புரிசை கண்ணப்ப சம்பந்தன்
2025ம் ஆண்டுக்கான, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார், பி.கே. சம்பந்தன் என்னும் புரிசை கண்ணப்ப சம்பந்தன். இவர் கூத்துக் கலையைத் தமிழகமெங்கும் பரப்பிய புரிசை கண்ணப்பத் தம்பிரானின் மகன். பரம்பரை பரம்பரையாகத் தெருக்கூத்துக் கலையை வளர்க்கும் கலைஞர்களின் பாரம்பரியத்தில் வருபவர். ஐந்தாவது தலைமுறையாக தெருக்கூத்தைப் பரப்பி வருகிறார். இவரது சகோதரர் கண்ணப்ப காசியும் கூத்துக் கலைஞராகச் செயல்பட்டார். மூத்த மகளின் கணவர் பழனி முருகன் ஆறாவது தலைமுறையாக இக்கலையைத் தொடர்கிறார்.

பிறப்பு
பி.கே. சம்பந்தன் என்னும் புரிசை கண்ணப்ப சம்பந்தன், அக்டோபர் 16, 1953ல், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றை அடுத்துள்ள புரிசையில், கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் - மதி கண்ணம்மாள் இணையருக்கு இளைய மகனாகப் பிறந்தார். எட்டாம் வகுப்புவரை கல்வி பயின்றார்.

நாடக முயற்சிகள்
புரிசை கண்ணப்ப சம்பந்தன் இளவயது முதலே கலையார்வம் கொண்டு தந்தை கண்ணப்பத் தம்பிரானிடம் கூத்துப் பயிற்சி பெற்றார். பல்வேறு கூத்துகளில் நடிக்கத் தொடங்கினார். நாடக ஆர்வத்தால் கூத்துப்பட்டறையில் சேர்ந்து நவீன நாடக உத்திகளைக் கற்றுத் தேர்ந்தார். துரியோதனன், துச்சாதனன், அர்ஜுனன், முருகன், இந்திரஜித், ராவணன் எனப் பல்வேறு வேடங்களை ஏற்றுப் பாராட்டுகளைப் பெற்றார்.



நாடகப் பங்களிப்புகள்
கூத்து மற்றும் நாடகத்தின் நுணுக்கங்களை முறையாகக் கற்ற புரிசை கண்ணப்ப சம்பந்தன், புதிதாகப் பல முயற்சிகளைக் கூத்தில் கையாண்டார். மகாபாரதம், ராமாயணம் போன்ற புராணக் கதைகள் மட்டுமல்லாமல், சமூகக் கதைகளை மையமாக வைத்துப் பல நவீன நாடகங்களை, கூத்துக்களை நிகழ்த்தினார். எண்ணற்ற இளங்கலைஞர்களை உருவாக்கினார். தெருக்கூத்தின் பழைய அம்சங்களை மீண்டும் கலையரங்கிற்குக் கொண்டு வந்தார். 1977ல் காந்திகிராமில் பன்சி கவுல் நடத்திய தேசிய நாடகப் பள்ளிப் பட்டறையில் பங்கேற்றார். பாதல் சர்கார் மற்றும் இங்போர் மேயரின் பட்டறைகளில் கலந்துகொண்டார். புதுதில்லி தேசிய நாடகப் பள்ளி, ஆல்வே சர்வதேச நாடகப் பட்டறை, பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம், பாஸ்கரின் கலை அகாடமி (சிங்கப்பூர்) ஆகியவற்றில் தெருக்கூத்துப் பட்டறைகளை நடத்தினார்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் அமெரிக்கா, ரஷ்யா, லா ரீயூனியன், இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ், ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் நடைபெற்ற கலை விழாக்களில் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினார். கொலம்பியாவில் நடைபெற்ற ஐந்தாவது உலக நாடக மாநாட்டில் பங்கேற்று கார்சியா மார்க்கஸின் 'அன் ஓல்ட் மேன் வித் ஹியூஜ் விங்ஸ்' நாடகத்தைத் தெருக்கூத்தாக நடத்தினார். புரிசையில் மட்டுமன்றி சிங்கப்பூரிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு தெருக்கூத்துப் பயிற்சியளித்தார்.



விருதுகள்
புரிசை கண்ணப்ப சம்பந்தன் தனது நாடக முயற்சிகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றவர். 1995ல் கலைமாமணி, 2012ல் சங்கீத நாடக அகாதெமி விருது ஆகியவற்றைப் பெற்றார். டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார். தட்சிண சித்திரா கலை விருது, நாடகத் தமிழ் அறிஞர் பட்டம், சென்னைத் தொலைக்காட்சி அளித்த பொதிகை விருது, சிங்கப்பூரின் நிருத்யாலய அழகியல் சங்கத்தின் நிருத்ய கலா நிபுணர் விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் கலைச்சுடர் விருது, டாக்டர். எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் விருது, நாட்டார் கலைக்கோன் விருது எனப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

தெருக்கூத்துக் கலை இன்று
புரிசை கண்ணப்ப சம்பந்தனின் முன்னோரான துரைசாமி தம்பிரான் காலத்தில் தோல்பாவை ஆட்டமாக ஆரம்பித்த இந்தக் கலை பின்னர் தெருக்கூத்துக் கலையாக மாற்றம் கண்டது. தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்து புரிசை கண்ணப்ப சம்பந்தனும் அவரது குழுவினரும் செயல்பட்டு வருகின்றனர். புரிசையில் கூத்துக்கலைக்கான பயிற்சிப் பள்ளியை அமைத்து அதில் ஆர்வமுள்ளோருக்கு தெருக்கூத்துப் பயிற்சியளித்து வருகிறார் சம்பந்தன். வார இறுதி நாட்களில் தொடர்ந்து 15 வாரங்கள் என்ற வகையில் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. ஆர்வமுள்ள சிறார்களுக்கான பயிற்சிகளும் நடக்கின்றன.



புரிசை கண்ணப்ப சம்பந்தனின் மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஐந்து மகள்கள். நான்காவது மகள் கௌரியும் கூத்தில் நடிக்கிறார். அவர் கர்நாடக சங்கீதம் கற்றவர். முனைவர் பட்டம் பெற்றவர்.

இயல், இசை, நாட்டியம் என மூன்றும் கலந்த கலவை தெருக்கூத்து. காலங்கள் மாறினாலும், இக்கலைக்குத் தன்னை தலைமுறை தலைமுறையாக அர்ப்பணித்து வாழும் கலைஞர்கள் பலர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராக அறியப்படுகிறார் புரிசை கண்ணப்ப சம்பந்தன்.

"கூத்துக் கலையைப் பாதுகாக்கவும், வளா்க்கவும் அரசுப் பள்ளிகளில் அதனை விருப்பப் பாடமாக அமல்படுத்த வேண்டும். ஆா்வமுள்ள கலைஞா்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவா்களைப் பள்ளிகளில் சிறப்பாசிரியா்களாக நியமிக்க வேண்டும்" என்பது புரிசை துரைசாமித் தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தின் தலைவராக உள்ள புரிசை கண்ணப்ப சம்பந்தனின் வேண்டுகோள்.

பத்மஸ்ரீ விருதாளருக்குத் தென்றல் இதழின் நல்வாழ்த்துகள்.

தென்றல்

தகவல் உதவி: குருகு தளம் மற்றும் தமிழ் விக்கி தளம்
மேலும் விவரங்களுக்கு: www.purisaikoothu.org

© TamilOnline.com