"அப்புறம்? இன்னும் யார் யாரெல்லாம் கண்ணிலே பட்டா? ஒன்னோட பிரியமான டீச்சரம்மா... பழைய சிநேகிதிகள்..."
''போறுமே! கிண்டலும் கேலியும்... நிஜமாவே நான் ஒருத்தியைப் பார்த்தேன். யாருன்னு சொன்னப்புறம் உங்களுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கும். வினயா! ஞாபகம் வச்சிண்டிருக்கேளா?"
ஒரு சின்னதான சிலிர்ப்பு, கால்களைத் தழுவி ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியின் சலசலப்புக் குளுமையையும் மீறிக்கொண்டு இங்கிதமான சிலிர்ப்பு.
"அவளா! அந்த வினயாவா?"
அன்றைக்கு எத்தனை பெரிய உபதேசம் பண்ணித் தன் தோழிக்கு அவள் கடிதம் எழுதியிருந்தாள்? வெறும் கடிதமா அது! ஒரு இனிய ஆற்றுப்படை, தோழி ஆற்றுப்படை என்று சொல்லலாமா?
அந்தக் கடிதம் யாருக்கு எழுதப்பட்டதோ அவளை விடவும். அவளுக்குத் துணையாய் வந்த என்னையே பெரிதும் ஆற்றுப்படுத்தியது.
"வாழ்க்கை என்பது ரெட்டை மாட்டு வண்டி மாதிரி லக்ஷ்மி. ஒரு மாடு சண்டித்தனம் பண்ணினாலும் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச்சேர முடியாது. இனிமையான பிரயாணத்தோட ருசியே கெட்டுப் போயிடும்... ஜாக்கிரதையா நடந்துக்கோ."
முதன் முதலில் நானும் லக்ஷ்மியும் தனிமையில் சந்தித்துக்கொண்ட மனோகரமான போதில் இந்த வாழ்த்துக் கடிதத்தைத்தான் என்னிடம் கொடுத்தாள். அதுவும் தயங்கித் தயங்கி எதையாவது பேச வேண்டுமே என்கிற தவிப்பில். வினயாவின் வாழ்த்து வீண்போகவில்லை. ஒரு எழுத்துக்கூடத் தடுமாறவில்லை. ஆரம்பத்தில் மாடுகள் கொஞ்சம் முரண்டு பண்ணியிருக்கக் கூடும். பாதை பழகிய பிறகு 'ஜல்ஜல்' என்று கனஜோராய்ப் பயணம் வெற்றிகரமாய் முப்பது ஆண்டுகள் கடந்து வந்துவிட்ட பிறகு…
"என்ன ஒரேயடியா அசந்து போய் ஒக்காந்துட்டேள்!"
"ம்... என்ன சொன்னே?"
'களுக்' கென்ற அவளுடைய சிரிப்பில் வயசு காணாமல் போய்விடுகிறது.
"ஏன்னா! சின்ன வயசிலே நீங்களும்தானே மழை ஜலத்திலே கப்பல் பண்ணிவிட்டிருப்பேள். இந்தாங்கோ..."
அளவாய்க் கிழித்த காகிதத்தில் மடித்த கப்பல்களில் ஒன்றை அவளுடைய கரத்திலிருந்து எடுத்துக் கொள்கிறேன். அவள் கையிலும் மற்றொன்று.
"ஆளுக்கு ஒரு கப்பல்... எது மொதல்லே போறதோ..."
கேலியாய்ச் சிமிட்டும் அவளுடைய கண்ணின் பார்வை ஒளி என்னைச் சுடுகிறது.
"ஒன்... டூ... த்ரீ" சொல்லிக் கப்பல்களை ஒரே நேரத்தில் அருவியோட்டத்தில் மிதக்கவிடுகிற இதமான விளையாட்டில் மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது.
"எந்தக் கப்பல் முன்னாலே போகும்?"
