குவான்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-14)
முன்கதை: சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்போர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

இதுவரை: ஷாலினிக்குப் பரிச்சயமான பெண்மணி மேரி தன் குவான்டம் ஒளிக் கணினி (Quantum optical computer) தொழில்நுட்ப நிறுவனம் திடீரென ஒரு பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி, கிரண், சூர்யா மூவரும் பெர்க்கலி, கலிஃபோர்னியாவில் உள்ள மேரியின் ஆராய்ச்சிக் கூடத்துக்கு விரைகின்றனர். மேரி குவான்டம் கணினி எப்படி வேலை செய்கிறது, அதன் இடையூறுகள் என்னென்ன, அவற்றைத் தங்கள் தனிச்சிறப்பு நுட்பங்களால் எப்படி நிவர்த்தித்தனர் என்று விவரித்தாள். ஆனால் நுட்பங்களை நன்கு அறிந்த உள்நபர் உதவியால் நுட்ப வன்பொருட்கள் திருடப் பட்டன என்றாள். குவான்டம் கணினியின் குழப்பத்தை சூர்யா எப்படி நிவர்த்திக்கிறார் என்பதை மேலே பார்ப்போம் வாருங்கள்!

★★★★★


குவான்டம் கலையலால் (decoherence) உயர்வு போய், சிலமுறை குறைவாகிவிட வாய்ப்புள்ளதாக மேரி கூறிவிட்டு, தங்கள் நுட்பத்தின் தனிச்சிறப்புக்களில் ஒன்று மிக தனித்துவமுள்ள அபூர்வ மண் கலவையால் க்யூபிட்கள் உருவாக்குவதால் கலையல் குறைவதாகவும் கணினிக்குள்ளேயே வயலட் நிற லேஸர் கதிரை மிகக்குறைந்த சக்தியில் மிக அதிக வேகத்தில் தகவல் துளிகளை நகர்த்துவது மற்றொரு தனிச்சிறப்பு என்றும் கூறினார் மேரி. கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தனிச்சிறப்பு நுட்பங்கள் ஏன் சரியாகப் பலனளிக்கவில்லை என்று நிறுவன நுட்ப நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருந்த போது முந்தைய தினம் திடீரென திருட்டு நடந்து விட்டதால் ஷாலினிக்கு அவசரச் செய்தியனுப்பியதாகவும் விளக்கினாள்.

ஆராய்ச்சிக் கூடத்தின் வெளியேறும் அபாய வாயிலின் மணியை உள்நபர் யாரோ ஒலிக்காதபடி மாற்றியிருக்க வேண்டும் என்று நிரூபித்த சூர்யா, பாதுகாப்புத் தலைவரான லூயிஸ் ஹெர்ரேராவுக்கு விளாயாட்டுப் போட்டிகள்மேல் பணயம் வைக்கும் பழக்கம் இருந்ததை யூகித்தார். அதில் அவர் நஷ்டப்பட்டிருந்தால் சந்தேகப் பட்டியலில் மேல் இடத்தில் அவர் இடம்பெறுவார் என்று கூறிவிட்டு அடுத்த மேலாளரைச் சந்திக்க வேண்டும் என்று மேரியிடம் கேட்டுக் கொண்டார்.

லூயிஸ் மேல் சூர்யா சாற்றிய குற்றச்சாட்டினால் அதிர்ந்து போன மேரி தடுமாற்றத்துடன், "அ...அ... ஓகே, அடுத்து நீங்கள் ஹென்றி லாவைச் சந்திக்கலாம். அவர்தான் க்யூபிட் நுட்பத் தலைவர். அடுத்த அலுவல் அறையில் இருக்கிறார்" என்று கூறியவள் அடுத்த அறையின் கதவைத் தட்டி, ஹென்றி அனுமதிக்க, கதவைத் திறந்து நுழைந்தாள்.

