ஜெனோவாவில் ரெயில் நிலையத்துக்கு முன்னே இருந்த சிறு சதுக்கத்தில் ஆட்கள் நெருக்கமாகக் கூடி இருந்தார்கள். பெரும்பாலோர் தொழிலாளர்கள். ஆனால் பாங்காக உடுத்து, கொழுத்துப் பருத்தவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். கூட்டத்தின் தலைமையில் இருந்தவர்கள் நகராண்மைக் கழக உறுப்பினர்கள். பட்டில் நேர்த்தியாகப் பூவேலை செய்த கனமான நகரக் கொடி அவர்களுடைய தலைகளுக்கு மேலே அசைந்தாடிக் கொண்டிருந்தது. தொழிலாளர் நிறுவனங்களின் பல நிறக் கொடிகள் அதன் அருகே படபடத்துக் கொண்டிருந்தன. இழைக் குச்சங்களிலும் குஞ்சங்களிலும் வார்களிலும் தங்கச் சரிகை பளபளத்தது. கோல்களில் ஈட்டிகள் மின்னின. பட்டு சரசரத்தது. விழாக் கொண்டாட்ட மனநிலையில் இருந்த ஆட்களின் கூட்டம் தணிந்த குரலில் பாடும் பாடகர் குழு போன்று ஒலித்தது.
கூட்டத்துக்கு மேலே, உயரமான பீடத்தின் மீது இருந்தது கொலம்பசின் உருவச்சிலை. கனவுகள் கண்டவர், நம்பியதற்காக நிறையத் துன்பப்பட்டவர், நம்பிய காரணத்தால் வென்றவர் ஆன கொலம்பசின் உருவச்சிலை. அவர் இப்போது கீழே இருந்த மனிதர்களை நோக்கி, பளிங்கு வாயால் இப்படிச் சொல்பவர் போலத் தோற்றம் அளித்தார்:
"நம்புபவர்களே வெல்கிறார்கள்."
கொலம்பசின் கால்களுக்குப் பக்கத்தில் பீடத்தைச் சுற்றிலும் இசைஞர்கள் பித்தளை ஊது கருவிகளை வைத்திருந்தார்கள். வெயிலில் பித்தளை பொன்போல மின்னிற்று.
ரெயில் நிலையத்தின் கனத்த பளிங்குக்கற் கட்டிடம் ஆட்களைத் தழுவிக் கொள்ள விரும்புவது போலத் தனது சிறகுகளை விரித்து உட்கவிந்த அரைவட்டமாக நின்றது. நீராவிக் கப்பல்களின் ஆழ்ந்த பெருமூச்சும் நீரில் உந்து சக்கரத்தின் மந்தமான சுழற்சியும் சங்கிலிகளின் கணகணப்பும் சீழ்க்கைகளும் கூச்சல்களும் துறைமுகத்திலிருந்து வந்தன. சதுக்கத்தில் நிசப்தமும் இறுக்கமுமாக இருந்தது. சுள்ளென்ற வெயில் எல்லாவற்றையும் முழுக்காட்டியது. வீடுகளின் மாடி முகப்புக்களிலும் ஜன்னல்களின் அருகிலும் மாதர்கள் கைகளில் மலர்களுடன் நின்றார்கள். பகட்டாக உடைகள் அணிந்த குழந்தைகள் தாமே மலர்கள் போலக் காட்சி அளித்தன.
நிலையத்தை விரைவாக நெருங்குகையில் எஞ்சின் சீழ்க்கை அடித்தது. கூட்டம் திடுக்கிட்டது. கசங்கிய சில தொப்பிகள் கரும் பறவைகள் போலத் தலைகளுக்கு மேலே பறந்தன. இசைஞர்கள் ஊது கருவிகளை எடுத்துக் கொண்டார்கள். ஆழ்ந்த முகத் தோற்றம் கொண்ட யாரோ சில முதியவர்கள் ஆடையைச் சீர்படுத்திக் கொண்டு முன்னே போய், கூட்டத்தை நோக்கித் திரும்பிக் கைகளை இடமும் வலமுமாக ஆட்டியவாறு ஏதோ சொன்னார்கள்.
கூட்டம் சிரமத்துடனும் பதற்றப்படாமலும் இருபுறமும் விலகி, சாலை வரை அகன்ற இடை வழி ஏற்படுத்தியது.