சொல்லி வைத்த மாதிரி இரண்டு கப்பல்களும் கனஜோராய்ப் புறப்பட்டுத் தங்கு தடைகளைச் சமாளித்துக் கொண்டு சற்று இடறி ஒரு குறுக்குப் புல் மேட்டில் இளைப்பாறுகிற மாதிரி ஒதுங்கி நின்று - அடுத்ததாய் ஒரு சின்னச் சுழலில் இரண்டும் ஒன்றாகவே மூழ்கி அமிழ்ந்து போகிறபோது... மனம், குதூகலிக்கிறது.
என்னிடம் தோற்றுப்போகிற ஒவ்வொரு கணமும் இவளுக்கு இனிமையானதே. அதேபோல் இவளிடம் தோற்றுப்போகிற ஒவ்வொரு கணமும் எனக்கு இனிமையின் செறிவுதான். தோல்வியில் இனிமை காண்கிற இந்த வாழ்க்கையில் யார் அடிமை? யார் தலைவன்?
குறும்பாய்க் கண்களில் சிரிப்பை நிறைத்துக் காட்டுகிற லக்ஷ்மி. இவளுக்கா ஐம்பது வயதாகி விட்டது? இவளுடனா மருமகள் கோபித்துத் தனியாய்ப் போகவேண்டுமென்று கணவனிடம் அடம் பிடிக்கிறாள்?
கொடைக்கானல் மலையடிவாரத்துச் செழிப்புக்குக் கட்டியம் கூறவேண்டிய அந்த நகரம் - நகரசபையாம் - கேட்பாரற்றுக் கிடக்கிறது. நாலாந்தரக் கிராமப்புறத்தின் குண்டு குழிச் சாலையை நல்லவை ஆக்குகிற மாதிரி பராமரிப்பு.
"எங்க ஊரைப் பத்திச் சொல்லலேன்னா ஒங்களுக்குத் தூக்கமே வராதே" -உரிமை மேலீட்டால் அவள் அலுத்துக்கொள்கிற போதின் குங்குமச் சிவப்பைக் காணமுடியாமல் இருட்டு சதி செய்கிறது.
எழுகிறேன். அவளும் படித்துறை நீரில் ஊறிய கால்களை மெல்லென எடுத்து வைத்துப் பாசி வழுக்கலில் இடறுகிற போது - ஐம்பது வயதிலும் ஒரு சுகமான அனுபவம்! தோளில் சாய்ந்தவளை அப்படியே அணைத்துப் பிடிக்கிற சாக்கில் கூந்தலை அளைகிற இனிமையின் செறிவில் –
"போறும்... சின்ன வயசு, யாராவது பார்க்கப் போறா."
"நிஜமாகவே போதுமா?" போலியான கோபத்தில் விலகிக் கொள்ள முயல்கிறேன். அவளே பிடித்து நிறுத்துகிறாள்.
பிறந்தகம் வந்து... நான்கு நாட்கள் தங்கி விட்டுத் திரும்பவும் நாளை நகரச் சந்தடிகளில் அலைப்புற வேண்டுமே என்கிற வேண்டா மனத்துடன் அவளும் சலிப்படைகிறாள். வீடு திரும்ப நடக்கும் போது...
"ஜனனி என்ன சொன்னா? முடிவா என்னதான் செய்யப் போறே?..."
பெருமூச்சு விடுகிறாள்.
"மாமியார் - மருமகள் பிரச்னை மட்டுமில்லை. இது மனோபாவத்தோட பிரச்னை. லலிதா யாரையோ காதலிச்சுக் கல்யாணம் பண்ணிண்டுட்டான்னப்புறம் இவளுக்கு மனசு விஷமாயிடுத்து. நம்மகூட இருந்தா கௌரவப் பிரச்னை வேறே... எல்லாம் புரியறது. ரகு ஒரு 'ஸாட்டிலைட்' தான். அவனுக்குச் சுயமாய்ப் பிரகாசம் கிடையாது. இவளைச் சுத்தினாத்தான் அவனுக்கு ஜீவனே இருக்கும். அதனாலே பிள்ளையை நம்பிப் பிரயோசனமில்லே. அவா தனியாவே போயிடட்டும்."
