டாலஸ் தமிழ்ப் பள்ளி கலை விழா
அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தில் டாலஸ் மாவட்டத்தில் உள்ள இர்விங் நகரத்தில் தமிழ் மொழியையும் தொன்மையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு எடுத்துச்செல்லும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது டாலஸ் தமிழ்ப் பள்ளி. இந்தப் பள்ளி அக்டோபர் மாதம் 'தமிழர் கலாச்சாரக் கொண்டாட்டம்' ஒன்றை நடத்தியது.

இந்த விழாவில், தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் எடுத்துக்காட்டும் விதமாகக் கண்காட்சி சாவடிகள் அமைக்கப்பட்டன. அதில் பரமபதம், தாயக்கட்டை, பம்பரம், பல்லாங்குழி முதலிய பாரம்பரிய விளையாட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டன. குழந்தைகள் இவற்றை விளையாடி மகிழ்ந்தார்கள். மரப்பாச்சி பொம்மை, சொப்பு விளையாட்டு, தஞ்சாவூர் வீணை போன்ற பொருட்களை மிக அழகாகக் காட்சிப்படுத்தி இருந்தனர். மாணவர்களின் கற்பனைத்திறனுக்கு ஏற்பக் கோலங்கள் போடப் பயிற்சி கொடுக்கப்பட்டது. அரிசி மாவில் கோலம் போடுவதற்கான அடிப்படைக் காரணமும் விளக்கிச் சொல்லப்பட்டது. தமிழரின் கிராம வாழ்க்கை முறையை விளக்கும் விதமாக மாதிரி குடிசை அமைக்கப்பட்டிருந்தது.



பள்ளி மாணவர்கள் தங்களைப் பூக்களாகவும், காய்களாகவும் அலங்கரித்தும், தமிழக வீர வரலாற்று நாயகர்களாகவும் வேடமிட்டுக் கொண்டும் வந்தார்கள். தாம் ஏற்ற வேடத்தின் சிறப்பை அவர்களே விளக்கிக் கூறினார்கள். மூத்த குடி எங்கள் தமிழ் குடி என்ற தலைப்பில் மாணவர்கள் கீழடி நாகரிகத்தை விளக்கினார்கள். கடையேழு வள்ளல்களாக வேடமணிந்து, அவர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்கள். தமிழரின் பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், கும்மி, ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆகியவற்றை மாணவர்கள் ஆடினார்கள். சிலம்பப் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிலம்பக்கலையை மிகச் சிறப்பாக செய்துக் காண்பித்தார்கள்.



தமிழர் பாரம்பரிய உணவுகளான தினை உருண்டை, வாழையிலை உணவு, கேழ்வரகுக் களி மற்றும் கூழ் போன்றவற்றைக் காட்சிப்படுத்தி, அவற்றின் நன்மைகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். விழாவின் இறுதியில் மாணவ மாணவியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட 80-களின் மிட்டாய்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் விடைபெற்றுச் சென்றார்கள்.

ஜெயஸ்ரீ,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com