சின்ன அண்ணாமலை நேர்காணல்
கே: தாங்கள் அரசியலில் ஈடுபட்டு எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?
ப: சுமார் இருபதாண்டுகள் ஆகின்றன.

கே: தங்கள் அரசியல் வாழ்விலே குறிப்பிடத்தக்க அனுபவங்கள் எவை?
ப: 1942-ல் தேவகோட்டையில் நடைபெற்ற புரட்சியில் கைதாகி, திருவாடானை ஜெயிலிலிருந்து பொதுமக்களால் விடுதலை செய்யப்பட்டேன்.

கே: நீங்கள் எழுத்தாளரானது எப்படி? அந்தத் துறையில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் ஏதாவது உண்டா?
ப: துண்டுப் பிரசுரங்கள் எழுதுவதின் மூலம் எழுத்தாளனானேன் என்று சொல்லலாம். ஒரு சிறு அரசியல் நூல் எழுதியற்காக ஆங்கில அரசாங்கம் என்னை மூன்று மாதம் சிறைக்குக்கூட அனுப்பியது. எழுத்தில் உள்ள ஆர்வத்தில் புத்தக வெளியீட்டு நிலையம் ஒன்று ஆரம்பித்தேன். இதுவரை சுமார் 125 தமிழ்ப் புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறேன். இதில் நானே எழுதியவை இரண்டு.

கே: திரைப்பட உலகில் தங்கள் அனுபவம் என்ன?
ப: புதிதாகப் புகுந்திருக்கிறேன். 'தங்கமலை ரகசியம்’ என்ற என்னுடைய கதையை பத்மினி பிக்ஸர்ஸார் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதையே 'ரத்தினகிரி ரகஸ்யா' என்று கன்னடத்திலும் எடுத்து வருகிறார்கள்

கே: 'முற்போக்கு இலக்கியம்' பற்றிய தங்களுடைய கருத்து என்ன?
ப: தமிழ் இலக்கியம் வெகு காலத்திற்கு முன்னே ’முற்போக்கு இலக்கியம்' என்று அறிஞர்கள் பலரால் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது. இன்று வெளிவரும் புதுமை இலக்கியங்கள் அவைகளைவிட முற்போக்குத் தன்மை வாய்ந்ததாக இல்லை. நமது முன்னோர்கள் செய்து வைத்தவைகளே நமக்கு இன்றும் பெருமை அளித்துக் கொண்டிருக்கின்றன.

கே: புத்தக வெளியீட்டாளர் என்ற உறவில், இன்னும் மிகுதியான அளவில் தமிழில் புத்தகங்கள் வெளிவரத் தங்களுடைய யோசனைகள் யாவை?
ப: முதலில் தமிழ் அரசு மொழியாக வேண்டும். தமிழ் மக்கள் எல்லோரும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக மாறவேண்டும். எழுத்தாளர்களுக்குப் போதிய ஊதியம் கிடைக்கவேண்டும். காகிதம், அச்சுக்களின் செலவு நிரம்பவும் குறைய வேண்டும். புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டுமென்ற ஆசை தமிழ் மக்கள் உள்ளத்தில் வளர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் மிகுதியான அளவில் புத்தகங்கள் வெளிவர முடியும்.

கே: தமிழுக்குக் கெடுதல் வராமல் இருக்கவேண்டுமானால், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றிற்கு கல்வியமைப்பில் - ஆட்சித் தகுதியில் எத்தகைய இடம் அளிக்கப்பட வேண்டும்?
ப: ஆங்கிலம் பொதுமொழியாக இருந்தால்தான், வடநாடு, தென்னாடு என்ற பேதம் மறையும். ஆகவே ஆங்கிலத்திற்கு இரண்டாவது இடமும், இந்திக்கு மூன்றாவது இடமும் தமிழ் நாட்டில் கல்வி அமைப்பில் கொடுக்கலாம்.

மத்திய அரசாங்க விஷயங்களில் இந்தி நுழைவதைவிட ஆங்கிலமே பொது மொழியாகி மாகாண அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளுவதே தமிழுக்குக் கெடுதல் வராத வழியாகும். இந்தியைப் படித்துக் கொள்ளுவது தவறல்ல. அதனால் நன்மையே. ஆனால் நாளடைவில் அது தமிழுக்குப் போட்டியாக மாறிவிடாமல், முன் எச்சரிக்கையுடன் தமிழன் இருப்பது சரியே.

கே: தாங்கள் மேடைப் பேச்சாளரான விவரத்தை அறிய ஆவல்.
ப: சுதந்திரத்தின் மீதுள்ள ஆசையே என்னை மேடைப் பேச்சாளனாக ஆக்கியது. 'கல்கி'யின் எழுத்தே என்னை ஹாஸ்யமும் கதையும் கலந்து சொல்லும் சொற்பொழிவாளனாக்கியது.

கே: நம் எழுத்தாளர்களைத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளத் தாங்கள் சொல்லும் வழிகள் என்னென்ன...?
ப: தமிழ்த் திரைப்படத்திற்குக் கதை தயாரிப்பது என்பது நம் எழுத்தாளர்களுக்குக் கடினமானதல்ல. அதில் பலர் புகுந்து முயற்சி செய்வதில்லை. நல்ல கதையாக இருந்தால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் உடனே வாங்கிக் கொள்ளுவார்கள். சுமார் மூன்று மணி நேரம் ஓடக்கூடிய கதையாக நம் எழுத்தாளர்கள் எழுத முயற்சி செய்தால் வெற்றியடைய முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

கே: தாங்கள் விரும்பும் அரசியல் தலைவர் யார்?
ப: காந்தியடிகளுக்குப் பிறகு நான் விரும்பும் ஒரே அரசியல் தலைவர் ம.பொ.சி. தான்.

கே: பத்திரிகைத் தொழில் பொதுச் சேவையா? சொந்தச் சேவையா? .
ப: சந்தேகமென்ன? பொதுச் சேவைதான்.

கே: தங்களுடைய எதிர்காலத் திட்டங்கள் யாவை?
ப: சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தமிழக மக்கள் தங்கள் உரிமைகளை அடைய வேண்டும். பட்டினி என்ற பேச்சே இல்லாமல், எல்லா மக்களும் சம அந்தஸ்து பெற்று, ஓலைக் குடிசைகளெல்லாம் ஓட்டு வீடுகளாகி - எங்கும் செழிப்பமாகிச் - இல்லந்தோறும் மகிழ்ச்சி உண்டாக உழைப்பேன். தமிழ் நாட்டில் தமிழரசு காண உழைப்பேன். தமிழன் தலை நிமிர்ந்து நடக்கத் தக்க காரியங்கள் செய்யும் தலைவர்களுக்கு நான் மிகவும் உதவியாக இருப்பேன்.

(நன்றி உமா இதழ், டிசம்பர், 1956, தமிழ் மின் நூலகம் தளம்)

நேர்கண்டவர்: பூவை.எஸ். ஆறுமுகம்

© TamilOnline.com