தென்றல் பேசுகிறது...
கவி என்ற சொல்லுக்கு 'தீர்க்கதரிசி' என்றொரு பொருள் உண்டு. நெடுநோக்குக் கொண்ட நம் கவியரசன் பாரதி "வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்" என்று அறைகூவியதற்கேற்ப, பாரதம் விடுத்த 'சந்திரயான் 3' இப்போது புவியீர்ப்பு மண்டலத்தைத் தாண்டி மதியை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 5ம் நாளன்று அது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்படும். உலக நாடுகளோடு ஒப்பிட்டால் குறைந்த செலவில் செயற்கைக் கோள்கள், ராக்கெட்டுகள் தயாரிப்பதிலும் ஏவுவதிலும், பிற நாடுகளின் வானியல் ஆய்வு நிலையங்களை விண்வெளிக்குக் கொண்டு சென்று நிறுத்துவதிலும் இந்தியா பெற்றுள்ள வல்லமை இத்துறையை நாட்டுக்கு வருவாய் ஈட்டும் வழியாக மாற்றியுள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி வாக்கில் சந்திரயான் 3 நிலவில் இறங்கும்போது அது பாரதத்தின் வானியல் சாதனைகளில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படும். அன்னிய சக்திகளின் நரித் தந்திரங்களும் மண்ணிலேயே நடக்கும் அழிசெயல்களும் பாரதத்தின் அறிவாற்றல் மற்றும் செயலாற்றல் வீரியத்தைக் குறைத்துவிடவில்லை என்பதற்குச் சான்றாகத் திகழும்.

★★★★★


யுக்ரைன் - ரஷியா போரில் இருதரப்பு வன்முறைகளும் மட்டுப்படுவதாகத் தெரியவில்லை. அரசுகளின் உயர்மட்டத்தில் போர் என்பது மார்தட்டும் செயலாக இருந்தாலும், சராசரி மனிதர்களுக்கு அவை ஏற்படுத்தும் துக்கமும் இழப்புகளும் அழிவும் சரிக்கட்ட முடியாதவை. பல்லாண்டுகள் நீடித்துத் துயரம் தருபவை. அண்மையில் மாஸ்கோ கட்டடங்களை யுக்ரைனின் ஆளில்லா டிரோன் தாக்கியுள்ளமை போரின் உக்கிரத்தை அதிகப்படுத்துமோ என்ற அச்சத்தைப் பெரிதாக்கி உள்ளது. யுத்தம் என்பது பல நாடுகளுக்குப் பெரிய வணிக வாய்ப்பு என்பதைத் தாண்டி மனிதசோகமாகக் கருத வேண்டிய அவசியம் ஏற்பட்டாகி விட்டது.

★★★★★


செஸ் கிராண்ட் மாஸ்டர் தம்பதிகளான R.B. ரமேஷ், ஆர்த்தி ராமசாமி இவ்விருவரின் காய் நகர்த்தலை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பை இந்த இதழின் நேர்காணல் நமக்குத் தருகிறது. பி.வி. நரசிம்ம சுவாமியின் ஆன்மீகத் தேடலின் சுவையான அடுத்த கட்டம் தொடர்கிறது. பாரதியாரின் ஒரு பரிமாணத்தை ரா. கனகலிங்கம் காண்பிக்க நாம் கண்டு மகிழ்கிறோம். திருத்துறைப்பூண்டிக்குச் சென்று பிறவி மருந்தீஸ்வரரைப் பார்க்கிறோம். மொத்தத்தில் இந்த இதழும் சுவையானதுதான். வாருங்கள் உள்நுழைவோம்.

வாசகர்களுக்கு பாரத சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்.

தென்றல்
ஆகஸ்ட் 2023

© TamilOnline.com