலிந்து பொருள்கூறுவதாகக் கருதமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
கம்பன் சடையப்ப வள்ளலைப் போற்றிக் கெடுத்தான் என்பது எனது முடிவான கொள்கை. மிகவும் புகழ்ந்ததினால் இறந்து போன சடையப்ப வள்ளலுக்கோ, (சந்ததி இருந்தால்) பிறந்து, பிறந்து இறந்து கொண்டிருக்கும் அவர் சந்ததியாருக்கோ, தமிழ் நாட்டாருக்கோ பிரயோஜனம் என்ன? இதை எல்லாம் நன்கு ஆராய்ந்த, கம்பன் விழுந்த புகழ்ச்சிப் படுகுழியில் விழாது, ஓர் அற்புதமான வேலையைச் செய்து தமிழ்க் கவிதைக்கும் அவரது கெழுதகை நண்பர்களாகிய போலீஸாருக்கும் ஓர் அழியாப் புகழைத் தந்திருக்கிறார், நம் பாரதி.
வருங்காலத்திற்கு வேண்டப்படுவது யாது என்பதை யறிந்து அதற்காக அருங்காப்பியங்கள் செய்யுங் கவிஞன்தான் தீர்க்கதரிசி. சட்டமறுப்புப் போர் நமக்கு ஆறிய பழங் கஞ்சியாகிவிட்டது. அது பாரதியின் மனோவுலகில் எப்படி எப்படித் தோன்றிற்றோ?
அப்பொழுது வேண்டப்படும் சட்டத்தின் சலியாத வைரத் தூண்களாகிய போலீஸாருக்கு ஓர் அரிய அறவுரை எடுத்துரைப்பது மிக, மிக அற்புதமாக அமைந்து மிளிர்கிறது. என்னே அவரது விழுமிய நட்பு!
இச்சிறந்த கைங்கரியத்திற்கு அவர் எடுத்தாளும் கவிதைப் பகுதி அவரது அற்புத கவிதா சாதுரியத்தை திகழ்விக்கிறது என்றால் உயர்வு நவிற்சியல்ல. அது என்ன? "ஆத்திசூடி".
சாதாரண கல்விக்கே இளமையில் ஆரம்பிக்கவேண்டி யிருக்கிறதே; அதிலும் சட்ட புத்தகங்களின் சலியாத காப்பாளிகளான போலீஸ்காரர்களாக, திடீரென்று இருபதாவது வயதில், மாறிவிட முடியுமா? "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?" இவற்றை எல்லாம் தமது நுண்ணறிவால் நன்கு ஆராய்ந்து தமது அறிவுரைக்கு (அறவுரை என்றும் கூறலாம்) ஆத்திசூடியை எடுத்தாண்டது உலக வழக்கை எவ்வளவு கூர்ந்து கவனித்திருக்கிறார் என்பதை நன்கு விளக்குகிறது.
சுதந்திரப் போர் எப்படி நடக்குமென்று (மகாத்மா உள்பட) யார் கண்டார்கள்? அக்காலத்திலேயே நமது கவிஞர் திலகம், தமிழ் நாட்டுக்குப் புத்துயிர் தந்த பூமான், இப்போழுது போலீஸாருடன் இணை பிரியாது உலாவும் லாதி (தடிக்கம்பு), போலீஸாருக்கு வேண்டப்படும் இன்றியமையாத பொருள்களுள் ஒன்றென்பதைக் கண்டு "கோல்கைக் கொண்டு வாழ்" என்று எழுதியிருப்பது வியப்பினும் வியப்பே. இதுதான் அவர் முதலில் எடுத்துச் சொல்லும் வார்த்தை. பிறகு "நையப் புடை" என்று உரைப்பது போலீஸாரின் அத்தியந்த நண்பர் என்பதை பளிங்குபோல் எடுத்துக் காட்டுகிறது.
"நொந்தது சாகும்" என்பதில் பாரதியார் தமது தலை சிறந்த சித்தாந்தத்தை எடுத்து ஓதுகிறார் என்பதில் ஐயமில்லை. உலக அனுபவம் என்னே! என்னே! மேலும் இதில் தான் கர்மயோகிக்குண்டான, அடிப்படையான உண்மைப் பெருங்குணத்தை எடுத்து இசைக்கிறார். கர்மயோகி முக்கியமாக மனதைக் கட்டுப்படுத்த வேண்டும்; சஞ்சலத்துக்கு இடங் கொடுக்கலாகாது. செய்யும் தொழில்களில் மனதை இளகவிடக்கூடாது.
பாரதப் போரில் பார்த்தனுக்குப் பரந்தாமன் உபதேசித்த அருள்மொழி இதுவே. போலீஸார் இம்மொழிகளைப் பொன்னேபோல் போற்றி வருகிறார்கள் என்பதைக் கூறவும் வேண்டுமோ.
இனி நமது கவிச் சக்ரவர்த்தியாம் பாரதி, அவர்களுக்கு இயற்கையாக இருக்கவேண்டிய குணங்களைக் கூறுவது மிக்க மாண்புடையனவாக மிளிர்கின்றன. 1. தாழ்ந்து நடவேல் 2. ரௌத்திரம் பழகு 3. தன்மை இழவேல் 4. வெடிப்புறப் பேசு
இவற்றைப்பற்றி விரிவுரை நிகழ்த்தலாம். விரிவஞ்சி விடுத்தேன்.
இதற்கடுத்த பகுதியாக அவர் கூறுவதை "பொருள் இயல்" என்று வகுக்கலாம். உலகத்தில மாந்தருக்கு அதிலும் போலீஸாருக்கு வேண்டப்படுவது யாது? பொருள். "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை" என்று கற்றுணர்ந்த பெரியார் கூறவில்லையா? 'கிம்பளம்' வசூலிக்கும் முறையை சூக்ஷ்மமாக தொகுத்த தன்மை "அர்த்த சாஸ்திரம்" எழுதிய விஷ்ணு குப்தனையும் மேல்நாட்டு மாக்கிவல்லியையும் (Machiavelli] தோற்கடித்து விடுகிறது என்று கூறவும் வேண்டுமோ? எழுதிப் பயனில்லை. மூலத்தைப் படித்தே இன்புறவேண்டும். 1. பணத்தினைப் பெருக்கு. 2. பெரிதினும் பெரிது கேள் 3. கவ்வியதை விடேல்
இவை யாவற்றிற்கும் சிகரமான தத்துவம், 4. (பிறர்) துன்பம் மறந்திடு என்று கூறுவதே. இவ்வளவு சூக்ஷ்மார்த்தங்களும் மலிந்து கிடக்க இசைத்துக்கொண்டு போவது, பழைய 'ஆத்திசூடி'க் கிழவியை வென்றுவிடுகிறது என்று கூறவும் வேண்டுமோ.
"பாயும் கடிநாய்ப் பொலீசு" என்று இவர் எழுதுவது முரண்பாடன்றோ என்று சிலர் ஆட்சேபிக்கலாம். முரண்பாடொன்றுமில்லை. ஸ்ரீராமபிரானை "இக்கரியன்" என்று விசுவாமித்திரர் கூறுவதாக கம்பன் பாடவில்லையா? எல்லாம் அன்பின் மிகுதி.
இவ்வாராய்ச்சியை ஊன்றிப்படித்த நண்பர்கள் "இவ்வறிவுரை யெல்லாம் நீர் கூறியமாதிரி வரவில்லையே" என்று வினா எழுப்பலாம். அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை.
(நன்றி: காந்தி இதழ்)
அரவிந்த் |