Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி
Tamil Unicode / English Search
சிறுகதை
கதம்பமும் மல்லிகையும்...
- பானுரவி|ஜனவரி 2020||(5 Comments)
Share:
அக்கா வீட்டுக்குப் போவதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். மலைக்கோட்டை வடக்கு வீதியில் தாயுமானவர் கோவிலுக்கு எதிரே ஆனைகட்டும் மண்டபத்துக்கு எதிரே இருந்தது எங்கள் வீடு. அங்கிருந்து கிளம்பிக் கீழே இறங்கி, மாணிக்க விநாயகர் கோவில் வழியாக வெளிவந்து இடப்புறம் திரும்பிச் சின்னக்கடைத் தெருவில் நுழைந்தால். . நெடுகச் சுவர் முழுவதும் கலர்கலராய்ச் சினிமாப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, 'ட' வடிவத்தில் மடங்கி நீண்டு செல்வதுதான் லாலாகடைச்சந்து. கீழ்த்தளம், மேல்தளம் தவிர இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த அந்த லாலா ஸ்டோரில் ஏறத்தாழ அறுபது, எழுபது குடித்தனங்கள் இருந்தன. தமிழ், தெலுங்கு, மராட்டி, கன்னடம் என்று ஒரு குட்டி பாரதவிலாஸ் அங்கே கலகலக்கும். அக்காவின் வீடு கீழ்த்தளம் முடியும் இடத்தில் இருந்தது. மேல்மாடிக்குப் போவோர் எல்லோருமே அக்காவின் வீட்டைத் தாண்டித்தான் போகணும் என்பதால், அங்கிருந்த அனைவருக்கும் அக்காவிடம் நல்ல பரிச்சயம் இருந்தது.

அக்காவிடம் இந்தி கற்றுக்கொள்ளவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும் வாரத்தில் இருநாட்கள் அங்கு செல்வது எனக்கு வாடிக்கையானது. அக்கா இந்தியில் வித்வான் பட்டம் வாங்கியிருந்தாள். கதை சொல்லும் பாணியோடும், கவிதை நயத்துடனும் குரலை ஏற்றி இறக்கி அக்கா சொல்லித்தரும்போது, மனது பாடத்தில் இயல்பாக லயித்துவிடும்!

அக்கா ஒரு நிமிடம்கூட வீணாக்க மாட்டாள். தையல் வேலை. க்ரோஷா போடுவது, ஒயர்ப் பை பின்னுவது, ஸ்வெட்டர் போடுவது என்று ஒன்று மாற்றி ஒன்று செய்துகொண்டே இருப்பாள். அந்தக் குடியிருப்பில் யாரும் தடுக்கி விழுந்தால், முதலில் போய் நிற்பது அக்காவாகத்தான் இருக்கும்!

தங்கம் மாமிக்கு வயது அறுபதுக்கும் மேலாகிறது. ஆனால் இன்னமும் மைசூர்ப்பாக்கு செய்யப் பாகு பதம் பார்க்கவும், புளிக்காய்ச்சல் நெடி அடிக்காமல் வந்திருக்கா என்று பார்க்கவும் கூப்பிடுவது அக்காவைத்தான்! அய்யங்கார் மாமியின் பித்தவெடிப்பிற்கு முந்திரி எண்ணை பண்ணிக்கொடுப்பது அக்காதான்! மேல்வீட்டுச் செட்டியார் வீட்டு ஆச்சிக்கு மாவடு போட்டுத் தருவதும், மல்லிகைப்பூ சீசனில் ஸ்டோர் பெண்களுக்குப் பூ வைத்துத் தைத்துவிடுவதும், யாரும் பெரியவளாகி விட்டால், புட்டும், சிகிலி உருண்டை பண்ணித் தருவதும் நிச்சயம் அக்காவாகத் தானிருக்கும்.

அவ்வளவு ஏன்? யாருக்காவது பிரசவ வலி எடுத்தால், எத்தனை அனுபவசாலியானாலும் கூப்பிடுவது அக்காவைத்தான்! "அச்சோ கடவுளே! இது பொய்வலி மாமி! இதோ போய் ஒரு நொடிலே சீரகக் கஷாயம் கொண்டுவரேன். சூட்டுவலினா அடங்கிடும். இன்னும் வயிறு தழையணும். ஒரு பத்து நாளாவது ஆகும். கவலைப் படாதீங்கோ" என்று அபயக்குரல் தரும் அக்காவைப் பார்த்து அவர்கள் அமைதியாவார்கள்.