நம் துப்பறியும் குழு மேரியுடன் ஹென்றி லாவின் அறையில் நுழைந்தனர். மேரி அவர்களை ஹென்றிக்கு அறிமுகம் செய்தாள். அவரும் வேண்டா வெறுப்பாக வரவேற்றார். "இந்தத் திருட்டு விஷயம் ரொம்ப மோசமான அசம்பாவிதம். காவல் துறைக்குச் சீக்கிரமே சொல்லி அனுப்பணும்னுதான் நான் மேரியிடம் சொன்னேன். ஆனா அவங்க உங்களை வரவழைச்சிருக்காங்க. நீங்க சீக்கிரமே நிவர்த்திப்பீங்கன்னு நம்பறேன்."

சூர்யா பதிலுக்கு ஓர் அதிர்வேட்டு வீசினார். "உங்க இசை ஆர்வத்தை நான் மெச்சறேன். அதுவும் பல நூறாயிரம் விலை மதிப்புள்ள ஒரு ஸ்ட்ரேடிவேரியஸ் வயலினை வாங்க முயற்சிக்கறீங்களே! பிரமாதம்!"

ஹென்றி அசந்தே போனார். வியப்பும், வெறுப்பும், கோபமும் அவர் முகத்தில் மாறி மாறிக் கலந்து விளையாடின. சில நொடிகள் பேச முயன்று முடியாமல் தடுமாறியவர், சுதாரித்துக் கொண்டு வெடித்தார். "மேரி! இது ரொம்ப அக்கிரமம்! இவரை வச்சு என் சொந்த விவகாரங்களையெல்லாம் குடாய்ஞ்சீங்களா? சீ! நீங்க இந்த அளவு கீழ்த்தரமா இறங்குவீங்கன்னு நினைக்கவேயில்லை!"

மேரி கையசைத்து அவரைச் சாந்தப்படுத்த முயன்றாள். "சே சே, அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ஹென்றி. சூர்யா யூக நிபுணர். என்னையும் லூயிஸையும் கூடப் பாத்து யூகிச்சு அதிர வெச்சார். இதும் ஒரு யூகமாத்தான் இருக்கும். என்ன சூர்யா?"

சூர்யா தலையாட்டி ஆமோதித்து விளக்கினார். "யெஸ், யூகந்தான் ஹென்றி! உங்க அறையில நீங்க வெளிப்படையா வச்சிருக்கிற சில தடயங்களை வச்சு யூகிச்சேன்."

சற்றே சீற்றம் தணிந்த ஹென்றி நம்பிக்கையின்றி, "என்ன தடயங்கள், சில வினாடிகளில அப்படியென்ன கவனிச்சு கணிச்சீங்க?" என்றார்.

ஷாலினி முந்திக்கொண்டு பதிலளித்தாள். "ஹென்றி, நானும் ஓர் இசைப்பிரியை. சூர்யா அளவுக்கு தெரியலைன்னாலும் சில தடயங்களைச் சொல்றேன். சூர்யா மீதியை விளக்குவார். உங்க அறை பூரா இசையைப் பத்திய பல அம்சங்கள் இருக்கு. இசைப் பிரபலங்களின் படங்களை மாட்டியிருக்கீங்க. அங்க இருக்கற வயலின் பெட்டியினாலயும், நீங்க ஒரு நாலு பேர் குழுவில வயலின் வாசிக்கற புகைப்படத்தினாலயும் நீங்களே ஒரு வயலின் வித்தகர்னு நல்லாவே தெரியுது! ஓகே, எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான். அதுக்கு மேல அந்த ஸ்ட்ராடிவேரியஸ் வாங்கற விஷயத்தைப் பத்தி சூர்யாதான் சொல்லணும்!"

