ஆகஸ்ட் 17, 2025 அன்று அல் லார்சன் ப்ரெய்ரி கலை மையத்தில் (ஷோம்பர்க், இல்லினாய்) சரயு கார்த்திகேயனின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை விவரிக்க வார்த்தைகள் போதா. போற்றத்தக்கது, சிறந்தது, தனித்துவமானது போன்ற சொற்கள் அந்த மேடையில் நடந்ததைப் படம்பிடிக்கப் போதுமானவை அல்ல.
நிகழ்ச்சி தொடங்கச் சில நிமிடங்கள் முன்வரை, "ஏன் இவ்வளவு இளவயதில் அரங்கேற முயல்கிறார்? இதை ஆசிரியர் எப்படி ஒப்புக்கொண்டார்?" என்று வியந்தேன். அந்தச் சந்தேகங்கள் கரையச் சில நிமிடங்களே ஆயின. குரு திருமதி ஷோபா நடராஜன் நிர்ணயித்த உயர்ந்த தரம் தெளிவாகத் தெரிந்தது.
மிருதுவான, அழகான புஷ்பாஞ்சலியுடன் தொடங்கி, கணபதி தாளமாகத் தடையின்றி மாறியது. அப்போதிருந்து, 'ஷடாக்ஷர கௌத்துவம்', 'தேவி ஸ்துதி' போன்ற பாடல்களில் நிகழ்ச்சி களை கட்டியது. சரயு துல்லியமான முத்திரைகள், சுத்தமான அடவுகள் மூலம் தனது கலை மேலாண்மையை வெளிப்படுத்தினார்.
பின்னர் அரங்கேற்றத்தின் மையப்பகுதியான வர்ணம் "சுவாமி நான் உந்தன் அடிமை” வந்தது. சரயுவின் பக்திரசச் சித்திரிப்பு இயல்பாக, நேர்த்தியாக இருந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட நிமிடங்களில் சிக்கலான ஜாதிகளுக்கும், ஈர்ப்பான அபிநயத்திற்கும் நடுவே தடையற்ற மாற்றங்கள் அவரது வயதைத் தாண்டிய முதிர்ச்சியை நிரூபித்தன.
இரண்டாவது பகுதி "பிருந்தாவனடோலு”வுடன் தொடங்கியது. இதை பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அருமையாக அமைத்திருந்தார் குரு ஷோபா. ஒரு நட்டுவனாராக அவரது நிபுணத்துவத்தை ஒவ்வொரு பாடலும் தெளிவாகப் பிரதிபலித்தது. தொடர்ந்தது ஓர் அபங்கம். அது தனித்துவமான அனுபவமாக ஒட்டுமொத்தப் பார்வையாளர்களுக்கும் அமைந்தது. இரண்டு நிமிடங்களுக்கு மேலாக உற்சாகத்துடன் கைதட்டினர்.
பின்னர் குரு ஷோபா இசையமைத்த 'ஸ்ரீ ராமச்சந்திரா' ஐந்து ராகங்களின் ராகமாலிகாவாக அமைந்திருந்தது. சீதா சுயம்வர அபிநயம் மயக்குவதாக இருந்தது. ராவணன், ராமன், சீதை ஆகிய சித்திரிப்புகள் தத்ரூபம். கலைஞர் அத்தனை இளையவர் என்று நம்புவது கடினம். விறுவிறுப்பான 'தனஸ்ரீ தில்லானா'வுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
நிருத்தம், அபிநயம் ஆகிய இரண்டிலும் சரயுவின் தேர்ச்சி, கலையின் மீதான அவர் கொண்ட அர்ப்பணிப்புக்கு இணையாக உள்ளது.
நடனத்தில் சித்திரிக்கப்பட்ட ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஏற்பப் பின்னணித் திரையில் பொருத்தமான வடிவங்களைப் பயன்படுத்தியது அருமை. குரு ஷோபா நடராஜன் (நட்டுவாங்கம்), திருவாரூர் எஸ். கிரீஷ் மற்றும் வி.கே.அருண்குமார் (குரலிசை), ரமேஷ் பாபு (மிருதங்கம்), கார்த்திக் ஐயர் (வயலின்), ராமன் கல்யாண் (புல்லாங்குழல்) பக்கம் வாசித்தனர்.
(சந்திரசேகர் கோடெட்டி, சிகாகோவில் ஒரு முன்னணி வங்கியில் வணிக ஆய்வாளர். இந்திய பாரம்பரியக் கலைகளின் ஆர்வலர். தற்போது பரதநாட்டியம், கர்நாடக இசை மற்றும் நட்டுவாங்கம் ஆகியவற்றில் பயிற்சி பெற்று வருகிறார்.
சந்திரசேகர் கோடெட்டி |