இப்படி சகக் குடித்தனக்காரர்கள் என்றில்லை, அந்த லாலா ஸ்டோருக்கே காவல்தெய்வம் மாதிரி இருந்துகொண்டு (இளவட்டங்களைத் தேடி யார் வந்தாலும் கண்களில் விரலை விட்டு ஆட்டிப்பார்த்து) எல்லோர் வீடுகளிலும் வேலை செய்து வந்த தைலம்மா கிழவிக்குப் பிடிக்குமென்று வேலை மெனக்கெட்டு ஸ்பெஷல் ரவாதோசை பண்ணிப் போடுவதும் அக்காதான்! மார்கழி மாத பஜனையாகட்டும், ராதா கல்யாணமாகட்டும், அங்கிருந்த :.பங்ஷன் ஹாலில் பெரியதாக மாக்கோலம் போட்டு அசத்துவதோடு மட்டுமல்லாமல், அத்தனை பேருக்கும் நெய்வழியச் சர்க்கரைப் பொங்கல் பண்ணி எடுத்து வருவதும் அக்காதான்! அக்கா இப்படி அக்கம்பக்கத்தில் அனுசரணையாக இருந்தாலும், யாராவது வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டால், அவ்வளவுதான். அவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவாள்.

அக்கா எங்கள் வீட்டுக்கு வந்தாலே வீடு திமிலோகப்படும். துள்ளலும், துடிப்புமாக அக்காவின் குரல் எட்டு ஊருக்குக் கேட்கும். அம்மா அப்பாவிலிருந்து குட்டித் தம்பிவரை அவளது சுவாதீனம் கலந்த ஆளுமையைப் பார்க்க முடியும். பாட்டி, தாத்தாவின் திவசம் வந்தால் அம்மாவுக்கு ஒத்தாசையாக அக்கா வந்துவிடுவாள். தேங்காய் சேர்க்காமல், மிளகும் பயத்தம்பருப்பும் சேர்த்துச் செய்யும் அந்தச் சமையலிலும் அக்காவின் சிரத்தையும் கைமணமும் தெரியும்.

தீபாவளி வந்தால் அவ்வளவுதான். "அம்மா, நெய்யைக் கொட்டி நீ ஏதும் ஸ்வீட் பண்ணாதே! நம்மாத்துக்கும் சேர்த்து நான் மைசூர்ப்பா பண்ணிக் கொண்டுவரேன். மிக்ஸர், ரிப்பன் பக்கோடாவும் நானே பண்ணிடறேன்" என்பாள். வீடு கட்டும் செங்கல்லில் மூன்றில் ஒரு பங்காக இருக்கும் அந்த மைசூர்ப்பா. வாயில் போட்டால் நெய் மணக்கக் கரைந்து போகும்! மிக்ஸரில், தினுசு தினுசான ஐட்டங்கள் இருக்கும். முந்திரி, பிஸ்தா, சிறுகடலை, டயமண்ட் பிஸ்கட், சீரக மிட்டாய், பசேலென்று நெய்யில் வறுத்துப் போட்ட கறிவேப்பிலை என்று பார்க்கவே படு ரம்யமாக இருக்கும்!

அக்கா வந்ததுமே எல்லோருக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். "ஏய் சுகு, சாவி, சுபா, இந்து... உங்க எல்லோருடைய தீபாவளிப் புடவையையும் கொண்டு வாங்கோ..ஒவ்வொண்ணும் எனக்கு எப்படி இருக்குன்னு ஒரு நிமிஷம் சுத்திண்டு பார்க்கறேன்" என்பாள். சொன்னபடியே மளமளவென்று, எல்லாப் புடவைகளையும் கட்டிக்கொண்டு, அந்த ரேழியில் இருக்கும் பாட்டி காலத்து ரசம்போன ஆளுயரக் கண்ணாடியில் முன்னேயும், பின்னேயும் பார்த்துக்கொண்டே எங்கள் அத்தனை பேரிடமும் அபிப்ராயம் கேட்பாள்.
அக்காவுக்குத் தலைமுடி வெகுநீளம். காதின் இருபுறமும் ஹேர்பின் குத்தி லூசாகப் பின்னிக் கொள்ளுவாள். தலை நிறையத் தொங்கத் தொங்கப் பூ வைத்துக் கொள்ளணும். கனகாம்பரமும், டிசம்பர்ப்பூவும் வீட்டிலேயே பூத்துக் குலுங்கியதால், அக்காவுக்கென்று சற்று அதிகமாகவே தொடுத்து அனுப்புவாள் அம்மா. அத்தனை பூக்கள் இருந்தாலும், மல்லி, ஜாதிப் பூக்களை விட நெருக்கிக் கட்டிய கதம்பமே அக்காவுக்குப் பிடித்ததாக இருந்தது. 'இந்த மல்லிப்பூவைப் பந்தாட்டம் தலைலே வச்சிண்டா, ஈரத்தலையிலே வெள்ளைத் துண்டைக் கட்டிண்டாப்பல இருக்கும்" என்பாள். அதனாலேயே பூக்காரப் பாப்பாத்தியிடம் சொல்லித் தஞ்சாவூர் ஸ்பெஷல் கதம்பம் தொடுக்கச் சொல்லுவாள். அடுக்குமல்லி, வெட்டிவேர், சம்பங்கி, பட்டுரோஜா, சம்பகப்பூ, வாடாமல்லி, கனகாம்பரம், மரிக்கொழுந்து என்று நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட அந்தக்கதம்பம் எட்டு ஊருக்கு மணக்கும்.