மூச்சு விடாமல் சொல்லி முடித்த ஷாலினியை கிரண் முதுகில் தட்டி வலக்கை கட்டை விரலை உயர்த்தி "வே டூ கோ ஸிஸ்!" என்று பாராட்டினான். சூர்யாவும் "அட! பரவாயில்லயே ஷாலினி! இவ்வளவும் கவனிச்சிருக்கயே, பிரமாதம்!" என்று பாராட்டவே, தன் அன்பு சூர்யா பாராட்டியதால் உச்சி குளிர்ந்து முகம் சிவந்தாள்!

சூர்யா விளக்கினார், "ஹென்றி, இதோ இங்க எனக்கு நல்லாத் தெரியற இடத்துல ஒரு இசைப் பத்திரிகையைத் திறந்து ஒரு பக்கத்துல சிகப்பு மையால வட்டம் போட்டு நட்சத்திரம் போட்டிருக்கீங்க. அது இசைக்கருவி ஏலத்தைப் பற்றிய செய்தி. அதுல மஞ்சள் வண்ணத்துல தீட்டி உயர்த்திக் காட்டியிருக்கற விஷயம் ஸ்ட்ரேடிவேரியஸ் வயலின், அபூர்வமா ஏலத்துக்கு வந்திருக்கறது, அதன் விலை பல நூறாயிரம் டாலர் என்பது.

மேலும் நீங்கள் ஸ்ட்ராடிவேரியஸ் விசிறீங்கறது சுவர் படங்களிலிருந்து தெரிஞ்சுது. அதுக்கும் மேல நீங்கள் ஒரு வெத்துக் காகிதத்தில சில எண்களைக் கூட்டி ஐந்நூறாயிரத்திலிருந்து கழிச்சு மீதி எண்ணைச் சுத்தி வட்டம் போட்டு கேள்விக் குறியும் ஆச்சர்யக் குறியும் போட்டிருக்கீங்க. அது உங்க நிதிப் பற்றாக்குறையைக் குறிக்குதுன்னு யூகிச்சேன். இதெல்லாம் சேர்த்துப் பார்க்கறப்போ நீங்க அந்த வயலின் வாங்கலாம்னு நினைக்கறீங்க அப்படீங்கற என் யூகம் ஒண்ணும் ரொம்பப் பிரமாதமில்லை!"

விளக்கத்தைக் கேட்ட ஹென்றி மனம்விட்டுச் சிரித்து, கைகொட்டினார். "பிரமாதம் சூர்யா, பிரமாதந்தான். இந்த சில நொடிகளுக்குள்ள இதெல்லாம் கவனிச்சு ரெண்டும் ரெண்டும் ஏழுன்னு கணிச்சிருக்கீங்களே! முன்னால சொன்ன என் அவநம்பிக்கையையும் சீற்றத்தையும் மன்னிச்சுடுங்க. நீங்க எங்க பிரச்சனயைத் தீர்ப்பீங்கங்கற நம்பிக்கை எனக்கு வந்துடுச்சு!"

சூர்யா கை தூக்கி மறுதலித்தார். "மன்னிப்புக்கெல்லாம் அவசியமில்லை. உங்க உணர்ச்சி உங்க நிலைமைல மிக நியாயமானதுதான். இப்போ ஆகவேண்டிய காரியத்தைக் கவனிப்போம். நீங்க புரட்சிகரமான க்யூபிட் நுட்பத்தை உருவாக்கியிருக்கறதா மேரி சொன்னாங்க. ஆனா இந்தத் துறையில பல நுட்ப நிபுணர்கள் இதே மாதிரி முயற்சிக்கறாங்க இல்லயா. ஏன் அவங்க வெற்றி பெற முடியவில்லை. உங்க நுட்பத்துல அப்படி என்ன தனித்துவம்?"

தன் நுட்பத்தைப் பற்றி பெருமிதததுடன் ஹென்றி விவரித்ததையும், சூர்யா குவான்டம் கணினியின் குழப்பத்தை எவ்வாறு மேலே துப்பறிந்தார் என்பதையும் இனி வரும் பகுதிகளில் காண்போம்!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com