தென்றல் பேசுகிறது...
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தோன்றிய காலத்தில் இருந்தே அது எங்கே படைத்தவன் தலையிலேயே கைவைக்கும் பஸ்மாசுரன் ஆகிவிடுமோ என்ற அச்சம் எழுப்பப்பட்டு வந்துள்ளளது. அந்த வகையில் பார்த்தால் நவம்பர் மாதத் தொடக்கத்தில் பிரிட்டனில் கூட்டப்பட்ட 'செயற்கை நுண்ணறிவு உச்ச மாநாடு' மிக முக்கியமான முயற்சி. 'டெஸ்லா' எலான் மஸ்க், 'சாட் GPT' சாம் ஆல்ட்மன் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மட்டுமல்லாமல் கமலா ஹாரிஸ் (துணை அதிபர், அமெரிக்கா), ராஜீவ் சந்திரசேகர் (மத்திய இணை அமைச்சர், மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பம், பாரதம்), வூ ஷோஹ்யி (அறிவியல் தொழில்நுட்பத் துணை அமைச்சர், சீனா) என்பது போலப் பல நாட்டு அரசியல் தலைவர்களும் இதில் பங்கேற்றது வரவேற்கத் தக்கது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியை அசுரவேகம் என்றுதான் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்ல, இந்த வளர்ச்சியில் சாதாரண மனிதனின் கண்ணுக்குத் தென்படுவது மிகக் குறைவு. உண்மையில் இவற்றில் பல மாயாஜாலத்துக்கு நிகரான அதிசயத்தை உண்டாக்க வல்லவை. பிரிட்டனின் பிரதமர் ரிஷி சூனக் இந்த உச்சமாநாட்டை நன்கு திட்டமிட்டு நடத்தியுள்ளார்.

"AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைத் திறந்த மனத்தோடும் அதே நேரத்தில் கவனத்தோடும் வரவேற்கிறோம். இது தேவைதான் ஆனால், நெறிப்படுத்தப் படாத தொழில்நுட்பத்தை வைத்துக் கேடு விளைவிக்கவும் முடியும் என்பதை உலகம் பார்க்கிறது" என்று ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளது உண்மை. இந்த உச்சமாநாட்டில் பங்கேற்ற சீனா, ஐரோப்பிய யூனியன் உட்பட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகள் 'பிளெச்லி அறிக்கை'யில் கையெழுத்திட்டுள்ளன. (Bletchley என்பது மாநாடு நடக்கும் இடம்). இந்தத் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை இதில் கையொப்பமிட்ட அனைத்து நாடுகளும் ஒருமித்த அணுகுமுறை மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது இந்த அறிக்கையின் சாராம்சம்.

★★★★★


கற்பனைக்கும் அப்பாற்பட்ட வன்முறைச் செயலாக ஹமஸ் தொடங்கிய ஊடுருவல் நடவடிக்கை, இப்போது முழுமையான போராக மாறியுள்ளமை வருந்தத் தக்கது. ஏற்கனவே உக்ரெயின்-ரஷ்யா போர் முடிவுக்கு வருமா என்பதே தெரியாமல் தொடர்கின்ற நிலையில், உலகம் இன்னொரு போரைத் தாங்குமா? அதிலும் இது வெறும் இஸ்ரேல்-காஜா நிலத்துண்டுக்குள் அடங்கிவிடுகிற கைகலப்பல்ல. இதன் எதிரொலி உலக நாடுகள் அனைத்திலும் காதைச் செவிடாக்கிக் கொண்டிருக்கிறது. மக்களை எதிரெதிர் அணிகளாகப் பிளந்து கொண்டிருக்கிறது. நல்லதைச் சிந்தித்து,சமாதான சகவாழ்வை வளர்க்க எண்ணும் உலக சக்திகள் ஒன்றுபட்டு இவற்றுக்கு ஒரு முடிவு காணவேண்டும். மானுடம் வெல்லட்டும்.

★★★★★


வாசகர்களுக்கு தீபாவளி, திருக்கார்த்திகை நாள் வாழ்த்துகள்!

தென்றல்
நவம்பர் 2023

© TamilOnline.com