சுவடியியல் வளர்ச்சிக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் மோ.கோ. கோவைமணி. ஜூன் 03, 1963-ல், திருவள்ளூர் மாவட்டத்தின் பொதட்டூர்ப்பேட்டையில், மோ.கு. கோதண்ட முதலியார் – தெய்வானையம்மாள் இணையருக்குப் பிறந்தார். கோபால் என்பது இயற்பெயர். பொதட்டூர்ப்பேட்டை அரசினர் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்படும்போது, ஆழ்வார் பாடல்களில் ஈடுபாடு கொண்ட, பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய தந்தையால் 'கோவைமணி' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார். உயர்நிலை, மேல்நிலைக் கல்விக்குப் பின், சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று வேதியியலில் இளநிலை பட்டம் பெற்றார். தொடர்ந்து தமிழார்வத்தால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். 'அமுதபாரதியின் கவிதைகள் - ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டம் பெற்றார். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறையில், 'நாடி மருத்துவம்' குறித்து ஆய்வு செய்து பட்டயம் பெற்றார். திருவாவடுதுறை ஆதினத்தின் மூலம் 'சித்தாந்த இரத்தினம்' பட்டயமும், தமிழ்ப் பல்கலைக்கழக கணிப்பொறி அறிவியல் துறையின் மூலம் அடிப்படை கணிப்பொறி அறிவியல் பட்டயமும் பெற்றார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், 'பருவ இதழ்களில் சுவடிப் பதிப்புகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

இந்த ஆய்வேடு 1897 முதல் இதழ்களில் வெளிவந்த 867 சுவடிப் பதிப்புகளைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. அம்முனைவர் பட்ட ஆய்வுப்பணியே கோவைமணி வாழ்வின் திருப்புமுனை ஆனது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ஓலைச்சுவடித்துறையில் திட்ட உதவியாளராuகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிப் பின் இணைப் பேராசிரியராக உயர்ந்தார். பேராசிரியராகவும், ஓலைச்சுவடிகள் துறையின் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆகவும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராகவும் பணிபுரிந்தார். லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் (EAP Project Co-ordinator, Digitization, Cataloguing and Preservation of Palmleaf Manuscripts) பொறுப்பேற்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை மின்பதிவாக்கம் செய்தார். அந்த ஓலைச்சுவடிகள் லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் அவற்றைப் பார்க்க, பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்யும் வகையில் அவை இணையதளத்தில் கிடைக்கின்றன.

இவற்றோடு கோவை மணியின் சுவடியியல் பணிகள் முடிந்துவிடவில்லை. ஆய்வு மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் இரண்டு மணி நேரத்தில் தமிழ் ஓலைச்சுவடியை எளிதில் படிக்கவைக்கும் எளிய முறைப் பயிற்சியை அறிமுகம் செய்து, நாடெங்கும் சென்று நடத்தினார். பல நூற்றுக் கணக்கானவர்களுக்கு சுவடியியல் பதிப்புப் பயிற்சிகளை அளித்துள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குச் சுவடியியல் சான்றிதழ் மற்றும் பட்டயத்திற்காக ஐந்து நூல்களையும், இலங்கை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்குத் தமிழ் ஓலைச்சுவடியியல் அறிமுகமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்காகத் தமிழ் இளநிலை, முதுநிலைக்கு நான்கு நூல்களையும் எழுதியுள்ளார். கவிதை, ஆய்வு, சுவடியியல் எனப் பல்துறை நூல்களை எழுதிப் பதிப்பித்தார். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம், நாவல், பயணக்கட்டுரை எனப் பல்துறைகளில் கிட்டத்தட்ட நூறு நூல்களை எழுதியுள்ளார். கதைப் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், சமய, ஆன்மிக நூல்கள் எனப் பலவற்றை ஓலைச்சுவடியிலிருந்து நூல்களாகப் பதிப்பித்துள்ளார்.
விருதுகள் கோவை மணியின் 'ஓலைச்சுவடியியல்' நூலுக்குத் தமிழக அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் 2013ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசு கிடைத்தது. உலகத் திருக்குறள் உயராய்வு மையம் திருக்குறள் விருது அளித்தது. திருவையாறு தமிழைய்யா கல்விக் கழகம் மற்றும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் அளித்த சுவடிச் செம்மல் பட்டம். சிலம்பொலிச் செம்மல் பட்டம், முத்தமிழ்ச் சுடர் விருது, பாவலர் மணி விருது, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் 'தமிழ் விக்கி தூரன் விருது' உள்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
சுவடியியல், கணினியியல் உள்ளிட்ட பல துறைகளில் 300-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். சுவடியியல் தொடர்பாக மலேசிய வானொலியிலும், சென்னைத் தொலைக்காட்சியிலும் உரையாற்றியுள்ளார். மாநில, தேசிய மற்றும் உலக அளவில் சுவடியியல் தொடர்பாகப் பல மாநாடுகளை, கருத்தரங்குகளை நடத்தியுள்ளார். சுவடியியல் சார்ந்து இணையத்தில் பல நேரலை நிகழ்வுகளை நிகழ்த்தியிருக்கிறார். திருக்குறள் பதிப்பின் 200-ம் ஆண்டு ஆய்வு தேசியக் கருத்தரங்கம் மற்றும் மாநாட்டின் இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். அனைத்துலக முருக இலக்கிய மாநாடு மற்றும் கருத்தரங்கின் இயக்குநராகப் பணிபுரிந்தார்.

