மகிழம்பூ
சில்லென்ற உணர்வு நெஞ்சத்தில் ஊடுருவியது திடுக்கிட்டுக் கண் விழித்தான் அவன்.

குளிர் காலத்தில் புல்வெளியில் துளிர்த்திருக்கும் முத்து முத்தான பனிநீர் போல, தன் முகத்தில் நீர்த்துளிகளை உணர்ந்தான். அழுக்கேறிய வலிய கைகளால் முகத்தைத் துடைத்துக்கொண்டே 'யாரது?' என்று அதட்டியபடி எழுந்து உட்கார்ந்தான்.

சற்று முன்தான் களத்தில் வேலையை முடித்துக் கொண்டு வைக்கோல் போர் அருகில் இருந்த வைக்கோல் கூண்டிற்குள் 'அப்பாடா' என்று அவன் சாய்ந்தான். அப்போது மாலைக் கதிரவன் செந்தூரக் குழம்பில் மூழ்கிக் களித்துக் கொண்டிருந்தான்.

இப்போது கண்விழித்ததும், அரைவட்ட உருவில் வளர் பிறையைக் கண்டான். நிலவொளியைத் தழுவிக் குளிர்ந்த தரை போலவே அவன் மனமும் குளிர்ந்தது. உழைத்து ஓய்ந்திருந்ததால் உடலில் வேதனை படர்ந்திருந்தது.

"தில்லை!"

எல்லை மீறிய ஆர்வத்தில் அவன் கத்திவிட்டான். 'கண்ணாமூச்சி விளையாட்டு' ஆடிய இன்பம்; அந்த உருவைக் கண்டுபிடித்து விட்டதில் அவ்வளவு மகிழ்ச்சி அவனுக்கு! புன்னகை பொங்க அவன் எதிரில் தோன்றினாள் அவள். நிலவில் திளைத்து நின்றுகொண்டிருந்த அவளைத் தன் ஆசை விழிகளால் கவ்வுவது போல நோக்கினான். அன்பின் எல்லைக் கோட்டில் பெண்ணழகின் நாணம் பிறக்கிறது போலும்! கூண்டு நிழலில் அமர்ந்திருந்த அவனுடைய கண்கள் அவளுக்கு எவ்வாறு தெரிந்தனவோ? அவள் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். தலையில் இருந்த சிறிய கூடையைக் கீழே இறக்கி வைத்தாள். "உண்மையா தூங்கியிருந்தீங்களா, அத்தான்? கண்ணை மூடிக்கிட்டு, பாசாங்கு செய்யறதா நினைச்சேன்!" என்றாள்.

முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பியது குற்றம் என்பதை அவள் குரலில் இழைந்த மென்மை மறைமுகமாகக் கூறியது.

"நீ பன்னீர் தெளிச்சபோது விழிச்சுக்கிட்டுதான் இருந்தேன், தில்லை! கையும் களவுமாக உன்னைப் பிடிக்கிறதற்குள்ளே நீ ஓடி ஒளிஞ்சுட்டே!" என்றான்.

"புறப்பட ரொம்ப நேரமாயிடுச்சு. அடுத்த வீட்டுக் கைக்குழந்தைக்குக் காய்ச்சல். பாவம், அந்தப் பொண்ணு தனியா கஷ்டப்பட்டுக் கொண்டிருந்திருச்சு. நான்தான் மருந்து கொடுத்து அழாமல் தூங்க வைச்சேன்" அவள் பேசிக்காண்டே கிண்ணியில் சோறு பரிமாறினாள்.

"ஏன், வைத்தியரிடம் காட்டலையா?" என்று அவன் வினவினான்.

"வைத்தியர் கொடுத்த மருந்துதான்! நாளைக்குப் பார்த்ததுக்கப்பாலே நகரத்து டாக்டர்கிட்டே போய்ப் பார்க்கலாம்னு அவள்கிட்டே சொல்லியிருக்கேன். அவள் தனியாப் போகப் பயப்படறா. நீங்களும் துணைக்குப் போயிட்டு வாங்க."

அவன் - "முத்து எங்கே?"

"அவரு இருந்தா நீங்க ஏன் அத்தான் போகணும். மனுசன் மாடு வாங்கச் சந்தைக்குப் போனவருதான், ரெண்டு நாளாச்சு திரும்பலே. சரி, கதை கேட்டுக்கிட்டே உட்கார்ந்திட்டீங்களே? எழுந்திருச்சு கையலம்புங்க."

