Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
சிறுகதை
பேச்சுத் துணை...
புள்ளிகள், கோலங்கள்...
- எஸ். ராமன்|அக்டோபர் 2019|
Share:
Click Here Enlargeகாலைவேளை. வாசலில் சாணி தெளித்து, கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் கல்யாணி. அது புள்ளிக்கோலம். வெவ்வேறு திசைகளில் சிதறிக் கிடப்பது போன்ற புள்ளிகளை இணைத்து, கண்ணைக் கவரும் கோலமாக மாற்றுவதில் அவளுக்குத் தனித்திறமை. அந்த வீட்டு வாசலைக் கடப்பவர்கள், ஒரு நிமிடம் நிதானித்து, அவள் போட்ட கோலத்தைப் பார்த்து ரசித்து, மனதிற்குள் லைக் போடாமல் நகரமாட்டார்கள். எறும்புகளுக்கு உணவாகட்டும் என்பதற்காகவே, சுத்தமான அரிசிமாவில் கோலம் போடுவதை அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

அன்று, வழக்கத்தைவிடச் சிறிய கோலமாகத்தான் அவளால் போடமுடிந்தது. காரணம், முந்தைய இரவில், தூக்கம் வராமல், மூன்று மாதங்களுக்கு முன்பு கல்யாணமாகிப் புகுந்த வீட்டுக்குப் போன தன் மகளைப் பற்றிய நினைவுகளில் மூழ்கியதுதான். அந்த எண்ணங்கள் காலையிலும் தொடரவே, அவளால் கோலத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.

ஒரே மகள். செல்லம் கொடுத்து வளர்த்துவிட்டதால், புகுந்த வீட்டில், எப்படித் தன்னைப் பொருத்திக் கொள்ளப் போகிறாளோ என்ற பயம் அவள் மனதினுள் எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருந்தது. ஏனோ அந்த பயம் அன்றைய காலைப்பொழுதில் அவளை அதிகமாக வாட்டியதை உணர்ந்தாள்.

கோலம் போட்டு முடித்து, சமையலறையில் நுழைந்து, புதிதாகக் காப்பி டிகாக்‌ஷன் போடுவதற்குத் தண்ணீரை கொதிக்க வைத்துக் காத்திருந்தாள். வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. 'இந்தக் காலை வேளையில் நம்ம வீட்டுக்கு, முன்னறிவிப்பு இல்லாமல் யார் வரப்போறாங்க?' என்று யோசித்தவாறே, ஹால் பக்கம் வந்து ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தாள்.

ஆட்டோவிலிருந்து பெட்டியுடன் தனியாக இறங்கிய மகள் கோகிலாவைப் பார்த்ததும், சற்று அதிர்ந்து போனாள்.

'சொல்லாமல் கொள்ளாமல் இவள் எதற்குத் தனியாக வருகிறாள்! ஒருவேளை நாம் நினைத்தது போல் ஏதாவது நடந்திருக்குமோ?' என்ற அச்சம் அவளை தொற்றிக் கொண்டது. யோசித்துக் கொண்டிருந்தபோதே வாசல் கதவைத் திறந்துகொண்டு கோகிலா உள்ளே நுழைந்து, பெட்டியை ஓர் ஓரமாகத் தூக்கிப் போட்டாள். அந்தச் செய்கையில் அவள் கோபம் வெளிப்பட்டதை கல்யாணி கவனிக்கத் தவறவில்லை.

"வாம்மா. என்ன திடீர்னு. மாப்பிள்ளை வரலையா?" என்ற சுருக்கமான கேள்வியுடன் மகளை வரவேற்றாள். பதிலுக்குக் காத்திராமல் "பல் தேய்ச்சுட்டு வா. காப்பி ரெடி ஆகிட்டு இருக்கு. உனக்குப் பிடிச்ச மாதிரி ஃப்ரெஷ் பாலில் காப்பி போட்டுத் தரேன்" என்றாள்.

