ச. கலியாணராமன்
ச. கலியாணராமன் சிறுகதை எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இயங்கியவர். மண்வாசம் மிக்க கதைகளையும், யதார்த்தமான சிறுகதைகளையும் தந்தவர். மார்ச் 22, 1936 அன்று, தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் சக்கரபாணி – இராசம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை குத்தாலம் உயர்நிலைப் பள்ளியில் கற்றார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்தார். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பயின்று ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அலுவலக மேலாளராகப் பணியாற்றினார். மனைவி ஜோதி, பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றினார்.

ச. கலியாணராமன் பெற்ற பரிசுகள்
* 'துன்பியல் ஒன்று இன்பியல் ஒன்று' நாடக நூலுக்குத் தமிழக அரசின் பரிசு
* 'உதயகுமரன் காதல்' நாவலுக்குத் தமிழக அரசின் பரிசு
* 'ஒரு நாடகம் நடை போடுகிறது' சிறார் நாடக நூலுக்கு, குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் முதல் பரிசு
* நெல்சன் மண்டேலா நூலுக்கு குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் வெள்ளிப்பதக்கம்
* 'அத்ரி மகரிஷியின் துறவு' – நூலுக்கு பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு
* 'ஆனந்த நடனம்' நாவலுக்கு பாரத ஸ்டேட் வங்கிப் பரிசு
* 'விதை நெல்' நாவலுக்கு அமுதசுரபி பரிசு
* 'பஞ்சம் பொழைக்க' குறுநாவலுக்கு அமுதசுரபி பரிசு
* 'பஞ்சம் பொழைக்க' குறுநாவலுக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சிறப்புப் பரிசு
* 'அழகுக்காக' சிறுகதைத் தொகுப்புக்கு தலைநகர் தமிழ்ச்சங்கம் வழங்கிய முனைவர் வ.சுப. மாணிக்கனார் நினைவுப் பரிசு
* 'எச்சில்தோடு' சிறுகதைத் தொகுப்புக்கு லில்லி தேவசிகாமணி பரிசு
* 'வா நெஞ்சமே துணையாக வா' நாவலுக்கு லில்லி தேவசிகாமணி பரிசு


ச. கலியாணராமன், நூலக வாசிப்பு மூலம் இலக்கிய ஆர்வமுற்றார். தமிழ் இலக்கியங்களோடு, ஆங்கில இலக்கியங்களையும் ஆர்வத்துடன் வாசித்தார். எழுத்தார்வத்தால் காதல், உமா போன்ற இதழ்களுக்குச் சிறுகதைகளை அனுப்பினார். 'உமா' திங்களிதழ் நடத்திய மாணவர் சிறுகதைப் போட்டியில் கலியாணராமனின் 'மகிழம்பூ' என்ற சிறுகதை ரூ.75 பரிசு பெற்றது. தொடர்ந்து பல இதழ்களில் எழுதினார். தனது சிறுகதைகளைத் தொகுத்து 'சூடினர் இட்ட பூ' என்ற தலைப்பில் நூலாக எழுத்தாளர் அகிலனின் முன்னுரையுடன் வெளியிட்டார். 'இன்பத்துள் இன்பம்' எனும் நாடக நூலை எழுதி டாக்டர் மு.வ. முன்னுரையுடன் தானே வெளியிட்டார். சிறாருக்கான நாடகங்களையும் எழுதினார். கலியாணராமன், 10-க்கும் மேற்பட்ட நாடக நூல்களையும், 10-க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளையும், 10-க்கும் மேற்பட்ட நாவல்களையும், 10 சிறுவர் நூல்களையும், 6 கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.

ச. கலியாண ராமன் நூல்கள்
சிறார் நூல்கள்: மலையாண்டி மகாராசா, ரோம் நாட்டு மாமன்னன் மார்கஸ் அரேலியசும் திருவள்ளுவரும், நெல்சன் மண்டேலா.
சிறுகதைத் தொகுப்பு: சூடினர் இட்ட பூ, அழகுக்காக, காகித ஓடம், பாலையில் பெய்த மழை, புதுமனை புகுவிழா, இரண்டு பெண்கள், எச்சில் தோடு, சாபநீக்கம்
நாவல்: வா நெஞ்சமே துணையாக வா!, பஞ்சம் பொழைக்க (குறுநாவல்), ஆனந்த நடனம், காட்டுக்குள் எரிந்த நிலா.
நாடகம்: துன்பியல் ஒன்று இன்பியல் ஒன்று, உதயகுமரன் காதல், அத்ரி மகரிஷியின் துறவு (இதிகாச நாடகம்), தாரா என்றொரு பெண் (இதிகாச நாடகம்), வள்ளி மணாளனுக்கு எங்கே நீ சென்றாய் (குறு நாடகங்கள்) உனக்காகவே நான் (நகைச்சுவை இன்பியல் நாடகம்), கள வேள்வி (கவிதை நாடகம்).
கட்டுரை நூல்கள்: பேரறிவாளர் நேருவின் சீரிய சிந்தனைகளும் சிதைந்த கனவுகளும், பாரதியார் காட்டிய பகுத்தறிவுப் பாதை, புரட்சித் தலைவன் மாசே-துங், நெல்சன் மண்டேலாவின் போராட்டக் களங்கள்.


இவரது வாழ்க்கை வரலாற்றை இரா. எழில்மதி எழுதினார். இந்நூலைக் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரது படைப்புகளை ஆய்வு செய்து இரா. ரீட்டா, ச. சிவகாமி ஆகியோர் முறையே முனைவர் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளனர்.

அரவிந்த்

© TamilOnline.com