சாகித்ய அகாதமி பால புரஸ்கார் 2023
குழந்தை இலக்கியத்திற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க சாகித்ய அகாதமியால் வழங்கப்படுவது பால புரஸ்கார் விருது. மா.கமலவேலன், ம.லெ. தங்கப்பா, ரேவதி, கவிஞர் செல்லகணபதி, இரா. நடராசன், குழ. கதிரேசன், கிருங்கை சேதுபதி, கொ.மா. கோதண்டம், யெஸ். பாலபாரதி, மு. முருகேஷ், ஜி. மீனாட்சி ஆகியோர் வரிசையில், 2023ம் ஆண்டுக்கான விருது, எழுத்தாளர் உதயசங்கருக்கு வழங்கப்படுகிறது. அவர் எழுதிய 'ஆதனின் பொம்மை' என்ற நாவல் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மு. முருகேஷ், கிருங்கை சேதுபதி, டாக்டர் ஏ.எஸ். இளங்கோவன் அடங்கிய நடுவர் குழு இப்படைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1960ஆம் ஆண்டு பிறந்தவர் உதயசங்கர். சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார். நுற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவரது நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம், மாயாவின் பொம்மை, புலிக்குகை மர்மம், பொம்மைகளின் நகரம், அலாவுதினீன் சாகசங்கள் போன்ற நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை.

பால புரஸ்கார் விருது, செப்புப் பட்டயமும் 50000 ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கியது. விருது விழா டெல்லியில் இவ்வாண்டு இறுதிக்குள் நடைபெறும்.

உதயசங்கருக்குத் தென்றலின் வாழ்த்துகள்

© TamilOnline.com