"ஆமாமா. எனக்கு பிடிச்சா மாதிரிதான் எல்லாம் நடக்குதாக்கும்?" என்றவள் சூடான காப்பியை அசாதாரண வேகத்தில் ஆற்றினாள். தன் கோபத்தைக் கொட்டித் தீர்க்க யாராவது தன்னிடம் பேச மாட்டார்களா என்ற ஆற்றாமை அவள் செய்கைகளில் தெரிந்தது.

ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த தாமு ஒரு வார்த்தை கூடப் பேசாமல், அவளது செயல்களை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். ஓர் அசாதாரண அமைதி அங்கு நிலவியது.

"அங்கே பேசியே கொல்றாங்கன்னா, இங்கே பேசாம கொல்றாங்களே" சத்தமான முணுமுணுப்புடன், குளிப்பதற்கு பாத்ரூமிற்குள் நுழைந்து மகள் தாளிட்டுக் கொண்டதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தாமு சமையலறையில் நுழைந்தார்.

வெண்பொங்கல் வெந்து கொண்டிருந்த பிரஷர் குக்கர் விசில் அடித்தது. அடுப்பிலிந்து குக்கரை இறக்கி வைத்த மனைவியிடம் ரகசியக் குரலில் பேசினார், "புகுந்த வீட்டில ஏதோ பிரச்சனை பண்ணிட்டு, டென்ஷனோட வந்திருக்கா போலிருக்கு. நாம இப்ப எதுவும் கேக்க வேண்டாம். கேட்டால், கோபப்பட்டு, கத்தி, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவாள். கோபமாக இருப்பவர்களிடம் நியாயத்தை எடுத்துச் சொன்னால், அதைப் புரிந்து, கிரகித்துக் கொள்ளக்கூடிய சக்தி இருக்காது. அடுப்பில் வைத்த பிரஷர் குக்கருக்குள், பிரஷர் கூடிக்கிட்டு இருக்கும்போது திறக்கக்கூடாது. விசில் மூலம், பிரஷர் வெளியேறி, சற்று நேரத்திற்குப் பிறகு திறந்தால்தான் குக்கருக்கும் நல்லது, அதைத் திறக்கறவங்களும் விபத்து ஏற்படாமல் இருக்கும். அந்த வழிமுறையைத்தான் நாம் இப்ப பின்பற்ற வேண்டும். ஆகவே, அவளுடைய டென்ஷனைக் குறைத்து, பிறகு சரியான நேரத்தில் பேசுவோம்."
எதுவுமே நடவாதது போல், அடுத்த சில நாள்கள் சாதாரணமாகக் கழிந்தன.

"உன் அம்மா, சமீபத்தில் மாவட்ட அளவில் கோலப் போட்டியில் முதல் பரிசு வாங்கினாள். மன அழுத்தத்திலிருந்து விடுபட கோலம் ஒரு நல்ல பயிற்சின்னு படிச்சேன். ஆபீஸ் வேலைகளில் ஒரே டென்ஷன். அதிலிருந்து விடுபட நானே அவளிடம் புள்ளிக்கோலம் கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்" என்று ஒரு தகவல் பிட்டை மகளுடன் பகிர்ந்தார் தாமு.

அதை உள்வாங்கிக் கொண்டதற்கு அடையாளமாக, கல்யாணத்திற்கு முன்வரை கோலம் போடும் கலையை அம்மாவிடமிருந்து கற்றுக் கொள்ளச் சிறிதும் முயற்சிக்காத கோகிலா, மறுநாள் காலையில் அம்மா கோலம் போடும்போது பக்கத்திலேயே நிற்க ஆரம்பித்தாள். அடுத்த சில நாள்கள் கோலம் போடுவதில் ஆழ்ந்த ஆர்வம் காட்டத் தொடங்கினாள். ஒருநாள் வீட்டு வாசலில் அவள் புள்ளிக்கோலம் போட ஆரம்பித்ததை ஜன்னல் வழியே பார்த்து ரசித்தார் தாமு.

