திருமுருக கிருபானந்த வாரியார்
நாத்திகக் கருத்துக்களாலும், வெற்றுப்பேச்சு மேடையுரைகளாலும் மக்கள் மனம் சோர்ந்திருந்த காலத்தில், அவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, முருக பக்தியை தீவிரப்படுத்தி, இந்து சமய வளர்ச்சிக்கு உதவியவர் திருமுருக கிருபானந்த வாரியார். 'வேலை வணங்குவதே என் வேலை' என்ற நெறியில் வாழ்க்கைப் பாதையை வகுத்துக் கொண்டவர். மேடைச் சொற்பொழிவு, ஆன்மிக நிகழ்ச்சி, ஆலயத் திருப்பணிகள் இவற்றோடு இதழியல் பணி, புத்தகப் பணி போன்றவற்றையும் மேற்கொண்டு சமயம் வளர உழைத்த இல்லற ஞானி.

பிறப்பு
கிருபானந்த வாரியாரின் இயற்பெயர் கிருபானந்த வாரி. இவர், வேலூருக்கும், காட்பாடிக்கும் இடையில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூரில், ஆகஸ்ட் 25, 1906ல், முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியில், சுவாதி நட்சத்திரத்தில், மல்லையதாசர் - கனகவல்லி அம்மையார் தம்பதியருக்குப் பிறந்தார். தந்தை ஆன்மிகவாதியாகவும், உபன்யாசகராவும் திகழ்ந்தார். மகாபாரதம், கந்தபுராணம், இராமாயணம் முதலிய நூல்களைத் தொடர் விரிவுரையாகச் செய்து வந்து மக்களின் நன் மதிப்பைப் பெற்றிருந்தார். அவர் வழி இளம் வயதிலேயே வாரியாரும் ஆன்மிக நாட்டமுடையவராய்த் திகழ்ந்தார்.

கல்வி
கிருபானந்த வாரியார், இளவயதிலேயே மிகுந்த புத்திக்கூர்மை கொண்டிருந்தார். அதற்காக அனைவராலும் பாராட்டப்பட்டார். மூன்று வயதில் தந்தைமூலம் கல்விப் பயிற்சி தொடங்கியது. ஐந்து வயது நிரம்பியபோது நூல்களைத் தானாகப் படிக்கும் அளவுக்குப் பயிற்சி பெற்றிருந்தார். பள்ளிக்கு அனுப்பினால் குணநலன் மாறுபடும் என்று கருதிய தந்தை மல்லையதாசர், வீட்டிலேயே கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.

எழுந்ததவுடன் காலைக் கடன்களை முடித்து இறை வழிபாடு. பின் ஒரு மணி நேரம் குழல் வாசிக்கப் பயிற்சி. அதற்குப் பின் நன்னூல், தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களைக் கற்பது. தொடர்ந்து இலக்கியங்களைப் பயில்தல். மதியத்திற்குப் பின் தேவாரம், திருப்புகழ், கீர்த்தனைகளைப் பயின்று, எழுதி ஒப்பித்தல். மாலை நேரத்தில் புராண நூல்கள் பயிற்சி. இரவு நேரத்தில் வரலாற்றுக் கல்வி. இப்படியாகக் கிருபானந்த வாரியாரின் கல்வி அவரது தந்தையிடம் தொடர்ந்தது.

எட்டு வயதிலேயே 'வெண்பா' உள்ளிட்ட பாடல் வகைகளை இயற்றுமளவுக்குத் தேர்ச்சி பெற்றார் வாரியார். தொடர்ந்து அஷ்டநாகபந்தம், மயில்பந்தம், வேல்பந்தம், சிவலிங்கபந்தம் முதலிய சித்திரக் கவிகளையும் இயற்றும் புலமை கைவரப் பெற்றார்.

பத்து வயதில் இலக்கியங்கள், திருமுறை, புராணம் எனப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் வாரியாருக்கு மனப்பாடம் ஆகியிருந்தன. தந்தையார் மிகுந்த கண்டிப்பு உடையவர் என்பதால் கல்வியோடு ஒழுக்க நெறியையும் போதித்து வளர்த்தார்.



தீட்சை
கிருபானந்த வாரியாருக்குக் குல வழக்கப்படி, அவருக்கு ஐந்து வயதில் திருவண்ணாமலை பாணிபாத்திர மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட நன்னாளில் தந்தையார் ஷடாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார்.

மதுரையைச் சேர்ந்த திருப்புகழ் சாமிகள், காங்கேயநல்லூருக்கு வந்தபோது, அருணகிரிநாதருடைய ஆராதனை விழாவில், முருகப் பெருமானின் ஆலயத்தில், கிருபானந்த வாரியாருக்கு சூட்சும ஷடாக்ஷர மந்திரத்தை உபதேசித்தருளினார். அவரே கிருபானந்தவாரியாரின் குருநாதர்களில் ஒருவராக அமைந்தார். பெருமணநல்லூரில் மகா சிவராத்திரியன்று பழநி சைவ சித்தாந்தச் சரபம் சிவத்திரு ஈசான சிவாச்சாரிய சுவாமிகள், வாரியாருக்கு சிவாகம விதிப்படி தீட்சை கொடுத்தருளினார். அப்பொழுது வாரியாருக்கு 'வாமதேவ சிவம்' என்ற தீட்சாநாமம் சூட்டப்பட்டது.