அவனுக்கு நல்ல பசி. விறுவிறு என்று உண்டான். தேவை அறிந்து அவள் பரிமாறினாள். அவன் பசி கரைந்தது.

"நீயும் சாப்பிடு. தில்லை!" என்றான்.

"எனக்கு வீட்டிலே எடுத்து வைச்சிருக்கேன். நீங்க சாப்பிடுங்க" என்றாள் அவள்.

"நான் உனக்கு எத்தனை தடவை சொல்றது? சாப்பிட்டு விட்டு இங்கே வா. இல்லாவிட்டால் என்கூடச் சேர்ந்து சாப்பிடு!"

"ஆமாம். நீங்க புதுப்புதுப் பழக்கமெல்லாம் செய்விங்க: இன்னும் கொஞ்சம் சோறு வச்சுக்கிடுங்க, அத்தான்."

"எனக்கு போதும்; இருப்பதை நீ இங்கேயே சாப்பிடு."

"அந்தக் குழந்தை நைநையின்னு கத்திக் கொண்டிருக்கும். அத்தான், நான் வீட்டுக்குப் போய்த்தான் சாப்பிடணும்".

அவன் கேலியுடன் நகைத்தான்.

"ஏன் சிரிக்கிறீங்களாம்?" என்று முகத்தைக் கோணிக் கொண்டாள் அவள்.

"இல்லே, எனக்கு ஒன்று நினைவுக்கு வந்திச்சு."

"என்னாது?"

"ஒரு தடவை உன் அண்ணன் ஊருக்கு ரயில் ஏறிப் போனோமே?"

"ஆமாம்."

"உனக்கு நினைவிருக்கா? முழுக்கால் சட்டை, முழுக்கைச் சட்டை எல்லாம் போட்ட ஒரு ஆள், ரெண்டு வயசுக் குழந்தை ஒன்றைக் கையிலே வைச்சுக்கிட்டு அந்தப் பெரிய ஸ்டேஷன்லே நின்றாரே?"

"ஆமா ஆமா. நிறைய நகை போட்டுக்கிட்டு, பட்டுச் சேலை, பட்டு ரவிக்கையோட ஒரு பெண்ணு ரயில் வண்டிக்குள்ளே உட்கார்ந்தா. வண்டி புறப்படுற சமயத்திலே அவருகிட்டேயும் குழந்தை கிட்டேயும் கொஞ்சிப் பேசிட்டு வரேன்னு சொன்னாள். அந்தக் குழந்தை கூட 'அம்மா அம்மா'ன்னு அழுது தீர்த்திச்சு; பரிதாபமா இருந்திச்சு!"

"அதைத்தான் சொல்ல வாரேன்; நடக்கக்கூடத் தெரியாத பிள்ளையைப் புருஷனிடம் விட்டுட்டு எங்கேயோ ஊருக்குப் போனாள் அந்த மகராசி. நீ என்னடான்னா அடுத்த வீட்டுக் குழந்தையைக் கொஞ்சங்கூடப் பிரிஞ்சு இருக்க மாட்டேங்கறே? வேடிக்கை!"

"அந்தச் சனங்களுக்கு அது பழக்கம் போலேருக்கு. எதிர்த்த வீட்டுப் பையன் கலியாணம் பண்ற வயசாச்சு. என்னமோ ஊருக்கு வேலைக்காகப் போறானாம். அந்த அம்மா என்ன அழுகை அழுதுட்டாங்க!"

"அது சரி. வேறே வெத்திலை யில்லையா? இந்தச் சருகுதான் அகப்பட்டுதா?"

"இது தேவலாமா, பாரு."

வாய் சிவக்க அவள் இருந்தாள்; பல் சிவக்க அவன் இருந்தான்!

மாமரத்திலிருந்து ஆந்தை ஒன்று அலறியது.

"ஆகா என்ன இனிமையான குரல்! இன்னும் கொஞ்சம் பாடம்மா. நீங்க ரெண்டு பேரும் மரத்திலே பாடுறீங்க; நாங்க ரெண்டு பேரும் இந்த நிலவு வெளிச்சத்தையும் களத்து மேட்டையும் மறந்துட்டு ஏதோ ஊர்க்கதை பேசி வீண்பொழுது போக்குறோம். நீங்களாவது மகிழ்ச்சியாப் பாடுங்க ...ம்!" - அவன் நகைத்தான்.