"யாருக்கு வரவேற்பு?"
"பார்மாக் குழந்தைகளுக்கு!"
அங்கே, பார்மாவில், வேலை நிறுத்தம். முதலாளிகள் விட்டுக் கொடுக்க மறுத்தார்கள். தொழிலாளர்களின் பாடு கடினம் ஆயிற்று. குழந்கைகள் அதற்குள் பட்டினியால் சோர்ந்து போகத் தொடங்கினார்கள். எனவே தொழிலாளர்கள் குழந்தைகளைத் திரட்டி ஜெனோவாவில் தங்கள் தோழர்களிடம் அனுப்பினார்கள்.
ரெயில் நிலையத் தூண்களின் பின்னாலிருந்து சிறுவர் சிறுமியரின் சீரான அணி வலம் தொடங்கிற்று. அரை குறையாக உடை அணிந்த சிறுவர் சிறுமியர் தங்கள் கந்தல் ஆடைகளில் பறட்டையர்களாகத் தோற்றம் அளித்தார்கள் - எவையோ விந்தை விலங்குகள் போன்று பறட்டையர்களாக. அவர்கள் சின்னஞ் சிறியவர்கள், புழுதி படிந்தவர்கள், களைத்த தோற்றம் கொண்டவர்கள். வரிசைக்கு ஐந்து பேராக, கைகளைக் கோத்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களுடைய முகங்கள் ஆழ்ந்தவை, ஆனால் விழிகள் உயிரோட்டத்துடனும் தெளிவாகவும் பளிச்சிட்டன. இசைக் கருவிகள் அவர்களை வரவேற்று இத்தாலியை ஒன்றுபடுத்திய பெருவீரன் கரிபால்டியின் துதிப்பாட்டை இசைத்தபோது பசியால் மெலிந்து கூர்மையான அந்தச் சிறு வதனங்களில் மன நிறைவைக் காட்டும் புன்னகை மகிழ்ச்சி அலையாகப் பரவியது.
கூட்டம் காதுகள் செவிடுபட ஆரவாரித்து வருங்கால மாந்தரை வரவேற்றது. அவர்களுக்கு முன் கொடிகள் வணக்கம் தெரிவித்துச் சாய்ந்தன, பித்தளை எக்காளங்கள் குழந்தைகளின் கண்கள் கூசும்படி மின்னி, காதுகள் செவிடாகும்படி முழங்கின. குழந்தைகள் இந்த வரவேற்பால் சற்றுத் திகைப்பு அடைந்து நொடிப்போது பின்னே நகர்ந்தார்கள்., ஆனால் ஒருவாறு திடீரென்று ஒன்றாக நிமிர்ந்து, உயர்ந்து, ஒரே உடலாகச் சேர்ந்து பல நூறு குரல்களில், ஆனால் ஒரே நெஞ்சிலிருந்து எழுந்த ஒலியில் ஆர்ப்பரித்தார்கள்:
"Viva Italia" (இத்தாலி நீடுழி வாழ்க!)
கூட்டம் அவர்கள் மீது கவிந்து, "இளம் பார்மா நீடூழி வாழ்க!" என்று முழக்கம் செய்தது.
சாம்பல் நிற ஆப்பு போன்று கூட்டத்தில் புகுந்து அதில் மறைந்தவாறு "Evviva Garibaldi!" (கரிபால்டி நீடுழி வாழ்க!) என்று ஆரவாரித்தார்கள் குழந்தைகள்.
தங்கு விடுதிகளின் சாளரங்களிலும் வீடுகளின் கூரைகள் மேலும் வெள்ளைப் பறவைகள் போன்று கைக்குட்டைகள் படபடத்தன, அங்கிருந்து பூக்கள் ஆட்களின் தலைகள் மீது மழையாகச் சொரிந்தன, குதூகலமான உரத்த கூச்சல்கள் கேட்டன.
எல்லாம் விழாக்கோலம் பூண்டது; எல்லாம் உயிரோட்டம் பெற்றது. சாம்பல் சலவைக்கல் ஒளி வீசும் எவையோ புள்ளிகளால் மலர்ச்சி பெற்றன.
