பிப்ரவரி 2025: வாசகர் கடிதம்
25 ஆண்டுகள் சவால்களையெல்லாம் சமாளித்து வெற்றிகரமாகத் தென்றல் இதழை நடத்தி, 26வது வருடத்தைத் தொடங்கியுள்ள குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மென்மேலும் இதேபோல் வெகுசிறப்பாக வளர்ந்து, பலநூறு ஆண்டுகள் அழியாத பேரும், வற்றாத புகழுமாகச் செழித்தோங்க ஆசிகள்.

இலக்கிய இரட்டையர் சுந்தரராஜன், கிருபானந்தன் நடத்தும் 'குவிகம் இலக்கிய அமைப்பு' பற்றிய விவரம் சிறப்பாக இருந்தது. குவிகம் பெயர்க் காரணமும் வரலாறும், பணிகளும் அறிந்து மிகவும் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தோம். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.

சித்த மருத்துவர் டி. பாஸ்கரன் அவர்களின் 'சித்தாவரம்' வரவேற்க தக்க நூல். நஞ்சாகும் உணவுகள், நல் மருந்தாகும் தாவரங்கள் என்ற கருத்தின்படி, ஒவ்வொரும் ஆரோக்கியத்தைச் சீர்படுத்த உணவின் பயன்களைத் தெரிந்து உபயோகிக்க ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் கைவசம் வைத்திருக்க வேண்டிய எளிய நூல். நோய் வந்தபின் தீர்க்கும் மருத்துவ முறைகளை மட்டுமல்லாமல் நோய் வராமல் எப்படிக் காப்பது என்பது குறித்த வழிமுறைகளையும் விரிவாக விளக்கியுள்ள அற்புதமான நூல். அதை எழுதியுள்ள மருத்துவர் அவர்களுக்கும், நூல் அறிமுகம் செய்த தென்றலுக்கும் நன்றி.

நடந்தவை, நடப்பவை, நடக்க வேண்டியவை என்று அனைத்தையும் அற்புதமாக வெளியிட்டு, ரசிகர்களின் படிப்பார்வத்தை வளர்க்கும் தென்றலுக்கும் அதைச் சார்ந்தவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com