"அப்பா... அது குரலைக் கேட்டாலே எனக்கு ஒரே அருவருப்பாயிருக்கு. குயில் கூவுறதைக் கேட்டதுபோல 'ஆகா' போடறீங்களே!"

"ஆந்தைன்னு அலட்சியமா நினைச்சிடக் கூடாது, தில்லை! இதனுடைய அருமையைச் சொல்றேன் கேளு. பகலிலே குயில் கூவாதபோது கிளி பேசிக்கிட்டிருக்கும்; இல்லாவிட்டால் மைனா மழலை பழகும். காக்கா நெல்லு பொறுக்க நம்மையே சுற்றித் திரியும். ஆனா இதைப்போலே வெள்ளைப் பிணந்தின்னிக் கழுகு வரைக்கும் எவ்வளவோ பறவை! இரவில் களத்துக் காவலுக்கு எனக்குத் துணையாயிருப்பது இந்த ஆந்தைதான். ஏழைக்கு ஏழை துணை! எப்போதாவது நான் அசந்து தூங்கிவிட்டால், ஆந்தை அண்ணன் சத்தம் போடுவார். மாடு கீடு வந்தாக்கூட இரைச்சல் போட்டு என்னை எழுப்புவார். இந்த உதவிக்காக அவரை நான் புகழ வேண்டாமா, என்ன? தில்லை?
"
இருவரும் கலகலவெனச் சிரித்தனர்.

"நீங்க வீட்டிலே போயி சுகமா தூங்குங்களேன், அத்தான்! இங்கே நான் இருந்துக்கிடறேன்."

"சரி. நீ இங்கே காவல் பார்த்துக்கோ. நான் சமைச்சு சோறு கொண்டுக்கிட்டு வாரேன்!"

"ஐயோ! நீங்க சமைச்சதை நான் சாப்பிடுறதா?"

"ஏன்? எனக்குச் சமைக்கத் தெரியாதுன்னு நினைச்சியா?"

"இல்லே. உங்களைச் சமைக்கச் சொல்லி கல்லுப் பிள்ளையாரு போல நான் உட்கார்ந்துகிட்டு சாப்பிடறது பாவம், அத்தான்!"

"நல்ல பாவத்தைக் கண்டே போ! அப்படின்னா நீ என் வேலையைச் செய்யறது மட்டும் பாவமில்லையா?"

"இல்லை அத்தான். வேடிக்கையாக....!"

"இங்கே நீ தனியா எப்படியிருப்பேயாம்?"

"வீட்டிலே மட்டும் தனியா இருக்கலேயோ?"

"தெருவிலே இருப்பதற்கும்?"

"தெருவிலே கூட்டத்தோடே இருந்தாலும், என் மனசு தனியாகவே கிடக்குதே, அத்தான்!"

ஏதோ சரசர வென்று ஒலி கேட்டது. அவர்கள் உற்றுக் கவனித்தனர். அந்த ஓசை வைக்கோற் போருக்குப் பின்புறமிருந்து வந்தது.

அவன் கையில் தடியை எடுத்துக்கொண்டு எழுந்தான்.

"நீங்க உட்காருங்க அத்தான். நான் போய் அந்தத் திருட்டு மாட்டை ஓட்டி வந்து கட்டிப் போடறேன்"

"ஏன் தில்லை நமக்குன்னு ஒரு மகன் இருந்தா மாட்டை ஓட்டுவதற்கு ஓடுவான். மடையை வெட்டி விடுவதற்குப் போவான்"

அவன் பேச்சில் ஆசை கொப்புளித்தது. அங்கே குவிந்து கிடந்த வைக்கோல் கட்டின் மேல் சுழற்சியுடன் அமர்ந்து பெருமிதப் பார்வையொன்றை அவள்மேல் வீசினான்.

அவன் எதிரில் உட்கார்ந்த அவள், "உங்களுக்கு மாடு ஓட்ட மட்டும்தான் மகன் வேணுமா...? பண்ணையாரு மகன் படிக்கிறது போல படிக்க வைக்கணுங்கறேன். நாம் கஷ்டப்பட்டாலும், அவனாவது பெரிய சர்க்காரு வேலைக்குப் போயி..." என்றாள்.

"அப்படி யென்றால் பயிர்த்தொழில் செய்வது இழிவா? பயிர்த் தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தியதால்தான் என்றும் ஏழையாகவே இருக்க வேண்டியதாய் விட்டதா? இந்த நிலை நீடித்துக் கொண்டே சென்றால் சமுதாயத்தின் வளர்ச்சி என்னவாகும்?" என்ற சிந்தனையில் அவன் மனம் புகவில்லை. ஏதோ சிரித்தான். "முதலில் மகன் பிறக்கட்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்," என்று கூறிச் சிரித்தான்.

