தென்றல் பேசுகிறது...
இனிவரும் நாளில் புதிய H1-B விசா விண்ணப்பம் ஒவ்வொன்றுடனும் $100,000 தொகை செலுத்த வேண்டும் என அமெரிக்க அரசு கூறியுள்ளது. மிகச்சிறந்த திறமையும் அறிவும் கொண்டவர்களைத் தமது நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள நினைக்கும் அமெரிக்கக் கம்பெனிக்கு இது பெரிய தொகையல்ல. ஆனால், அவர்களது தயாரிப்பின் விலை இதனால் அதிகரிக்கும். இதனால் பாதிப்பு ஏற்படுவது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இவற்றைப் பயன்படுத்தும் உலக நாடுகளுக்கும்தான். உலகச் சந்தையில் அமெரிக்கப் பொருளின் மிகை விலையே அதற்கு எதிரி ஆகிவிடும். 'அமெரிக்கக் கனவைத் துரத்தும்' கற்றுத் தேர்ந்த இளையோர் தாமாக இங்கு வரத் துணியமாட்டார். இங்கிருக்கும் இளையோரிடம் அத்தகைய 'ஆர்வத் தீ' கொழுந்து விட்டெரிவதாகத் தெரியவில்லை. ஆராய்ச்சி, புதியன படைத்தல் இவற்றில் உலகின் முன்னோடியாக இருந்துவரும் அமெரிக்கா அந்த இடத்தைத் தக்க வைத்துக்கொள்ளுமா என்பதே ஐயத்துக்கு இடமாகிவிட்டது.

★★★★★


அமெரிக்காவில் கொலையும் வன்முறைச் செயல்களும் அதிகரித்துவிட்டன. எப்போதோ ஒருமுறை என்றிருந்தது போய், இவை பரவலாக அடிக்கடி நிகழ்கின்றன என்பது நம்மைத் துணுக்குறச் செய்கிறது. நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்பதாலும், இறக்குமதி வரிவிதிப்பைக் கன்னாபின்னா என்று ஏற்றிவிட்ட காரணத்தாலும் ஏற்படும் வேலை இழப்புகளாலும், விலை ஏற்றத்தாலும் குற்றங்கள் அதிகரிக்கப் போகின்றன. இதைச் சொல்லப் பெரிய பொருளாதார அறிஞராக இருக்க வேண்டியதில்லை. இஸ்ரேலுக்கும் காஜாவுக்கும் சமரசம் செய்துவைத்து நோபெல் பரிசு வாங்குவது இருக்கட்டும், இங்கே முதலில் அமைதியை நிலை நாட்டுவது அவசரத் தேவை.

★★★★★


திலக், சிந்தூர் இரண்டுமே பொட்டுதான். 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்குப் பழி வாங்குவதாக எண்ணிக்கொண்டு பேய்த்தனமாக ஆசியா கோப்பை இறுதி ஆட்டத்தை ஆடிய பாகிஸ்தானியரின் வெறித்தனத்துக்கு ஆப்பு வைத்து, கோப்பையை இந்தியா வெல்லக் காரணமாக இருந்தவரின் பெயர் திலக் வர்மா. இந்தப் பத்தியின் முதல் வரியை இப்போது மீண்டும் படித்துப் பாருங்கள்.

★★★★★


கவிஞர் தங்கம் மூர்த்தி குறித்த முக்கியக் கட்டுரையில் தொட மஹேந்திரநாத் குப்தா (-ம) குறித்த கட்டுரையும் இந்த இதழுக்கு அணி சேர்க்கின்றன. எழுத்தாளர் ச. கலியாணராமன் வாழ்க்கைக் குறிப்புகள், அலமாரியில் சின்ன அண்ணாமலையின் நேர்காணல், பொட்டில் அடித்தாற்போல ஒரு சிறுகதை என்று பல்சுவை இதழாக மீண்டும் உலா வருகிறது தென்றல்.

வாசகர்களுக்கு விஜயதசமி, கந்த ஷஷ்டி மற்றும் தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

தென்றல்
அக்டோபர் 2025

© TamilOnline.com