சொற்பொழிவு
வாரியார் பதின்பருவத்தைக் கடந்ததும் தந்தை மல்லையதாசர், தான் சொற்பொழிவுச் செய்யச் செல்லும் இடமெல்லாம் வாரியாரையும் அழைத்துச் சென்றார். அங்கு தந்தைக்கு உதவியாக இருந்து, பின்பாட்டுப் பாடி, கையேடு வாசித்தார். தந்தையின் சொற்பொழிவுகளை உன்னிப்பாகக் கவனித்து பேச்சுக்கலையின் நுட்பங்களைக் கற்றார். தந்தையுடன் இருமுறை கப்பலில் பர்மா சென்று தந்தை ஆற்றிய சொற்பொழிவுகளில் பின்பாட்டுப் பாடி, மக்களின் மனம் கவர்ந்தார்.

திருமணம்
வாரியாருக்குப் பத்தொன்பது வயது நிரம்பியபோது, மாமன் மகளான அமிர்தலட்சுமியுடன் திருமணம் நிகழ்ந்தது. இல்லறம் இனிய நல்லறமாகத் திகழ்ந்தது என்றாலும் அவர்களுக்குக் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. அதுவும் முருகன் திருவருளே என்று எண்ணிய வாரியார் வழக்கம்போல ஆன்மிக நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினார். கடும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்.

தனிச் சொற்பொழிவுகள்
நாளடைவில் கிருபானந்த வாரியாருக்குத் தனியாகச் சொற்பொழிவு வாய்ப்புகள் வந்தன. தந்தை அனுமதித்ததால் பல்வேறு தலங்களுக்கும் ஊர்களுக்கும் சென்று ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். குறிப்பாகச் சென்னையில் அவரது சொற்பொழிவுகளுக்கு மிகுதியாக வரவேற்புக் கிடைத்தது. அதனால் சென்னையிலேயே தங்கி அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சொற்பொழிவுகள் செய்தார்.

சிந்தாதிரிப்பேட்டையில், 'கதிர்வேல் எறிந்தவன் தொண்டர் குழாம்' என்ற ஓர் சங்கம் நிறுவப்பட்டது. அதில் மாதந்தோறும் கடைசி சனி, ஞாயிறுகளில் திருப்புகழ் தத்துவார்த்தப் பிரசங்கத்தைச் செய்துவந்தார்.



பாம்பன் சுவாமிகளுடன்
கிருபானந்த வாரியார், முருகன் அருள் பெற்றவரும், முருகனிடமே நேரடியாக தீட்சை பெற்றவருமான பாம்பன் சுவாமிகள் பற்றி நன்கு அறிந்திருந்தார். அவரது நூல்களையும் பாராயணம் செய்து வந்தார். ஒரு சமயம் சொற்பொழிவாற்றச் சென்றபோது, அருகில் ஓர் இடத்தில் பாம்பன் சுவாமிகள் தங்கியிருப்பதை அறிந்தார். நண்பர்களோடு சுவாமிகளைக் காணச் சென்றார். சுவாமிகள் அப்போது 'அசோக காலவாசம்' என்ற தனது நூலுக்கு விளக்கவுரை ஆற்றிக்கொண்டிருந்தார். அதைக் கேட்டு மகிழ்ந்தார் வாரியார் சுவாமிகள்.

கிருபானந்த வாரியாரின் முதல் குரு அருணகிரிநாத சுவாமிகள். இரண்டாவது குருவாகப் பாம்பன் சுவாமிகள் அமைந்தார். தனது இல்லப் பூஜை அறையில், முருகப்பெருமான், அருணகிரிநாதர் ஆகியோரோடு, பாம்பன் சுவாமிகள் திருவுருவப் படத்தையும் வைத்து வழிபட்டு வந்தார் கிருபானந்த வாரியார்.

பாம்பன் சுவாமிகள் சமாதியான பிறகு, திருவான்மியூரில் உள்ள அவரது சமாதிக் கோயிலுக்கு அவ்வப்போது சென்று வந்தார். அங்கு நிகழும் 'மயூரவாகன சேவன' விழாவிலும், பாம்பன் சுவாமிகளின் குருபூஜை விழாவிலும் தவறாமல் கலந்துகொண்டு ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தார்.

ஆன்மிகப் பயணங்கள்
கிருபானந்த வாரியார், ஆடி மாதத்தில் கதிர்காமத்தில் நிகழும் ஆடிவேல் விழாவைத் தரிசிக்கும் பொருட்டு இலங்கைக்குப் பயணப்பட்டார். அங்கு மிகச் சிறப்பானதொரு சொற்பொழிவாற்றி மக்களின் மனம் கவர்ந்தார். பின்னர் ராமேஸ்வரம் வந்து ராமநாதரை வழிபட்டார். திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டார். குலசேகரப் பட்டணம் சென்று அம்மனைத் தரிசித்து அரியதொரு சொற்பொழிவாற்றிவானார்.

பின் அருணகிரிக்கு முருகன் அருள்புரிந்த தலமான வயலூருக்கு வந்து சேர்ந்தார்.

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com