தான் எழுதியது எதுவும் தனதல்ல, குருதேவரின் ஆசியாலே சாத்தியமானது என்று கருதி, தன்னடகத்துடன் தன் பெயரைக் கூட வெளியிடாமல் "ம-" என்று மட்டுமே குறியிட்டு, ராமகிருஷ்ண பரமஹம்சரின் 'அமுத மொழிகளை' (Gospel of Sri Ramakrishna) ஆங்கிலத்திலும், வங்க மொழியிலும் எழுதி உலகிற்கு அளித்த மஹாபுருஷர் மஹேந்திரநாத் குப்த மஹாசயர்.
இவர் 1854 ஜூலை 14ம் நாளன்று வங்காளத்தில் பிறந்தார். தந்தை மதுசூதன் குப்தா. தாய் ஸ்வர்ணமயி தேவி. உடன்பிறந்தவர்கள் ஏழு பேர். பெரிய குடும்பம். தந்தையார் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் பணிசெய்தார். மிகவும் கஷ்டப்பட்டுக் குழந்தைகளை ஆளாக்கினார். இயல்பிலேயே மிகவும் தெய்வ பக்தி உடையவர் என்பதால் குழந்தைகளும் அவ்வாறே வளர்ந்தனர்.
மஹேந்திரநாத் குப்தா பள்ளிக் கல்விக்குப் பின் இளங்கலை பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து சட்டம் பயின்றார். இயல்பாகவே அவருக்கு ஆன்மத்தேடல் அதிகம் இருந்தது. ஹிந்து மதம் மட்டுமல்லாமல் பிற மத நூல்களையும் பயின்றார். ஜோதிடம், ஆயுர்வேதத்திலும் தேர்ச்சி பெற்றார். சம்ஸ்கிருதம், ஆங்கில இலக்கியம் ஆகியவற்றிலும் தேர்ந்தார். தத்துவ ஆர்வமும் இருந்தது. தனது சிந்தனைகளைத் தினந்தோறும் தவறாது நாட்குறிப்பில் எழுதி வந்தார். (அந்தப் பழக்கமே பிற்காலத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சந்திப்பில் நிகழ்ந்தவற்றை ஆவணப்படுத்த உதவியது).
மஹேந்திரநாத் குப்தா முதலில் பிரிட்டிஷ் வணிக நிறுவனம் ஒன்றில் கணக்கராகப் பணி செய்தார். கல்வியை முடித்ததும், அவருக்குக் கல்வித்துறையில் வாய்ப்பு வந்தது. உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். பின் தலைமை ஆசிரியராக உயர்ந்தார்.
நிகுஞ்சா தேவி என்பவருடன் திருமணமானது. ஆனாலும், அவருக்கு இல்லற வாழ்வில் நிம்மதியில்லை. ஆன்மிகம் குறித்த தேடல் தொடர்ந்தது. சாதுக்களை நாடிச் சென்றார். பல மடங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் சென்றார். மனம் அமைதியுறவில்லை. தேடல் தொடர்ந்தது. ஒரு சமயம், தக்ஷிணேஸ்வரத்தில் கங்கைக் கரையில் உள்ள தோட்டம் ஒன்றில் ஒரு மகான் இருப்பதாக மஹேந்திரநாத் குப்தா கேள்வியுற்றார். உடனே நண்பர் ஒருவருடன் அந்த இடத்திற்குச் சென்றார்.
மாலைவேளையில் அந்த இடம் ரம்மியமாக இருந்தது. மலர்கள் பூத்துக் குலுங்கின. காற்றில் இனியதொரு நறுமணம் பரவியிருந்தது. அது ஆன்மிக உணர்வை மேலும் தூண்டுவதாய் இருந்தது. எங்கிருந்தோ இனிய நாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த மகான் தங்கியிருந்த குடிலின் வாசலில் வந்து நின்றார் மஹேந்திரநாத் குப்தா. உள்ளே அந்த மகான் இனிய குரலில், "ஹரி அல்லது ராமா என்ற பெயரைக் கேட்டவுடனேயே உங்களுக்கு மயிர்க்கூச்செறிய வேண்டும். அந்த நிலையை அடைந்தால், நீங்கள் சந்தியாவந்தனம் உள்ளிட்ட எந்தச் சடங்கையும் செய்ய வேண்டியதில்லை" என்று ஒரு சீடரிம் சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்டதுமே மஹேந்திரநாதருக்கு மெய் சிலிர்த்தது. உள்ளே ஓடிச்சென்று அந்த மகானின் பாதத்தில் வீழ்ந்தார்.
ஒல்லியான நடுத்தர உயரமுள்ள உருவம். இடுப்பில் ஒரு ஆடை. மேலே ஒரு சிறிய துண்டு. கைகளை மேலே உயர்த்தியபடி தன்னிலை மறந்து, கண்களை மூடி அந்த மகான் நின்று கொண்டிருந்தார். அவரே ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். அவரே தனக்கான குரு என்பதைக் கண்டுகொண்டார் மஹேந்திரநாத்.