அவள், "இன்னும் நாலைஞ்சு மாசம்தானே அத்தான்!" என்று கடைக்கண்ணால் அவனைப் பார்த்து உவகை கொண்டாள்.

அந்த உவகையை மனத்தால் பருகி அவன் மகிழ்ந்தான்.

"சரி, நேரமாய்க் கொண்டேயிருக்குது தில்லை. சீக்கிரம் புறப்படு. இவ்வளவு நேரம் இங்கே நீ இருக்கக்கூடாது" என்றான் வேலன், கவலையுடன்.

அதை அவள் புரிந்து கொண்டவள் போலக் கூடையைத் தூக்கி இடையில் வைத்துக்கொண்டு புறப்பட நின்றாள்.

"நீங்க ஏன் அத்தான் வீணாக வாரீங்க? நான் போயிடுவேன்; திரும்புங்க," என்றாள் அவள்.

"அந்த வாய்க்கால் தாண்டி உன்னைக் கொண்டு வந்து விடுகிறேன், தில்லை" என்று அவன் அவளைத் தொடர்ந்தான்.

நிலா வெளிச்சத்தில் விளங்கிய ஒற்றையடிப் பாதையில் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். சில ஆண்டுகளாக. இல்லை, வழிவழியாக முடிவில்லாமல் அதே பாதையில் நடந்து அவர்கள் பழக்கப் பட்டிருந்தார்கள். பக்கத்தில் வளர்ந்து பெருகிவிட்ட முட்செடிகள் அவர்களுக்குத் தெரியாது. பெரிய மரங்களை எட்டி நின்று பார்த்திருக்கிறார்கள்; கனி கொழுத்து இருந்தாலும் அவை யாருக்கோ சொந்தம்! அதைப்ற்றி அவர்கள் கவலைப் பட்டதில்லை. கவலைப்பட நேரமில்லை. கதிரவன் போல் கடமையைச் செய்து ஓய்வுபெறும் பகல்: இன்ப நிலாப் பொழுதான இரவுகள் அவர்களுக்கு எத்தனையோ!

அந்தப் பாதையில் இருந்த மகிழ மரத்திலிருந்து நட்சத்திரங்கள் சிந்திக் கிடப்பன போல சின்னஞ்சிறு பூக்கள் உதிர்ந்து கிடந்தன. அவன் சில மலர்களைப் பொறுக்கி அவளது கூந்தலில் செருகினான். மறுகணம் - அவள் 'ஐயோ' வென்று பெரிய குரலில் அலறினாள்.

அவள் பாம்பை மிதித்து விட்ட மாதிரி அப்படி அலறினாள்.

"பாம்பு, பாம்பு!"

அந்தப் பாம்பு நெளிந்து கொண்டிருந்தது.

"எங்கே கடித்தது, கண்ணே?"

அவள் காட்டிய இடத்தில் - முழங்கையில் வாய் வைத்து அவன் விஷத்தை உறிஞ்சினான்.

"வேண்டாம் அத்தான், வேண்டாம்; என்னைப்பற்றிக் கவலைப்படாதீங்க... நீங்க நல்லா இருங்க போதும். அப்பாலே ஒங்களுக்கும் இந்த நஞ்சு..."

"இந்தத் தியாக உணர்ச்சி என்னைய உயிரோடு கொன்றிடுமே, கண்ணே? அப்புறம் நீ - நீ தரப் போகும் இன்பப் பரிசெல்லாம் வீண் கனாவாகிடாதா? ஆண்டவனே, என் பெண்சாதியைக் காப்பாற்று....!"

அவள் முகம் வியர்த்துக் கொட்டியது. பிறகு அவள் சிரித்தாள்; புது ஜீவன் இருந்தது அதில்.

பாம்பின் மீது கழியை வீசினான் அவன். பாம்பின் உடல் நெளிந்த இடத்தில் காகிதக் கிழிசல்கள் சில கிடந்தன.

அவன் முணமுணத்தான்: "நான் போட்ட தமாஷ் நாடகம். கடைசியிலே என் கண்ணாட்டியின் தியாக உள்ளத்தை எனக்கு படிச்சுக் கொடுத்திட்டுது!"

ச. கலியாணராமன்

© TamilOnline.com