கொடிகள் அசைந்தாடின. தொப்பிகளும் மலர்களும் பறந்தன. பெரியவர்களின் தலைகளுக்கு மேலே குழந்தைகளின் சிறு தலைகள் தென்படலாயின, பழுப்பேறிய குஞ்சுக் கரங்கள் மலர்களைப் பிடிப்பதும் முகமன் தெரிவிப்பதுமாகத் தோன்றித் தோன்றி மறைந்தன. இடையறாத உரத்த ஆரவாரம் காற்றில் ஓயாமல் அதிர்ந்தொலித்தது:
"Viva il Socialismo!" (சோஷலிசம் நீடூழி வாழ்க!)
"Evviva Italia!" (இத்தாலி நீடுழி வாழ்க!)
அனேகமாக எல்லாக் குழந்தைகளும் ஆட்களால் தூக்கிக் கொள்ளப்பட்டு விட்டார்கள். சிலர் பெரியவர்களின் தோள்கள் மேல் உட்கார்ந்திருந்தார்கள். வேறு சிலர் கடுகடுத்த எவர்களோ மீசைக்காரர்களின் அகன்ற மார்புகளுடன் அணைத்துத் தழுவப்பட்டிருந்தார்கள். இரைச்சலிலும் சிரிப்பிலும் கூச்சல்களிலும் இசையொலி அரிதாகவே காதில் பட்டது.
மாதர்கள் கூட்டத்தில் ஆழ்ந்து, வந்த குழந்தைகளில் எஞ்சியவர்களை எடுத்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் உரக்க விசாரித்தார்கள்:
"அன்னீத்தா, நீங்கள் இரண்டு பேரை எடுத்துக் கொள்கிறீர்களா?"
"ஆமாம், நீங்களுமா?"
"கூடவே, கால் இல்லாத மர்கரீத்தாவுக்காகவும் ஒரு குழந்தையை..."
எங்கும் பொங்கும் குதூகலம், உற்சவக் களி திகழும் முகங்கள். நீர் மல்கும், நல்லியல்பு ததும்பும் விழிகள். வேலை நிறுத்தக்காரர்களின் குழந்தைகள் சில இடங்களில் அதற்குள் ரொட்டியைச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.
"இப்படிச் செய்யலாம் என்று நம் காலத்தில் ஒருவரும் நினைக்கவில்லை!" என்றார் பறவையினது போன்ற மூக்குள்ள ஒரு முதியவர். அவருடைய பற்களுக்கு இடையே கரிய சுருட்டு புகைந்து கொண்டிருந்தது.
"பார்க்கப் போனால் ரொம்பச் சுலபம்..."
"ஆமாம்! எளியது, அறிவுக்கும் உகந்தது."
முதியவர் சுருட்டை வாயிலிருந்து எடுத்து, அதன் நுனியைப் பார்த்து, பெருமூச்சு விட்டு, சாம்பலைத் தட்டினார். பிறகு அண்ணன் தம்பிபோலக் காணப்பட்ட பார்மாச் சிறுவர்கள் இருவரைத் தம் அருகே கண்டு, முகத்தைப் பயங்கரமாக வைத்துக் கொண்டு, மயிர் சிலிர்க்க நின்றார். சிறுவர்கள் அவரை ஆழ்ந்த நோக்குடன் பார்த்தார்கள். பெரியவர் கண்களை மூடும்படித் தொப்பியை இழுத்து விட்டுக் கொண்டார், கைகளைப் பரப்பினார். குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் ஒண்டிக் கொண்டு முகங்களைச் சுளித்துப் பின்னே நகர்ந்தார்கள். கிழவர் திடீரெனக் குத்திட்டு உட்கார்ந்து, சேவல் போல உரக்கக் கூவினார். அவருடைய கத்தல் கோழியின் கூவலைப் பெரிதும் ஒத்திருந்தது. குழந்தைகள் வெறுங் குதிகால்களால் கற்கள்மேல் தொப்பென்று அடித்தவாறு கலகலவெனச் சிரித்தார்கள். பெரியவர் எழுந்து, தொப்பியைச் சரிப்படுத்திக் கொண்டு, வேண்டியது எல்லாவற்றையும் செய்தாயிற்று என்று தீர்மானித்து, உறுதியற்ற கால்களால் தள்ளாடியவாறு அப்பால் சென்றார்.
நாடோடிக் கதைகளில் வரும் சூனியக்காரக் கிழவியினது போன்ற முகமும் எலும்பு துருத்திய மோவாயில் சாம்பல் நிற முரட்டு உரோமங்களுமாகக் கொலம்பஸ் சிலையின் பாத பீடத்தின் அருகே நின்று கொண்டிருந்தாள் கூனல் விழுந்த நரைத்தலையள் ஒருத்தி. சிவந்த கண்களை, நிறம் மங்கிய சால்வை நுனியால் துடைத்தவாறு அவள் அழுது கொண்டிருந்தாள். கருமை படிந்த விகார முகத்தினளான அவள், ஆட்களின் உற்சாகம் பொங்கிய கூட்டத்தில் மிக விந்தையான முறையில் தனியளாகக் காணப்பட்டாள்...
கருங்குழலியான ஒரு ஜெனோவா மங்கை ஒரு சிறுவனைக் கையைப் பிடித்து நடத்திக்கொண்டு குதித்தாடியவாறு நடந்தாள். பையனுக்குச் சுமார் ஏழு வயது இருக்கும். அவன் பாதக்குறடுகளும் தோள்வரை வந்த தொப்பியும் அணிந்திருந்தான். தொப்பியைப் பிடரிமீது சாய்த்துக் கொள்வதற்காகச் சிறிய தலையைக் குலுக்கிக் கொண்டிருந்தான். அதுவோ, ஓயாமல் அவனுடைய முகத்தின் மேல் விழுந்த வண்ணமாய் இருந்தது. இளமாது சின்னத் தலையிலிருந்து தொப்பியை வெடுக்கெனக் கழற்றி உயரே வீசி ஆட்டியவாறு ஏதோ பாடி நகைத்தாள். சிறுவன் தலையைப் பின்னே சாய்த்து, முகம்மலர முறுவலித்துக் கொண்டு அவளை நோக்கினான். பின்பு தொப்பியை எட்டிப் பிடிப்பதற்காகத் துள்ளினான், இருவரும் பார்வையிலிருந்து மறைந்தார்கள். நெடிய மேனியும் மிகப்பெரிய திறந்த கரங்களும் கொண்டு தோல் முன்றானை அணிந்திருந்த ஒருவன் கிட்டத்தட்ட ஆறு வயதுள்ள சிறுமியைக் தோள் மேல் அமர்த்திப் பிடித்திருந்தான். சுண்டெலி போலச் சாம்பல் நிறமாக இருந்தாள் அந்தச் சிறுமி. நெருப்புப் போன்ற செம்பட்டைத் தலையனான ஒரு சிறுவனைக் கையைப் பிடித்து நடத்திக் கொண்டு அருகே சென்ற ஒரு மாதினிடம் அந்த ஆள் சொன்னான்: "தெரியுமா, இந்த வழக்கம் நிலைபெற்று விட்டால் நம்மை அடக்குவது கடினம் ஆகி விடும், இல்லையா?"
இவ்வாறு கூறி, வெற்றிப் பெருமிகம் துலங்க ஆழ்ந்த குரலில் உரக்க நகைத்து தனது சிறிய சுமையை நீலக் காற்றில் எறிந்து பிடித்தவாறு முழங்கினான்:
"Evviva Parma-al" (பார்மா நீடுழி வாழ்க!)
குழந்தைகளை அழைத்துக் கொண்டோ தூக்கிக் கொண்டோ ஆட்கள் போய் விட்டார்கள். கசங்கிய மலர்களும் மிட்டாய் சுற்றியிருந்த காகிதங்களும் சுமையாட்களின் மகிழ்ச்சி பொங்கும் குழுவும், அவற்றுக்கு மேலே, புது உலகைக் கண்டுபிடித்த மனிதரின் சால்பு இகழும் உருவச் சிலையும் எஞ்சி இருந்தன.
புது வாழ்வை எதிர்கொள்ளச் சென்ற மனிதர்களின் குதூகல ஆரவாரங்கள், பிரமாண்டமான எக்காளங்களிலிருந்து போல வீதிகளிலிருந்து அழகாகப் பெருகின.
மூலம்: மாக்சிம் கார்க்கி தமிழில்: பூ. சோமசுந்தரம் |