மொத்தத்தில் அதிக ஆசாபாசங்களும், பரோபகார குணமும், அதிகாரம் செய்தே அன்பைக் காட்டும் விசித்திரக் குணங்களும், பலவிதக் கெட்டிக்காரத் தனங்களும், அலாதியான தைரியமும், மிகுந்த சுறுசுறுப்பும் கொண்ட அழகான ராட்சசியாகத் தெரிந்த அக்கா, என்னையும் வெகுவாகப் பாதித்து ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாள்.. அக்காவோடு இருக்கும் சமயங்களில் அவளைக் கவனிப்பதில் எனக்கு சுவாரஸ்யம் ஏற்பட்டது என்றே சொல்லவேண்டும்! மொத்தத்தில் எல்லா அர்த்தங்களும் பொதிந்த ஒரு அகராதியைப் போலவே அக்காவை நான் உணர்ந்தேன்!

அக்கா இப்படி என்றால், வாசு அத்திம்பேர் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஜாடிக்கேற்ற மூடிதான். "மாமா, கல்யாணி ஸ்டோர்ஸில் அருமையான பொன்னி வச்சிருந்தான். ஒரு அஞ்சு கிலோ போடச் சொன்னேன்" என்று வாங்கி வருவார். "வரவழிலே ஆண்டார்தெரு முனைலே பச்ச மணத்தக்காளியும் பிஞ்சுக்கத்திரிக்காயும் வச்சிருந்தான். மணத்தக்காளிலே ரெண்டு கல்லுப்புப் போட்டு ஒரு பச்ச மொளகாய நறுக்கிப் போட்டு அதுல கொஞ்சம் எலுமிச்சம்பழத்தப் புழிஞ்சு விட்டா. ம்ம்ம்... எப்பேர்பட்ட அன்னத்வேஷமும் ஓடிப் போய்டாதா! அத்தனையும் கோல்டு தெரியுமா. அதான் வாங்கிண்டு வந்தேன்" என்பார். இன்னிக்கு வெங்கிடா லாட்ஜுல தூள்பஜ்ஜி பண்ணிருந்தான். குழந்தைகளுக்குப் புடிக்குமேன்னு வாங்கிண்டு வந்தேன். அத்தோட பொறுக்கு வடுவா கிளிமூக்கு மாங்கா கிடச்சுது. உங்க அம்மாட்ட கொண்டுபோய்க் கொடு" என்பார்.

அத்திம்பேருக்குப் பழைய புத்தகக் கடைக்காரன் பழக்கம் என்பதால் எல்லா ஆங்கிலப் பத்திரிக்கைகளும், காமிக்ஸ் புத்தகங்களும் எனக்கும் என் அண்ணாவுக்கும் வாங்கி வருவார். "இங்கிலீஷ் நாலட்ஜ் நெறைய வேணும். சத்தம் போட்டு தினமும் 'ஹிண்டு' படியுங்கோ. அப்போத்தான் உச்சரிப்பு தெளிவா இருக்கும். ஒரு கிளாரிடியோட பேசமுடியும்" என்பார்.