அனைத்துலக பாரதியார் நூற்றாண்டு நினைவு மாநாடு மற்றும் கருத்தரங்கின் இயக்குநராகப் பணியாற்றினார். பல்கலைக்கழக மானியக்குழு, தமிழக அரசு, தமிழ்ப் பல்கலைக்கழக நிதியில் பல ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டார். 'அப்பச்சிமார் காவியம்', 'கலியுகப் பெருங்காவியம்' போன்ற பல சுவடிகளின் ஆய்வுப் பதிப்புப் பணியை ஒருங்கிணைத்தார். தமிழகமெங்கும் களப்பணி மேற்கொண்டு ஓலைச்சுவடிகளைத் திரட்டி மின்பதிவாக்கம் செய்தது கோவைமணி ஆற்றிய பணிகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று. தமிழ் மட்டுமல்லாது சம்ஸ்கிருதச் சுவடிகளையும் சேகரித்துள்ளார்.
கோவைமணியின் நூல்கள் தமிழ்ச் சுவடிகளில் எழுத்தமைதி, புறநானூறு உணர்த்தும் வாகைத்திணை, தமிழ்ச் சுவடிப்பதிப்பு வரலாற்றில் இதழ்களின் பங்கு, தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடிகள் அட்டவணை, தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணைகள் - தொகுதி 6 முதல் 10 வரை, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமி ஆய்வு மாலை - இரண்டு தொகுதிகள், குமரகுருபரர் ஆய்வு மாலை - மூன்று தொகுதிகள், தமிழ்க்கடவுள் முருகன் ஆய்வு மாலை - இரண்டு தொகுதிகள், திருக்குறள் ஆய்வுமாலை, இந்தியக் காலவியல், மகாகவி பாரதியார் ஆய்வுக்கோவை, முருகன் இலக்கிய ஆய்வுக்கோவை - இரண்டு தொகுதிகள், செவ்வியல் தமிழ்ச் சுவடிகள், உயர்வுள்ளல் - தமிழியல் கட்டுரைகள், சுவடியியல், நாடி மருத்துவம், சித்த மருத்துவத்தில் நாடி, தமிழும் விசைப்பலகையும், பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு, பருவ இதழ்களில் சுவடிப் பதிப்புகள், செவ்வியல் தமிழ்ச்சுவடிகள், தமிழில் கதைப்பாடல் சுவடிகள், உதயத்தூர் புலைமாடத்தி வரத்து, கதைப்பாடல்கள் மூன்று, இதழ்ப் பதிப்பு நூல்கள், ஓலைச்சுவடியியல், பதிப்புலகத் தூண்கள், இதழ்ப் பதிப்பு வரலாற்றில் இதழ்கள் மற்றும் பல.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நீரகழாய்வு மையத்துப் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார். ஓலைச்சுவடித் துறையின் பாடத்திட்டக்குழு உறுப்பினர் மற்றும் கூட்டுநர் ஆகப் பணியாற்றியுள்ளார். பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை தொடங்கி பல்வேறு பல்கலைகளில் புறநிலைத் தேர்வாளராகப் பணியாற்றியுள்ளார். 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகச் செயல்பட்டுள்ளார்.

தமிழின் முதன்மைச் சுவடியியல் துறை ஆய்வாளராகவும், பதிப்பாளராகவும், பயிற்சியாளராகவும் அறியப்படும் கோவைமணி, தனது 'kovaimani-tamilmanuscriptology.blogspot.com' என்ற வலைத்தளத்தில் தொடர்ந்து பழந்தமிழ் நூல்கள் பற்றியும், சுவடிகள் பற்றியும், பதிப்பு வரலாறு பற்றியும் எழுதி வருகிறார். இவை தொடர்பான பல்வேறு நூல்களை அமேசான் கிண்டிலில் வெளியிட்டுள்ளார். பல்வேறு வலைத்தளங்களைத் தொடங்கி கவிதை, கட்டுரை, நாவல் பற்றி எழுதி வருகிறார். கோவைமணியின் மனைவி, சாந்தி. மகள்கள்: பாரதி, தேன்மொழி.
கோவைமணியின் வலைத்தளங்கள் கோவைக் குறள், கோவைத் துளிர் (மரபுக்கவிதை), கோவைக் கவி, கோவைத் தளிர் (புதுக்கவிதை) , தமிழ்ச்சுவடியியல், கோவைப் பொழில் (நாவல்) , கோவைச் சூடி, கோவை ஊற்று, கோவைக் கனி, கோவைத் தூறல் (சிறுகதை), கோவைச் சாரல் (கவிக்கதை), கோவை வெண்பா
அரவிந்த் |