அவள் போட்ட கோலம் சற்றுக் கோணலாக வந்திருந்தது. அது புள்ளிக் கோலம். கணக்குப்படி புள்ளிகள் ஒன்றோடு ஒன்று சரியாக இணைந்தால்தான் கோலம் முற்றுப்பெற்று, பொலிவாக இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். ஒரு புள்ளி தனித்து விடப்பட்டாலும், அது மற்ற புள்ளிக் கூட்டத்தோடு சேராமல், கோலம் முற்றுப் பெறாமல் தடுத்துவிடும் என்பதை மனைவியிடம் எடுத்த பயிற்சியில் கற்றிருந்தார்.

புள்ளிகள் சரியாகச் சேராததால் கோலத்தைப் பூர்த்தி செய்ய முடியாமல் கோகிலா திணறிக் கொண்டிருந்ததைக் கண்டு, அவளருகில் சென்று கோலத்தைக் கூர்ந்து கவனித்தார்.

"அந்த ஒரு புள்ளி, மற்ற புள்ளிகளோடு கனெக்ட் ஆகலை. அதுதான் கோலம் முழுசாக முடியாமல் தடுக்குது. இதுவரை போட்டதை அழிச்சுட்டு, புதுசா முயற்சி செய்யப் போகிறேன்..." என்ற மகளிடம் கனிவாகப் பேசினார்.

"இவ்வளவு கஷ்டப்பட்டு போட்ட கோலத்தை அழிப்பது நல்ல தீர்வு இல்லை. அந்தப் புள்ளி, மற்றப் புள்ளிகளோடு ஏன் இணையலைன்னு யோசிச்சுப் பாரும்மா. அதுக்கு ஒரு காரணம் இருக்கும். அந்தக் காரணம் உன்னுடைய தவறாகக்கூட இருக்கலாம்."

சிறிது நேர ஆராய்ச்சிக்குப் பிறகு, "கரெக்ட். இப்ப கண்டுபிடிச்சுட்டேன். இணைக்க வேண்டிய சமயத்தில் அதை மற்றப் புள்ளிகளோடு வளைகோடுகள் மூலம் இணைக்காமல் விட்டது என் தப்புத்தான். அந்தப் புள்ளி இருக்கும் இடத்தில், கோட்டை தேவையான அளவு வளைச்சிருக்கணும். அங்கே நேர்கோட்டைப் போட்டதால், அது தனித்தே நின்றுவிட்டது. இப்ப சரி செய்துடறேன்" என்றவளின் முகத்தில் ஒரு நேர்த்தியான கோலத்தைப் பூர்த்தி செய்த சாதனை உணர்வு வெளிப்பட்டது.

"அவருக்கும் இந்த மாதிரிக் கோலங்கள் பிடிக்கும்..."அந்தச் சாதனை தருணத்தில் தன்னையும் அறியாமல் வார்த்தைகளை உதிர்த்தாள் கோகிலா.

"மாப்பிள்ளையின் விருப்பு வெறுப்புகளை நன்றாக அறிந்திருக்கிற நீ ஏம்மா அவரை விட்டுட்டுத் தனியாக வந்தாய். அங்கே என்னம்மா தகறாரு?" பிரஷர் வெளியேறிய குக்கரைத் திறப்பது போல், மெதுவாக பிரச்சனையின் மூடியைப் பதமாகத் திறந்தார்.

அந்தக் கேள்விக்காகக் காத்திருந்தவள் போல், கோபப்படாமல் நிதானமாக பதில் சொன்னாள் கோகிலா. "அவங்க குடும்பத்தில் என்னை ஒருத்தியா மதிக்கவே மாட்டேங்கறாங்க. என்னால அந்தக் குடும்பத்தோடு கனெக்ட் ஆக முடியலை. அதான், வந்துட்டேன்!"

"அந்தக் குடும்பத்தினரிடம் உன்னுடைய பேச்சு பழக்கமெல்லாம் எப்படிம்மா?"

"நான் அதிகமா பேச்சு வச்சுக்கறதில்லை. சமீபத்தில பேசும்போது 'உங்க வீட்டில் ஒட்டடை அதிகமா இருக்கு. எனக்கு ஒட்டடை அலர்ஜி. ஆளை வச்சு க்ளீன் பண்ணனும்'னு சொன்னதுக்கு அவங்க கோவிச்சுக்கிட்டாங்க. அது எனக்கு சுத்தமா பிடிக்கலை."

தன் அனுபவ அறிவால், அனைத்தையும் புரிந்து கொண்டவராக, தாமு அமைதியாக மகளிடம் பேச ஆரம்பித்தார்.

"குடும்ப வாழ்க்கையும் ஒருவிதத்தில் பார்த்தால் புள்ளிக்கோலம் போலத்தான். எல்லாப் புள்ளிகளும் சரியா கனெக்ட் ஆனால்தான் கோலம் நேர்த்தியாக அமைந்து, பலர் பார்த்து பாராட்டும்படியாக இருக்கும். அதே போல்தான், குடும்பமும். எல்லா உறுப்பினர்களும் மனதளவில் சரியா கனெக்ட் ஆனால்தான், புரிதல் மேம்பட்டு, அமைதி நிலவி, அனைவரும் மெச்சிப் பாராட்டும்படியா குடும்பம் அமையும். அந்தச் சூழ்நிலையை ஏற்படுத்த, குடும்பத்தில் சில சமயங்களில், சில உறுப்பினர்கள் எண்ணங்களால் வளைந்து கொடுத்து, கனெக்டுக்கு உதவணும். அம்மாதிரிக் கனெக்டுக்கு, பல சமயம் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள்தான் அடித்தளம்."

"ம்ம்ம்... சொல்லுங்க" கோகிலா மறுத்துப் பேசவில்லை. இருளில் லேசான ஒளிக்கீற்று தெரிவது போல் இருந்தது.

"இதற்கு நீண்ட விளக்கம் எல்லாம் தேவையில்லை. படித்த பெண். எளிதாகப் புரிந்து கொள்வாய். திருமணம் ஆன பெண், புகுந்த வீட்டைத் தன் சொந்த வீடாக பாவிக்கணும். 'உங்க வீடு' என்பதற்குப் பதிலாக, 'நம்ம வீடு' என்று சொல்லப் பழகிக்கொள். குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களோடு கனெக்ட் ஆகும் வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசக் கற்றுக்கொள். குடும்பத்தில், எண்ணங்களால் வளைந்து கொடுக்க வேண்டியது மிக அவசியம். அம்மாதிரி வளைவுகள், வார்த்தைகளைச் சுத்தப்படுத்தி, கனெக்டுக்கு உதவும். அப்பத்தான், இவளும் நம்மில் ஒருத்தின்னு அவங்களுக்கு ஒட்டுதல் வரும். சரியான வார்த்தை என்ற புள்ளிகளால், உறவுகள் என்ற குடும்பக் கோலத்தை அழகாக்கலாம்!"

எல்லாம் புரிந்தவளாக, "உங்க வீட்டிலிருந்து நான் 'எங்க' வீட்டுக்குப் போகிறேன்" என்ற சந்தோஷ முணுமுணுப்புடன், உறவுகளை அழகாக்கத் தன் உடமைகளைப் பெட்டியில் அடுக்க ஆரம்பித்தாள் கோகிலா.

"நான் கேட்டுக் கொண்டபடி, சில நாட்கள் பொறுமை காத்ததற்கு நன்றி" என்று மாப்பிள்ளைக்குக் குறுஞ்செய்தி ஒன்றை உடனடியாக அனுப்பி அவரோடு கனெக்டைப் புதுப்பித்துக் கொண்டார் தாமு.

எஸ். ராமன்,
சென்னை
More

பேச்சுத் துணை...
Share: