பூர்ணம் விஸ்வநாதன்
நாடக நடிகர், நாடகத் தயாரிப்பாளர், கதாசிரியர், நாடக இயக்குநர் என நாடக உலகின் பல களங்களில் பங்களித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். திரைப்பட நடிகராகவும் சிறந்த பங்களிப்பைத் தந்தார். அடிப்படையில் சிறந்த எழுத்தாளரான பூர்ணம் விஸ்வநாதன், நவம்பர் 15, 1920 அன்று, திருநெல்வேலி அருகே உள்ள தென்காசியில் பூர்ண கிருபேஸ்வர ஐயர் - உமா பார்வதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். பூர்ணம் ராமச்சந்திரன் என்னும் உமாசந்திரன், பூர்ணம் சோமசுந்தரம் இருவரும் இவரது மூத்த சகோதரர்கள். பூர்ணம் பாலகிருஷ்ணன் இளைய சகோதரர். தென்காசியில் பள்ளிக்கல்வி பயின்ற பூர்ணம் விஸ்வநாதன், புதுக்கோட்டையில் சித்தப்பாவின் இல்லத்தில் தங்கி, புகுமுக வகுப்பு (Intermediate) படித்தார். ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகளில் புலமை பெற்றார்.

பூர்ணம் விஸ்வநாதனின் சகோதரர் உமாசந்திரன் சென்னை அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். அவரது ஆலோசனையின்படி பூர்ணம் விஸ்வநாதன், 24-ம் வயதில் அகில இந்திய வானொலி டெல்லி நிலையத்தின் செய்திப் பிரிவில், செய்தி வாசிப்பாளராகப் பணியில் சேர்ந்தார். ஆகஸ்ட் 15, 1947-ல், இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில், டெல்லியிலிருந்து ஒலிப்பரப்பான அதிகாலை 5.30 மணி தமிழ்ச் செய்தியில், நாட்டின் சுதந்திரத்தை அறிவித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு இரு மகள்கள்; ஒரு மகன்.



பூர்ணம் விஸ்வநாதனின் சகோதரர்கள் உமாசந்திரன், பூர்ணம் சோமசுந்தரம் இருவரும் எழுத்தாளர்கள். அந்த வகையில் பூர்ணம் விஸ்வநாதனுக்கும் எழுத்தார்வம் வந்தது. தில்லியிலிருந்து வெளிவந்த 'சுடர்' இதழில் சிறுகதைகள், நாடகங்களை எழுதினார். இவரது சிறுகதைகள் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், கணையாழி போன்ற இதழ்களில் வெளியாகின. பூர்ணம் விஸ்வநாதன் மொழிபெயர்ப்புக்கும் சிறந்த பங்களித்தார். சில சிறுகதைகளையும் நூல்களையும் மொழிபெயர்த்தார். அவற்றுள் ஒன்று எம். சோக்ஸி, பி.எம். ஜோஷி இணைந்து எழுதிய 'Once upon a Time'. 'முன்னொரு காலத்திலே' என்று இதை நேஷனல் புக் ட்ரஸ்ட் 1972-ல் வெளியிட்டது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 'யோஜனா' இதழ்களின் ஆசிரியர் மற்றும் மூத்த நிருபராகவும் பணியாற்றினார்.

பூர்ணம் விஸ்வநாதன், உமாபுத்திரன், பூர்ணம், பூர்ணம் விசு போன்ற பெயர்களில் எழுதினார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். அவற்றில் சில தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தன. அதன் மறுபதிப்பைச் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் பவித்ரா பதிப்பகம் 'அம்மா அம்மா' என்ற தலைப்பில் 2023-ல் வெளியிட்டது.



பூர்ணம் விஸ்வநாதன் நாடக உலகிற்கும் வானொலிக்கும் ஆற்றிய பங்கு மகத்தானது. பல வானொலி நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தார். 400-க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதினார். டில்லியில் 'சௌத் இண்டியா கிளப்' நடத்தி வந்த நாடகக் குழுவில் இணைந்து 'பிரஸிடென்ட் பஞ்சாட்சரம்', 'நாலுவேலி நிலம்', 'போலீஸ்காரன் மகள்', 'கோமதியின் காதலன்' போன்ற பல நாடகங்களில் நடித்தார். 'கள்வனின் காதலி', 'பூ விலங்கு', 'வாஷிங்டனில் திருமணம்', 'விசிறிவாழை', 'சத்திய தரிசனம்' போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும்புகழைத் தேடித் தந்தன.

சுஜாதாவின் அழைப்பை ஏற்றுச் சென்னைக்கு வந்த பூர்ணம் விஸ்வநாதன், சென்னையில் உள்ள பத்திரிகைத் தகவல் பணியகத்தில் உதவித் தகவல் அதிகாரியாகப் பணிபுரிந்தார். மெரீனா எழுதிய 'தனிக்குடித்தனம்', 'ஊர்வம்பு', 'கால்கட்டு' போன்ற நாடகங்களில் நடித்தார். 'திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ்' குழுவினருடன் இணைந்து சுஜாதாவின் 'ஒரு கொலை.. ஒரு பிரயாணம்', 'அடிமைகள்' போன்ற நாடகங்களை அரங்கேற்றினார். 'பூர்ணம் நியூ தியேட்டர்' என்ற பெயரில் சொந்தமாக நாடகக் குழுவைத் தொடங்கி, சுஜாதாவின் 'கடவுள் வந்திருந்தார்', 'டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு', 'ஊஞ்சல்', 'அன்புள்ள அப்பா', 'வாசல்', 'சிங்கம் அய்யங்கார் பேரன்', 'பாரதி இருந்த வீடு' போன்ற நாடகங்களை மேடையேற்றினார். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பலவித வேடங்களில் நடித்தார். 'கேளடி கண்மணி', 'ஆசை', 'உயர்ந்த மனிதன்', 'கீதாஞ்சலி', 'கண்மணியே பேசு', 'கண் சிமிட்டும் நேரம்', 'கோபுர வாசலிலே', 'புதுப்புது அர்த்தங்கள்', 'மகாநதி' போன்றவை அவற்றுள் குறிப்பிடத் தகுந்தவை.

பூர்ணம் விஸ்வநாதன் படைப்புகள்
சிறுகதைத் தொகுப்பு: அம்மா அம்மா.
நாடகம்: சோம்பலே சுகம், தலை தீபாவளி, கௌரவ மாப்பிள்ளை.
மொழிபெயர்ப்பு: ஸ்ரீ சங்கராசாரியர், (ஹிந்தி மூலம்: விஷ்ணு ப்ரபாகர்), முன்னொரு காலத்திலே (ஹிந்தி மூலம்: எம். சோக்ஸி, பி.எம். ஜோஷி), கோதாவரி (ஹிந்தி மூலம், தேவ்ராஜ் தினேஷ்), அண்டர் செக்ரடரி - நாடகம் (ஹிந்தி மூலம்: ரமேஷ் மேத்தா)


பூர்ணம் விஸ்வநாதனின் கலை, இலக்கியப் பணிக்காக சங்கீத நாடக அகாடமி விருது கிடைத்தது, தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார். பூர்ணம் விஸ்வநாதன் அக்டோபர் 01, 2008 அன்று காலமானார்.

அரவிந்த்

© TamilOnline.com