அத்திம்பேரின் குரலே சங்கீதமாக இருக்கும். அவர் குளிக்கும்போது பாடும் ப்ரோவபாரமாவும், வாசுதேவயனியும் தேனில் நனைந்துவரும்! அக்காவும் அத்திம்பேரும் காச்சுமூச்சென்று சண்டை போட்டுக்கொள்ளும் நாட்களில் இந்தச் சங்கீதம்தான் அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டுவரும்! அப்படி ஒன்றும் இருவரும் எலியும் பூனையும் கிடையாது. சமயத்தில் வீட்டில் இருப்பது இல்லாதது தெரியாமல் அத்திம்பேர் யாரையாவது அழைத்து வந்துவிட்டாலோ, அக்காவிடம் ஆலோசிக்காமல் தங்கை கிருபாவுக்குப் பணம் அனுப்பி வைத்தாலோ அக்காவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்! அத்திம்பேர் படு சமர்த்தர். எதேச்சையாகப் பாடுவது மாதிரி மெல்லிசுக்குரலில் "ஆசை கொண்டேன் வண்டே, உன்னுடன் நான் ஈசன் புகழ் பாடவே" என்று ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே ஆரம்பிப்பார், அவ்வளவுதான். அக்காவின் வெடித்துக் கொண்டிருந்த முகத்தில் செம்மை பூக்கும்! பின்னே? அந்தப் பாட்டைத்தானே அவர் அக்காவைப் பெண்பார்க்க வந்தபோது பாடினது!

அத்திம்பேர் கறிகாய் வாங்கும் விதமே படு சுவாரஸ்யமாக இருக்கும். கையில் மஞ்சள்பையோடு சின்னக்கடைத் தெருவுக்கு வந்துவிட்டால் அத்தனை ரோட்டோரக் கடைக்காரர்களும் நமஸ்காரம் பண்ணாத குறையாக "வாங்க, வாங்க! நம்ப கடையிலே வாங்குங்க" என்று வரவேற்பதும், வெள்ளைச் சிரிப்போடு இன்முகம் காட்டுவதும், ரசிக்கத் தக்கதாக இருக்கும்! காவிப்பல் தெரியச் சிரித்தபடி, அத்திம்பேர் ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை வேட்டியின் முனையைப் பிடித்துக் கொண்டு நடைபழகி, யார்யாரிடம் புதியதாக, பிஞ்சாகக் கறிகாய் இருக்கிறதென்று பார்த்துவிட்டு வருவார். கடைக்காரரின் மனம் கோணாமல் பேசி கறிவேப்பிலை, கொத்தமல்லி கொசுறு சகிதம் மஞ்சப்பை நிறைய அள்ளிக்கொண்டு வருவார்.

அக்காவும் அத்திம்பேரும் மலைக்கோட்டையிலிருந்த பசுமடத்துப் பள்ளியில் வேலை பார்த்து வந்தார்கள். காலை எட்டரைக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினால், மதியம் ஒரு மணிக்கு வந்துவிடுவார்கள். அக்காவின் கைமணம் தெரிந்து, கூடவே ஹெட்மாஸ்டர் ராஜகோபாலன் சாரும் வந்துவிடுவார். அந்தச் சமயத்தில் அக்காவைப் பார்க்கணுமே! ஏதோ நாலு கை இருப்பது மாதிரிப் பறந்து பறந்து ஏதேனும் டிபன் ரெடி செய்வாள். நெய் மணக்கும் ரவா கிச்சடியும், தகடுதகடாய் ஆனியன் ரவாவும் மோர்மிளகாய் மினுக்கும் மோர்க்கூழும். அடேயப்பா! நான் பிரமித்துப் போவேன்!

மாலை ஆறு மணிக்கு ட்யூஷன் சொல்லிக்கொள்ள வரும் குழந்தைகள் ஏழரைவரை இருப்பார்கள். அவர்களையும் கவனித்துக் கொண்டு, காலையில் பண்ணியதில் மிச்சம் இருப்பதைப் பொறுத்து இரவு சமையலையும் முடித்துவிடுவாள் அக்கா.

அக்கா பெண் சுகந்தாக்குட்டியும் படு துறுதுறு. எட்டு வயசுக்குப் பாவாடையை வழித்துக் கட்டிக்கொண்டு, அக்கா மாதிரியே ரெட்டை இழை கோலம் போடுவதும், ஸ்வரத்தொடு கீர்த்தனை பாடுவதும், கணீரென்று சுலோகம் சொல்லுவதுமாகப் படு சமர்த்து! சாமிநாதன், சுகந்தாவைவிட நாலு வயசு சின்னவன். இவர்கள் இருவருடனும் எனக்கு நன்றாகப் பொழுது போய்விடும். சமயம் கிடைக்கும் போதெல்லாம் நான் படு குஷாலாக அக்கா வீட்டுக்குக் கிளம்பிவிடுவேன்.

