இரண்டு எழுத்துக்கள் எஞ்சின
ராம என்ற பெயரின் மதிப்பை விளக்கப் புராணங்களில் ஒரு கதை உள்ளது. முனிவர் பிராசேதஸ் ஒரு சமயம் நூறுகோடி செய்யுள்கள் கொண்ட நூல் ஒன்றை இயற்றினார்! அதைத் தமக்கு வேண்டும் என்று கோரி மூன்று உலகங்களும் போட்டியிட்டன. போராட்டம் பேரழிவு நிலையை அடைந்தது, கடவுள் அவர்களை ஒன்றாக வரவழைத்து, ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பங்கை ஏற்றுக்கொள்ளக் கூறினார். அதாவது, சொர்க்கம், பூமி, பாதாள உலகம் ஒவ்வொன்றும் தலா முப்பத்து மூன்று கோடியே முப்பத்து மூன்று லட்சம் முப்பத்து மூன்றாயிரத்து முந்நூற்று முப்பத்து மூன்று ஸ்லோகங்களைப் பெற்றன.

ஒரே ஒரு ஸ்லோகம் எஞ்சியது. அதில் முப்பத்திரண்டு அசைகள் இருந்தன. அவையும் மூன்று உலகங்களுக்கு இடையே தலா பத்து அசைகள் வீதம் ஒதுக்கப்பட்டன. இப்போது இரண்டு அக்ஷரங்களே எஞ்சின. இரண்டை எப்படி மூன்றாகப் பிரிக்க முடியும்? எனவே, மூன்று உலகங்களாலும் அந்த இரண்டு அக்ஷரங்கள் சமமாக ஏற்றுப் போற்றப்பட வேண்டும் என்று கடவுள் முடிவு செய்தார்.

அவையே 'ரா', 'ம' என்ற எழுத்துக்கள். 'ராம' என்பது மோட்சத்தின் விலைமதிப்பற்ற திறவுகோல்.

இதயத் தாமரையில் இருந்து பக்தித்தேனை உறிஞ்சும் தேனீ ராமன். தேனீ தான் அமர்ந்திருக்கும் பூவின் இதழ்களை அவிழ்த்துவிடும். ஆனால் ராம நாமம் அதன் அழகையும் நறுமணத்தையும் அதிகரிக்கும். தன் கிரணங்களால் நீரைத் தன்னிடம் இழுத்து, மேகமாகக் குவித்து, பூமியின் தாகத்தைத் தணிக்க அதை மழையாகத் திருப்பி அனுப்பும் சூரியனைப் போன்றது அது. இவ்வாறு மந்திர சக்தி வாய்ந்த ராம நாமம், நாபியில் பிறந்து, நாக்குவரை உயர்ந்து, அதன்மீது மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறது.

'தத்-த்வம்-அஸி'' (நீ அதுவாக இருக்கிறாய்) என்ற வேதப்பொருள் ராம என்ற வார்த்தையில் பொதிந்துள்ளது, இது மூன்று ஒலிகளைக் கொண்டுள்ளது: 'ர', 'அ' மற்றும் 'ம'. இதில் 'ர' என்பது 'தத்' (அது) என்பது பிரம்மம், கடவுள்; 'ம' என்பது 'த்வம்' (நீ, ஜீவி, தனிநபர்); 'அ' இவ்விரண்டின் ஒருமைப்பாட்டின் குறியீடு.

நன்றி: சனாதன சாரதி, மார்ச் 2025

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா

© TamilOnline.com