ஆகஸ்ட் 9, 2025 அன்று, 'சம்ஸ்கிருதி அறக்கட்டளை' மாணவியான மஹதி கந்துகூரியின் பரதநாட்டிய அரங்கேற்றம் பிளிஸர்ட் அரங்கத்தில் (எல்ஜின் சமுதாயக் கல்லூரி, இல்லினாய்) சிறப்பாக நடந்தேறியது.
முதலில், தேவகாந்தாரியில் தியாகராஜ சுவாமியின் "க்ஷீர சாகர சயனா” பாடலில், ராவணன் சீதாதேவியைக் கடத்தப்பட்ட நிகழ்வைத் தத்ரூபமாக மஹதி சித்திரித்தார். பாகவதம் மற்றும் ராமாயண நிகழ்வுகள் உட்பட விஷ்ணுவின் பல்வேறு லீலைகளை இந்தக் கிருதி கோடிட்டுக் காட்டுகிறது. ஒவ்வொரு சம்பவத்திலும் தீவிர பக்தி, துக்கம் எதுவாக இருந்தாலும், அந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு சவாலாகும். இருப்பினும், கிருதிக்குத் தேவையான பாவங்களை மஹதி அற்புதமாக வழங்கினார். ஒவ்வொரு கதையும் மேடையில் நிகழ்வதைப் பார்த்து ரசிக்க முடிந்தது.
திருவாரூர் எஸ். கிரீஷ் மற்றும் இசைக்குழுவினர் அழகாகப் பாடிய ஆண்டாள் கௌத்துவத்தில் வெளிப்பட்ட ஆன்மீக ஐக்கியத்துக்கான பக்தியையும் ஏக்கத்தையும் குறிப்பாக ரசித்தேன். "ரூபமு ஜூச்சி”யில் மஹதி ஆடல்கலை நுட்பத் திறனைக் காண்பித்தார். திருவாரூர் தியாகராஜரைக் கோபப்பட வேண்டாம் என்று பக்தர் விண்ணப்பம் செய்யும் "கோபமு சேதுரா சாமி இன்டா” வர்ணத்தில் ஆழ்ந்த பக்தியின் மற்றொரு தருணத்தை மஹதி அற்புதமாக வெளிப்படுத்தினார்.
பின்னர் வந்த "ஆடினாயே கண்ணா” குறும்புத்தனத்தை அடிநாதமாகக் கொண்டது. இதுவோர் உணர்ச்சிகரமான திருப்புமுனை ஆகி, காவடிச் சிந்துக்கு வழிவகுத்தது. மஹதி காவடியைச் சுமந்து, பாட்டின் தாளம் மற்றும் உணர்ச்சியைக் கருத்தில் கொண்டு நேர்த்தியாக ஆடினார். மாண்டு ராகத்தில் லால்குடி ஜெயராமன் தில்லானாவை மறக்கமுடியாது. அரங்கேற்றத்திற்குத் துடிப்பான நிறைவாக அமைந்தது.
குரு திருமதி ஷோபா நடராஜனின் புதுமையான நடன அமைப்பு மற்றும் விவரங்களில் தீவிர கவனம் நிகழ்ச்சியை உயர்த்தியது. அவரது ஆழ்ந்த அறிவும், உள்ளார்ந்த இசை உணர்வும் மஹதிக்கு அவரது கலைநுட்பத்தைவெளிப்படுத்த உதவின. ஷோபா நடராஜன் (நட்டுவாங்கம்), திருவாரூர் எஸ். கிரீஷ் (குரலிசை), கார்த்திக் ஐயர் (வயலின்), ஸ்ரீகிருஷ்ண பசுமர்த்தி (புல்லாங்குழல்), ரமேஷ் பாபு (மிருதங்கம்) ஆகியோர் இசைவான பின்னணியை அளித்தனர்.
இஷான் பய்யன்பிரகடா (திரு இஷான் கர்நாடக வயலின் கலைஞர் மற்றும் பாடகர். வித்வான் அபிஷேக் பாலகிருஷ்ணனின் சீடர். அவர் தற்போது இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் கற்கிறார்.) |