இப்படியாக நெய்க்குத் தொன்னை ஆதாரமா, இல்லை தொன்னைக்கு நெய் ஆதாரமா என்று சொல்லத் தெரியாமல் அக்காவோடு அனைவருமே ஐக்கியப்பட்டுக் கிடந்தோம்.

அன்றைய தினம் போகிப்பண்டிகை. அக்காவிற்கு அசெளகர்யமான நாளானதால் அத்திம்பேர் மட்டுமே சாப்பிட வந்திருந்தார். பால் பாயசம், தேங்காய்ப்போளி, ஆமவடை, கறி, சாம்பார் என்று அம்மா விதவிதமாகச் சமைத்திருந்தார். அத்திம்பேரின் இலையில் முதலில் பரிமாறியதெல்லாம் அப்படியே இருந்தது. உடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பாதான் "என்ன மாப்பிள்ளை! கொறிக்கிறீர்! சரியாகச் சாப்பிடாமல் எல்லாம் வைத்தது வைத்தபடி இருக்கு? எல்லாம் உமக்குப் புடிச்ச ஐட்டங்களாச்சே, சாப்பிடுங்கோ" என்றார். "ஊம்" என்று சுரத்தில்லாமல் சொன்னதோடு உடனே எழுந்து, கைகளைக் கழுவியபோதுதான் அண்ணாவுக்குப் பொறி தட்டியது. "என்ன அத்திம்பேர். உடம்பு சரியில்லையா? ஏதேனும் அஜீரணக் கோளாறா? மாத்திரை தரட்டுமா?" என்றான். அண்ணா பெரியகடை வீதியில் பிரபலமாக இருந்த டாக்டர் சூரியிடம் மெடிக்கல் அசிஸ்டண்ட். உடம்பைப் பொறுத்த வரையில் அவன் சொல்வதுதான் வேதவாக்கு.

சோர்ந்து போயிருந்த அத்திம்பேர் மெதுவாக அண்ணாவைக் கூப்பிட்டுத் தனக்குச் சில நாட்களாகப் பசி எடுப்பதில்லை என்றும், உணவு செரிமானம் ஆவதில்லை என்றும், முக்கியமாகச் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் சொன்னபோது அத்தனை பேரும் ரொம்பவே பதறிப்போனோம். அடுத்த நிமிடமே அவரை டாக்டர் சூரியிடம் அழைத்துச் சென்றார் அப்பா. டாக்டர் சூரி எங்கள் அத்தனை பேரிடமும் மிகுந்த வாத்சல்யத்துடன் பழகுவார். அத்திம்பேரின் உடலைப் பரிசோதித்தவர், "என்ன மாமா? இப்போ லாஸ்ட் மினிட்ல அழைச்சுண்டு வந்திருக்கேள்! உங்க மாப்பிள்ளைக்கு ரொம்ப நாளா இந்தப் பிரச்னை இருந்திருக்கு. எதனாலோ சங்கோஜப்பட்டுண்டு சொல்லாம இருந்திருக்கார். பரிசோதனைல இது 'ஹிமொடோரியா'னு தெரியறது. சிறுநீர்ல நெறையச் சிகப்பு அணுக்கள் கலந்திருக்கு. சரியான ரத்த ஓட்டம் இல்லாததால ரெண்டு கிட்னியும் பழுதடஞ்சு போய்டுத்து. கிட்னிலே கல் சேர்ந்துண்டு சிஸ்டமே சரியாய் வேலை செய்யலை. உங்ககிட்ட நான் உண்மை நிலவரத்தைச் சொல்லணும். என்னை மன்னிச்சிடுங்கோ. இன்னும் அதிகபட்சமா உங்கள் மாப்பிள்ளை ரெண்டு வாரம் இருப்பாராங்கிறது கூடச் சந்தேகம்தான்!"

அப்பா நிலை குலைந்து போனார். வார்த்தைகள் குழறிக் குழறி அரற்றினார். "ஐயோ! டாக்டர்! இதென்ன இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறேள். எத்தனை செலவானாலும் பரவால்ல. எப்படியானும் அவரைக் காப்பாத்திடுங்கோ."