ரகு - லலிதா இரண்டே குழந்தைகள்.
மகன் பெற்றவர்களை விட்டுவிட்டு மனைவியோடு தனியாய்ப் போய்விடுவது என்பது இப்போது ரொம்பவும் சாதாரணமாகி விட்டது.
லலிதாவும் ஒன்றும் முறை தவறி நடந்துவிடவில்லை. அப்பாவும் அம்மாவும் நிச்சயம் சம்மதிப்பார்கள் என்கிற நம்பிக்கைதான் அவளுடைய காதலுக்குக் கட்டியம் கூறியிருக்க வேண்டும். தன் மனத்துக்கினியவனைப் பெற்றவர்களிடம் மறைத்து வைக்காமல் அழைத்து வந்து காட்டிய நேர்மையைப் பாராட்டத்தான் வேண்டும்.
ரகுவுக்கு இது ஒரு ஆற்றாமைதான். ஜனனிக்கு இது எந்த வகையிலும் பிரச்னையாக இருக்க முடியாது. அவளுடைய மனவளம் ஆரோக்கியமானதாய் இல்லை என்றே கருதவேண்டி இருக்கிறது.
வீடு வந்து சேர்கின்றவரை மனம் கிடந்து அலைகிறது. ரகுவும் ஜனனியும் தனியாய்ச் சென்றுவிடுகிறது என்பது என்னைவிட அவளுடைய மனநிலையை வெகுவாய்ப் பாதிக்கும். ‘சின்ன ரகு'வின் குறும்புகளில் திளைக்காமல் ஒரு பொழுதைக்கூட அவளால் கழிக்க முடியாது. ஜனனி வேறு அடுத்த பிஞ்சு ஒன்றை வளர்த்துக் கொண்டிருக்கிறாள். இந்த நேரத்தில்...
"இந்த பாருங்கோ. ஜனனிக்கு இப்போ பச்சை உடம்பு. தனியாப் போய் இருக்கணும்னு ஏனோ ஆசை வந்திருக்கு, அப்படி எடுத்துப்போமே. ஒரு பத்து நாள் விலகி இருந்தாலே அவளுக்கு என்னோட அவசியம் புரிஞ்சிடும். என்னவோ ஒரு காரணம், லலிதா கல்யாணம் பண்ணிண்டது கெடச்சிருக்கும். போய்த்தான் இருக்கட்டுமே."
சிரித்துக் கொள்கிறேன்.
அவளைப் பொறுத்தவரை ரகுவும் லலிதாவும் இரண்டுமே இரண்டு புஷ்பங்கள்தான். எது பவழமல்லிகை? எது நந்தியாவட்டை? பூஜைக்கு உரியனவான இந்த இரண்டு மலர்களிலும்தான் எத்தனை வித்தியாசங்கள்!. வண்ண ஆடம்பரங்கள் நிறைந்திருந்தாலும் எது சாக்கு என்று சொல்லுகிற மாதிரி, தொட்டால் மரத்தை விட்டு உதிர்ந்து விடுகிற பவழ மல்லிகை. முழு எளிமையுடன் வெள்ளையாய்ச் சிரித்துக் கொண்டே காம்பை விட்டு அகல மறுக்கிற நந்தியாவட்டை... பாசப் பிணைப்பின் இரு துருவங்களா இவை?
பவழ மல்லிகையாய்க் கழன்றுகொள்ளத் துடிக்கிற ரகுவும், அவனை இயங்கி வைக்கிற ஜனனியும், வெள்ளைச் சிரிப்பு மாறாமல் அம்மாவையே சுற்றி வருகிற நந்தியாவட்டையாய் லலிதாவும் - 'கடவுளே! இரண்டையும் ஒன்றுபோல் பாசப் பிணைப்பு மாறாமல் வைக்க மாட்டாயா' என்று மனம் அடித்துக் கொள்கிறது.
வாசலில் யாரோ அழைப்பது கேட்கிறது. லக்ஷ்மி விரைகிறாள். 'வினயா!' ஆவல் மேலிட இவள் அழைப்பது கேட்கிறது.
