ஜார்ஜியா ரிபப்ளிகன் பிரதிநிதி மார்ஜரி டேய்லர் கிரீன் 2026 ஜனவரியில் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. அவரது பதவிக்காலம் நவம்பரில்தான் முடிவடைகிறது. தமது பதவி விலகலுக்கு அவர் கூறியுள்ள காரணங்கள் அநேகமாக எல்லா அமெரிக்கர்களின் நெஞ்சிலும் எதிரொலிப்பவைதாம்: பெருஞ்செல்வந்தர்கள், கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக அரசு கொள்கை முடிவுகளை எடுப்பது, 'America First' என்பது வெறும் கோஷமாகவே இருப்பது, உள்நாட்டுப் பிரச்சனைகளை அசட்டை செய்து வெளிநாட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்க ஓடுவது, அரசின் 'shut-down' காலத்தில் அதைத் தீர்க்க எந்த முயற்சியும் எடுக்காதது, விஷம்போல ஏறும் தேசியக் கடன், கட்டுப்படாத விலைவாசி ஏற்றம், சராசரி மனிதனுக்கு எட்டாத உயரத்துக்குப் போய்விட்ட மருத்துவச் செலவு, வன்முறைக்கு ஆட்படும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்காமை என்று நீள்கிறது பட்டியல். “சுயமரியாதை, கௌரவம்” என்கிற ஆதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் அவர் பதவி விலகுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இவற்றை உணர்ந்தும், தைரியமில்லாத அல்லது நாற்காலி ஆசையில் பலர் இன்னும் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கக் கூடும். மார்ஜரி டேய்லரின் முன்னுதாரணம் அவர்களுக்கும் துணிச்சல் ஊட்டினால் நாட்டுக்கு நல்லது.
★★★★★
பிஹாரின் 25 மாவட்டங்களின் வழியே 1000 கி.மீ. பாத யாத்திரை சென்றார் ராகுல் காந்தி. அவர் சென்ற எந்த இடத்திலும் அவரது INDI கூட்டணி வெற்றி பெறவில்லை. ஒருவரது தலைமையில் 90 சதவிகிதத்துக்கு மேல் தேர்தல்களில் தோற்றிருக்கிறார் என்றால் அது இந்தக் காங்கிரஸ் தலைவருக்கே உரித்தான சாதனை. அதிலும் பொதுவாகப் பாத யாத்திரைகள் இந்த அளவுக்கு ஒருபோதும் வீணாகப் போனதில்லை. தோற்றவுடன் 'ஓட்டுத் திருட்டு', 'வாக்கு மின்சாதனக் கோளாறு' என்றெல்லாம் பிதற்றுவதையும் யாரும் ஏற்கவில்லை. ஜாதிவாத அரசியல், பின்தங்கிய மாநிலம் என்ற பட்டங்களை உதறித் தள்ளிவிட்டு, நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது பிஹார்.
★★★★★
கற்பித்தும், ஆராய்ந்தும் நூல்கள் படைத்தும் தமிழ்ச் சுவடியியல் வளர்ச்சிக்கு இணையற்ற பங்களித்துள்ள முனைவர் மோ.கோ. கோவைமணி அவர்கள் குறித்த 'சிறப்புப் பார்வை' சிறப்பானது. ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் அவர்களின் தெய்விக வாழ்க்கைக் கட்டுரை தொடர்கிறது. 'பாரதியாரும் போலீசாரும்' என்ற கட்டுரையில் புதுமைப்பித்தனின் நக்கலை நிச்சயம் ரசிக்கலாம். கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை தவிர மற்றொரு அழகான கதையும் உண்டு. வாசிக்க வாருங்கள்...
வாசகர்களுக்குத் திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!
தென்றல் டிசம்பர் 2025 |