கண் விழித்த பரமஹம்ஸர் அவரை யார் என்று விசாரித்தார். தன்னைப் பற்றியும், தன் தேடலைப் பற்றியும் சொன்னார் மஹேந்திரநாதர். குருதேவர் அவரை ஆசிர்வதித்தார். அன்று முதல் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தீவிரத் தொண்டரானார் மஹேந்திரநாதர். குருவைப் பார்க்காமல், அவரது குரலைக் கேட்காமல் ஒருநாள்கூட அவரால் இருக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் தக்ஷிணேஸ்வரம் சென்று குருதேவரைத் தரிசித்தார். குறிப்பாக மாலை வேளைகளில் ராமகிருஷ்ணரைச் சந்திப்பதைத் தனது வழக்கமாக வைத்திருந்தார். குருதேவருடன் பழகிப் பழகி தனது ஆன்மிக ஐயங்களைத் தீர்த்துக் கொண்டார்.
மாலை வேளைகளில் சீடர்கள் பலர் ஒன்று கூடுவர். சிலர் பக்திப் பாடல்களைப் பாடுவர். சிலர் ஆன்மிக சந்தேகங்களை குருதேவரிடம் கேட்பர். அவர்களுக்குக் கதைகள் மூலமும், தத்துவ விளக்கம் மூலமும் விரிவாக பதில் கூறுவார் பரமஹம்சர். எதிலும் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார் மஹேந்திரநாதர். இரவு வீட்டிற்குச் சென்றதும், நடந்தவற்றைத் தவறாமல் தனது நாட்குறிப்பில் பதிவு செய்வார். அதுவே பிற்காலத்தில் (1897) நூலாகத் தொகுக்கப்பட்டு, 'Gospel of Sri Ramakrishna' (ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்) என்ற தலைப்பில் வெளியாயிற்று. வங்க மொழியில் 'ஸ்ரீ ராமகிருஷ்ண கதாம்ருதம்' என்ற தலைப்பில் இதன் முதல் பாகம் 1902லும் இரண்டாம் பாகம் 1904லும் மூன்றாம் பாகம் 1908லும் நான்காம் பாகம் 1910லும் ஐந்தாம் பாகம் 1932லும் வெளியானது. பிறகு தமிழ் உள்பட ஏராளமான மொழிகளில் பெயர்க்கப்பட்டது.
ஆன்மிகப் பொக்கிஷமான அந்த நூல் அனைத்து வேதாந்த விளக்கங்களையும், சமய உண்மைகளையும் எளிய முறையில் கூறுவது. ஆழ்ந்து வாசிக்கும் ஒருவரது வாழ்க்கைப் போக்கையே மாற்றிவிடும் ஆற்றல் கொண்டது. தன்னடக்கமும், அமைதியும் வாய்க்கப் பெற்ற மஹேந்திரநாத் குப்தாவால்தான் ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பற்றிய பல்வேறு விஷயங்கள் வெளிவந்தன. இவரது 'அமுத மொழிகள்', ஆன்மிக உலகிற்குக் கிடைத்த மிகப்பெரிய அருட்பொக்கிஷம் என்றால் மிகையல்ல.
பரமஹம்சரின் தீவிர அணுக்கத் தொண்டராக விளங்கிய மஹேந்திரநாத் குப்தர் நாளடைவில் தானும் ஓர் மகானாய்ப் பரிணமித்தார். ஆன்மிகத்தில் மிக உயரிய நிலையை அடைந்தார். அறிவில் பெரிய சான்றோரான இவர், பிற்காலத்தில் காளி அன்னையின் தரிசனத்தையும் பெற்றார். ராமகிருஷ்ணரைப் போலவே இவருக்கும் காளி தேவியுடன் பேசும் ஆற்றல் வாய்த்தது. பிற்காலத்தில் அகில உலகப் புகழ்பெற்ற பரமஹம்ச யோகானந்தரின் உப குருவாகவும் மஹேந்திரநாத் குப்தா இருந்தார். யோகானந்தருக்குப் பல்வேறு உண்மைகளைப் போதித்தார். பல அற்புதச் செயல்களை நிகழ்த்தினார்.
குருதேவர் ராமகிருஷ்ணரின் மீது ஆழமான பற்றுக்கொண்ட மஹேந்திரநாத் குப்தாவை, பரமஹம்ச யோகானந்தர், "மஹாசயர்" என்று அன்புடன் அழைத்தார். மஹேந்திரநாதரை பால் பிரன்ட்டன் உள்ளிட்ட பலர் தேடிவந்து தரிசித்து அருள், ஞானம் பெற்றுச் சென்றனர்.
வாழ்வாங்கு வாழ்ந்து, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையை உலகம் அறியக் காரணமான மஹேந்திர நாத் குப்த மஹாசயர், ஜூன் 04, 1932-ல் காலமானார்.
மஹாசயர் தன்னை நாடி வந்த சீடர்களுடன் உரையாடியதை, அவரது சீடர்களில் ஒருவரான சுவாமி நித்யாத்மனானந்தா "M-The Apostle & the Evangelist" என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்துள்ளார். இந்நூல் மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெருமையையும், விவேகானந்தரின் தீரத்தையும், மஹேந்திரநாத் குப்த மஹாசயர் என்னும் "ம-"வின் சிறப்பையும் நாம் அறிந்துகொள்ளலாம்.
பா.சு. ரமணன் |