மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை அறிந்திருந்தாலும் நிச்சயமின்மை, மாற்றம் அல்ல. இரவில் படுக்கப் போகுமுன் ஒன்று, தூங்கி எழுந்தால் இன்னொன்று, நடுப்பகலில் மற்றொன்று என்று முடிவுகளை மாற்றிக்கொண்டே இருப்பதுதான் அமெரிக்க அதிபரிடம் எதிர்பார்க்கத் தக்கது என்பதை உலக நாடுகள் புரிந்துகொண்டு விட்டன. கனடா, ஐஸ்லாந்து, டென்மார்க் போன்றவை நட்பு நாடுகளாகத் தம்மை உணரவில்லை. 500% வரிவிதிப்பு என மிரட்டலுக்கு ஆளான இந்தியாவின் நிலையும் அதேதான். போதாக்குறைக்கு 'பெரிய அழகிய (பொருளாதார) மசோதா' அதிபரின் கையிலும் அரசின் கையிலும் அதிகாரத்தை அபாயகரமான அளவுக்குக் குவித்துள்ளது! மக்கள்நலத் திட்டங்கள், கல்வி மானியங்கள், கீழ்த்தட்டு மக்களுக்கு மருத்துவக் காப்பீடு என்று பலவும் பலத்த அடி வாங்கியுள்ளனர். தாய்நாட்டில் உள்ள தம் குடும்பத்துக்கு ஏதோ சிறிது பணம் அனுப்ப முயலும் அன்றாடங் காய்ச்சிகளும் இப்போது வரிவிதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அரசியல் எதிரிகளைக் குழாயடிச் சண்டை பாஷையில் ஏசுவது அதிபரின் மற்றோர் அநாகரிகமான அருங்குணம். இதுவரையில் 'உடன்பிறப்பாக' இருந்த இலான் மஸ்க்கும் இதற்கு விதிவிலக்கு அல்ல. 'பெரிய அழகிய பட்ஜெட்' இவருக்கும் பிடிக்கவில்லை.
ரஷ்யா-உக்ரைன் போர், இரான்-இஸ்ரேல் போர் தவிர ஹூத்திகளின் தாக்குதல் என்று உலகம் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இஸ்ரேல் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் இறங்கியது, எங்கே உலகப் போராகிவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் புதுப்பிக்கத்தக்க (renewable), இயற்கையை மாசுபடுத்தாத ஆற்றல் மூலங்களை அதிகரிக்கப் பெருமுயற்சி நடந்துவரும் இந்த நாளில், ட்ரம்ப் அரசு மீண்டும் பெட்ரோலியம்சார் எரிபொருள்களுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பது மற்றோர் அச்சுறுத்தும் முன்னெடுப்பு. இவற்றின் கடும் விளைவுகள் நம் தலைமுறையிலேயே பார்க்கக் கிடைக்கும். அவை யாருக்கும் மகிழ்ச்சி தருவதாக இருக்காது.
★★★★★
அறிவியல் புனைவெழுத்தாளர் ராம்பிரசாத், கலைத்துறை முன்னோடி கேதரின் குஞ்ஞிராமன் ஆகியோரின் நேர்காணல்கள் இந்த இதழை அணி செய்கின்றன. திருமுருக கிருபானந்த வாரியார் குறித்த கட்டுரை தெவிட்டாத பக்தித் தேன். சுவையான பல அம்சங்களோடு தென்றல் உங்களை மீண்டும் வருடி மகிழ்விக்க வந்திருக்கிறது.
வாசகர்களுக்கு குரு பௌர்ணமி, ஆடிப்பூரம், முஹர்ரம் வாழ்த்துக்கள்.
தென்றல் ஜூலை 2025 |