"இந்த பாருங்கோ. வினயா வந்திருக்கா. இத்தனை வருஷமாகியும் இவளெ ஒங்களுக்கு நான் நேரிலே அறிமுகம் பண்ணவே இல்லியே. நாளைக்கு ஊருக்குப் போகப் போகிறோம்னு சொன்னேன். வந்திருக்கா."
சின்னக் குழந்தையின் துள்ளலுடன் அந்த அறிமுகம் நிகழும்போது சம்பிரதாயமாக அவளுக்கு வணக்கம் சொல்கிறேன். 'உன்னுடைய கடிதம் தான் எங்கள் இனிமையான வாழ்க்கைக்கு அடியெடுத்துக் கொடுத்தது' என்று சொல்லக் கூச்சமாக இருக்கிறது.
'உங்களைப்பத்தி லக்ஷ்மி நிறையச் சொல்லியிருக்கா. நேரிலே பார்த்ததில்லே...'
"வினயாவுக்கு ஆறு குழந்தைகள்... பெரியவ எங்கேயோ ஆப்பிரிக்காவில் டாக்டரா இருக்கா... அடுத்தவன் மதுரையிலே தான் வேலை பார்க்கிறான். மத்ததெல்லாம் படிப்பை முடிக்கல்லே. குலுகுலுன்னு கறையான் புற்று மாதிரி குடும்பம் இருக்கணும்னு இவளுக்கு ரொம்ப ஆசை."
'என்னடி இது அறிமுகம்' என்று கூசுகிறவள் போல் வினயா தலையைத் தாழ்த்திக் கொள்கிறாள்.
"பையன் மதுரையிலே மில் மானேஜர். ரொம்பப் பெரிய உத்தியோகம். ஆனா நான் அவன் கூடப்போய் இருக்கக் கூடாதுன்னு இவர் உத்தரவு. கூடப்போய் இருந்தா, பாசம் குறைஞ்சுடும்னு இவரோட வாதம், பிள்ளைகளெல்லாம் ஹாஸ்டலிலே படிச்சிண்டிருக்கா. நாங்க ரெண்டு பேரும் மட்டும் தான் இங்கே."
லக்ஷ்மி என்னைப் பார்க்கிறாள். 'ஜனனி உன்னை விட்டுக் கணவனுடன் பிரிந்து போகத் துடிக்கிறாள். இங்கே பெற்றவர்கள் பிள்ளையிடம் போயிருப்பது நல்லதில்லை என்று எண்ணுகிறார்கள். எது சரியான வாதம்?’
வினயாவின் மனநிலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவளுடைய கணவன் மனநிலைதான் அவளுடையதும். லக்ஷ்மியின் மனநிலையைத்தான் நான் அங்கீகரிக்க வேண்டும்.
யாருக்கு யார் விட்டுக் கொடுப்பது என்பதில் இது ஒரு வகை.
"இங்கேயும் அதே பிரச்னை தானம்மா. ஆனா வேறே வடிவம். பிள்ளையும் மருமகளும் தனியாப் போகணும்னு ஆசைப்படறா. இவளுக்கு மனசு இடந்தரல்லே, கிடந்து மறுகிண்டிருக்கா."
தோழியர் இருவரும் தங்களுக்குள் ஏதோ பேசத் தொடங்குகிறார்கள்.
நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறேன்.
நாளை ஊர் திரும்பியதும் என்ன நிலை இருக்கும்? ரகு தனியாக வீடு பார்த்திருப்பானா? லலிதா கணவனுடன் எங்களிடமே வந்துவிடுவாளா? அல்லது ஒரே கூட்டுக் குடும்பமாய் இரண்டு புஷ்பங்களுடனும் மகிழ்ச்சி பெருகி வருமா?
சின்னதான எத்தனையோ கசப்புகள், துவர்ப்புகள், இவைகூட இல்லாவிட்டால் வாழ்க்கையின் இனிமைக்கு வேறு என்னதான் உரைகல் இருக்கிறது?
சுப்ர. பாலன் |