அரங்கேற்றம்: குமாரி அதிதி விஸ்வநாதன்
ஜூலை 27 2025, ஞாயிற்றுக்கிழமை மாலைப்பொழுதில் குமாரி அதிதி விஸ்வநாதனின் பரதநாட்டிய அரங்கேற்றம் டோஹெர்ட்டி உயர்நிலைப் பள்ளியின் 'Dougherty Performing Arts Center' மேடையில் நடந்தேறியது.

குரு திருமதி தீபா ராஜாமணியின் ஆசியுடன் (கலை இயக்குனர், ஸ்ரீலயா ஸ்கூல் ஆஃப் டான்ஸ், பிளெசன்டன், கலிஃபோர்னியா) அதிதி நிகழ்ச்சியை கணபதி பூஜை மற்றும் சலங்கை பூஜையுடன் தொடங்கினார். கடவுள் வாழ்த்துடன் இசைக்குழு நிகழ்ச்சியைத் தொடங்கியது. குரு தீபா ராஜாமணி (நட்டுவாங்கம்), திருமதி உத்ரா ராஜாமணி (வாய்ப்பாட்டு), திருமதி சந்தியா ஸ்ரீநாத் (வயலின்), திரு ஸ்ரீநாத் பாலா (மிருதங்கம்), மற்றும் திரு சுமந்த் கணபதி (புல்லாங்குழல்) ஆகியோர் சிறப்பான இசை வழங்கினர்.

விறுவிறுப்பாகப் புஷ்பாஞ்சலியில் தொடங்கி, மூன்று தாளங்களில் அமைந்த அலாரிப்புக்குப் பின்னர் ஜதிகளுடன் கூடிய விநாயகர், சரஸ்வதி, நடராஜர் ஸ்லோகங்களுடன் முதல் பாடல் நடந்தேறியது. அடுத்து, "சித்தி விநாயகா" என்ற நாட்டை ராகத்தில் அமைந்த கணபதி பாடல் விறுவிறுப்புடன் தொடர்ந்தது. அதிதி மேடை முழுவதையும் அழகாகப் பயன்படுத்தி நடனத்தைத் தொடர்ந்தார். அடுத்து, சக்ரவாக ராக ஜதீஸ்வரமும், காம்போஜி ராகத்தில் ஆரம்பித்து, ராகமாலிகையில் அமைந்த, பாலகிருஷ்ணனின் லீலா விநோதங்களைப் பற்றிய "சரஸிஜாக்ஷுலு" என்னும் சப்தமும், மனதைக் கவர்ந்தன. நிகழ்ச்சியின் நடுநாயகமாக திரு பாலாஜி ராஜாமணி இயற்றி, திருமதி அபர்ணா பாலாஜி இசையமைத்த முருகன்மீதான வர்ணம் மிக அழகாகக் குமார சம்பவத்தில் தொடங்கி, வள்ளி திருக்கல்யாணம், தேவாசுர யுத்தம், முருகன் தேவசேனா திருமணம் என்று அறுபடை வீடுகளையும் கண்முன் நிறுத்திப் பரவசம் அடையச் செய்தது.



சிறிய இடைவேளைக்குப்பின் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் "ஜம்பூபதே" என்ற பாடலுக்கு தாளம் தப்பாமல் ஆடி அதிதி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரை கொண்டாடினார். தொடர்ந்து, சாவேரி ராகத்தில் அமைந்த "சங்கரி ஷம்குரு" என்ற ஷ்யாமா சாஸ்திரி பாடலில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரருக்கு தேவியான அகிலாண்டேஸ்வரியின் அழகை அதிதி வெளிப்படுத்தினார். அடுத்து, பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்த "சலியே குஞ்சனுமோ" பாடலில் கண்ணனை ராதை பிருந்தாவனத்தில் யமுனை ஆற்றங்கரைக்கு அழைத்து விளையாடுவது பார்வையாளர்களின் ஒட்டுமொத்த மனதைக் கொள்ளை கொண்டது. மாண்டு ராகத் தில்லானாவில் வேகமாக பின்னிப்பிணைந்த ஜதிகளின் தொகுப்பை அனாயாசமாக ஆடி, சௌராஷ்ட்ரத்தில் அமைந்த திருப்புகழுடன் மங்களமாக அதிதி அரங்கேற்றத்தை நிறைவு செய்தார்.

ஆடி முடித்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்து தங்கள் பாராட்டுத் தெரிவித்தனர். அதிதியின் சகோதரி ஸ்ரீநிதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, சித்தி தன்யா கலைஞர்களை அறிமுகம் செய்தார்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com