பரதநாட்டியம்: அனன்யா சந்திரமூர்த்தி
ஜனவரி 5, 2025 அன்று, பாஸ்டனில் வசிக்கும் 12 வயது அனன்யா சந்திரமூர்த்தியின் பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னை, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் சிறப்பாக நடந்தேறியது. லயமும் லாஸ்யமும் அழகாகச் சேர்ந்த கலவையாக அனன்யாவின் நாட்டியம் பரிமளித்தது. குரு திருமதி பூஜா குமார் ஷ்யாமிடம் கடந்த நான்கு ஆண்டுகளாக அனன்யா நாட்டியம் கற்று வருகிறார்.

மிஸ்ரசாபு தாளத்தில் ராகமாலிகையில் அமைந்த தஞ்சை நால்வரின் ஜதீஸ்வரத்திற்கு குரு சாவித்திரி ஜெகன்னாத ராவ் நடனம் அமைத்திருந்தார். சிக்கலான தாளக்கட்டும் விஸ்தாரமான ஜதிகளும் கொண்ட இதற்கு அனன்யா மிக நேர்த்தியாகவும் துல்லியமாகவும் ஆடி, பார்வையாளர்கள் மனதைக் கவர்ந்தார்.

நிகழ்ச்சியின் இறுதியாக வந்தது வீணா கிருஷ்ணமாச்சாரியின் நடபைரவி ராகத் தில்லானா. இந்த ஆதிதாள தில்லானா, கலாக்ஷேத்ரா ருக்மணி தேவி அருண்டேலைப் புகழ்வது என்பதுடன் அவரே இதற்கு நடனமும் வடித்துள்ளார். தில்லானாவில் அனன்யா துள்ளலுடன் துரித கதியில் ஆடி சபையோரை மெய்மறக்கச் செய்தார் என்றால் மிகையாகாது.

ஹரிபிரசாத் (குரலிசை), நெல்லை டி கண்ணன் (மிருதங்கம்), சிகாமணி (வயலின்), பி. முத்துக்குமார் (புல்லாங்குழல்) மற்றும் குரு பூஜா குமார் ஷியாம் (நட்டுவாங்கம்) ஆகியோரின் சிறப்பான பக்க பலத்துடன் அனன்யாவின் நடனம் மேலும் மிளிர்ந்தது.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com