"இதோ பாருங்கோ மாமா. உங்களைச் சமாதானப்படுத்தவோ, தைர்யப்படுத்தவோ, இல்லாத ஒன்றைக் கூற நான் பிரியப்படலை. உங்களுக்கு மிஸ்டர் வாசுவின் நிலைமை, கையை விட்டுப் போயாச்சு என்பது தெரியணும்! எக்ஸ்ட்ரீம்லி ஸாரி. இனி ஆக வேண்டியதைப் பாருங்கள். யாருக்கும் சொல்லி அனுப்பணும் என்றால் அதைச் செய்யுங்கள்" என்றபோது துக்கமும் அதிர்ச்சியும் சேர்ந்து அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

டாக்டர் சொல்லி இருந்த 'அந்த' இரண்டு வாரக் கெடுவைத் தவிர, அத்திம்பேருக்கு வந்திருக்கும் பிரச்சனையையும் அவரைத் தீவிர மருத்துவ சிகிச்சைக்குத் தயார்படுத்த வேண்டிய அவசியத்தையும் அக்காவிடம் சொன்னபோது, அக்கா உருண்டு புரண்டு கதறித் தீர்த்து விட்டாள். ஊரிலிருந்த அத்தனை தெய்வங்களையும் அம்மா வேண்டிக் கொண்டாள். வேறு மருத்துவர்களும் டாக்டர் சூரியின் கருத்தையே பிரதிபலித்ததால், அடுத்த கட்ட நடவடிக்கையாக எதைச் செய்வதென்று தெரியாமல் அப்பாவும் தவித்தார். மறுதினம் அக்கா அரக்கப் பறக்க வந்தாள். "அப்பா..எங்கள் லாலாஸ்டோரில் ஒரு மாமி மதுரைல இருக்கிற எஸ்கின் ஹாஸ்பிடலில் கிட்னி மாற்றுச் சிகிச்சை செய்து குணப்படுத்துவதாகச் சொன்னா. .என்ன..கொஞ்சம் பணம் ஜாஸ்தியாச் செலவாகுமாம். அவருக்கு இல்லாத பணம் எதுக்குப்பா? நாம்ப உடனே மதுரைக்குப் போலாம்பா" என்றபோது, அப்பாவும் அந்த நாட்கெடுவைச் சொல்லமுடியாமல் சரி என்று சொல்லிக் கிளம்ப ஆயத்தம் செய்தார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அம்மா, அண்ணா, அப்பாவுடன் அக்காவும் அத்திம்பேரும் ஒரு கார் ஏற்பாடு செய்துகொண்டு மதுரைக்குக் கிளம்பினார்கள்.

ஆனால் விதி யாரை விட்டது? மதுரையில் அந்த மருத்துவ மனைக்குள் நுழையும் முன்பே இரண்டு முறை விக்கல் எடுத்த அத்திம்பேர், நிலைகுத்திய கண்களோடு மூச்சுவிட மறந்து போனார். அழுதழுது சிவந்த கண்களும், வீங்கிய முகமுமாக அக்காவும் மற்றவர்களும் வந்த போது, லாலாஸ்டோர் குடித்தனக்கரார்கள் மட்டுமின்றி, பள்ளிக்கூட மாணவர்களும், வாத்தியார்களும், கடைத்தெரு மனிதர்களும் சூழ்ந்து கொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். சிரிப்பும், பேச்சும், சகாயமும், சங்கீதமுமாக வளைய வந்த அத்திம்பேர் தனது ஐம்பத்து ஒன்றாம் வயதில் இப்படி அக்காவை நிராதரவாக விட்டுபோனது, யாராலும் ஜீரணிக்க முடியாத நிஜமாகிப் போனது!

"அப்பா. பேசுப்பா! கண்ண முழிச்சுப் பாருப்பா. பாட்டு சொல்லிக் கொடுப்பா. "என்ற சுகந்தா மற்றும் சாமிநாதன் கதறலும், "என்னை விட்டுட்டுப் போய்ட்டேளே! எனக்குச் சமையல விட்டா ஒண்ணுமே தெரியாதே. இந்த ரெண்டையும் நான் எப்படிக் கரை சேர்க்கப் போறேன்" என்று அடித்துக்கொண்டு அக்கா அழுததும் எங்களை நிலைகுலையச் செய்தது!

