அதிபர் ட்ரம்ப் பதவி ஏற்று ஒரு மாதம்தான் ஆகிறது. அது ஒரு சூறாவளி மாதம் என்றால் சந்தேகமில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதான எண்ணற்ற அறிவிப்புகள். USAID நிதியினால் பலனடைந்த உலகளாவிய சமூக, சமுதாய, சுற்றுச் சூழல் நலத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன; ஒட்டு மொத்தமாக அரசுத் துறைப் பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்; மிரட்டும் அளவில் பல நாடுகளுக்கான சுங்க வரி ஏற்றப்பட்டது; இத்தனையும் போதாதென்று, பிற நாட்டுத் தலைவர்களோடு, 'ராஜ தந்திரம்' என்ற சொல்லுக்குச் சற்றும் பொருந்தாத வகையில் முரட்டுப் பேச்சு... என்று சொல்லிக்கொண்டே போகலாம். மாற்றத்துக்கு மக்கள் அவசரப்பட்டுவிட்டார்களோ! இன்னோரு கோணத்தில், மக்களின் அரசுப் பணம் மடை மாற்றப்பட்டு, அமெரிக்கச் சமுதாயத்துக்குப் பயன்படும் வகையில், உற்பத்தி, வணிகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், உள் கட்டமைப்புப் பணிகள், போக்குவரத்துச் சாதனங்களை நவீனப்படுத்துதல் என்று இவற்றுக்கு வளம் சேர்க்குமோ! பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளதோ? வரிகளும் விலைவாசியும் குறைந்து மக்கள் வாழ்க்கை எளிதாகுமோ? எடை போட இன்னும் சமயம் வேண்டும். நல்லதே நடக்கும் என நம்புவோம். காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
★★★★★
66.3 கோடி மக்கள் சென்று புனித நீராடிய பிரயாக்ராஜ் தலத்தின் கும்பமேளா உலக அதிசயங்களுள் ஒன்று, அதை நன்கு திட்டமிட்டு, விரும்பத் தகாத சம்பவங்கள் இன்றி நடத்தி முடித்த யோகிஜியின் அரசுக்குப் பாராட்டுகள். இன்னொரு பக்கம், பசுத்தோல் போர்த்திய புலியாகத் தோன்றிப் பதவியைக் கைப்பற்றி டெல்லியில் அராஜக ஆட்சி நடத்திய கேஜ்ரிவாலின் கட்சி தோல்வி அடைந்தது நல்லதுதான். நெடுங்காலத்துக்குப் பின் வென்றுள்ள பாஜக, டெல்லி மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கட்டும்.
★★★★★
நாட்டுப்புறக் கலையான தெருக்கூத்துக்குத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களின் திறனையும் சேவையையும் மெச்சி 'பத்மஸ்ரீ' விருதை பாரத அரசு கொடுத்துள்ள இந்தத் தருணத்தில் அவரது அருமையான வாழ்க்கைக் குறிப்பைக் கட்டுரையாகத் தருவதில் தென்றல் பெருமை கொள்கிறது. எழுத்தாளர் அரசு மணிமேகலை, சுவாமி சகஜானந்தர் ஆகியோர் குறித்த கட்டுரைகளும் சுவையான சிறுகதை ஒன்றும் இவ்விதழின் சிறப்புகள்.
வாசகர்களுக்கு அனைத்துலக மகளிர் தின வாழ்த்துகள்.
தென்றல் மார்ச் 2025 |