அதன் பிறகு யாருக்கும் நிற்காமல் பதின்மூன்று நாட்கள் எல்லாக் காரியமும் மளமளவென்று நடந்தேறின. இனி அக்கா என்ன பண்ணுவாள்? நண்டும் சிண்டுமான இந்த இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு? எல்லோர் மனத்திலும் இந்தக் கேள்வியே விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது! கிராமத்திலிருந்த அப்பாவை, குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும், ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருந்து குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்காகவும், திருச்சிக்கு வரவழைத்ததே அக்காவும் அத்திம்பேரும்தான்! மாப்பிள்ளை என்ற ஹோதா இல்லாமல், எல்லா விதத்திலும் அனுகூலமாக இருந்து வந்த அத்திம்பேரைத் தான் பெறாத பிள்ளை என்று அப்பா சொல்லிக்கொள்வார். எல்லோருக்கும் பிடிக்கும் விதத்தில் நடந்துகொண்டு, எல்லோரிடமும் ஒரேவிதமாக நல்ல பெயரெடுப்பது என்பது அப்படியொன்றும் எளிதல்ல. ஆனால் அந்த மாதிரி ஒரு நல்லபெயரெடுக்க அத்திம்பேரால் முடிந்தது!

வந்திருந்த பெரியவர்களுக்குள் விவாதங்களும், கூடிக்கூடிப் பேசுவதும் நடந்து கொண்டிருந்தது! கரூர் சித்தப்பாவும், பிரான்மலை அத்தையும், நங்கவரம் பெரியம்மாவும், தொண்டிப் பெரியப்பாவும் அப்பாவோடும் அம்மாவோடும் சீரியசாகப் பேசிக்கொண்டிருந்தனர். "தோ பாரு லலிதா! கொஞ்ச நாளைக்கு வேணும்னா குழந்தைகளையும் உன் பெண்ணையும் வீட்டோட வச்சுக்கலாமே ஒழிய. அப்படியே தங்க விடப்படாது. இதுனால மத்த பெண்களுக்குக் கல்யாணம் பண்றதுல ஆயிரத்தெட்டு இடஞ்சல் வந்து சேரும்" என்று பெரியம்மா சொல்லி நிறுத்தியபோது, தாங்கமுடியாத ஆத்திரம் வந்தது! இந்தப் பெரியம்மாவுக்குத்தான், ஆறு மாசம் முன்னால் கேடராக்ட் ஆபரேஷன் செய்து தன்னோடு கொஞ்சநாள் வைத்துக்கொண்டு கவனித்து அனுப்பி இருந்தாள் அக்கா. நன்றிகெட்ட மனுஷி என்று அப்பாவுக்கும் கோபம் வந்திருக்க வேண்டும்!

"இதோ பாருங்கள். உங்கள் யாரையும் நான் எந்த அபிப்ராயத்தையும் கேட்கல. .என் பொண்ணுக்கு நாங்க .என்ன செய்யணும் என்பது எனக்குத் தெரியும். எல்லோரும் உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போகலாம்" என்று சொன்னதும், சொந்தக்காரக் கும்பல் நகர்ந்தது.

அம்மாவோடு கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தவராக, அக்காவைக் கூட்டிக் கொண்டு வரும்படி அப்பா சொன்னார். கதவைத் தட்டி அக்காவைக் கூப்பிட்டபோதுதான். அக்காவின் தோற்றம் மனதில் அறைந்தது. தலை நிறையப் பூவும், ரெட்டை மூக்குத்தியும், ஜிலீரென்று தகதகக்கும் திலகமும் இட்டுக்கொண்டு வண்ணநிலாவாக உலா வந்த அக்கா காது, கழுத்தில் ஒன்றுமில்லாமல் வெற்று நெற்றியுடன். வெள்ளைப் புடவையுடன் வந்தபோது, அத்தனைபேரும் கத்தித் தீர்த்துவிட்டோம். "அக்கா! இதென்ன கோலம்? காலம் மாறிடுத்துக்கா! முன்ன மாதிரி இல்ல. இந்த வெள்ளைப் புடவைய அவிழ்த்து எறி. நெத்திலே சின்னதா ஒரு பொட்டு இட்டுக்கோ. கழுத்திலே ஒரு மெலிசு சங்கிலி போட்டுக்கோ. இப்படி உன்னைப் பார்க்கவே படு கண்றாவியா இருக்குக்கா" என்று எல்லோரும் கத்தித் தீர்த்தோம்.

"ஐயோ! இதென்னம்மா வெள்ளையைக் கட்டிண்டு. .நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கே" என்று அம்மாவும் அப்பாவும் ஒருசேரக் குரலெடுத்து அழுதார்கள்.

அக்கா மெலிதாகப் பேசினாள். "என்னோட அலங்காரங்களும், ஆசைகளும் அவருக்குச் சிதை மூட்டினதுமே எரிஞ்சு போயிடுத்து. காலம் என்னிக்குமே மாறுவதில்லை, நாம்தான் நமது செளகர்யத்துக்கு ஏத்தாப்போல மாறிண்டு காலம் மாறிடுத்துன்னு சொல்லிக்கிறோம். ராத்திரி, பகல், சொந்தம், பந்தம் இப்படி எதிலும் மாற்றங்கள் வருவதில்லை. சம்பிரதாயங்களை மிஞ்சி, மனசுன்னு எல்லோருக்கும் ஒண்ணு இருக்கு. மனசுங்கிறது நம்ப எல்லோருக்கும் நீதி பரிபாலனம் நடக்கும் ராஜாங்கம் மாதிரி. நமது குற்றம், குறை, நிறை, திருப்தி, அதிருப்தி, நியாயம், அநியாயம் என்று அத்தனை உணர்வுகளும் பொங்கிப் பிரவாகிக்கும் மனசை மிஞ்சிய எதுவும் உலகில் பெரியது இல்லை. அனைவருக்கும் மனசுதான் காவலாக இருக்கமுடியுமே தவிர மதில் காவலாக இருப்பதில்லை; மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் நடப்பவனே மனிதனாகிறான். மனது ஸ்படிகம் போல வெள்ளையாக இருந்தாலே அது சிந்தையிலும் வெளிப்படுமே! வெள்ளைக்கில்லை கள்ளச்சிந்தை என்பார்களே! எனவே இனி எனது இந்தத் தோற்றம்பற்றி யாரும் எதுவும் பேசாதீர்கள்" என்றபோது, அனைவரின் கண்களிலும் கங்கை பொங்கிற்று.

அப்பாதான் தாங்க முடியாமல் பேசினார். "அம்மாடி குழந்தே! இது பெரிய துயரம் அம்மா. இனி நீ தைர்யமா இருக்கணும். உன்னிடம் சுமைகளைத் தந்துட்டு அவர் இப்படி நீட்டி நிமிர்ந்து கண்காணாமப் போய்ட்டாரே! உன்னைக் கடவுள் இப்படித் தண்டித்து விட்டாரே! நம் வீட்டுக்கு வந்துடு. நாங்கல்லாம் உனக்குப் பக்கபலமா இருப்போம். கவலைப்படாமல் கிளம்பும்மா" என்று குலுங்கிக் குலுங்கி அழுதபடி அப்பா சொன்னபோது, அக்கா இடைமறித்தாள்.

"அப்பா. உங்க வார்த்தைகள் எனக்கு ஆறுதலா இருக்குப்பா. என்னோட குழந்தைகள் எனக்குச் சுமை என்றால், திருமணமாகி எல்லாச் சுகங்களையும் அனுபவித்து, இப்போ துக்கப்பட்டு நிற்கும் நான் நம் வீட்டுக்கு வருவது மட்டும் உங்களுக்குச் சுமை இல்லையா? பிரச்னை என்றால் உடனே பிறந்தவீடு வருவதும் எனது சுமைகளை மற்றவரிடம் திணிப்பதும் என்ன நியாயம்? ஒரு வார்த்தைக்குச் சுமை என்று வைத்துக் கொண்டாலும், அவரும் நானும் அன்பாகவும், ஆசையாகவும் சேர்ந்து ஏற்றிக்கொண்ட இன்பச் சுமையல்லவா இந்த இரண்டு குழந்தைகளும்? அவரில்லாமல் இனி குடும்பத்தைக் கொண்டு செலுத்துவது, மீகாமன் இல்லாத மரக்கலம் போலத்தான்! ஆனாலும், அவரில்லாத குறை தெரியாதபடிக்கு இந்தக் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதுதான், அவரும் நானும் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் தரக்கூடியதாக இருக்கும்! அவரது அன்பும் நினைவும் என்னுள் எப்போதும் நீங்காமல் இருந்து என்னை வழி நடத்தும். அதற்கு நான் அணிந்து கொண்டிருக்கும் வெள்ளைப் புடைவையே ஒரு கவசமாகவும் இருக்கும் அப்பா!" அக்கா சொல்லி நிறுத்தியபோது அங்கே கனத்த மெளனம் நிலவியது.

இரண்டு குழந்தைகளையும் அரவணைத்தபடிச் சொன்னபோது பலவித வண்ணங்களில், பல்வேறு மணங்களில் கதம்பமலராக மணத்துக் கொண்டிருந்த அக்கா, வெள்ளைப் புடவையில் ஒளிரும் மல்லிகைச் சரமாக என்னுள் புத்துருக் கொண்டாள்!

பானுரவி,
சிங்கப்பூர்
Share: